Wed01202021

Last updateSun, 19 Apr 2020 8am

பூநூல் போட்ட பிராமணர்கள் எல்லாம் குருக்களுமல்ல! கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல!

ஏதோ 71-பேர் கையெழுத்திட்டால் அது சிவில் சமூகமாம். இதற்கு விழுந்தடித்து (மகிந்தக் குழலூதிகள்) ஏகப்பட்ட விளம்பரங்கள். இச்சிவில் சமூகக்காரர்களுக்கு முஸ்லீம் சமூகத்தவர்களின் கையெழுத்தில்லாக் குறையொன்று இருந்தது. இப்போ அதுவும் நிவர்த்தியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக “சிவில் சமூகமென்ற” 71-பேருக்கு கோவில் கட்டாத குறையாக, விக்கிர ஆராதனைகள் நடைபெறுகின்றது!  இவர்கள்  தமிழ் தேசியப் போராட்டத் திருப்புமுனைச் சக்திகளென வட-கிழக்கில் “புஸ்வாணம்” விடுகின்றார்கள்.

இத்திருப்பு முனைக்காரர்கள் ஆரம்பத்தில் கூட்டமைப்பை “திருத்திக்” காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு, அந்த “சிவில் சேவை, வெற்றிப் பயணிபிற்” கூடாக, இப்போ முஸ்லீம்-தலித் மக்களின் பாதுகாவலர்கள் ஆகியுள்ளார்கள்.  மகிந்த மகுடிக்கு படமெடுத்தாடும் சாரைப் பாம்புகளுக்கு, “வரலாற்றுக் கண்கொண்டு” கொடுக்கும் விளக்கங்கள் பாரீர்!

 

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் திருப்புமுனை சக்தியாம்!

“அறுபத்தி மூன்றாவது சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவினால் தயாரிக்கப்பட்;ட அறிக்கை வெளிவருவதற்கும் இடைப்பட்ட..காலப்பகுதியான டிசம்பர் 13ம் திகதி (2011) தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைக்கு  அனுப்பப்பட்ட பகிரங்க விண்ணப்பமானது  தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் ஓர் முக்கியமான செயல்பாடாம்”.

மேற்குறித்த செயற்பாடானது, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்  தீர்மானத்திற்கும், அதன் தொடரான 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கும் பின்னர், வட- கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூகத்தினரால் துணிகரமாக முன்னெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாகவே  ஆக்கபூர்வமான விமர்சகர்களாலும் அரசியல் அவதானிகளாலும் நோக்கப்படுகிறது”.

யார் இந்த சிவில் சமூகம்?

“வடகிழக்கை தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இவர்கள், தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதைக்கும், மதிப்புக்குமுரிய  மதத் தலைவர்கள், மருத்துவ கலாநிதிகள், சட்டத்தரணிகள், பல்வேறுபட்ட துறைசார் கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என ஒரு தேசியத்தின் பலமாக, அதன் நம்பிக்கையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

சிறீலங்கா அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறைக்கரம் நீண்டுள்ள, வடகிழக்கு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டு,  தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிந்து கொண்டும், மக்களோடு மக்களாக, மக்களுக்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை தன்னகத்தே கொண்டதே தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள இந்த சிவில்  சமூகம்.”

“தமிழ்த் தேசத்தின் இருப்பை உறுதிசெய்ய, செய்யமுற்படும்  மூத்தோர் உட்பட, தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை ஆக்கபூர்வமானதாக வடிவமைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் குறிப்பிடத் தக்க இளையோரைக் கொண்டுள்ளதhம் இந்தக் கட்டமைப்பு.


இந்த சிவில் சமூகத்தின் பங்களிப்பு என்ன?

“சிவில் சமூகம் என்பது, ஜனநாயக பண்புகளையும், பன்மைத்துவத்தையும் கொண்ட முற்போக்கு சிந்தனை உள்ள தேசங்களின் தூணாக விளங்கி வருகிறது. ஒரு தேசத்தின் இருப்பையும், எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்வதில் இவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. இதன் காரணமாகவே, மேற்குலக நாடுகள் சிவில் சமூக அமைப்புகளுக்கு முக்கிய இடத்தை வழங்கி வருகின்றன. அத்துடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சிவில் சமூக கட்டமைப்புகளை பிரதான  வகிபாகமாக கருதுகின்றன. அத்துடன், வளர்ச்சி அடைந்து வரும்  நாடுகள், சிவில் சமூக அமைப்புகளின் ஆளுமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.”

“இவையனைத்தும், ஜனநாயகம், பன்மைத்துவம், முற்போக்குத்தனம் போன்ற பண்புகளையுடைய அரசாங்கங்களால், அமைப்புகளால், கட்டமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை. ஆயினும் சுதந்திரமானதும், இதயசுத்தியும் உடைய சிவில் சமூகங்களின் வகிபாகம், மக்களின் நலன் எனக் கூறிக்கொண்டு, செயலில் மக்களின் விருப்புக்கு  எதிராக செயற்படும் அரசாங்கங்களால், அரசியல்வாதிகளால், அமைப்புகளால் வன்மையாக எதிர்கப்படுகிறது. இந்த துர்ப்பாக்கிய சூழல்,  அபிவிருத்தி அடைந்து வரும் பல்வேறு நாடுகளிலும்  காணப்படுகிறது” என பெரு விளக்கங்கள் கொடுக்கின்றார்கள் இந் நவீன கிராம்சிகள்!

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இந்ந மதிப்புக்குரியவர்களின் மக்கள் மீதான அக்கறையையும்,  சிவில் சமூகப்  பிரகடனங்களையும் பார்க்கும்போது,  எம்மையறியாத ஓருவித “போராட்டப் புல்லரிப்பேறுகின்றது” அல்லவா?

சிறீலங்கா அரசாங்கத்தின் கொடிய அடக்கு முறைக்கரம் நீண்டுள்ள, வடகிழக்கு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டு,  “தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிந்து கொண்டதனால் தான்”; இவர்கள் அரசிற்கு எதிராக ஓர் வார்த்தை கூடச்   சொல்லவில்லை.

மாறாக தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு   அனுப்பப்பட்ட பகிரங்க விண்ணப்பமானது, தமிழ்த் தேசிய அரசியல்  வரலாற்றில் ஓர் முக்கியமான செயல்பாடகும்”. போராட்டத் திருப்புமனையும் அல்லவா?

செல்லும் செல்லாதத்திற்கு செட்டியார் இருக்கின்றார். அவரிடம் கேள், என்றவனின் கதைபோல் இப்போ எல்லோரும் கூட்டமைப்பிற்கு அடிக்கின்றார்கள். இதில் சிவில் சமூக-அரசியல்காரர்கள் ஒருபக்கம். கூட்டமைப்பு ஓர் கழுதையென்பதை தெரிந்து கொள்ளாத பலர், அதை குதிரையென்று நினைத்து, அதில் சவாரி செய்ய யோசிக்கின்றார்கள். அதற்கு லாடம் கட்டி, கடிவாளம் போட்டு சவாரி பழக்கவும் நினைக்கின்றார்கள்.  இவர்கள் உபதேசம் யாருக்கு?  கழுதைக்கா? குதிரைக்கா?

மேற்குறிப்பிட்டவாறு இவர்கள் சொல்லும் பெரும் தத்துவங்களைப் படிக்கும் போது, சிவில் சமூகம் பற்றிய கணிப்பையும், வரைவிலக்கணங்களையும் வழங்கிய அந்தோனியோ கிராம்சிக்கும், அல்லவா இவர்கள் பாடம் தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்?

முதலாவது உலக யுத்தக்கால கட்டதில், இத்தாலியக் கம்யுனிஸட் கடசியின் பொதுச் செயலாளலராக இருந்தவர் அந்தோனியோ கிராம்சி. அவர் தனது 11-வருட சிறை வாழ்விலான சிறைக் குறிப்புகளுக்கு ஊடாக மார்க்சிஸத்திற்கு செழுமையூட்டும் வகையில் பலவற்றை எழுதியவர்.

அரசு, அரச இயந்திரம், சர்வாதிகாரம், அதன் உச்சகட்டமான பாசிஸம் பற்றிய ஆழமான ஆய்வுகளுக்கு அப்பால், சிவில் சமூகம் பற்றிய கருத்தாக்கமும், மேலாண்மை பற்றிய கருத்தாக்கங்களும் சமூக-விஞ்ஞானக் கண்கொண்ட மிக முக்கிய பதிவுகளாளும்.

இத்தாலியில் முசோலினியின் கட்சியின் வளர்ச்சிக் காலகட்டத்திலான அதன் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தார். இதன் அடுத்த கட்ட உச்சம் பாசிசமே என மக்களுக்கு உணர்த்தி எச்சரித்தார். “மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் கருஞ்சட்டை கூட்டத்திற்கு எதிரான வெகுஐனப் போரை முன்னெடுக்காவிடின், இத்தாலிய ஐனநாயகத்தை காப்பாற்ற முடியாது” என்ற பிரகடனத்திற் கூடாக போராடினார். இதனாலேயே சிறைப்படுத்தப்பட்டு (11-வருடங்கள்) அதனுள் அவரின் அரசியல் வாழ்வு முற்றுப்பெறுகின்றது.

கிராம்சியைப் பற்றி சொல்ல வருபவர்களில் பலர், அவரின் அரசு-அரச இயந்திரம் பற்றிய ஆய்வுகளை வலுகற்சிதமாக தவற்றிவிட்டு, சிவில் சமூகம் பற்றிய, சமூகமேலாண்மை பற்றிய கருத்தாக்கங்களுக்குள் வைத்து அவரை இட்டுக்கட்டுகின்றனர். இதுவும் அரச பாசிச சர்வாதிகாரத்திற்கு துணை போகும் ஒருவித சிவில் சமூக அரசியலே.

“வேறுபட்ட அந்நியமான சமூகச் சாரமற்ற பண்பாட்டை  மேலானதாக அறிமுகப்படுத்தி, அதை சமூகத்திற்குள் நுழைப்பதன் மூலம், மக்களை மாயையில் ஆழ்த்தி ஆதிக்கம் செலுத்துவது” “பாசிசத் தன்மைகள் கொண்ட கூறுகளின ஓர் செயற்பாடே.  இவ்வாறானவற்றின் மூலமாகவே பாசிஸம் சமூகத்தில் வந்தடைவதாக கிராம்ஷி விளக்குகிறார்.  பண்பாட்டில் பாசிசத் தன்மை ஏற்ப்பட்டதையும் பண்பாட்டு அதிகாரத்தை நிலை நிறுத்தும் ஒரு வடிவமாக பாசிசம் கைக்கொண்டமைக்கு பாஷன் ஒரு சான்று. பாஷன் உலகில் ஒரு துறையாக வளர்ச்சி பெற்றது முசோலினியின் இத்தாலியிலிலேயே  என்கின்றார் கிராம்சி.

முசோலினியின்  இத்தாலிய ஸ்ரைல் இப்பொழுது இலங்கையிலும் வந்துவிட்டது. அதுவும் மகிந்த சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் இந்த சிவில் சமூகக்காரர்களுக் கூடாகவும், முஸ்லிம் தலித் பாதுகாவலர்களுக் கூடாகவும் என துணிந்து கூறலாம்!

அகிலன்

26/01/2012