Fri01152021

Last updateSun, 19 Apr 2020 8am

புண்ணிய பூமியில் முதுபெரும் “கொலைஞர்களின்” ஒன்றுகூடல்

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 14/06/2010

புலிகள் கேட்டவற்றை என்னிடம் கேட்கக்கூடாது!

சிங்களமக்கள் ஆணைப்படியே எதையும் செய்வேன்!

26-வருடங்களுக்கு முன்பு போபால் விஷவாயுத் தாக்குதலில் 20,ஆயிரம் மக்கள் பலி கொள்ளப்பட்டும் 5-லட்சம் மக்கள் மிகப்பெரும் துன்ப-துயர அவலங்களுக்கும் ஆளாகினர். இக்கொலை அவலங்களின் பிரதான காரணி அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆணடர்சன் என்பவனின் தலைமையில் இயங்கிய யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டெட் என்ற இரசாயனத் தொழிற்சாலையே. அன்று உலகமே அதிர்ந்து போன இம் மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவான ஆண்டர்சனை, அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியே அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக தப்பியோடவிட்டாரென அவரின் அன்றைய முதன்மைச் செயலர் பி.சி. அலெக்சான்டர் கூறியுள்ளார்.

இன்று ராஜீவின் துணைவியாரின்  (நேரு குடும்பத்தினரின்) குடும்ப ஆட்சியே இந்தியாவில் தொடர்கின்றது. எம் நாட்டின் மகிந்தமா  மன்னன் கடந்த வருட மே மாத நடுப்பகுதியில் இவர்களின் துணைகொண்டே மாபெரும் தமிழின வேள்வியை நடாத்தினார். அடுத்த தலைவர் “சூளைமேட்டின் டக்கிளஸ் தேவானாந்தா.” இவர் தேசியரீதியாக “பாரம்பரிய ஜனநாயக நீரோட்டவாதி, பாரம்பரிய-மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்” இத்தோடு “சிவதர்ம வள்ளலும், சிறந்த சமூக சேவையாளரும்” ஆவர். சர்வதேசரீதியாக “சூளைமேட்டின் புரட்சிக் கொலைஞர், சிறுவர் கடத்தலாளன்” இப்படி இன்னும் பல பயங்கரவாதச் செயல்களின் கைங்கயரிவாதி.

இத்தகைய உந்த “ ஜீவகாருண்ணிய, மக்கள் நலன்சார்-ஜனநாயக-சோஸலிச அரசுகளின் (இலங்கை -இந்திய)  மாபெரும்-முதுபெரும் திறம்படு ஆட்சித் தவைவர்கள்” கடந்த வாரம் காந்தியின் புண்ணிய பூமியில் சங்கமித்துள்ளார்கள். இச் சங்கமிப்பானது, இலங்கை-இந்தியாவென்று இரு கட்டங்களாக நடந்தேறியது. இதில் தமிழ்மக்களின் பிரச்சினையே பிரதான நிகழ்ச்சி நிரல ஆகும். முதலில் இலங்கையின் சங்கமிப்பைப் பார்ப்போம்.

விடுதலைப் புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது.
வீடுகளை மீளக் கட்டித்தர எம்மிடம் வசதியில்லை.  -கூட்டமைப்பினரிடம் மகிந்த வள்ளல்

இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஓரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தர அரசிடம் வசதி இல்லை. விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றை கட்டிக் கொள்வார்கள் என்றாராம் மகிந்த வள்ளல். அரசியல் விவகாரம் குறித்து பேச முற்பட்ட வேளையில் விடுதலைப் புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது, சிங்கள மக்கள் ஆணைப்படியே எதையும் செய்வேன் என்றாராம். நாம் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் தந்தை செல்வாவினுடையது, புலிகளின் கோரிக்கைகள் அல்ல என்றனராம் கூட்டமைப்பினர்.

வீடுகள் கட்டித் தர எம்மிடம் பணம் இல்லை. இது ஒரு நாட்டின் பொறுப்பு மிக்க தலைவர் சொல்லும் பதில் அல்ல. சில பொறுப்பற்ற குடிகார குடும்பத் தலைவர்கள், போதையில் சொல்வது போன்ற “கஞ்சல்தனமான பதில்”போல் உள்ளது. புலிகள் கேட்பது போன்று கேட்கக்கூடாது என்பது, ஏதோ தாங்கள் முன்பு புலிகள் கேட்டு, அவர்களுக்கு கொடுக்காதவர்கள் போல் கதை சொல்கின்றீர்கள். இதற்கு முந்தைய ஜனாதிபதி தேர்தலில் புலிகளுக்கு தாங்கள் கோடிக்கணக்கில் லஞசம் கொடுத்தே, தங்கள் குடும்பாட்சியை தொடர்கின்றீர்கள். தமிழ்மக்கள் கேட்பது பிச்சையல்ல. அவர்கள் தங்களிடம் இழந்ததையே தாவென உரிமையுடன் கேட்கின்றார்கள். தாங்கள் கூட்டுச் சேர்ந்திருப்பது ஆண்டர்சனை பாதுகாத்த பாசிச குடும்ப ஆட்சியினருடன் அல்லவா? அவர்கள் எவ்வழியோ தாங்களும் அவ்வழிதானே. அவர்கள் அவனின் வழக்கையே 26-வருடங்கள் இழுத்தடித்துள்ளார்கள். நீங்களும் தமிழ்மக்கள் பிரச்சினையில் இதை தான் செய்யப்போகின்றீர்கள். அதற்குத்தானே “சூளைமேட்டுக்காரனையும்” துணைக்கு அழைத்துச் சென்றீர்களோ?

ஜனாதிபதி  – ஈ.பி.டி.பி. குழு  சந்திப்பு: 13 வது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்து

இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் அடிப்படையில் 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப்படுத்தி,  ஐக்கிய இலங்கைக்குள் சமதான சகவாழ்வும் சமவுரிமையும் உள்ளதான அரசியல் ஏற்பாடு நோக்கி செல்வதே தமிழ்மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்த நடைமுறைச் சாத்தியமான வழி முறையென்றும் அதை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. குழு வலியுறுத்தியுள்ளது.

13 ஆவது திருத்த அடிப்படையில் தீர்வு! மன்மோகன் சிங் வலியுறுத்து: மஹிந்த இணக்கம்

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு 13ஆவ திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கையில் சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13 வது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்மோகன் சிங்கிடம் வாக்குறுதியளித்தார்.

அத்துடன் போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்தியப் பிரதமரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதனை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது: டக்ளஸ்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆகா, இந்த 13-வது என்பது அசல் கோமாளித்தன அரசியலாகியுள்ளது. 13-வதை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியறுத்தலாம், ஆனால் வடகிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமிலலை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொணடுள்ளதாம். அப்போ இதை ஏற்க வைக்கத்தான், தங்களின் இந்த இந்தியப் பயணமோ?  எனி மேல் “பிள்ளை பிடிகாரர்கள்” தான் பலாத்காரமாக பிரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் ‘மா மன்னர்கள்’. சேர-சோழ-பாண்டியராட்டம் கோலோச்சப் போகின்றார்கள். உங்களில் ஒருவர் உந்த மன்னராட்சிக்கு “றெயினிங்” எடுப்பதற்குதானோ? இந்தியா போனவர். அடுத்த செம் மொழி மாநாடும் உங்கள் ஆட்சியில் தானோ?  வாழ்க மன்ராட்சி, வளர்க செம் மொழி.

நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் சண்டித்தன அரசியல்

ஓர் சர்வதேச மக்கள் வாரத்தில், ஒருநாட்டின் பிரஜை,  தங்கள் நாட்டில்  அடக்கப்படும் (தமிழ் மக்கள்) தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அரசியல்-அராஜகக் கொடுமைகளை துண்டுப் பிரசுரமாக வெளியிடுவதில் என்ன தவறு? துண்டுப் பிரசுரத்தில் தவறான தகவல்கள் இருந்தால், அதை ஜனநாயக ரீதியில்-நட்புணர்வோடு விவாதிக்கலாம், தவறுகளைச் சுட்டிக்காட்லாம். இதுவே தவறுகளைத் திருத்துவதற்கான வழிமுறையாகும். இதுவே அடக்கியொடுக்கப்படும் இனத்திற்கான, சமூகத்திற்கான அரசியல்-பொது வேலைகள் செய்யப் புறப்படுவோர்களின் அரசியல் ஜனநாயகப் பண்பு.

இதைவிடுத்து தவறான தகவல்களோடு துண்டுப்பிரசுரம் விநியோகின்றீர்கள் இவ்விடத்தை விட்டு, உடனடியாக அகலுங்கள், இல்லாவிடில் வீண் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்றும்,  “புலிப்பாணியிலான” சண்டித்தன- வெள்வெருட்டு அரசியல் தவறுகளை களையவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவாது. அத்தோடு இணையதளத்தில் “கீச்சுமாச்சு தம்பள விளையாட்டு” விளையாடுவதும், கோழைத்தன அரசியலே..

துண்டுப்பிரசுரத்தை விநியேபகித்தவர் ஓர் பெண்.. அந்நாட்டில் நாம் அகதிகள். ஓர் இன அடக்குமுறையைக் கண்டித்து, துண்டுப்பிரசுரம் வெளியிட, அவர்களை நாம் “ஆட்கடத்தல்காரர்கள்” போன்று சுற்றி நின்று எச்சரிக்கும்  இச்சண்டித்தன அரசியல் செயற்பாட்டிற்கு நாம் எல்லோரும் வெட்கித் தலை குனியவேண்டும்.

விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில், “தமிழ்மக்கள் கடந்த 30-ஆண்டுகளாக பேரினவாதப்-புலிப் பாசிசங்களுக்கிடையில், இருதலைக் கொள்ளி எறும்பாய், அகப்பட்டனர். 30-ஆண்டுகாலப் போராட்டம் அவலத்திலேயே முடிவுற்றுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையும் அதுதானே. கடந்த 30-ஆண்டுகளில் புலிகள் என்னதான் செய்தார்கள். புலிகளின் தாகம் தமிழ்ஈழம் என்றார்கள். அதற்காக ஆயுத வழிபாட்டு அரசியலை தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு புலம் பெயர்ந்த நாம் வெள்ளம் போல் பணத்தை வாரி வாரி இறைத்தோம். இதனால் அவர்கள் ஓர் “சண்டித்தன ஆயுததாரி அரசியலாளர்கள்” ஆனார்கள். இதன் விளைவு புலத்திலும்-புலம்பெயர்விலும் துரோகிககள் என்ற முத்திரையில் சகலரையும் அழித்தார்கள். இதற்கு நாம் ஆமாம் போட்டு, உற்சாகப்படுத்தினோம். மேலும் மேலும் பணமும் (கடன்பட்டும் ) நகைகளும் கொடுத்தோம், ஏன் கட்டிய தாலிக் கொடிகளையும் அல்லவா நகைக் குவியலில் களட்டிக் வீசினோம். பணம் தராதவர்களை வெருட்டினோம், அடித்தோம்.  இதன் இந்த 30-வருட அரசியலின் பரிணாம வளர்ச்சி புலம் பெயர்வில் புலிகளின் எதேச்சதிகார சண்டித்தன அரசியலையே வளர்த்தெடுத்தது விடுதலைப்போராட்டம் அவலத்திலேயே , முடிவுற்றது. இவ்வுண்மைகளை சொன்னால் அதற்கு வெள்வெருட்டு சண்டித்தனமோ?

புலிகளின் எதேச்சதிகார சண்டித்தன அரசியல் கடந்தவருட மே 19-தோடு நந்திக்கடலில் சங்கமமாகி விட்டதென மக்கள் நினைக்கின்றார்கள். அது புலத்தில் தொடராய் தொடர்கின்றது. என்று தணியும் இந்த “சண்டித்தன வெள்வெருட்டு” அரசியல்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டாரா?

இந்திய பொலிஸ் அதிகாரிகளால் தேடப்படும் விடயத்தை அறிந்திருந்தும் எவ்வாறு அரசாங்கம் அவரை இந்தியாவுக்கு அழைத்து சென்றது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.முன்னதாக ஜனாதிபதியின் இந்தியவிஜயத்தில் பங்கேற்கவுள்ள குழாமில் டக்ளஸ் தேவானந்த உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் இறுதி நேரத்திலேயே அவர் உள்வாங்கிக் கொள்ளப்பட்டார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் 99 பேர் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தனர். இதன்போது அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் கருணா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் யுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவர் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் அந்த விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்தியாவில் கைது அபாயம் காணப்பட்ட போதும், அவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை அரசாங்கத்தின் சூழ்ச்சியாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.டக்ளஸ் தேவாநந்தாவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தமிழக விடயம் அரசாங்கத்திற்கு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சேறு வீசினால் அது தன் மீது விழும்போது சந்தணமாக மாறும் என்றும் கற்களை வீசினால் அது பூக்களாக விழுந்து மணம் வீசும் என்றும் தனது இந்திய விஐயத்தின் போது ஆற்றாக் கொடுமையில் கிளப்பி விடப்பட்ட புரளிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்ததோடு புயல் மழையை எதிர்கொண்ட தமக்கு இப்போது கிளப்பப்படும் புரளிகள் யாவும் புழுதி மழை “என்றும் நாடு திரும்பிய அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

தலைவா, நீங்கள் சந்தணம் பூவென்றெல்லாம் ஏதோ நறுமண வார்த்தைகளில் சொலகின்றீர்கள். தங்களை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி சொல்வதெல்லாம் பொய்யோ?

“டக்ளஸ் தேவானந்தா சென்னையில் தங்கியிருந்தபோது, 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை சூளை மேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்று விட்டு மேலும் நால்வரை காயத்துக்குள்ளாக்கினார்.  இதையொட்டி இவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து பிணையில் வெளி வந்த இவர், நவம்பர் 1988ல் ஒரு பத்து வயது சிறுவனை கடத்தி ரூபாய் ஏழு லட்சம் பிணைத் தொகையாக வேண்டும் என்று கேட்டதாக சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டது.   இதையடுத்து டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கைது செய்யப் பட்டார்.   பின்னர் 1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் அடைக்கப் பட்டார்.  பிறகு இலங்கை தப்பிச் சென்ற இவரைக் கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கு இலங்கையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தாலும் மாநில அரசும் இத்திய அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.”

பாரம்பரியமானவரே! இது ஆற்றாக்கொடுமையில் கிளப்பிவிட்ட புரளியென கோவிக்கின்றீர்களே. இது அரசின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம என்ற சந்தேகங்களில் கொஞசமும் உண்மை இருக்காதோ? ஏனெனில் மகிந்தாவும் இன்னெர்ரு பிரபாகரன் தானே? தனக்கு மேல் ஒருவரும் வரக்கூடாதென்பதில்! பொன்சேகாவை உள்ளுக்கு தள்ளியதும் உதனால் தானே. தாங்களோ வடக்கின் பாரமபரிய வசந்தம். கூட்டமைப்பே பெறாத விருப்பைப் பெற்றவர் நீங்கள். அடுத்த மாகாணசபை முதலமைச்சர் என்றொரு கதை. இதெல்லாம் அவருக்கு ஓர் “இதுதானே.” இதில் அமர்ந்து போன பழைய “சூளைமேட்டை-பிள்ளைபிடி கதைகளை” கிளறினால், தாங்கள் அவரின் தொடர் கொத்தடிமையே!  என் செய்வது இந்திய விஜயத்தால் உங்களுக்கு இப்படியொரு தலைக்குனிவு.

சரத் பொன்சேகாவைக் கொன்று நானும் தற்கொலை செய்வேன்:
– மேர்வின் சில்வா

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தரப்பு முக்கியஸ்தர்களைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா இறங்கினால், அவரைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்யப் போவதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ பிரதியமைச்சருமான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஆரப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் எமது நாட்டைக் காத்த வீரர்களை காட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இரகசியமான முறையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மேர்வின் சில்வா இதனைப் பார்த்துக் கொண்டு தாம் சும்மா இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் உள்ளிட்ட படை அதிகாரிகளை யுத்தக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கு சரத் பொன்சேகா முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏன் தங்களுக்கு இந்த விபரீத யோசனை. உதைத்தானே கோத்தபாய செய்யப்போகின்றாராம். விட்டுக்கொடுங்களேன். அவர் இதில் அனுபவஸத்தராச்சே. உங்களின் தேசபக்தியை (புல்லரிக்குது) என்னே என்பது!

இலங்கை, இந்தியாவின் மாநிலமாக மாற்றமடையக் கூடிய அபாயம்: ரில்வின் சில்வா

இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பிலான தகவல்களை இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மேற்கொள்ள உள்ள இந்திய விஜயத்தின் போது அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து அறிவிக்க உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய விடயங்கள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலைக்கு இன்றைய அரசியல் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பரம்பரை அரசியல் முறைமையொன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக் காலத்தின் பின்னர் மீண்டும் ஆட்சி பீடமேற முயற்சித்தால் அதற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார்

நீங்கள் எந்த உலகில் உள்ளீர்கள். மகிந்தாவின் பரம்பரை அரசியல் முறைமை ஏற்பட்டு, இலங்கை இந்தியாவின் மாநிலமாகி, வெகுகாலமாகிவிட்தே. நீங்கள் எதிலும் “ரு லேற்”.

அகிலன் – 14-06-2010