Sun01172021

Last updateSun, 19 Apr 2020 8am

பௌத்த-சிங்கள அரசியலே இலங்கையின் எதிர்கால நிகழ்ச்சிநிரல்!

பேரினவாத இனவெறிக் கொண்டாட்டங்கள்!

பௌத்த-சிங்கள அரசியலே இலங்கையின் எதிர்கால நிகழ்ச்சிநிரல்!

“பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த இனிமேல் ஒரு போதும் இடமில்லை”  என்பதை அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கொழும்பு-காலிமுகத்திடலில் நடைபெற்ற “யுத்த இன வெறிக் கொண்டாட்ட” நிகழ்வில் மகிந்த ராஐபக்ச கூறியுள்ளார்.

வருடாந்த நிகழ்வாக்கப்பட்டுள்ள இவ் இனவெறி நிகழ்வை “பயங்கரவாத ஒழிப்பாக” அதன் வெற்றிக் கணிப்பாக  கொள்ள முடியாது.  இதுவும் பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியல் இனவாதத்தை-இனக் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான பேரினவாத-நிகழ்ச்சி நிரலாகவே கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பான மே மாதத்தில், ஓர் சர்வதேசப் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த மகிந்தா, தற்போது  தமிழ்-சிங்கள மக்களின் எதிரியான பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம். அடுத்த என் பிரதான வேலை தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதும்  இன-ஐக்கியத்தை ஏற்படுத்தவதுமே என்றார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளிலான மகிந்த அரசின் யதார்த்த நடைமுறை தான் என்ன?

முள்ளிவாய்க்காலின் மாபெரும் தமிழின இனப் படுகொலைக்குப் பின்னான மகிந்த அரசின் நடவடிக்கைகள், திமிர் கொண்ட அரசியல் களத்திற் கூடாகவே நகர்த்தப்படுகின்றன. இதற்கு  தேசிய-சர்வதேசியமும் இசைவாகவே உள்ளது.

வடகிழக்கில் இனச்சுத்திகரிப்பை மையமாகக் கொண்ட சகல நடவடிக்கைகளும், பௌத்த-சிங்களப்-பேரினவாத நோக்கில் முன்னெடுக்ப்பட்டுள்ளன. இதற்கூடாக தமிழ் மக்களின் அரசியல்-சமூக-பொருளாதார-கலாச்சார-பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் இல்லாதாக்கப்படும் நோக்கிலேயே மகிந்தாவின் அரசியல் களம் உள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டுகால பேரினவாத ஆட்சிகளின் தொடர் நடவடிக்கைகளின் மொத்த வடிவமே.

இலங்கையில் பௌத்த சிங்கள  ஆட்சிக்கு வழி காட்டியாக துணை போவதில் மகாவம்சம் எனும் நூலும் பெரும்  பங்காற்றியுள்ளது. இதன் ஆறாவது தொகுதி விரைவில் வெளிவரவுள்ளது.

அது 1978 முதல் 2010 வரையிலான காலப் பகுதியைக் கொண்டதாயிருக்கும் அதில் உள்ளடக்கப்படவுள்ள ஐந்து அத்தியாயங்களில் மூன்று அத்தியாயங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சிக்காலத்தையும் மீதி இரண்டு அத்தியாயங்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஆட்சிக் காலத்தையும் சித்திரிக்கவுள்ளன. ஜனாதிபதி ராஜபக்ஷ 30 வருட கால “பிரிவினை யுத்தத்திற்கு” முடிவு கட்டியது நாட்டு வரலாற்றில் “ஒப்பற்ற சாதனை’ என்பதால் அவருக்கு மூன்று அத்தியாயங்கள் சமர்ப்பணம் என்று தேசிய சொத்துரிமை மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க வாயிலாக அறியக்கிடக்கிறது. ஒப்பீட்டளவில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அதிகளவில் சமர்ப்பணமாகும் அத்தியாயங்களில் அவர் வானளாவும் புகழ்ந்துரைக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை.

அதே நேரத்தில் 30 வருடகால யுத்தம் மூண்டதற்கான வரலாற்றுக் காரணிகள் எவை? அவ் யுத்தத்தின் ஒரு தரப்பினரான தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றதற்கு நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான சிங்கள மேலாதிக்க அரசாங்கங்கள் கையாண்ட தமிழர் புறக்கணிப்புக் கொள்கைகள் மற்றும் அட்டூழியங்கள் தான் மூலகாரணம் என்பதெல்லாம் மேற்குறித்த ஆறாவது தொகுதியில் நிச்சயமாக உள்ளடக்கப்படப் போவதில்லை.

ஆக புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு நீதி நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு அசட்டை செய்து தமிழர் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு தமிழர் இருப்பையே அழித்து விடும் நோக்கிலான யுத்தத்தினை நடத்தி முடித்ததற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்குப் பாரிய வெகுமதி வழங்கும் பாணியிலேயே அவருக்கு 3 அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. துட்டகை முனுவைக் கூட விஞ்சி விட்டதாக  மகிந்தாவை மதிப்பிட்டால் கூட அது வியப்பிற்குரியதல்ல.

இலங்கை அரசியலில் 1978-முதல் 2010-வரையிலான காலம், ஜே.ஆர். ஜேயவர்த்தன-பிரேமதாஸ-சந்திரிகா-முதல் மகிந்தா வரையிலான பேரினவாத அரசியலாளர்கள், பௌத்த சிங்கள இன வெறி அரசியல் கொண்டு பல இனக் கலவரங்களால் தமிழ் மக்களை கோரத்தாண்டவமாடிய காலமாகும். சிறைக்கூடங்களில் தமிழ் இளைஞர்களை சித்திரவதைகளுக் கூடாகப் படுகொலை செய்ததும். யாழ் நூலகத்தை-யாழ் நகரை எரித்ததும்,  ஜே.ஆர் “போர் என்றால் போர்தான்” எனச் சொல்லி செய்த இனப் படுகொலைகளும், “இப் புண்ணிய தொடர் காலங்களிலேயே”!

இது தான் இலங்கை வரலாறென சொல்லப்பட்ட மகாவம்சத்தின் அடுத்த அத்தியாய சேர்க்கைகளின் மூலம், பௌத்த-சிங்கள-இனவெறியிலான-அரசியலை, அரசியல் அதிகாரத்தை தொடர்வதற்கான எதிர்கால நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்படுகின்றது. அதன் ஒரு அம்சமே இவ்யுத்த இன வெறிக் கொண்டாட்டங்கள்.

உலகில் தேசிய-பிரதேச-இன-மொழி-ஜாதிய-வெறியைத் தூண்டி, அதில் அரசியல் செய்தோர் ஏராளமானோர். இவர்களும் இவர்கள் அரசியலும் நீண்டு நிலைத்ததாக வரலாறு இல்லை. வரலாற்றைப் படைக்கும் இம் மக்கள் யுகத்தில், மகிந்த-மகாவம்ச அரசியல் நீண்டு நிலைக்குமா?

அகிலன்

02/06/2011