Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போராடி மரணித்தவர்களின் தினத்தில், பிரபாகரனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

பிரபாகரன் மாவீரர் இல்லையோ?

இப்போ புலிகள் எல்லாம் பலவிதம். அதன் செயல்கள் எல்லாம் ஒவ்வொரு விதம். கடந்த இரு வருடங்களுக்கு முன்பான புலிகளின் (பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் கூட) நவம்பர் மாத நடைமுறை போராடி மரணித்தவர்களின் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே.

ஆனால் இம் முறை இத் தினத்தில் பிரபாகரனின் பிறந்த நர்ளை மிகைப்படுத்தியதோர் கொண்டாட்டம் ஆக்கியுள்ளார்கள்,  அவரின் புலம் பெயர்வுகளின் ஓர் பிரிவினர்!.  இவர்கள் தம் உள்ளார்ந்தத்தை பகிரங்கமாகக் கொண்டாடிக் காட்டுகினறார்கள். அவர் எம்முடன் ஜீவிககின்றார் என!.  இதைக் குறிப்பிடுவதன் மூலம், கொண்டாடுபவர்களின் நோக்கை கிண்டலடித்து எள்ளிநகையாடுவதல்ல என்நோக்க்ம்.

இது தமிழ்த்தேசிய வரலாற்றின் யதார்த்தம் பற்றிய பிரச்சினை!.  பிரபாகரன்  16-வயது மார்க்கண்டேயர் அல்ல. அல்லது கருத்துமுதல்வாதிகள் கருதுகின்றது போன்று, அதை நம்பிக்கொண்டிருக்கின்றவர்களின் ஜீவிப்பாளருமல்ல!. முள்ளியவாய்க்காலின் 300-மீற்றருக்குள் வந்த புலிகளின் (ஏகப்பட்ட) முக்கியமானவர்களில் பிரபாகரனும் ஒருவர். அதற்குள் பிரபாகரனுக்கு என்ன நடைபெற்றதென்பது சிதம்பர ரகசியம்ல்ல. நிலைமை இப்படியிருக்க புலிகளுக்குள், தமிழ் உணர்வாளர்களுக்குள் ஓரு பகுதியினர் கருத்துமுதல்வாத கற்பனாவுலகில் சஞ்சரிக்கின்றார்கள். அவர் இருக்கின்றார்!. உரியநேரத்தில் வருவார் என்கின்றனர்.

புலிகள் அமைப்பின் கட்டமைப்பு, அதன் ராணுவக் கண்ணோட்டதினூடான அதீத வளர்ச்சி, வட-கிழக்கை தனதாக்கி கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாக நடாத்திய அரச-அதிகார ஆட்சிமுறை, சமூக-விஞ்ஞானம் பற்றிய புரிதலுள்ள சில மாக்சிச-லெனினிச வாதிகளை–அமைப்புகளைக் கூட அதிரவைத்தது!.  அதிலிருந்து மீளாதவர்கள் இப்போதும் உள்ளனர். இவர்களுக்கே இந்நிலையென்றால், இது புலிகளுக்கு எப்படியான கனதியான கனவுலகைக் கொடுத்திருக்கும். ஆனால் நடந்து முடிந்ததெல்லாம் இதற்கு நேர்மாறானவைகளே!.  புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஏற்பட்ட சுனாமி, அதனூடான அழிவுகள், அரசியல் வெற்றிட்ம் போன்ற இன்னோரன்னவைகளை,  இவர்களால் எப்படி ஜீரணிக்க முடியும்? ஆதலினால் தான் இவர்களதும், ஏனைய தமிழ் உணர்வாளர்களதும் மனங்கள் பிரபாகரனின் மறைவை-இழப்பை ஏற்க மறுக்கின்றது!.  இந்த உளவியல் அரசியலின் வெளிப்பாடே மிகைப்படுத்தப்பட்ட இச்செயற்பாடுகள்!

மனிதகுல அரசியல் வரலாற்றில், மனிதகுலம் இது போன்ற எவ்வளவோ நிகழ்வுகளை சந்தித்து தாண்டியே  வந்துள்ளது. இவற்றுக்குள்ளும் இதுபோன்ற கருத்து முதல்வாத—பொருள்முதல்வாத தத்துவப்போர்கள் நடைபெற்றே வநதுள்ளன. இதில் சரியானவை மக்கள் நலன் சார்ந்தவை வர்க்கப்போரின் மூலம் முன்னேறி முன்தள்ளப்பட்டன. மற்றவைகள் பின்தள்ளப்பட்டன,  தூக்கியெறியப்கப்பட்டன. புலிகளின் தமிழ் ஈழப் போருக்கும் பிரபாகரனுக்கும் நடந்ததும் இதுதான்!

தமிழ்மக்களின்  சமகால அரசியல் வாழ்வில், புலமும்–புலம்பெயர்வும்  பாரிய இடைவெளியில் உள்ளது. இன்றைய தமிழர் தாயகம், சிங்களப் பேரினவாதத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பூகோள, அரசியல், பொருளாதார ரீதியில் அனுபவிக்கும் பாசிச-சர்வாதிகாரப் பாகுபாடுகள், அடக்குமுறைகள் ஏராளம். மாவீரர் தினம் என்பதால் கோவில்கள், தேவாலயஙகள் கூட இராணுவக் கண்காணிப்பில் உள்ளன. மணி ஒலித்து, தீபங்கள் கூட ஏற்றி வழிபடமுடியா நிலை. அவர்களின் ஆன்மீக அமைதி வழிபாடு கூட இடர்பாட்டுக்குள் உள்ள இந்நிலையிலும்; தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காக போராடி மரணித்தவர்களின் நினைவுநாளிலும், புலம்பெயர்வுகள் கேக் வெட்டி குதூகலிக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கும் போராடி மரணித்தவர்களுக்குமான பிரதான தேவை இதுவல்ல.

எம் தாயக மக்கள், சிங்களப் பேரினவாதத்தின் பாசிசப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள். அவர்களின் சுயநிர்னய உரிமைப்போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. தவிரவும் அவர்கள் அரசியல் தலைமையற்ற வெற்றிடத்தில் உள்ளார்கள். அவர்களை போராடும் சக்தியாக்க வேண்டும். அத்தோடு அவர்களுக்கு புலம்பெயர்வினால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை கோட்பாடுகள் பரிகாரமாகாது.

நாடுகடந்த தமிழீழம் என்பது தோல்விகண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்வே. இதன் தாற்பரியம் நடைமுறைச் சாத்தியமற்றது எனபதை கடந்தகால நடைமுறைகள் கோடிடடுக் காட்டுகின்றன. அத்துடன் இது தமிழ்மக்கள் அபிலாசைகளைக் கொண்டதுமல்ல. இது தான் முடிந்த முடிவுமல்ல. தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கு மார்க்கங்கள் பலவுண்டு. இது எமது நாட்டின் சமகால யதார்த்த நிலைமையை கணக்கில் கொண்டு வகுக்கப்படவேண்டும். இதை நோக்கிய அரசியல் வேலைகளுக்கு மக்களை நகர்த்தவேண்டும். வெகுஐனப்போரை முன்னெடுக்க உதவவேண்டும். இதற்கு புலம்பெயர்வாளர்கள் பங்காளிகளே தவிர தலைமை தாங்கும், உத்தரவிடும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் அல்ல.