Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தீப்பொறிக் குழுவுடன் இணைந்து கொண்ட ஐயர் -

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58


வடக்குக் கிழக்குப் பகுதி மக்கள் எந்நேரமும் தமது உயிருக்கு எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருந்த அதேவேளை துப்பாக்கி முனையில் மக்கள் அடிபணிய வைக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள், "மண்டையன் குழு" என அனைவருமே செங்குருதியின் தாகம் கொண்டவர்களாகவும், மரண ஓலங்களில் மகிழ்ச்சியைக் காண்பவர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப்படையினர் மற்றும் "மண்டையன் குழு" வினருக்கிடையேயான மோதல்களும், துப்பாக்கிக்குண்டுகளுக்குப் பலியாகி வீதிகளில் அனாதரவாகக் காணப்படும் உரிமை கோரப்படாத உடல்களும் அன்றாட நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன.



இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசால் வடக்குக்-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக அலகாக அறிவித்திருந்தது மட்டுமல்லாமல் , இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் வாயிலாக வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்து "ஜனநாயக" அரசியல் வழிக்கு மாறிவிட்டிருந்ததாகக் கூறிய இயக்கங்கள் தமது கட்சிகளை பதிவு செய்து தேர்தல் களத்தில் இறங்கினர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டிருந்த உமாமகேஸ்வரனோ புளொட்டுடன் இணைந்து கொண்ட இளைஞர்களை அந்நிய நாடொன்றின் ஆட்சிக் கவிழ்ப்புக்காகப் பலியிடத் தயாரானார். இலங்கை வாழ் தமிழ்மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட உமாமகேஸ்வரன் கடல்கடந்து மாலைதீவில் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ளும் கூலிப்படையின் தலைவனாக செயற்படலானார். ஈழவிடுதலைக்காகப் போராடவென அணிதிரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சியளித்திருந்த உமாமகேஸ்வரன் அவ்விளைஞர்களையே கொண்டு மாலைதீவில் சதிப்புரட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். எண்பதுக்கும் அதிகமான புளொட்டில் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் இரண்டு படகுகளில் மாலைதீவைச் சென்றடைந்து தலைநகர் மாலியில் முக்கிய அரச கட்டடங்கள், விமானநிலையம், துறைமுகம், வானொலி நிலையம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்த போதும் மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கயூமை கைது செய்திருக்கவில்லை. ஜனாதிபதி கயூம் இந்தியா, இலங்கை, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவி வேண்டி விடுத்த அவசர வேண்டுகோளுக்கு தெற்காசியப் பிராந்தியத்தின் "பாதுகாவலன்" இந்தியா, கமாண்டோக்கள் உட்பட 1,600 படையினரை உடனடியாக மாலைதீவுக்கு அனுப்பி வைத்திருந்தது. மாலைதீவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் புளொட் உறுப்பினர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். ஏனைய புளொட் உறுப்பினர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் உமாமகேஸ்வரனின் மாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதிலிருந்து தோல்வியடைந்து விட்டிருந்த உமாமகேஸ்வரன், தமிழ் மக்களின் நலன்களுடன் எதுவித சம்பந்தமுமற்ற மாலைதீவு சதிப் புரட்சியிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும் கூட இந்தியப் படையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றிருந்தது. இத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF)பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபையைக் கைப்பற்றியிருந்ததுடன் இலங்கையின் சரித்திரத்தில் ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மகாணசபையின் முதலமைச்சராக அண்ணாமலை வரதராஜப்பெருமாள் பதவியேற்றார். தேர்தல் மூலம் வடக்குக்-கிழக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டமையும், அதன் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் பதவியேற்றமையும் தமிழ் மக்களுக்கு "நற்செய்தி" யாக இருந்ததோ இல்லையோ இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் "நற்செய்தி" யாக இருக்கவில்லை. ஆனால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை தம்வசமாக்கிக் கொண்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரோ தமது வெற்றியை குழிதோண்டிப் புதைப்பதை நோக்கிய செயற்பாடுகளில் இறங்கியிருந்தனர். வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபை மூலம் கிடைக்கப் பெற்ற பொலிஸ் அதிகாரத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவின் உதவியோடு இளைஞர்களையும் மாணவர்களையும் பலவந்தமாகக் கடத்தி "தமிழ் தேசிய இராணுவம்" (Tamil National Army) என்ற ஆயுதப்படையை உருவாக்குவதை நோக்கிய நடவடிக்கையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் இறங்கினர்.

இந்தியப்படையினர் இலங்கையில் கால்பதித்த பின் முழு இலங்கையுமே போர்க்களமாக மாறிவிட்டிருந்த சூழலில் சிறுபான்மை இனங்கள் மேல் போர் செய்யப் புறப்பட்டு போரில் மட்டுமல்லாது சமாதானத்திலும் தோற்றுப் போய்விட்டிருந்த இலங்கையின் "மேன்மை தங்கிய" ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இலங்கையே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் நடாத்தி முடித்தார். ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் இந்தியப்படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்றுவேன் என்ற உறுதிமொழி கூறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனவரி 1989ல் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் பதவியேற்ற ஜனாதிபதி பிரேமதாச, இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பிரேமதாசவின் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிககளும், ஜனதா விமுக்திப் பெரமுனவினரும் செவிசாய்க்க மறுத்ததுடன் தென்னிலங்கையில் ஜனதா விமுக்திப் பெரமுன நிராயுதபாணிகள் மீது கொலை வெறித்தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

"தீப்பொறி"க் குழுவாக நாம் செயற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலிருந்த நிலைமாறி கொள்கை, வேலைத்திட்டம் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து மாறுபட்ட பார்வைகள், தீர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கு பாதுகாப்பு நிலவரம் முன்னெப்பொழுதையும் விட மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தியப்படையினரதும், "மண்டையன் குழு"வினரதும் கண்ணிற்படுபவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிற்படுபவர்கள் அனைவரும் இந்தியப்படையினருக்கு தகவல் கொடுப்பவர்களாகவும் "துரோகி"களாகவும் கருதப்பட்ட காலமது. இத்தகையதொரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரமப்கால உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் போது "புதிய பாதை"க் குழுவாக உருவாகி புளொட் என்ற அமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவரும், புளொட் அமைப்பும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் "அடிச்சுவடு" பின்பற்றி செல்கின்றதென்ற விமர்சனத்தை முன்வைத்து புளொட்டிலிருந்து விலகி தமிழீழ மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணியில் (NLFT)இணைந்து செயற்பட்டவருமான ஐயர் (கணேசன்- புன்னாலைக்கட்டுவன்). தமிழீழ மக்கள் ஜனநாயக முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து, தொடர்ந்தும் தமிழீழ மக்கள் ஜனநாயக முன்னணியுடன் தொடர்ந்து இயங்கிய நிலையில், அதற்குள் எற்பட்ட புதிய முரண்பாடுகளுடன் அதில் இருந்து விலகியுமிருந்தார். இதையடுத்து யாழ்ப்பாணத்தில் எமது உறுப்பினரானரகுவை (காசி) சந்தித்து "தீப்பொறி" குழுவினருடன் பேச விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து டொமினிக்குடனும் தேவனுடனும் ஐயர் சந்தித்துப்பேச ஒழுங்கு செய்யப்பட்டது. "தீப்பொறி"க் குழுவுடனான தனது சந்திப்புக்களில் திருப்தியடைந்திருந்த ஐயர் "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்திருந்ததுடன் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரால் ஹட்டன் நஷனல் வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி தன்னிடம் இருப்பதாகவும்இ அந்த நகைகள் அனைத்தையும் "தீப்பொறி"க் குழுவிடம் கையளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஐயரின் விருப்பின்படி ஹட்டன் நஷனல் வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை டொமினிக்கும் தேவனும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். "தீப்பொறி"க் குழுவின் செயற்பாடுகளுக்கு எமது கருத்துக்களை ஏற்று சுவிற்சலாந்து,இங்கிலாந்து,ஜெர்மனி போன்ற நாடுகளில் செயற்பட்டவர்களிடமிருந்தே பண உதவியைப் பெற்று வந்தோம். ஆனால் ஐயர் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்ததால் ஐயரிடமிருந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் நகைகளும் கூட தீப்பொறிக் குழுவின் நிதித் தேவைகட்கு உதவியாய் அமைந்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் மோசமடையத் தொடங்கியதையடுத்து தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த டொமினிக், ரகுமான் ஜான் போன்றோர் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடங்கள் அருகத் தொடங்கியதால் இவர்கள் தலைமறைவாகத் தங்குவதில் பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிட்டது. டொமினிக், ரகுமான் ஜான் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடங்களை தேடுவதில் இறங்கினோம். இந்நிலையில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த தேவனின் பல்கலைக்கழக நண்பரும், புளொட்டின் மாணவர் அமைப்பில் செயற்பட்டவருமான சிறி(சுகந்தன்) வட்டுக்கோட்டைப் பகுதியில் டொமினிக் தங்குவதற்கான ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து உதவியிருந்ததுடன் ரகுமான் ஜான் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஜெயபாலனின் ("தேசம்நெற்" இணையத் தள ஆசிரியர்) வீட்டையும் பெற்றுத் தந்து உதவியிருந்தார். எமது பாதுகாப்பான சந்திப்புக்கள் சிறியினால் வட்டுக்கோட்டையில் வாடகைக்கு எடுத்துத் தரப்பட்ட வீட்டில் ஆரம்பமானது.

மத்திய கிழக்கில் பணிபுரிந்துவிட்டு இலங்கை வந்திருந்த டொமினிக்கின் காதலி யாழ்ப்பாணத்தில் டொமினிக்கைச் சந்தித்துப் பேசியதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டொமினிக் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். டொமினிக்கின் திருமணத்தையடுத்து ரகுமான் ஜானும் தனது காதலியைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

வடக்குக்-கிழக்கு, தென்னிலங்கை என மக்கள் இன, மத பேதமின்றி துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தனர். ஆனால் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களுக்கூடாக பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு அறிவித்திருந்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டதையடுத்து ஜனதா விமுக்திப் பெரமுனவும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டி தீவிர வன்செயல்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததுடன் தேர்தல் வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கொலை என தமது பயங்கரவாத அரசியலை முன்னெடுத்துச் சென்றனர். நாடு முழுவதும் வன்செயல்களும், பிணங்களும் சாட்சியாக பெருமளவு மக்களைப் பலிகொண்ட இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தது. பாராளுமன்றத் தேர்தல் வன்செயல்களில் 600க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். பெரும்பான்மையான கொலைகளின் சூத்திரதாரிகளாக ஜனதா விமுக்திப் பெரமுனவினரே காணப்பட்டிருந்தனர்.

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

 

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

 

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

 

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

 

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

 

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

 

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

 

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

 

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

 

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

 

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

 

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

 

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

 

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54

 

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 55

 

56.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 56

 

57.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 57