Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சப்பிரகமுவ பல்கலை மாணவர்கள் தீப்பந்தமேந்தி இரவில் போராட்டம்! (படங்கள்)

நேற்றைய தினம் இரவு சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தீப் பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டிருந்தனர்.

இரவு 7 மணியளவில் பல்கலைக்கழக வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், தீப்பந்தங்களுடன் பம்பகின்ன சந்திவரை ஊர்வலமாக சென்று பதுளை - கொழும்பு வீதியை மறித்து இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் சுதந்திரத்தினை பறித்ததன் மூலம் இருள் சூழ்ந்த நிலைமையினை தோற்றுவித்துள்ளது. இதனை அடையாளப்படுத்தும் விதமாகவே இருட்டில் தீப்பந்த மேந்திய இப் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. இது போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

அங்கு கருத்துக் கூறிய மாணவர்கள் இன்றைய ஆட்சியாளர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் கல்வியை தனியார் மயப்படுத்தவதனையே தமது பிரதான கொள்கையாக கொண்டு செயற்படுகின்றனர். கல்விக்காக அரசு ஒதுக்கியுள்ள சிறு தொகை பணத்தையும் பாவிக்காது தமது சொந்த கேளிக்கை வாழ்க்கைக்கு திருடிச் செல்வதாக குற்றம் சாட்டினர்.

பல்கலைக்கழக மாணவர் பொது மன்றமும் ஏனைய ஜந்து மாணவர் சபைகளும் தடை செய்யப்பட்டு 560 நாட்களாவதாகவும் தெரிவித்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புக்கள் தொடர்பாக மனித உரிமை நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மௌனம் கடைப்பித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மாணவர் அமைப்புக்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள 8 மாணவர்களை மீள சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியும் இந்த இரு மணி நேர வீதி மறியல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.