Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும்--தமிழ்த் தேசியமும்….பகுதி—6

மனித சமூகத்தின் அடையாளங்கள், மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. அவலப்படுத்தி அடக்கி-ஒடுக்குகின்றது. அடிமையும் கொள்கின்றது.

மனிதனின் நிற அடையாளம் நேரடியாக காணக் கூடிய ஒன்று. சாதிய அடையாளத்தை எது கொண்டு காண்கின்றார்கள். உண்மையில் கறுப்பின மக்களை நிறத்தால் காண்கின்ற, காட்சிப் புலனை, பார்க்கின்ற சிந்தனை முறைமையை விட, சாதிய அடையாளம் என்பது பார்வைக்கு தென்படுவது அசாத்தியமே. ஆனால் அதனுடைய அதிகார வீச்சுத்தான், மக்களை அவலப்படுத்தி, அடக்கி-ஒடுக்கி அடிமையும் கொள்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் சாதியத்தை முறியடித்து விட்டோமென சவால் விடும் தமிழ்த் தேசியர்களையும் காண்கின்கின்றோம். இல்லையென நிருபிக்கும் தமிழத் தலைவர்களையும் காண்கின்றோம்!

சிவாஜிலிங்கத்தின் சாதி வெறி!

அண்மையில் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்தின் நினைவுதின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. இந்நிகழ்விற்கு கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான இராஐதுரை அழைக்கபட்டிருந்தார். அதுவும் செல்வநாயகத்தின் மகனால் என்றும் சொல்லப்படுகின்றது.

நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை திடீரென பிரசன்னமான சிவாஜிலிங்கம், இராஐதுரைக்கு எதிராக "கலகக் குரல்" கொண்டு பல கோஷங்களை எழுப்பினார். அதில் சுவாரஷ்யமானவை, "சிங்கள அரச கைக்கூலி,  சக்கிலியநாய்"  போன்ற புனிதக் கோஷங்களைக் கொண்ட கலகமாகும்.

சிவாஜிக்கு இராஐதுரையை சிங்கள கைக்கூலி என்று சொல்வதற்கு, எத்தகுதியும் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் ஈழத்திற்கு நாடு கடந்த பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு, சர்வதேச ஈழச்சினிமா காட்டி மகிந்தாவின் கோபத்திற்கு ஆளாகி, அவரிடம் தூதனுப்பி, சாஸ்டாங்க நமஸ்காரத்துடன் நாட்டுக்குள் நுழைந்தவர் தான் இந்த தமிழ்ஈழ நடிகன் சிவாஜிலிங்கம்.

தமிழரசுக் கட்சியின் அன்றைய முன்னணித் தலைவர்களில் இராஐதுரையும் ஒருவர், ஆனால் அமிர்தலிங்கம் போன்றவர்களின் யாழ்-மேட்டுக்குடி அரசியலின் பிரதேசவாத வெறிக்கு பலியானவர்களில் முக்கியமானவர் இராஐதுரை. இவ்வெறியின் தொடர்ச்சியான பாதக நடவடிக்கைகளே இராஐதுரையை அரசின் பக்கம் செல்ல வைத்தது. நீங்கள் சொந்தத் தேவைகளுக்காக வாலையாட்டி மகிந்தாவின் காலைப் பிடிக்கலாம், மன்றாடலாம்! இதை மற்றவர்கள் செய்தால், அவர்கள் "சக்கிலிய நாய்களோ”? அப்படியாயின் நீங்கள் நாய்களில் எந்தச் ஜாதி?  இப்போ இந்த "றேஞ்சிற்கு" சம்பந்தனையும் கொண்டு வந்து விட்டார்கள் போலுள்ளது.

சம்பந்தனின் தேசியக்கொடி ஏந்தல்!

கூட்டமைப்பின் தலைவர் இந்த மேதினத்தினத்தன்று இலங்கையின் தேசியக்கொடியை கையிலெடுத்துக் காட்டினார். இதற்கு இப்போ மாபெரும் வாதப்பிரதிவாதமே நடைபெறுகின்றது. சிஙளத் தேசியப் பகுதி, ஏதோ அதிர்ந்து போனது மாதிரியான, ஆச்சரியக் கருத்துப்-புலம்பல்கள் கொள்கின்றது. சம்பந்தனின் "புரட்சிகர நடவடிக்கையை  மகிந்தா புரிந்து கொள்ள வேண்டும்" என பரிந்துரை செய்கின்றது.

தமிழ்த்தேசியப் பகுதி "சக்கிலிய நாய்" என்று சொல்லாமல், "அது போன்றதொரு முணுமுணுப்புடன்", கிட்டத்தட்ட துரோகி ஆக்கிப்போட்டார்கள்! மாவை சேனாதிராஜாவும் சிறிதரனும் இதை சொல்லாமல் சொல்கின்றார்கள். மாவை சேனாதிராஜா சம்பந்தனுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார்.

"இந்தத் தேசியக்கொடியை ஒரு காலமும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தந்தை செல்வா அதை சொல்லித் தந்தார். அதனால் ஏற்பட்ட இந்த உணர்வு என் உள்ளத்தையும் பாதிக்கிறது" என்கிறார்.

மாவை சேனாதிராசாவிற்கு இரண்டு மாதம் சம்பளப் பணம் வங்கிக்கு போகாவிட்டால், அப்பவே  முடிவிற்கு வருவார். சிங்கக் கொடியை ஏற்பதா இல்லையா? என!. இலவச  வசதிகள், சலுகைள்  கிடைக்காவிட்டால் தெரியும் சிங்கக்கொடியின் அருமை! சிங்கள அரசியலமைப்பின் மகிமை.


தமிழ்த்தேசியத்தின் கடந்தகால வரலாறு சிங்கக்கொடி எதிர்ப்பில், அரசியல் பிழைப்பும், அதில் மானங்கெட்ட வயிற்றுப் பிழைப்புமேயாகும். தவிர மக்களைக் கொன்றொழித்ததுமேயாகும்.

தனிச் சிங்களச் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்ற தந்தையும் மைந்தர்களும், சிங்களச் ஸ்ரீ பொறித்த சொகுசு வாகனங்கள் வந்த பொழுது முண்டியடித்து வாங்கியதை தமிழ் சமூகம் மறந்துவிடவில்லை. அதில் தளபதிக்கு பக்கத்தில் இருந்து பிரயாணம் செய்ததை மாவை சேனாதிராஜாவும் மறந்திருக்க மாட்டார்.


இதுதான் தந்தை சொல் மிக்க மந்திரமோ? சம்பந்தன் மூலம் மகிந்தாவிடம் சலுகை பெற்றவர்கள், இப்போ அவரை மன்னிப்பு கேளுங்கள் என்றால் அவர் எப்படிக் கேட்பார்?

இதனால் தான், "ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை, இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லை" என சம்பந்தன் எச்ரிக்கின்றார்.

சமாதான காலகட்டத்திலும்,வன்னிக் காட்டிற்குள் பயங்கரவாதிகளாக பங்கருக்குள் பயந்து இருந்தீர்கள். நீங்கள், சமாதானம் பற்றிப் பேச, வெளிநாடுகளுக்குப் புறப்பட எந்தப் பாஸ்போட் பாவித்தீர்கள்? "புலிக்கொடி பொறித்த தமிழ் ஈழப் பாஸ்போட்டா"? சிங்களத்தின் சிங்கக்கொடிப் பாஸ்போட்டாவென கேட்கின்றார்?  சிங்களப் புத்தகங்களைப் பெற்றுத்தந்தது பிரபாகரனா, நாங்களா என தன்னிடம் கேள்வி கேட்கும் புலிகள் மீதும் (கடைசியாகக் கிடைக்கும் கொழும்புத் தகவல்கள்) சீறிப்பாய்கின்றார்.


நாட்டு நடப்பு விளங்கி கதையுங்கள் என்கின்றார்!

ஏனெனில் சமபந்தனுக்குத்தானே தெரியும் உதவிகள் கேட்பதும், கேட்கும் சந்தர்ப்பங்களில்  மகிந்தா "பிளீஸ் சம்பந்தன் நீங்கள் ருமச்" என சலிப்புடன் சொன்னவைகளும். சம்பந்தன் பேச வருகின்றார் என்றால் மகிந்தாவிற்கு அலர்ஜியே வந்துவிடுமாம். இதனால்தான் பேச்சுவார்த்தையை மகிந்தா தெரிவுக்குழுவிற்கு மாற்றினாரோ என கேட்கத் தோன்றுகின்றது.

உண்மையில் இச்சூட்சுமம் விளங்காப் புலிகளும், தமிழ்த்தேசியக்காரர்களும் எப்போதான் நாட்டு நடப்பு தெரிந்து அரசியல் செய்தார்கள்! சாதி பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்யப் போகின்றீர்கள்? சம்பந்தன் தெரிந்து விளங்கித்தான் தேசியக் கொடியை கையில் எடுத்தார். இது விளங்காப் பாவங்களுக்கு எப்போ இது "விளங்கிய விமோசன மோட்சம்"  கிடைக்கும்!


சரி இப்படியாவது விளங்கிக் கொள்ளுங்களேன். மேதினத்தில் மகிந்தா புலிக்கொடியைக்  காட்ட…சம்பந்தனும் தேசியக்கொடியைத் தூக்கிக் காட்டினார் என.. இதில் ஓரு பக்கம் ஆச்சரியத்துடன் பார்ப்பதையாவது….பாருங்களேன்.

-தொடரும்

06/05/2012

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-2)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-3)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-4)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-5)