Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்-முஸ்லிம் மக்களின் சோகம் நிறைந்த இருபது ஆண்டுகள்

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 01-06-2010

20 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.பெரிய பள்ளிவாசல் வெள்ளியன்று திறப்பு

யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்.ஒஸ்மானியா கல்லூரி வீதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் 1713ம் ஆண்டில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதை அடுத்து இப்பள்ளிவாசல் கைவிடப்பட்டது.

கடந்த வருடம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்ததைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டுள்ளது.

20-ஆண்டுகளுக்கு முன்பாக, யாழ் முஸ்லிம் மக்கள்  கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு இரவிரவாக ஓடினார்கள்.  எம்மோடு வாழையடி வாழையாக வாழ்ந்த அம்மக்களை,  நாம் வெட்கி தலைகுனியும் வகையில்  “ குறுந்தேசிய இனவெறி கொண்ட” புலிப்பயங்கரவாதம்  அகோர வெறி பிடித்து விரட்டியடித்தது.  இந்த இனவெறி நடவடிக்கைக்கு இம்மக்கள் செய்த குற்றம்தான் என்ன? இப் புலிப் பயங்கரவாதம் கண்டுபிடித்த  “சமூக விரோதிகள்” எனப்படுவோர் எல்லாச் சமூகங்களிலும் உள்ளதுதானே. அதற்காக முழுச் சமூகமும் சமூக விரோதம் கொண்டதோ? புலிகள்  அம்மக்களை ஓர் சிறு மைதானத்திற்குள் கொண்டு வந்து விட்டு, எப்படி அவர்களை துன்புறுத்தி அவர்களின் சொத்துக்களைப் பறித்து,  துரத்தியடித்தார்களோ, அதேபோல் இவர்களும் 300-மீற்றருக்குள் மக்கள் விரோதிகளாக கொண்டுவரப்பட்டு சாகடிக்கப்பட்டவர்கள்தானே. முன்னையது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது, பின்னையது தவிர்க்கப்பட முடியாததே. இவர்களின் அழிவின் ஊடே நாம் இனியொரு விதி செய்வோம், இம்மக்கள் மீதான குறுந்தேசிய இனவெறி கொண்ட பார்வைகளை – நடவக்கைகளை கைவிட்டு, அவர்களை தேசிய இனமாக கணித்து, அவர்களின் சுயநிர்னயத்தை மதித்து ஏற்போமாக.

“மகிந்தத் துறவியாரே” தாங்களும் பயங்கரவாதிதான்

பயங்கரவாதியான மகிந்த ராஜபக்சே வெசாக் பௌர்ணமி தினத்தன்று, “பரிநிர்வான நிலையிலிருந்து” பௌத்த துறவி போல், ஏதோ பலவற்றைப் செப்பியுள்ளார்.. “சாத்தான்” போல்  எதைத்தான் ஓதியுள்ளதென்று பார்ப்போம்.

புத்த பெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வான நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளை குறித்து நிற்கும் வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பெளத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இன்றைய தினத்தில் நாம் பெளத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத் தினத்தை மிகவும் அர்த்த முள்ளவகையில் கழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார். அச்செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,  பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.  நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ் வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சாதகமானதும் சுதந்திரமான துமான சூழல் ஏற்பட் டுள்ளமை பெளத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும்.  இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும்.

புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூர நோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். ‘நிப்பான’ நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தா மதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமை யாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம். உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக

மக்களை அடக்கி ஒடுக்கும் அதிகார-ஆதிக்க சக்திகளின் உத்திகள் பலவிதம். இவர்கள் மக்களிடம் தம் ஆட்சி அதிகாரத்தை தொடர பல் முகம் காட்டுவர். இதில் இந்த “மகிந்தச் சித்தாத்தர்”, இலங்கையில் தன் குடும்ப நிறுவன, தனிநபர் சர்வாதிகார ஆட்சியதிகாரத்தை தொடர, உயிர்க்கொலை செய்யாத, இரத்தம் சிந்தாத, ஓர் “தூய பௌத்தனாக” மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா, போன்றவற்றுடன் கூடிய வாழ்க்கை முறை பின்பற்றப்படவேண்டுமென போதிக்கின்றார். “பூநூல் போட்டவன் எல்லாம் எல்லாம் குருக்களும் அல்லன். மெத்தா, கருணா சொல்பவன் எல்லாம் பௌத்தனும் அல்லன்.”

கலைஞர் கோவையில் நடாத்தவிருப்பது தி.மு.க.(குடும்ப) மாநாடா? செம்மொழி மாநாடா?

கலைஞர் தன் இறுதிக்காலத்தில் தனக்கு ஏதாகிலும் நேர்ந்திடுமோ என எண்ணி, பலவற்றை பலவாய் செய்துமுடிக்க துடியாத் துடிக்கின்றார். இதனால் எதிலும் அவசரக் கோலம் கொள்கின்றார். பத்து விரலால் பத்து தௌளுப் பூச்சியை பிடிக்க முற்படுபவன் போல் பதகளிக்கின்றார். சேது சமுத்திரத் திட்டத்தில் படாதபாடு பட்டு, அது கிடப்பில் போயுள்ளது. அண்மையில் சட்டமன்ற கட்டிடத்தை அவசரக் கோலத்தில் கட்டியதில், “லைலா” புயலுடன் கூடிய மழையால், சட்டசபையும், முதல்வர் அலுவலகமும் வெள்ளக் காடாயிற்று. கடைசியில் யாருக்கும் தெரியாமல், நீரிறைக்கும் இயந்திரம் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் வேகைள் அல்லோலகல்லோலமாகவே  அரங்கேறிற்று. அடுத்தது மேல் சபையும், அவரின் “குடும்ப” செம்மொழி மாநாடும்.. மேல்சபையை அண்ணா பிறந்த நாளான அடுத்த செப்டெம்பர் 15-ற்குள் கொண்டுவர பெரும்பாடு படுகின்றார். அதுவும் நடக்குமோ தெரியாது. தற்போதைய அத்தியாவசிய அவசரம் அவரின் “குடும்ப” செம்மொழி மாநாடு.

இவரின் “குடும்ப” செம்மொழி மாநாட்டிற்கு”  கோவையில் பெரும் ஒத்திகையே நடைபெறுகின்றது. கலைஞரும்-மகனும்-மகளும் மாறி மாறிச் சென்று ஒத்திக்கை பார்க்கின்றார்கள். மாநாட்டு வேலைகளிலும் வேகம் போதாதென்று, அதிகாரிகளிடமும் பாய்ந்தே விட்டாராம் கலைஞர். இத்துடன் நிகழ்சி நிரலின் சில பகுதிகளும் வெளிவந்துள்ளன.

மாநாட்டில் மூன்று கவியரங்கங்கள் நடைபெறவுள்ளன. இது வாலி,  வைரமுத்து, அப்துல் ரகுமான் ஆகியோரது தலைமையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து சாலமன் பாப்பையா தலைமையில் படடிமன்றமாம் தலைப்பு என்ன தெரியுமோ? “தமிழுக்கு சிறப்புச் சேர்ப்பது வெள்ளித்திரையா? சின்னத்திரையா?

மாநாட்டில் மொத்தம் நான்கு கருத்தரங்காம். தலைமை தாங்குபவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர்.   மாநாட்டின் துவக்க விழாவில் உலகத் தமிழ் அறிஞர்களை துணைமுதுல்வர் ஸடாலின் வரவேற்று உரையாற்றுவார். மத்திய மந்திரிகளான “அறிஞர்கள்” அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர்ரும்  வெவ்வேறு தலைப்புக்களில் உரையாற்றுவார்களாம்.

என்னே இது  தமிழுக்கு வெள்ளித்திரையும், சின்னத்திரையும் சிறப்பு சேர்க்குதாம். இதற்கொரு “அறிஞர் குழு” விவாதமாம். மத்தியமந்திரி  “அறிஞர்” அழகிரி அவர்கள் பாராளுமன்றத்திலேயே பேசத்தெரியாமல் ஒளித்து ஓடிவிடுகின்றார். இந்நிலையில் இந்த “அறிஞர்” தந்தையின்  மாநாட்டில் ஆய்வுரை நடாத்தப் போகின்றாராம். இது உலகத்தமிழ் மாநாடு அல்லவே. குடும்ப மாநாடு தானே. இதில் கலைஞர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாழ்க குடும்பத் தமிழ் ஆய்வு.  வளர்க கடமை-கண்ணியம் கட்டுப்பாடு.

சியத்த பத்திரிகையும் நிறுத்தப்பட்டுள்ளது. மகிந்த அரசால் நிறுத்தப்பட்ட நான்காவது பத்திரிகை

ஜனாதிபதியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த டிரான் அலஸ் மங்கள சமரவீர ஆகியோருக்கு நெருக்கமானவாகளால் தொடங்கப்பட்ட சண்டே ஸ்ரான்டர்டட் என்ற ஆங்கிலப்பத்திரிகையும் மௌபிம என்ற சிங்களப் பத்திரிகையும் முடக்கப்பட்டது.

இதனை முடக்குவதற்காக அதில் பணியாற்றிய பரமேஸ்வரி என்ற ஊடகவியலாளர் புலி என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அதன் வங்கிக் கணக்குகள் யாவும் முடக்கப்பட்டது. அதன் கணக்காளராக இருந்த துஸ்யந்த பஸ்நாயக்கா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். வங்கிக் கணக்கை அரசாங்கம் முடக்கியதால் பத்திரிகையை நடாத்த முடியாமல் அது நின்று போனது.

பின்னர் பரமேஸ்வரி மீதான புலிக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்தது. இதேபோல துஸ்யந்த பஸ்நாயக்கவும் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுவிக்கப்பட்டார். ஆனால் இரண்டு பத்திரிகைகளும் மூடப்பட்டு விட்டன.

இப்போது சியத்த பத்தரிகை மூடப்பட்டுள்ளது. சியத்த பத்திரிகை சிங்களத்தின் பிரபல நடிகை சங்கீதா விமலரட்ணவுடையது. வர்த்தகரான விமலரட்ண  மகிந்தவின் ஆதரவாளராக இருந்தார். இதனால் இவர்களுக்கு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கும் வானொலி ஒன்றுக்குமான அலைவரிசை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கான வெற்றி வாய்ப்புக்கள் இறுதி நேரத்தில் அதிகரித்த நிலையில் மகிந்தவுக்கு ஆதரவளித்த பலர் மெல்ல மகிந்தவை விட்டுக்கழன்று சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். இவர்களுடைய சியத்த என்ற பத்திரிகை மற்றும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் சரத்பொன்சேகாவுக்கான பிரச்சாரத்தையே மேற்கொண்டன.

அதேபோல் அதுகாலவரை மகிந்தவை ஆதரித்து வந்த இலங்கையின் முதல் சற்றலைட் சனலான ரிவி லங்கா நிறுவனமும் அதன் உரிமையாளர் அபேரட்ணவும் கூட சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் சரத் பொன்சேகாவை ஆதரித்தன.

ஆனால் தேர்தல் முடிவுகள் தலை கீழானதைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்பட்டார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் முதல்நாளே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த பிரகீத் எக்னலியகொட என்ற லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கணாமல் போய்விட்டார்.

லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்துருவன் சேனாதீர உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

ரிவிலங்கா மற்றும் சியத்த போன்றவற்றிற்கான அரச விளம்பரங்கள் இடைநிறுத்தப்பட்டது.  இந்நிறுவனங்களுக்கெதிரான அரசாங்கத்தின்கெடுபிடி அதிகரித்து வருகிறது.

இந்த நெருக்கடியின் ஒரு கட்டமாகவே சியத்த நிர்வாகிகள் நாட்டை விட்டு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். சியத்த என்ற இன்னொரு பத்தரிகையும் நிறுத்தப்பட்டு விட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்களும் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்.

அடுத்த இலக்கு யாரோ? ஏந்த ஊடக நிறுவனமோ  யாரறிவார்?

அத்துடன் ஊடகவியளாளர் பிரதீப் அவர்கள் காணாமல்    போய் ஐந்து மாதங்கள் ஆகின்றன. அவர் பற்றிய  விபரங்களை அரசு தொடர்ந்து மறைத்தே வருகின்றது. அவரின் துணைவியார் தனது கணவனை கண்டுபிடித்து தரும்படி கேட்டும், அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இலங்கையில் ஊடகத்துறைக்கு மகிந்தாவால் ஏற்பட்ட அவலத்தை, ஆத்திரம் கொண்டு கேலிச்சித்திரமாக்கியுள்ளார்.