Sun01172021

Last updateSun, 19 Apr 2020 8am

கலை-இலக்கிய அரங்கம்-5 (சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு)

இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை’

-இது எஸ்.பொ.வின் நழுவல்

இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை -  இது எஸ்.பொ.வின் நழுவல்

சீதாபிராட்டிகளால் எரியும் இலங்காபுரி – இது இந்திய காங்கிரஸ் தலைவர் மீது மறைமுகமான தாக்குதல்.

எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை தான் வாழும்;  நாட்டுக்கோ தனது நண்பர்களுக்கோ தான் சார்ந்த எவருக்குமோ வாழ்வு முழுவதும் உண்மையாக இருக்கவில்லை என்பது அவரது வரலாறு.

அதுதான் அவரது தத்துவமான வரலாற்றில் வாழ்தல்.

தற்பொழுது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடுக்கு எதிராக தமிழ் நாட்டில் பிரபலம் தேடும் அவரை விடுத்து, மகாநாடு ஏன் என்பதை தீராநதி வாசகர்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றேன்.

ஏன் இந்த மகாநாடு?

முப்பதுவருடகாலப் போர்ச்சூழலினால் இலங்கையைவிட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். வன்முறை, அடக்குமுறை, போரின் பாதிப்பு…

இப்படி எத்தனை வாழ்க்கைப் போராட்டம்.

இன்று தமிழர்கள் இறக்கும் நிலையில் இருந்து உயிர்களை தக்க வைக்கக் கூடிய தன்மைக்கு  மாறியிருப்பதால் தங்கள் உறவுகளை  சந்தித்து உணர்வுகளை பரிமாற  ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் இதயங்கள் துடிக்கின்றன. இம்மகாநாடு எம்மவரின்;  நீண்டகாலக்கனவு. போரின் ரணங்களை மயிலிறகுகளால் வருடவேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.  அயலவர்களாலும் மற்றவர்களாலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள், எங்களுக்கு நாங்களே ஆறுதல் வார்த்தைகள் பரிமாற வேண்டியகாலத்தில் எங்களை மீறிய சக்திகளால் தள்ளப்பட்டுள்ளோம்.

அவுஸ்திரேலியாவில் கடந்த பத்து வருடங்களாக  தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலை நடத்தியிருப்பதனாலும்,  ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும், அவுஸ்திரேலியா, கனடா மற்றும்  ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகளுடன் தொடர்ச்சியான  நட்புறவு கொண்டிருந்தமையினாலும் என்னை  இந்த ஒன்றுகூடல் மகாநாட்டை ஒருங்கிணைத்து தருமாறு இலங்கையில் பல இலக்கியவாதிகள் என்னிடம் பலதடவைகள் கேட்டிருக்கிறார்கள்.

பல புலம்பெயர் ஈழத்து படைப்பாளிகள் தமது நூல்களை அச்சிடுவதற்கு தமிழகத்துக்கு வந்து திரும்பினார்கள். ஆனால் அவர்களினால் தமது தாயகம் சென்று வரக் கூடிய சூழல் இதுவரை இருக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் இலங்கை சென்று நிலைமைகளை கவனத்தில் எடுத்து பலருடனும் ஆலோசிக்க ஒரு கருத்தரங்கு ஒழுங்குசெய்தேன். பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, மௌனகுரு, உட்பட மற்றும் பல படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஏகமனதாக முடிவெடுத்தே நாம் மகாநாட்டு பணிகளை முன்னெடுத்தோம்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, வவுனியா, மலையகத்தில் ஹட்டன்… என்று தமிழ்ப்பிரதேசங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான தகவல் அமர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஈழத்து எழுத்தாளர்களின் விருப்பத்துடனேயே மகாநாட்டுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நான் சர்வதேச ரீதியாக எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கோள்கின்றேன்.

இனி, எமது நோக்கங்களை எள்ளிநகையாடும்  எஸ்.பொ.வுக்கு எனது பதில்களை எமது 12 அம்ச யோசனைகளிலிருந்தே தருகின்றேன்.

1.இருபதாம் நூற்றாண்டிலிருந்தே எல்லா உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் கொப்பி எடிட்டர்கள் இருந்திருக்கிறார்கள். படைப்பை செம்மைப்படுத்துவதுதான் கொப்பி எடிட்டிங். இந்தியாவில் உள்ள பெரிய ஆங்கில பதிப்பகங்களை தொலைபேசியில் அழைத்தால் இது எஸ்.பொ.வுக்கு தெரிந்துவிடும்

2.தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் அல்லது ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்படுவதை நாம் மட்டுமல்ல அ.முத்துலிங்கம், ஜெயமோகன் போன்ற படைப்பாளிகளும் வரவேற்கிறார்கள். நாம் நடத்தவுள்ள மொழிபெயர்ப்பு அரங்கில் இதுகுறித்து ஆராயப்படுவதுடன் இதுவரையில் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப்படைப்புகளை அறிமுகப்படுத்தும் பணியிலும் ஈடுபடுவோம். இதற்காக புலம் பெயர்ந்;தவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் இந்த மகாநாட்டில்  வெளிவருகிறது

3.இலங்கையில் நீடித்த போரினால் பல நூலகங்கள் அழிந்தது எஸ்.பொ.வுக்கு தெரியாதா? யாழ்;ப்பாணம் பொதுநூலகம் உட்பட வன்னியில் பல நூலகங்களின் தேவைகளை நாம் கவனத்தில்கொள்கின்றோம். நூலகர்களுக்கு ஆதரவு அளிக்க சில நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

4.போரினால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையரை இழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து புலமைப்பரிசில் திட்டம் ஒன்றின் மூலம் கடந்த 22 வருடங்களாக உதவிவரும் அமைப்பில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அனுபவத்திலிருந்து இலங்கையில் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கும் உதவும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

5. இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் இதழ்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவி கேட்பது ஒன்றும் தவறில்லை. தமிழக அரசு நூலக அபிவிருத்தி திட்டம் மூலம் தமிழக நூல்களுக்கு இதழ்களுக்கு உதவுவது எஸ்.பொ.வுக்கு தெரியாதா?

6.போரினால் எங்கள் குழந்தைகள் கல்வியை இழந்தார்கள். அவர்களின் புனர்வாழ்வு கல்வி, வாசிப்பிலும் தங்கியிருக்கிறது. அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதில் எஸ்.பொ  என்ன குறை காண்கிறார்?

7.தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஈழத்தைப்பொறுத்தமட்டில் சன்மானங்கள் என்பது அபூர்வமானது. எனவே அவர்களில் சாதனையாளர்களை தெரிவுசெய்து பாராட்டி கௌரவித்து விருதுகொடுப்பதில் என்ன எள்ளல்? எஸ்.பொ. அவர்களை மட்டுமல்ல இன்னும் சில சாதனையாளர்களையும் நாம் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலிலே பாராட்டி கௌரவித்திருக்கின்றோம்.

8.கருத்துப்பரிவத்;தனை, அனுபவ பகிர்வு என்பது காலம் காலமாக ஒன்றுகூடல்களில் சந்திப்புகளில்  நிகழ்ந்திருக்கின்றன. பலநாடுகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும்போது பயனுள்ள விடயங்கள் புரிந்துணர்வுடன் பேசப்படும். இது ஈழத்து இலக்கியத்தில் புது இரத்தம் ஓட வைக்கும்.

9.சிறுவர் இலக்கியம் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் மொழியிலும் வறுமை அடைந்துள்ளது. இது வளர்த்தெடுக்கப்படவேண்டியது. இலக்கியம் எல்லைகளிடப்பட்ட அல்லது ஒரு தலைமுறையுடன் தேங்கிவிடுவதும் அல்ல. எஸ்.பொ.வுக்கு அப்பால் இலக்கியம் நகர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறாரா? இது ஒருவகை மரதன் ஓட்டம். சிறுவர் இலக்கியம், சிறுவர்நாடகம் உட்பட பல நிகழ்சிகள் உள்ளடக்கிய அரங்கும் இந்த மகாநாட்டில் இடம்பெறுகிறது.

10. சினிமா வலிமையான ஊடகம். கற்கை நெறியாகவும் மாறிவிட்டது. தமிழ்ச்;சினிமா வர்த்தகப் பண்டமாக மாறிவிட்ட காலத்தில் குறும்படம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் நிழல் இதழ் மற்றும் சில அமைப்புகள் குறும்பட பயிற்சிகளை நடத்துகின்றன. இதுபோன்று இலங்கையிலும் குறும்பட பிரக்ஞை வளர்த்தெடுப்பதற்கான அத்திவாரக்கல் பதிக்க விரும்புகிறோம்.

11.இசை, நடனக்கல்லூரிகள் மீதான ஆர்வம், ஈழத்தில் ஓவியக்கல்லூரிகளிடத்தில் இல்லை. எமது தமிழ்சமுதாயத்தில் இக்குறை நீடிக்கிறது. இதுபற்றிய கலந்துரையாடலும் நடைபெறும்.

 

12.பல ஈழத்து கூத்துக்லைஞர்கள் மற்றும் நாடக நெறியாளர்கள் புலம்பெயர்ந்துவிட்டனர்;. இவர்களின் மீள் வரவை ஈழத்து கூத்து, மற்றும் நாடக கலை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமது விடுமுறைகாலத்தில் இவர்கள் இலங்கை வந்து கூத்து. நாடகம் தொடர்பான பயிற்சிகளை வழங்கமுடியும்.

இறுதியாக நாம் சொல்லவிரும்புவது: கோடைகாலத்தில் அவுஸ்திரேலியாவிலும் குளிர்காலத்தில் தமிழகத்திலுமாக வாழ்ந்து பல வருடங்களாக இரண்டு உலகத்தின் நன்மைகளை அனுபவித்து வரும் எஸ்.பொ.வுக்கு ஈழ எழுத்தாளர்களின் ஆதங்கம் இதயத்துடிப்பு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அதற்காக அவர்,  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்த படி பேச, எழுத முடியாது.

அவதூறுகள் சுமத்துவதிலும் பரப்புவதிலும் தன் ஒழுங்கற்ற தன்மையை எஸ்.பொ. காட்டுகிறார்.

முதலில் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கி நடத்தும் மகாநாடு என்றார்.- இது இணையம்

கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருந்து கோடிகோடியாகப்பெற்று நடத்தும் மகாநாடு என்றார் – இது சிட்னி வானொலி.

பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களினால் நடத்தப்படுகிறது என்றார் – இது இணையம்.

இறுதியாக இலங்கை அரசினாலும் கருணா, டக்ளஸ் முதலானவர்களினாலும் நடத்தப்படுகிறது. என்றார். – இது தீராநதி.

இடைக்கிடையே  சீனாவும் இந்த மகாநாட்டுக்குப்பின்னணியில் இருக்கிறது என்கிறார்.

அவர் இதுவரையில் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறும் இல்லையேல் சட்டநடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவருக்கு நாம் கடிதம் ஒன்று சிலவாரங்களுக்கு முன்னரேயே அனுப்பியுள்ளோம்.

லெ.முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011