Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்

கீழ்வரும் வரிகள், அதிமேதகு மாட்சிமைக்குரிய ஜனாதிபதி நந்ததேச கோ. ராஜபக்ஸ அவர்கள், பதவியேற்றபின் இந்திய ஊடகமான பாரத் சக்தி Shakti.in மற்றும் SNI -இக்கு வழங்கிய பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை. 

இவ்வசனங்கள் இலங்கையின் தேசியப்பிரச்சனை பற்றி அவரிடம் ஊடகவியலாளர் நிதின் கோக்கல Nitin A.Gokhale வினவியபோது உதிர்த்தவை.
தன்னை இனவாதி அல்ல என்று குறிப்பிடும் அவர், தேசியப்பிரச்னைக்கு ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தி மட்டுமே என திட்டவட்டமாகக் கூறுகிறார்.
எனக் கூறும் நந்தசேன ராஜபக்ஷ, உண்மையிலே இனவாத சிந்தனை அற்றவரென்றால் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார்.

//"நாங்கள் பவுத்தர்கள். எமது நாடு சமாதானமானது. நாங்கள் மிகவும் அமைதியான சமாதானமான தேசத்தவர். எமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. எமக்கேயான சமூகப் பெறுமானங்களும் மதிப்புகளும், வளமான கலாச்சாரமும் உள்ளது."//

அதாவது : அவருக்கு இனவாதம் இல்லை என்றால், இலங்கையை பவுத்த நாடு என்று அவர் கூறியிருக்க மாட்டார். இலங்கையை ஒரு பல்லின -பல மத - தேசமென்று கூறியிருப்பார். இங்கு அவர் இலங்கையை ஒரு பவுத்த சிங்கள தேசமென்றே வரையறுக்கின்றார். இது தான் சிங்கள-பவுத்த பேரகங்கார வாதத்தின் அடிப்படை. நந்தசேன கோ. ராஜபக்ஷவைப் பொறுத்தளவில், இலங்கை அல்லது ஸ்ரீ லங்கா பவுத்த- சிங்களவரின் நாடு. மற்ற இனங்கள் இங்கு சீவிக்க விரும்பினால், சிங்களவர்களை சீண்டாது, எந்த வித உரிமைகளையும் கோராது, சாப்பிடுவதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமெனக் கூறுகிறார்.

//பெரும்பான்மை சமூகத்தின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களைச் செய்தால், பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை அவர்கள்(சிறுபான்மை) புரிந்துகொள்ள வேண்டும்.// என்று கூறுகிறார். இதன் அர்த்தம் பெரும்பான்மைக்கு தங்கியதாக சிறுபான்மை நடக்க வேண்டுமென்பதே. இது, இனவாத - பேரினவாத கருத்து இல்லையென்றால் வேறு என்ன?.

இந்தப் பேட்டி வெளிவந்து சில நாட்களிலே கீழ்வரும் செய்தி ஜனாதிபதி நந்தசேன ராஜபக்ஷவால் கூறப்பட்டதாக ஊடகங்களில் உலாவியது.

“நாம் இலங்கையில் ஒரு பல்லின தேசமாக மாறுவோம். இது சிங்கள தேசமல்ல, தமிழ் தேசமல்ல என நாம் சிங்கப்பூரை, கனடாவை போன்று இன்னோர் உதாரணத்தை உருவாக்குவோம். அனைவருக்கும் அவரவர் இருப்பு, (சம) மொழி, கலாச்சாரம், மதம் இருக்கும்”. (ஜனாதிபதி கோத்தபாய @GotabayaR) இச்செய்தி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது - பகிரப்படுகிறது.

இதைப் பகிர்வோர் ஜனாதிபதி நந்தசேன மற்றும் அவரின் சகோதரர் மஹிந்தவின் ரசிகர்மன்ற தமிழர்கள் மட்டுமல்ல. தம்மை இடதுசாரிகள், எழுத்தாளர்கள், புத்திசீவிகள் என்று பகிரங்கப்படுத்துவோரும் இதற்குள் அடக்கம். இன்றுவரை ஜனாதிபதி சார்ந்த ஊடக தொடர்பாளர்களாலோ, அல்லது அதிகார வர்க்கத்தினாலோ உறுதிப்படுத்தப்படாத மேற்படி செய்தி அநேகமாக உண்மைக்கு மாறான "fake" செய்தியாக மட்டுமே இருக்கமுடியும்.

காரணம், 29 கார்த்திகை மாதம் 2019 அன்று இந்தியாவுக்கு இரு நாள் அரச பயணத்தை மேற்கொண்ட ராஜபக்ஷ, 1.மார்கழி 2019 அன்று இந்து நாளிதழுக்கு வழங்கிய பேட்டியிலும் கூட, மேலே பாரத்சக்தி Shakti.in.in மற்றும் SNI ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளின் உள்ளடக்கங்களையே பிரதிபலிக்கிறார்.

அவர் இந்துவுக்கு அளித்த பேட்டியில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் கட்டாயமாக 19வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, ஜனாதிபதியின் அதிகாரம் முன்புபோல் நிறுவப்படும். தொடர்ந்து ஜனாதிபதி கூறுகையில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது இந்த நாட்டு அரசியலில் ஏற்கனவே உள்ள ஒரு பிரிவு. அதில் உள்ள பல விடயங்கள் இலங்கையில் அமல்படுத்த முடியாது. குறிப்பாக பொலிஸ் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் வேறுசில மாற்றங்களைக் கொண்டு வரலாம். தமிழ் மக்களுக்கு இன்று தேவை அபிவிருத்தி மட்டுமே. அவர்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக, இலங்கையின் அரசியல் யாப்பில் போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, பெரும்பான்மை சிங்கள மக்களை எதிர்த்து கொண்டு சிறுபான்மையினருக்கு எந்தவித அரசியல் அதிகாரத்தையும் நாம் வழங்கத் தயாராகவில்லை. அதேவேளை தமிழ் பிரதேசங்களில் வாழ்வாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் சிங்கள மக்கள் முரண்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.


இந்தியாவுக்கு பயணத்தை மேற்கொண்ட பின் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை மிரட்டியாவது மோடி அரசாங்கம் தீர்வைப் பெற்றுத் தரும் என சில தமிழ் ஒட்டுகுழுக் கும்பல்களும், முன்னாள் தமிழ் ராணுவக் கூலிப்படைகளும் கூக்குரலிட்டு ஆனந்தக் கழிக்கூத்து ஆடினார். ஜனாதிபதி நந்தசேன தான் தான் 2009 போரின் பின் இந்த தமிழ் ராணுவக் கூலிப்படைகளின் ஆயுதங்களை களைந்தேன் எனக் ஹிந்துவுக்கு கூறினார்.- //I did demining, I worked on resettlement and rehabilitation and development, and I got all militia to disarm.// The Hindu 01.12.2019) மேற்படி ஹிந்துவில் வெளிவந்த ஜனாதிபதி நந்தசேனவின் கருத்துக்களை பார்த்த பின், இப்போ இந்த கும்பல்களும்,- முன்னாள் தமிழ் ராணுவக் கூலிப்படைகளும் பம்மிக்கொண்டது திரிகின்றனர்.

தமிழ் தேசமானது தன் உரிமைகளுக்காக போராடாதவரை, வேறு ஒருவரும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து உரிமைகளைக் கொடுக்கப் போவதில்லை!