Sat06122021

Last updateSun, 19 Apr 2020 8am

நோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...!

இன்று உலகநாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் பணவீக்கம் மக்களின் அன்றாட சாதாரண வாழ்க்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரம், தண்ணீர்... போன்ற அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் திடீர் திடீர் விலையேற்றத்தால் மக்கள் வாழ்க்கையினை ஓட்ட மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், கட்டுப்பாடற்ற தேவைக்கு மீறிய உற்பத்தி, பொருட்களின் விரயம் என்று முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும் சாதாரண அப்பாவி மக்களின் தலையில் வந்து வீழ்கின்றது.

முதலாளித்துவம் தனது சுயநல நோக்கில் கொண்டுள்ள இந்த உற்பத்தி முறை தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமையினை அதிகரித்த வண்ணமுள்ளது. முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதன் மூலம் நிவர்த்தி செய்ய முனைகின்றது. தனக்குத் தேவை ஏற்பட்டதும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் அந்த தேவை பூர்த்தியடைந்த அடுத்த நிமிடம் வேலையினை விட்டு நீக்குவதுமான முதலாளித்துவத்தின் இந்த செயற்பாட்டினால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிச்சயமற்ற உறுதி செய்ய முடியாத நிலைமையினை அடைந்துள்ளது. முதலாளித்துவம் ஏற்படுத்தி வரும் இந்த சமூக அழுத்தமானது மக்களை தன்னம்பிக்கை இழந்தவர்களாக சலிப்படைந்து களைப்புற்ற மனிதர்களாக மாற்றி வருகிறது.

இன்று மனஅழுத்தம், மனநோய், இரத்த அழுத்தம், மார்படைப்பு.... போன்ற பல வியாதிகள் மனிதர்கள் மத்தியில் மிகவேகமாக வளர்ந்து வருகின்றது. அனேகமானவர்களின் வாழ்க்கை மருந்துக் குளிசையிலேயே இயங்குகின்றது. வியாதிக்கு நாளாந்தம் பாவிக்கும் குளிசைகள் காலப்போக்கில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. இன்னொரு புறம் மிக ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு கூட திடீரென இரத்தஅடைப்பு, மார்படைப்பு என்பன சற்றும் எதிர்பாராத வகையில் வந்து விடுகிறது. மக்களின் வாழ்க்கை முறை இன்று முற்று முழுதாக மாற்றமடைந்துள்ளது. அளவுக்கதிகமான வேலை, ஓய்வு போதாமை, நித்திரை போதாமை, போதிய வருமானமின்மை... என பல பிரச்சினைகளுக்கு நாளாந்தம் மனிதன் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு போராடியும் தன்னுடைய நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது மனிதன் தினம் தினம் சிரமப்படுகின்றான். இயந்திரங்களோடு இயந்திரமாக மாற்றப்பட்டு வரும் மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், கேட்க முடியாமல், கிரகிக்க முடியாமல் பல மணி நேரங்கள் மனிதனுடைய மூளை ஒரு குறுகிய வட்டத்தை சுற்றிச் சுற்றியே இயங்குகின்றது.

இன்றைய உலகப் பொருளாதார முறை மனிதனை இப்படியொரு இயந்திர வாழ்க்கைக்கு நிர்ப்பந்தித்து மனிதனை வலுவற்ற மனிதனாக மாற்றிவிடுகின்றது. மனிதனுடைய உறவு முறைகளில் விரிசலை ஏற்படுத்துவதோடு அன்பு, பாசம், காதல்... யாவற்றிலும் அன்னியப்பட்ட மனிதனாகி விடுகின்றான். கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் என்ற குடும்ப உறவுகளுக்குள் இடைவெளிகள் அதிகரிக்கின்றது. பிள்ளைகளின் சிறு பருவத்தில் அவர்களுக்கு வழிகாட்டியாக, பாதுகாவலனாக இருந்து பிள்ளைகளை வளர்க்க முடியாத இந்த குடும்பங்களில் பல சீரழிவுக்களும் பாதிப்புக்களும் உருவாகின்றன. மனக்கவலைகளாலும், மனச்சோர்வினாலும் நிம்மதியினை இழந்துவிடும் இந்த வாழ்க்கை முறை காலப்போக்கில் பல பாரிய நோய்களை ஏற்படுத்திவிடுகின்றது. #

மனிதனின் வாழ்வின் எல்லைக் கோடு குறுகிக் கொண்டே செல்கிறது. இன்று ஒரு மனிதனுடைய வாழ்க்கை 60 வயதை தாண்டுமா என்பது மனிதனுக்கு கேள்விக் குறியாகவும் சவாலாகவும் உள்ளது. இவை அனைத்தையும் நிர்ணயிப்பது இந்தப் பொருளாதார அமைப்பு முறையே. மனிதனை சுரண்டுவதையும், பதுக்குவதையுமே குறிக்கோளாகக் கொண்ட இந்த முதலாளித்துவ சிந்தனை சகல வழிகளிலும் மனித நலனுக்கு பாதகமாகவே மாறிவருகிறது.

ஆட்சியும் அதிகாரமும் தொழிலதிபர்கள், பணக்காரர் கைகளில் இருப்பதால் சட்டங்கள் யாவும் முதலாளிகளின் நலன் கருதி அவர்களுக்கு சார்பாகவே மாற்றி அமைக்கப்படுகின்றது. உணவு, கல்வி, வதிவிடம், போக்குவரத்து.... எதையுமே இந்த முதலாளித்துவ அரசு விட்டு வைக்கவில்லை. தொழிலாளர்களினதோ, சாதாரண மனிதனதோ உணர்வுகளோ உரிமைகளோ கடுகளவோனும் கருத்தில் கொள்ளாத அதிகாரவர்க்கம் முற்றுமுழுதாக முதலாளிகளின் கைப்பொம்மைகளாகி விட்டன. இந்த முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட ஒடுக்கு முறைக்குள் மக்களின் மூச்சு திணறடிக்கப்படுகின்றது. இதை எதிர்க்கவோ தட்டிக் கேட்கவோ முடியாதவாறு மக்களை அடக்கி ஒடுக்கும் அதிகாரவர்க்கம், பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி மக்களின் சிந்தனையினை திசைதிருப்பி விடுகின்றது. மேலைத்தேய நாடுகளை பொறுத்தவரை முஸ்லீம் எதிர்ப்பு நிறஎதிர்ப்பு வாதம், இலங்கை ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் இனவாதம் என்று மக்களை இணையவிடாது மதரீதியாவும், இனரீதியாகவும், மொழிரீதியாகவும் பிரித்து வைத்து தங்கள் நலன்களை பாதுகாத்து வருகின்றார்கள்.

"இந்த உற்பத்திமுறையும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சீரளிவும், தொளிலாளர்களை ஒன்றாக இணைத்து வர்க்கப் போராட்டமாக போராட வைத்து, முதலாளித்துவ அரச அதிகாரத்தினை வர்க்கப் புரட்சி மூலம் தூக்கியெறிந்து திட்டமிட்ட பொருளாதாரம் நிறுவப்படும். தொழிலாளர்களே முதலாளிவத்தின் சவக்குழியை தோண்டுபவர்கள் ஆவார்கள்" என்று, மார்க்ஸ் - ஏங்கல்ஸ் குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் பொய் முகம் உடைக்கப்பட்டு வருகின்றது.

இதை மக்களாகிய நாங்கள் சரியாக புரிந்து கொண்டு எம்மை ஒன்றிணைப்பதன் மூலம் வர்க்க பேதமற்ற, நோய் நொடியற்ற சோஷலீச சமுதாயத்தினை உருவாக்கி அமைதியான வாழ்வினை வாழ முடியும்.

16.06.2013