Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெலிக்கடை சிறையில் பலாத்கார கையெழுத்து வேட்டை!

நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசின் ஆராஜகம் மீண்டும் தலைவிரித்தாடியுள்ளது. அங்குள்ள சகல கைதிகளிடமும் வெறும் வெள்ளை வெற்றுத்தாள்களில், பலாத்காரமாக கையெழுத்தும், கைநாட்டும் கொழும்பு குற்றவியல் பிரிவும், புலனாய்வுத்துறையும், சிறை அதிகாரிகளும் இணைந்து பொற்றுள்ளனர். முன்னறிவித்தல்கள் எதுவுமின்றிய இந்நடவடிக்கையால் சிறைக்கைதிகள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஏன் இப்படி எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி பலாத்காரமாக வெற்றுத்தாளில் கையெழுத்து வேண்டுகின்றீர்கள் எனக் கேட்டபொழுது, உங்கள் விடுதலைக்காகவும், எதிர்கால நன்மைகளுக்காகவுமே எனக் கூறி நாசூக்காக கையெழுத்துக்களை வேண்டியுள்ளனர். இதை நம்ப மறுத்து பல கைதிகள் கையெழுத்து வைக்கமாட்டோம் எனக் கூறியவர்களிடம் மிரட்டியும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கியும் கையெழுத்துக்களை வாங்கியுள்ளனர். இதை சிறைச்சாலைக்குள் இருந்துவரும் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 10.11.12 அன்று இடம்பெற்ற கைதிகள் மீதான கொலைவெறித் தாக்குதல் இடம்பெற்றது. அந்தத்தாக்குதலில் 27 சிறைகைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களி;ன் பெரும்பான்மையானவார்கள் தெரிவு செய்யப்பட்டே கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை குறிப்பிட்ட (கோத்தபாய) செயலாளரின் உத்தரவின் பெயரில் அனுப்பப்பட்ட விசேட அதிரப்படையினரால் நடைத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (27.12.12) அன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், புலனாய்வுப் பிரிவு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளினால் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. சிறைக்குச் சென்ற இவ்வதிகாரிகள் அங்கிருந்த கைதிகளிடம் வெள்ளைத்தாளில் கைநாட்டும், கையொப்பமும் பெற்றுள்ளனர்.

03.03.2013 ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனிதவுரிமை அமர்வின் போது 10.11.12 அன்று நடைபெற்ற கொலைகளை மறைப்பதற்கான ஒரு அங்கமாகவும், திசைதிருப்பவுமே இவ்வாறு கையொப்பம் பெறப்பட்டததாக தெரியவருகின்றது. சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் இருந்து கொலைக்கான சாட்சியங்களை மறைக்கவும் அவ்வாறான கொலைகள் நடைபெற்றதாக சிறைக்கைதிகளிடம் இருந்து சாட்சிகள் வெளிவருவதை தடுக்கும் நோக்கமாகவே கையொப்பம் பெறப்பட்டதாக தெரியவருகின்றது.

ஐ.நா. சபையில மனிதவுரிமை மீறல்கள் சமபந்தமாக இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைகள் வரவுள்ளன. வரமுன் இந்தா பார் எங்கள் நாட்டின் ஜனநாயகத்தை! நாங்கள் மனிதவுரிமையை எங்கே எப்போ மீறினோம்? எனக் காட்டப்போகின்றார்கள். அதற்கு இப்பலாத்கார கையெழுத்து வேட்டை பேருதவியாக உதவப்போகின்றது.

இலங்கையில் குற்றவாளிகள், சிறையில் இருக்கும் சந்தேகநபர்கள் தொடக்கம் அரச உயர்பதவியான நீதியரசர் வரை ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், செயற்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமக்கு எதிராக வருகின்ற சிறு எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையை இழந்துள்ளான் எதிரி என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

சும்மா சொல்லக்கூடாது. மகிந்த சிந்தனை மகாசிந்தனைதான்! ஆனால் அரசிற்கும் மகிந்தாவிற்கும் விளங்கவில்லை “முட்டாள்கள் பாரிய பாறாங்கல்லைத் தூக்குவது தங்கள் கால்களில் போடுவதற்கு" என்பதனை!