Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நம்புங்கள் மகிந்தன் நல்லவன்!

தமிழ் மக்கள் பெறுமதிமிக்க சொத்தெனும் போதினிலே

 

‘இனவெறியின்’ இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!”

 

நம்புங்கள் மகிந்தன் நல்லவன்!

 

 

“தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்து”  என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘சூரியப்பொங்கல்’ என்னும் நாடக விழாவில் மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.. .அதுவும் தமிழிலேயே உரையாற்றினார்.

 

 

வடபகுதி மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதி மிக்க ஒரு சொத்து. நாம் எந்தவொரு கட்டத்திலும் எமது மக்களைக் கைவிட மாட்டோம். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்றே சகல வளங்களும் வசதிகளும் கொண்ட பிரதேசமாக வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம். அதற்கான நோக்குடன் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டமாகும். இதுவன்றி வடக்கின் கல்வி பொருளாதாரம் அபிவிருத்தி போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்துவோம். உங்களுக்கோர் வளமான வாழ்வை ஏற்படுத்தித் தரவே நான் பாடுபடுகின்றேன். என்னை நம்புங்கள். நான் உங்களை வழி நடத்திச் செல்வேன் என்றார்.

 

“என்னை நம்புங்கள்” என்றால்,  உங்களின் (தமிழ் மக்கள்) நம்பிக்கையை இழந்தவனே நான் என ஒப்புக் கொள்கின்றார்.  பாசிச இன வெறி கொண்டு செய்த மாபடுகொலைகள், அதில் ஓடிய குருதி காயுமுன், கறைபடிந்த கைகொண்டு ‘சூரியப்பொங்கல் என்றொரு நாடகம் நடாத்தி’, தமிழ் மக்கள் என் சொத்தென்றால் இவர் நல்லவர்,  இதை நாமும் ஊர் உலகமும் நம்ப வேண்டுமாம்.

 

இன்றைய ஏகப் பெரும்பான்மையான வடகிழக்கு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வுதான் என்ன?.  அரசாலும், அரச இயந்திரத்தாலும், தமிழ் பேரினவாதிகளாலும், இயற்கையாலும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். கடும் குளிர் வெள்ளம் போன்றவற்றால் கிழக்கு மக்களின் கடந்த ஓரு வாரகால வாழ்வு அவலம் நிறைந்தது.  இதற்குள் வந்த நிவாரணப் பொருட்களில் பலர் பகற்கொள்ளை. இக் கொள்ளையர்களைக் காப்பாற்றுவதிலும், காட்டிக் கொடுப்பதிலும் பிள்ளையான், கருணா போன்ற விடிவெள்ளிகளுக்குள் ஏகப்பட்ட போட்டி. ஒன்று சட்டத்தின்முன் நிறுத்த, மற்றது காப்பாற்றி வெளியில் கொண்டு வருகுது. இதுகளை “மகிந்த மைந்துகள் என்பதா?  மாட்டின் மைந்துகள்” என்பதா?

 

 

தமிழ் மக்கள் தன் சொத்து என இனவெறி கலந்துரைக்கும்  (“இன்பத் தேனுடன்”) மகிந்தா வடபகுதியில் செய்வதென்ன?

 

யாழ்ப்பாணத்துச் சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை அல்ல

 

சிறிலங்கா கார்டியன் விமர்சனம்

 

“யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கொலை கொள்ளை ஆட்கடத்தல்கள் காணாமற்போதல் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அங்குள்ள தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகக் சிறிலங்கா கார்டியன் விமர்சனம் செய்துள்ளது.”

 

“யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவிரவாதம் பரப்பப்பட்டதன் நோக்கமே, அங்கிருந்த தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்யவே என்பது தெளிவாகிறது. அங்கு நிகழ்ந்த மிருகத்தனமான படுகொலைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், பலர் காணாமல் போனமை ஆகியவை சட்ட ஒழுங்குக் குறைபாடுகளால் எதேச்சையாக நடந்தவை போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அவை அனைத்தும் தெளிவாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்ட வன்முறையே.”

 

இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்டால்,  உலகத்தில் இல்லாததோ  இங்கு நடக்குது என பிரதமர் பதில் சொல்கின்றார். உலகோடு ஒப்பிடும் போது வடபகுதியில் நடைபெறுவது யானை வாயில் இருந்து விழும் மயிருக்கு ஓப்பாகுமாம்.  தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலுமாக திட்டமிட்டு செயலிழக்கச் செய்யும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை, வெறும் சிவில் சமூகப் பிரச்சினையாக காட்டுகின்றது மகிந்தப் பேரினவாதம்.

 

இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தச் “சின்னப்பிரச்சினைகளை” எல்லாம் யாழ்ப்பாணப் பத்திரிகைகள்தான் ஊதிப் பெருப்பிக்கின்றதாம் என்கின்றார் ‘மகிந்தாவின் உள்ளம் கவர் கள்வன்’  டக்ளஸ் தேவானந்தா. முதன் முதலாக கூட்டமைப்பினரை விட பாராளுமன்றத்தில் இதை பெரும்பிரச்சினையாக பேசியவர் டக்ளஸ் தேவானந்தா தான். இப்போ இதை சின்னப் பிரச்சினை ஆக்கியுள்ளார். பாராளுமன்றத்தில் பேசியவுடனேயே அது மன்னர் கவனத்திற்கு வர, பின்னால்  அவருக்கெதிராக யாழ் இராணுவத் தளபதியே போர்க் கொடி தூக்க, பின்பு அதை அவரே அடக்கி வாசிக்கின்றார். என் செய்வது அவருக்கு தன் “அடிமை குடிமை”  அரசியலை விட்டால் வேறென்ன கெதி?.   இதை  ‘பொங்கல் விழா’  இதன் பின்னான “மகிந்த் சொர்க்க விழர்”  போன்றவற்றின் ஊடாக சேப் பண்ணியுள்ளார். யாழில் மகிந்தா முன் உரையாற்றிய டக்ளஸ்….

 

“நடந்தவைகள் அனைத்தும் நடந்தவையாகவே இருக்கட்டும். நடப்பவைகள்  நல்லவையாக இருக்கட்டும் எனவும் நடக்கப் போகின்றனவும் நல்லவையாகவே இருக்கட்டும்”  என்கின்றார்.

 

பொத்தாம் பொதுவாக பார்த்தால் “மன்னனும் மந்திரியும் செய்வதெல்லாவற்றையும் செய்து விட்டு, வெகு இலேசாக கீதா உபதேசம் செய்கின்றார்கள்.  அவர் தமிழ் மக்கள் தன் சொத்தென்கிறார். இவர் அதற்கு நன்றி சொல்கின்றார். கள்ளர்கள் பல (அழு-தொழு-ஆசாரம்) ரகம். இதில் இவர்கள் கடைந்தெடுத்த பேரினவாத வெறிகொண்ட ஆசாரக் கள்ளர்கள்.