Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழின கொலையாளி மகிந்து முன் பதவியேற்கும் தமிழ் தேசிய முதலமைச்சர்!

ஒரு புதிய எழுச்சி, ஒரு புதிய உத்வேகம், எதிர்காலம் குறித்த ஒரு புதுநம்பிக்கை. தமிழரசுகட்சியின் வடமாகாணசபை வெற்றிக்குப் பின்னான காட்சிகள் இவை. மகிந்த ராஜபக்ஸவின் சிங்கள பெருந்தேசிய அரசிற்கு எதிரான வெற்றி இது. தமக்கு கிடைக்கும் ஊழல் பணத்திற்காக உலக நாடுகளிற்கு தேசத்தை விற்கும் கொள்ளையர்களிற்கு எதிரான வெற்றி இது. மகிந்து நாட்டுக்கு ரெளடி என்றால் நாங்க வடக்கின் ரெளடிகள் என்ற ஈ.பி.டி.பி யின் அட்டகாசத்திற்கு எதிராக வடமாகாண மக்கள் காட்டியிருக்கும் எதிர்ப்பு இது.

மக்கள் தமது மனநிலையை அரசின் அடக்குமுறைகளிற்கு மத்தியிலும் தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசிற்கு எதிரான இந்த எதிர்ப்பை அறுவடை செய்பவர்கள் யார்? தமிழ் மக்கள் சிந்திய குருதி உறைய முன்னே கொன்றவர்களில் ஒருவனான சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்த தமிழ்க்கூட்டமைப்பு. தமிழ் மக்களை சேர்ந்து கொன்ற கொலையாளிகளான இந்தியாவை போற்றி துதி பாடும் தமிழ்க்கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், உலகம் முழுக்க கொல்லும் அமெரிக்காவையும், அய்ரோப்பாவையும் காவல் தெய்வங்கள் என்றும் அவர் தம் காலடி மண்ணெடுத்து ஈழமண் காப்போம் என்று பாத பூஜை செய்யும் கூட்டமைப்பின் பாராளுமன்ற பன்னாடைகள்.

முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்பும் இதே போன்றதோர் காட்சி, எழுபத்தேழின் தேர்தல். தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்று உணர்ச்சியை தூண்டும் வீரவசனங்கள். தலைவர்களிற்கு இளைஞர்கள் இரத்தத்திலே பொட்டு வைத்தார்கள். தனிநாடு கேட்ட தலைவர்கள் பாராளுமன்றம் போய் மாவட்டசபையை கொண்டு வந்தார்கள். வெள்ளை வேட்டிக்காரர்களிற்கு, கறுத்த கோட்டு போட்ட கனவான்களிற்கு பொட்டு போட்ட இளைஞர்களை இராணுவத்தினர் குண்டு போட்டு கொன்றார்கள். பதவி நாற்காலிகள் கிடைத்ததை தவிர எதுவும் மாறவில்லை.

தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று தொடரும் வலதுசாரி கும்பல்களின் பிழைப்புவாத அரசியல் இது. அவர்களிற்கு பதவியும், பணமும் தான் உயிர்மூச்சு. மக்களின் கருத்துக்களை அவர்களின் செவிகள் ஒரு போதும் உள்வாங்கி கொள்வதில்லை. மக்களின் வாழ்நிலை அவர்களின் கண்களிற்கு ஒரு போதும் தெரிவதில்லை.

நாட்டை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தேசபக்தி வீரவசனம் பேசும் மகிந்து கும்பல் வடக்கு, கிழக்கு என்ற இருமாகாணங்களை சேரவிடமாட்டோம் என்று ஊளையிடுகிறது. வடக்கு-கிழக்கு இணைப்பு இனி மேல் சாத்தியமில்லை. மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தரமாட்டோம் என்று அது இறுமாப்புடன் சொல்கிறது. இந்த கும்பலுடன் பேசி தமிழ்மக்களிற்கு திருப்தி அளிக்கக்கூடிய, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவுகளை தமிழ்க்கூட்டமைப்பு எடுக்குமாம். தூற்றுவார் புழுதி வாரிக் தூற்றினும் நாம் எமது கேவலங்கெட்ட பிழைப்புவாத அரசியலை விடப்போவதில்லை என்று அது வெட்கமோ, நாணமோ இன்றி பல்லை காட்டுகிறது.

தமிழ் மக்களிடையே ஒரு சரியான சக்தி இல்லாததின் காரணமாகவே தமிழ் மக்கள் மறுபடியும், மறுபடியும் இந்த வலதுசாரிகும்பல்களிற்கு ஆதரவு அளிக்கிறார்கள். இவர்களின் துரோகங்களை சகித்துக் கொண்டு பின் செல்கிறார்கள். இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் உள்ள முற்போக்கு, இடதுசாரி சக்திகள் இணைந்து வேலை செய்வதன் மூலமே இந்த கும்பல்களை தூக்கி எறிய முடியும்.