Sun01172021

Last updateSun, 19 Apr 2020 8am

கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக (பகுதி–8)

கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!


கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர்.  இதற்கான  காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஓரு அரசியல்வாதியாகவோ,  பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பல்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது. சர்வதேச விவகாரங்களிலும், உள்நாட்டு அரசியலிலும்; அவர் ஓடுக்கப்பட்ட  மக்களினதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார்.

சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் பின் ஏற்பட்ட விவாதத்திலும் இவரது நிலைப்பாடு தெளிவாக மார்க்சிய லெனினியவாதிகளின் பக்கத்திலேயே இருந்தது. கைலாசபதி பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் வலதுசாரி அரசியற் சார்புடையோரிடமிருந்தே வந்தன. சில சமயங்களில் தம்மை மார்க்சிசவாதிகளென்று கூறிக்கொள்வோரும் கைலாசபதியுடன் முரண்பட்டதுண்டு. மார்க்சியம் என்பது விவாதங்கட்கும் அபிப்பிராய வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட   திட்டவட்டமான நிலைப்பாடுகளின் கோவை அல்ல. எனவே ஒரு நிலைமையை ஒருவர் அறிந்துள்ள  தன்மைக்கேற்ப அது பற்றிய மதிப்பீடுகளும் அவர் முன்வைக்கும் தீர்வுகளும் வேறுபடலாம். கைலாசபதியுடன் முரண்பட்ட பல வலதுசாரிகள், அவரது அடிப்படையான நிலைப்பாட்டுடன் முரண்பட்டனர். கைலாசபதியின் சமுகச் சார்புடைய இலக்கிய விமர்சனப் பார்வையை நேரடியாக எதிர்த்து முறியடிக்க முடியாத காரணத்தாற் தனிப்பட்ட அவதூறுகளில் இறங்கினோரும் உள்ளனர்.

கைலாசபதியின் பங்களிப்புக்களில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கமும், கல்வித் துறையில் அவர் ஆற்றிய பணியும் பற்றி அதிகம் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாக அறியப்படாததால் அவரது அரசியல் நிலைப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. கைலாசபதி என்கின்ற திறனாய்வாளர் தான் அதிகளவிற் சர்ச்சைக்குரிய மனிதரானார். இலக்கியம் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல்வேறு சூழ்நிலைகள் தொடர்பாகவும், பல்வேறு கோணங்களினின்றும் வழங்கப்பட்டவை. அவற்றைத் தனித் தனியாக எடுத்துப் பார்த்து அவற்றின் குறைபாடுகளை அவரது பார்வையினது குறைபாடன்றோ, அதை விட ஒருபடி அப்பாற் சென்று மார்க்சிய அணுகு முறையின் குறைபாடன்றோ வாதிப்பது  “குருடனுக்கு பால் காட்டிய”  கதையின் பாங்கிலேயே அமையும்.

இவ்வாறு கைலாசபதியின் திறனாய்வு பற்றி குறை கூறுவோர் ஒருவருக்கு ஒருவர் முரணான முறையிலேயே அவருக்கெதிரான வாதங்களை முன் வைக்கவும் நேருகின்றது. ஆறுமுகநாவலரின் பங்களிப்பை அவர் மதிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் கண்டிப்பவர்கள், இலக்கியத்தின் வர்க்கத்தன்மை பற்றிய அவரது நிலைப்பாட்டை மறுப்பவர்களுடன் வேறுபடுகின்றனர். சில சமயம் இரண்டு விதமான தாக்குதல்களும் ஒரே தளத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுட் கைலாசபதி பற்றிய விமர்சனங்கள், கைலாசபதி பற்றியும் மார்க்சிய அணுகு முறைகள் பற்றியும் விமர்சகர்கள் கொண்டிருக்கும் விறைப்பான பார்வையும் அடங்கும்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பார்வையும் வர்க்க அடிப்படையுங் கொண்ட ஆக்க இலக்கியப் படைப்பை உருவாக்குபவர், ஒரு போதனாசிரியரின் பாங்கில் இன்ன வகையில் இப்படி எழுதினாற் தான் தனது நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று  திட்டமிட்டு எழுதுகிறார் என்பது; மார்க்சியத் திறனாய்விற்குரிய கருத்தல்ல.

ஒரு படைப்பாளியின் ஆக்கங்கள் அவரது அனுபவத்திற்கும்–அறிவிற்கும் ஏற்றவாறே அமைகின்றன. ஒருவரது அறிவும் அனுபவமும் அவரது சமுதாய சூழலிற் தங்கியுள்ளன. வர்க்க சமுதாயத்திற் தனி மனித சிந்தனை  ஒருவரது வர்க்கப் பின்னணிக்கும், சமுதாயப் பார்வைக்கும் ஏற்றவாறு அவரது அனுபவங்களும் விருத்தியடைகின்றது. எனவே சரி–பிழை–நீதி–அநீதி–நெறி–நெறியல்லாதது போன்ற மதிப்பீடுகளும், மனிதாபிமானம, அழகியல் என்பன தொடர்பான கொள்கைகளும், ஒரு புறம் மனித இனம் என்ற அடிப்படையில் சில பொதுவான தன்மைகளைக் காட்டினாலும், மனித இருப்பின் வேறுபாடுகளையும் கொண்டிருப்பன. இலக்கியமோ பிற கலை வடிவங்களோ, அழகியலோ மனிதரது இருப்புக்கு அப்பாற்பட்டலையல்ல. மனித இருப்பிற்கும் அதனைத் தீர்மானிக்கும் சமுதாய இயல்பிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான முரண்பாடுகளை கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனித உறவுகளை நிர்ணயிக்கும் சமுதாய முரண்பாடுகள் இலக்கியத்திற் தெரிவது மட்டுமன்றி, அம் முரண்பாடுகளின் தீர்வுக்கான போராட்டமும் இலக்கியத்தினூடு நடைபெறுகின்றது. மனிதனது சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சமுதாயத்தின் வர்க்கத் தன்மையாலும், வாக்கப் போராட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுமாயின்,  இலக்கியமும் பிற கலை வடிவங்களும் அதற்கு விலக்காக அமைய முடியாது. இந்த வாதத்தை ஒருவர் வரட்டுத்தனமாக ஆதரிக்க முடியும். வரட்டுத்தனமாகவே இன்னொருவர் அதை எதிர்க்கவும் முடியும்.

கைலாசபதி கலை இலக்கியங்களில் அழகியலை வலியுறுத்தியவர். அதே வேளை அழகியல் ஆக்கங்களின் உள்ளடக்கத்தினின்று  வேறுபடுத்தப்பட்டு, உள்ளடக்கத்திலும் மேலான ஒன்றாகக் காட்டப்படுவதை வன்மையாக எதிர்த்தவர். அழகியற் கோட்பாடுகளை மிகையாக வலியுறுத்தி  “கலை கலைக்காகவே” என்ற கோஷத்திற்கு புத்துயிர் ஊட்டியவர்கள், இக் காரணத்துக்காகவே கைலாசபதியை கடுமையாகத் தாக்கினர். மார்க்சியக் கலை இலக்கிய நோக்கைத், தமிழன் பழைய இலக்கியங்கட்கும் பிரயோகித்து,  தமிழர் வரலாறு பற்றிய தெளிவான பிரமைகளைக் களையவும், அவற்றினூடு தமிழர் வரலாறு பற்றிய தெளிவான ஓரு பார்வையையும் பெறவுங் கைலாசபதி பெரும் பங்களித்தார். கைலாசாதி பற்றி செய்யப்படும் மதிப்பீடுகள் கைலாசபதியின் ஒட்டுமொத்தமான பங்களிப்பை முதன்மைப்படுத்துவது நியாயமானது. கைலாசபதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுகள் அவை செய்யப்பட்ட சூழலின் அடிப்படையிற் கருதப்படுவது அவசியம்.

மு. தளையசிங்கம் பற்றிய விமர்சனத்தில், கைலாசபதியின் வாதங்கள் சில அவரது முக்கியமான கருத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன். அக் குறைபாடுகள் தளையசிங்கம் பற்றிய அவரது மதிப்பீட்டைப் பொய்ப்பிக்கவில்லை. கனமான வாதங்கட்கு அருகருகாகக் கனங் குறைந்த வாதங்களை வைத்தமை கைலாசபதியின் விமர்சனத்தை அவரது அரசியல் எதிரிகள் தாக்குவதற்கு வசதி ஏற்படுத்திற்று. அதே வேளை கைலாசபதிமீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களின் கீழ்த்தரமான தன்மை அவர்களது தரப்பில் எவ்வளவு நியாயம் இருந்தது என்பதன் அளவுகோலாகவே எனக்குத் தெரிந்தது. சிந்தனைக்கும், தளையசிங்கத்தின்  மார்க்கிய விரோதத்தின் வறுமையைக் கைலாசபதி கணிசமான சகிப்புத் தன்மையுடனேயே விமர்சித்திருந்தார்.

கைலாசபதியின் முக்கியமான ஒரு தவறு, மஹாகவி பற்றிய அவரது மதிப்பீடு தொடர்பானது.  மஹாகவியின் சமுக அரசியற் பார்வையின் போதாமையை 1960-களின்  அரசியல் சூழல் மிகைப்படுத்தியதன் விளைவாகவே, கைலாசாதி மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவற விட்டு விட்டார் என நினைக்கின்றேன். இத் தவறு பற்றிக் கைலாசபதியை இன்று விமர்சிப்போர் சிலர், கைலாசாதி இருந்த காலத்தில் அதைத் திருத்து விக்க வாய்ப்பிருந்தும் ஏன் முனையவில்லையோ தெரியாது.

ஈழத்து இலக்கிய விமர்சன நடைமுறையின் இடர்பாடுகள் சகல விமர்சனங்களையும்  வெவ்வேறு அளவுகளிற் பாதித்துள்ளது. கைலாசபதியின் தவறுகள் அலட்சியம் செய்ய வேண்டியவையல்ல. அவை நேர்ந்த சூழலின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியன. நமது இலக்கியத் துறையின் விஞ்ஞான ரீதியான பார்வையும், சமுதாயச் சார்பும், சமுதாய மாற்றத்திற்கான முனைப்பும், கைலாசபதியிடமிருந்து பெற்றவற்றைக் கருத்திற் கொண்டாற் கைலாசபதியின் குறைபாடுகள் மிக அற்பமானவையே.

இந்த இடத்தில் சாள்ஸ் டார்வின் முன்வைத்த பரிணாமக் கோட்பாடு அவர் முன் வைத்த அதே வடிவில் இன்று ஏற்கப்படுவதில்லை என்பது நினைவூட்டத்தக்கது. குறிப்பான பல அம்சங்களில் டார்வின்  விளக்கங்களிற் குறைபாடுகளும் தவறுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவர் எடுத்துக் காட்டிய பரிணாமவாத அடிப்படை (உயிரினங்கள் எளிய ஜிவராசிகளின்று தோன்றிச் சூழலுக்கமைய மாற்றமடைந்து உயரிய வடிவங்காக விருத்தி பெற்றன என்ற கருத்து) அதாவது, டார்வினது வாதத்தின் முழுமை இன்னமும் மறுக்கவியலாததாகவே உள்ளது. டார்வின் சொன்னவை பல தவறானவை. எனவே பரிணாமக் கொள்கையும் செல்லுபடியாகாது என்ற வாதம் சிலரால் இன்னதும் முன் வைக்கப்படுகிறது. இவர்களது வாதம், கைலாசபதியின் விமர்சனத் தவறுகளை ஆதாரமாக்கி அவரது இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையிலான இலக்கியக் கொள்கையை நிராகரிப்பவர்களது வாதத்தினின்று, மூடத்தனத்தின் அளவில் வேறுபட்டதல்ல.


(தொடரும்)

-அகிலன் (01/04/2011)-

1. கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-1)

2. கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-2)

3.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-3)

4.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-4)

5.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-5)

6.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-6)

7.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி-7)