Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 20

 

முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது, ஜெர்மன் – சோவியத்  ஓப்பந்தங்கள் மீதான அவதூறுகள் மீது 

ஜெர்மன் – சோவியத் இடையிலான பிரஸ்ட் லிட்டோவ்ஸ்கி ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி, கட்சியின் முடிவுகளையே மீறிச் செயல்பட்டான். இது தொடர்பான இறுதி விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற போது, அதில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளவே மறுத்தான். டிராட்ஸ்கிய நிலைக்கு சார்பாக அக்காலத்தில் சதிகளில் ஈடுபட்டு இருந்த பிரஞ்சுத் தளகர்த்தன் மார்ஷல் போக், நேசநாட்டு இரகசிய கூட்டம் ஒன்றில் பேசியதைப் பார்ப்போம். ஜெர்மன் போரை விரைவில் முடிக்க வேண்டும் நேச நாடுகளின் படைகளை ஒன்று திரட்டிச் சோவியத் ரஷ்சியாவைத் தாக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தான். ஏகாதிபத்தியங்கள் தமது முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் சோவியத்தை அழிக்க நினைத்தனர். ஆனால் டிராட்ஸ்கி இரண்டு பக்க மோதல் மூலம் சோவியத்தை அழிக்க நினைத்தான். இந்த இடத்தில் முந்திக் கொண்ட லெனின், ஜெர்மனுடன் சமாதானம் செய்து நேசநாட்டுப் படைகளின் பலத்தை சிதறடிக்க வைத்ததன் மூலம், மிகச் சிறந்த இராஜதந்திரத்தைக் கையாண்டார். இதை எதிர்த்து டிராட்ஸ்கி ஒரு முறையல்ல பலதரம் கட்சி முடிவை மீறி தன்னிச்சையாக செயல்ப்பட்டு, ஒப்பந்தம் செய்ய முடியாத நிலைமையைத் தோற்றுவித்து சோவியத் ஆட்சியை அழிக்க முனைந்தான். இறுதியில் டிராட்ஸ்கி இன்றியே அவ்வொப்பந்தம் கையெழுத்தானது. இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனியுடன் மேற்கு நாடுகள் தொடர்ச்சியான சமரச ஒப்பந்தங்களையும், விட்டுக் கொடுப்புகளையும் செய்தது. சோவியத்தை தாக்கி அழிக்க தாரளமாக ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை நல்கினர். சோவியத் ஜெர்மனிக்கு எதிராக ஒரு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கோரிய போது, மேற்கு நாடுகள் அதை மறுத்தன. இந்த நிலையில் சதியை முறியடிக்கவும், ஏகாதிபத்தியத்தின் ஒன்றுபட்டு தாக்குதலை முறியடிக்கவும், சோவியத்ததை கைப்பறுவதன் மூலம் ஒன்றுபட்ட நலன்களையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் திட்டத்தை முறியடிக்கவும், ஜெர்மனியுடன் பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தை சோவியத் செய்தது. இதை டிராட்ஸ்கியவாதிகள் எதிர்த்து அவதூறு செய்ததுடன், இன்று வரை அது தொடர்கிறது. அன்று லெனின் ஜெர்மனியுடன் செய்த ஒப்பந்தத்தை எப்படித் தூற்றினரோ, அப்படியே ஜெர்மனியுடான சோவியத் உடன்பாட்டையும் தூற்றினர், தூற்றிவருகின்றனர்.

 

இந்த ஒப்பந்தத்தை பலவிதமாக திரித்து புரட்டும் டிராட்ஸ்கியவாதிகள், இன்றுவரை அந்த அரசியல் அவதூறை  அடிப்படையாக கொண்டு தான் அரசியல் நடத்துகின்றனர். இந்த அவதூறில் “… சோவியத் யூனியன் பாசிச ஜேர்மனியோடு செய்து கொண்ட உடன்பாட்டின் பின்பு சோவியத் யூனியனுக்கு ஜெர்மனியிடமிருந்து ஆபத்து எதுவும் கிடையாது. இது முதலாளித்துவ நாடுகளிடையேயான முரண்பாடு என்று ஸ்டாலினால் விளக்கம் தரப்பட்டது”  என்கின்றனர். மேலும் சோவியத் எல்லைகளில் நாசிகளை ஆத்திரமூட்டக் கூடாது என்று செம்படைக்கு ஸ்டாலினால் கடுமையான கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தது” ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தம் எற்பட்டபோது ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிறையில் இருந்தனர். யூத அழிப்பு நடந்த வந்தது. குறைந்த பட்சம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஒருவர் கூட விடுவிக்ப்படவில்லை…. ஸ்டாலினது ரஷ்ய வகைப்பட்ட தேசிய சோசலிசம் சர்வதேச நெருக்கடிகளில் இருந்தும் பாசிசத்திடமிருந்தும் தப்பிவிட முடியும் என்ற மதிப்பிட்டது தோல்வி கண்டது” என்று பலவாறாக வக்கிரத்துடன் தொடாந்து கதை சொல்லும் போது, மார்க்சிய அடிப்படையே தூற்றப்படுகின்றது. இராண்டாம் உலக யுத்தத்தில் ஸ்டாலின் தனது சொந்த மகனையே, முன்னணி போர் முனைக்கு அனுப்பிய போது அங்கு கைது செய்யப்பட்டார். ஸ்டாலின் மகன் அடையாளம் காணப்பட்ட நிலையில், பாசிட்டுகள் சோவியத்துடன் பேரம் பேச முற்பட்டனர். அப்போது ஸ்டாலின் அதை முற்றாக நிராகரித்த நிலையில், ஸ்டாலின் மகன் படுகொலை செய்யப்பட்டான்.

 

இங்கு சர்வதேசியம் என்பது கம்யூனிஸ்சத்தின் பாதுகாப்பும் அதன் நலனுமாகும். இதுவே ஸ்டாலினின் சர்வதேசியமாகும். இதைத் தான் ஸ்டாலின் அன்று செய்தார். அன்று ஸ்டாலின் செய்த உடன்பாடு இராஜதந்திர ரீதியான மிகவும் முக்கியத்துவமுடையதும், இரண்டாம் உலக யுத்தத்திலேயே மிகச் சிறந்த இராஜதந்திர முயற்சியாகும். இதை யார் எல்லாம் எதிர்த்தார்கள்? மூலதனமும், ஜெர்மனிக்கு எதிரான எகாதிபத்திய முகாமும், டிராட்ஸ்கிய வாதிகளுமே. இன்றும் இதை தூற்றுவது யார்? ஏகாதிபத்தியமும் டிராட்ஸ்கிவாதிகளுமே. டிராட்ஸ்கியவாதிகள் இதைக் கொச்சைப்படுத்தும் போது முதலாளித்துவ நாடுகளிடையேயான முரண்பாடு என்று ஸ்டாலினால் விளக்கம் தரப்பட்டது” என்று கூறி, அதன்  அடிப்படை மார்க்சியத்தையே தூற்றிக் கைவிடுகின்றனர். அப்படியானால், இரண்டாம் உலக யுத்தம் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான யுத்தம் அல்ல என்கின்றனர். இந்த டிராட்ஸ்கிய ஆய்வை முடிந்தால் நம்புங்கள். இரண்டாம் உலக யுத்தம் உலகை மறுபங்கிடு செய்யும் ஏகாதிபத்திய யுத்தம் அல்ல என்கின்றனர். ஜெர்மனிய முகாம், பிரிட்டிஸ் – பிரஞ்சு முகாம் உலகை மீள் பங்கிட நடத்திய யுத்தமே, இரண்டாம் உலக யுத்தம் என்பதை டிராட்ஸ்கியவாதிகள் மறுக்கின்றனர். இது ஸ்டாலினின் கற்பனை என்கின்றனர். “தனி நாட்டு சோசலிசத்தின்” மார்க்சியமல்லாத புரட்டு என்கின்றனர். இது மார்க்சியமல்லாத ஸ்டாலினிசம் என்கின்றனர். இதில் இருந்து தான் “முதலாளித்துவ நாடுகளிடையேயான முரண்பாடு” என்பது ஸ்டாலினின் திரிபு என்கின்றனர். டிராட்ஸ்கி இதை ஸ்டாலினிசம் என்று வரையறை செய்வதாக கூறி வக்கரிக்கின்றனர். ஆனால் இந்த யுத்தம் “முதலாளித்துவ நாடுகளிடையேயான முரண்பாடு என்று ஸ்டாலினால் விளக்கம் தரப்பட்டது” தவறு என்றால், இந்த யுத்தம் எந்த வகையான யுத்தம். அதை மட்டும் வாய் திறந்த சொல்ல மாட்டார்கள். ஆம் டிராட்ஸ்கி சோவியத்தில் ஆட்சிக்கு வருவதற்கான யுத்தம் அல்லவா இது. ஆகவே யுத்தம் அவசியம். அதானல் டிராட்ஸ்கி ஜெர்மனியுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்தது மட்டுமின்றி, சோவியத்தில் ஐந்தாம் படையாகவும் செயல்பட்டான். “முதலாளித்துவ நாடுகளிடையேயான முரண்பாடு” அல்லாத யுத்தம் என்ற கோட்பாட்டு விளக்கம், ஜெர்மனி ஆக்கிரமிப்பு டிராட்ஸ்கியத்தின் ஆட்சியாக மாறும் என்ற விளக்கத்தையும், கனவையும் கொடுத்தது. சோவியத் ஜெர்மனி ஒப்பந்தம் மூலம் இந்தக் கனவு தகர்ந்த போது, ஐயோ கட்டிக் கொடுப்பு என்று தூற்றுகின்றனர்.

 

இரண்டாம் உலக யுத்தம் உலகை மீள் பங்கிடக் கோரி; எகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தமே. அதாவது முதலாளித்துவ மூலதனங்களை கைப்பற்றவும் பாதுகாக்கவும் நடைபெற்ற யுத்தமே. இதில் சோவியத் யூனியனை பங்கீடும் கனவையும் உள்ளடக்கியதே. அன்று ஜெர்மனிய நாஜிய பாசிஸ்டுகள் உலகை மறுபங்கீடு செய்ய, கம்யூனிச அபாயம் பற்றி உரத்துக் கூறினார்கள். இதன் மூலம் தன்னை இராணுவ மயமாக்கிக் கொண்டபோது, தாரளமாக அதை பலப்படுத்தியவர்கள் ஏனைய ஏகாதிபத்தியங்களே. தனது முலதனத்தை தக்கவைக்கவும், சோவியத் யூனியனை தாக்கி அழிக்கவும், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். இவை தொடர்பாக பல ஆதாரங்களை நாம் ஏகாதிபத்திய தலைவர்களின் கூற்றுகள், ஒப்பந்தங்கள் மற்றும் உதவிகளில் எடுத்துக் காட்ட முடியும். இந்நிலையில் ஜெர்மனி தன்னை இராணுவமயமாக்கி அயல் நாடுகளை கைப்பற்றிய போது, அதன் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த மற்றயை ஏகாதிபத்தியங்கள் இதற்கு ஆதாரவு வழங்கி  மறைமுகமாக ஒத்துழைப்பை நல்கினர். ஜெர்மனி ஆக்கிரமித்த நாடுகளுடன் இருந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை, மற்றைய ஏகாதிபத்தியங்கள் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிந்தனர். ஜெர்மனியை சுற்றிய பல அயல் நாடுகள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் அதை எதிர்த்து அந்தநாட்டு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே போராடினர். அதேநேரம் சர்வதேச ரீதியாக இதற்கு எதிராக சோவியத் ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்கவும், எதிர்த்து போராடவும் விடுத்த அறைகூவல் நிராகரிக்கப்பட்டது. அதேநேரம் அந்த ஏகாதிபத்தியங்கள் ஜெர்மனியுடன் பல ஒப்பந்தங்களை தொடர்ச்சியாக செய்து ஆக்கிரமிப்பை ஊக்குவித்தனர். இவை அனைத்தும் சோவியத் தாக்கி அழிக்கவே கோரின.

 

மற்றயை எகாதிபத்திய நாடுகள் யுத்தத்தை சோவியத் மீது தள்ளிவிட முயன்ற நிலையில், சோவியத் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஜெர்மனியுடன் செய்தது. உண்மையில் சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமித்து பலவீனப்படும் போது, மற்றயை ஏகாதிபத்தியங்கள் ஜனநாயத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் ஜெர்மனியை தாக்கி கைப்பற்றவதன் மூலம்; சோவியத்தை முழுமையாக கைப்பற்றி தமக்கிடையில் பங்கீடக் கனவு கண்டனர். இந்த நிலையில் ஜெர்மனி சோவியத் போர் தவிர்ப்பு ஒப்பந்தம் இதற்கு மண்ணை அள்ளிப் போட்டது. நாடுகளை பிடிக்கவும் அதை மீள் பங்கீடவும் விரும்பிய ஜெர்மனிய நோக்கத்துக்கும், அதை தக்க வைத்திருந்த நாடுகளுக்கு இடையிலான முதலாளித்துவ முரண்பாட்டை சரியாகவும் துல்லியமாகவும் கொண்டு இந்த ஒப்பந்தம் மிகச் சரியானதாக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மற்றைய ஏகாதிபத்தியங்கள் கைப்பற்றி வைத்திருந்த நாடுளின் வளங்களையே, இரண்டாம் உலக யுத்தம் பங்கிடக் கோரியது. அத்துடன் சோவியத்தை ஆக்கிரமிக்கவும் பங்கிடவும் கோரியது. இந்த வகையில் சோவியத் யுத்தத்தை தவிர்க்கும் ஒப்பந்தம் மூலம் எகாதிபத்தியத்துக்கு இடையிலான யுத்தத்தை அதன் போக்கில் தள்ளிவிடவே விரும்பியது. உலகை மீள் பங்கிடும் யுத்தத்தில் ஏகாதிபத்தியங்கள் பலவீனப்படும் போது, பாட்டாளி வர்க்கம் உலகளவில் பல நாடுகளில் ஆட்சிக்கு வருவதை அடிப்படையாக கொண்ட சர்வதேசிய நிலையே ஒப்பந்தத்தை வழிகாட்டியது.

 

இதன் மூலம் சோவியத் பாதுகாப்பும், சர்வதேசிய வர்க்கப் போராட்டமும் மேலும் இந்த எகாதிபத்திய சகாப்த்தத்தில் பலம் பெறும் என்ற மதிப்பீடும் மிகவும் துல்லியமான பாட்டாளி வர்க்க நிலையாகவும், அதுவே சர்வதேசியமாகவும் இருந்தது. அன்று ஜெர்மனிய படைபலத்தை விடவும் பிரிட்டிஸ் – பிரஞ்சு படைப்பலம் ஜெர்மனிய எல்லைகளிலேயே, எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகப் பலம் பொருந்தியதாக இருந்தது. ஏகாதிபத்திய யுத்தம் தொடங்கின் ஒன்றையொன்று அழித்து பலவீனப்படும் போது, பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இலகுவானதாக மாறியிருக்கும். யுத்தம் சரியாகவும், பாட்டாளி வர்க்க மதிப்பிட்டின் படியும் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் தொடங்கியது. ஆனால் பிரஞ்சு – பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் கம்யூனிசத்தை அழிக்கும் கனவுடன், யுத்தத்தை நடத்துவதை கைவிட்டு படைக் கலைப்பை நடத்தியும், முற்றாக பிரான்சில் இருந்து பின்வாங்கிச் சரணடைந்தனர். பிரஞ்சு மக்களையும், அதன் காலனிகளையும் பாசிஸ்டுகளிடம் தாரைவார்த்ததுடன், ஜெர்மனியை ஆயுத ரீதியாகவும் பலப்படுத்தினர். இதன் மூலம் யுத்தத்தை மீண்டும் சோவியத் பக்கம் தள்ளினர். இது புதிய சர்வதேச நிலைமையை உருவாக்கியது. இது எந்த விதத்திலும் முன்னைய ஒப்பந்தத்தை தவறானதாக்கி விடவில்லை. பலம் பொருந்திய இரண்டு எகாதிபத்தியங்களின் சரணடைவு, நிலைமையை முற்றிலும் மாற்றியது. ஆனாலும் யுத்தம் தொடர்ந்து பிரிட்டன் மேலானதாக குவியம் கொண்டிருந்தது. அத்துடன் பிரஞ்சு – பிரிட்டிஸ் காலனிகளை கைப்பற்றி மறுபங்கீட்டை உறுதி செய்யும் விடயம் கூர்மைப்பட்டது. கடல் மற்றும் தூர பிரதேசங்களில் யுத்தத்தில் எற்பட்ட நெருக்கடிகள், அருகில் இருந்த சோவியத் மீதான தாக்குதலை உந்தித் தள்ளியது.

 

இங்கு அடுத்ததாக ஒப்பந்ததைத் தொடர்ந்து எல்லைகளை மீறுவதை கடுமையான வகையில் ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். யுத்தத்தை தவிர்ப்பது சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாப்புக்கு அவசியமானது. அத்துடன் மற்றைய நாடுகளின் புரட்சிகர ஆட்சி மாற்றத்துக்கு அவசியமானதாக இருந்தது. இந்த வகையில் ஒப்பந்தத்தை நேர்மையாக கடைப்பிடிப்பது, பாட்டாளி வர்க்கத்தின் கடமை. பாட்டாளி வர்க்கம் நேர்மையற்ற வகையில் செயல்பட முடியாது. அது டிராட்ஸ்கியத்துக்கு மட்டுமே சத்தியமான சதிப்பாணியிலான வழியாகும். யுத்த மீறல் யுத்தமாயின், யார் அதிக லாபம் பெற்று இருபார்கள்? யுத்தத்தை யார் விரும்பினார்கள்? ஜெர்மனியுடன் ஒப்பந்ததை செய்திருந்த டிராட்ஸ்கியவாதிகளே. அத்துடன் மற்றைய எகாதிபத்தியங்களுமே. யுத்தம் தான், ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை அழிக்கும் என்று கருதினர். இதனால் யுத்த நிறுத்த மீறலை எல்லையில் செய்ய வேண்டும் என்று மனமாற விரும்பியவர்கள் டிராட்ஸ்கிவாதிகளே. இந்த ஒப்பந்தத்துக்கு முன்னமே இராணுவத்தில் இருந்து டிராட்ஸ்கிவாதிகள், ஆட்சியை பலாத்காரமாக கவிழ்க்க நினைத்த சதி அம்பலமாகி பலர் கைதாகியிருந்தனர். இதனால் யுத்த மீறலை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த இராணுவச் சதியை, இன்றைய டிராட்ஸ்கி பத்திரிகைகள் தமது பெருமையாக காட்டி நிற்பது கவனத்தில் எடுப்பது அவசியமானது. யுத்த நிறுத்த மீறலை செய்வதை ஸ்டாலின் கண்டிப்பாக தடை செய்தார் என்பதை தூற்றுவது, டிராட்ஸ்கிய வாதிகளுக்கு இன்றும் அவசியமானதாக உள்ளது.

 

அடுத்து ஜெர்மனிய சிறையில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளை விடுவிக்கவில்லை என்பதும், யூதப் படுகொலை நடந்த போதும் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தூற்றுகின்றனர். ஸ்டாலின் சொந்த மகனை வைத்து பேரம் பேசிய போது நிராரித்த உன்னதமான சர்வதேசியவாதியாக அவர் திகழ்ந்தார். சர்வதேச பாட்டாளி வர்க்க நலனுக்காக செய்த ஒப்பந்தத்தில், சாத்தியமற்ற ஒன்றைக் கோரி யுத்தத்தை நடத்தி அழிவது லெனினிசமல்ல. யுத்தத்தை தவிர்ப்பது மார்க்சியமாக உள்ள போது, யுத்தத்தை வருவிப்பது மார்க்சியமல்ல. ஏன் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்படமால் விட்டிருந்தால், சிறையில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் யூதப் படுகொலையில் எந்த மாற்றமும் நடைபெற்றிருக்காது. மேலும் பலர் புதிதாக பல நாடுகளில் சிறையிலும், பாசிஸ்டுகளின் கரங்களிலும் கொல்லப்பட்டு இருப்பர். உலகமே பாசிஸ்டுகளின் கரங்களில் சிக்கி சிறைக் கூடமாக மாறியிருக்கும். தூற்றுவதற்கு எற்ப, விடையங்கள் டிராட்ஸ்கியத்தால் திரிக்கப்படுகின்றன. வரட்டுவாதத்தால் பூச்சூட்டி மார்க்சியத்தை கொச்சைப் படுத்துவதே டிராட்ஸ்கிய கோட்பாடாகிறது. அன்று லெனின் ஜெர்மனியுடான ஒப்பந்தத்தை செய்த போது, சொந்த நாட்டின் நலன்கள் பலவற்றறை விட்டுக் கொடுத்தே கடுமையான நிபந்தனைக்குள் தான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை பாதுகாத்தார். அதேநேரம் ஜெர்மனிய சிறைகளில் கம்யூனிஸ்டுகள் அடைபட்டுக் கிடந்தனர். அவற்றை எல்லாம் அன்றும் டிராட்ஸ்கியவாதிகள் சொல்லி புலம்பியே எதிர்த்தனர்? இதை ஸ்டாலினுக்கு எதிராகவும் சொல்லி தூற்றுகின்றனர். இன்று ஒரு மாற்றம், புலம்பவதற்கு பதில் தூற்றுவது மட்டும் வடிவத்தில் மாறியுள்ளது. அத்துடன் சிறையில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளை ஸ்டாலினிசம் என்று அன்று தூற்றி சதி செய்தவர்கள் யார்? டிராட்ஸ்கியவாதிகள் தானே.

 

அடுத்து ஒரு நாட்டின் உள்ளாந்த விடையங்களில் நேரடியான தலையீடுகளை, நாடுகளுக்கிடையான ஒப்பந்தத்தில் என்றுமே பாட்டாளி வர்க்கம் திணிக்க முடியாது. அது அந்த நாட்டு கம்யூனிஸ்ட்டுகளின் வர்க்கக் கடமை. கைது, கொலைகளை சோவியத் என்றும் ஆதாரிக்கவில்லை. ஜெர்மனியிலும், ஆக்கிரமித்த நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் தொடாந்து இதற்கு எதிராக ஆயுதம் எந்திய நடிவடிக்கையில் ஈடுபட்டதை இந்த ஒப்பந்தம் எந்தவித்திலும் கட்டுப்படுத்தவில்லை. சோவியத் அயல் நாடுகளை ஜெர்மனி ஆக்கிரமித்த போது, சோவியத் படைகள் அங்கு நுழைந்தன. பில்லாந்தை சோவியத் படைகள் முன்னெச்சரிக்கையாக கைப்பற்றின. இதன்போது மற்றயை எகாதிபத்தியங்கள் பில்லாந்துக்கு ஆயுதம் வழங்கியதுடன், சோவியத்தை தாக்க ஜெர்மனியை உசுப்பிவிட்டனர். சோவியத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது. ஸ்பானியோலிலும், சீனாவிலும் அந்த நாடுகளின் ஆதாரவுடன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க சோவியத் படை நேரடியாகவே யுத்தத்தில் ஈடுபட்டது. இப்படி இருக்க எகாதிபத்திய ஆதாரவுடன் அவர்களின் நலனுக்காக, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை கொச்சைப்படுத்தி மார்க்சியத்தை அலங்கோலமாக்கி கழுவேற்றுவதே, டிராட்ஸ்கியத்தின் கோட்பாடாக இருப்பதை தாண்டி எதுவுமில்லை அல்லவா!

சோவியத் ஜெர்மனிய ஓப்பந்தத்தை தூற்றியபடி, மற்றொரு தூற்றுதலை டிராட்ஸ்கிகள் கட்டமைக்கின்றனர். தற்காலிகமாக பாசிச எதிர்ப்பில் உண்டான கூட்டணியுடன் சோசலிசம் முதலாளியமும் அருகருகே வாழமுடியும் என்ற ஸ்டாலினிச அதிகாரத்தின் மதிமயக்கம் உலகப் புரட்சி, பாட்டளி வர்க்கம் என்ற கோசங்களைக் கூட கைவிட வைத்தது” என்று கூறி பசப்புகின்றனர். இதற்கு மாறாக டிராட்ஸ்கிகள் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடு” போலியாக உருவாக்கப்பட்டதாக வேறு கூறுகின்றனர். ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்டு புலம்பும் டிராட்ஸ்கியம், பாசிசத்துக்கு எதிரான ஒப்பந்தத்தைப் பற்றி கேவலப்படுத்துகின்றனர். முதலாம் உலக யுத்தத்தின் பின்னான ஸ்டாலின் காலமே மிகவும் நெருக்கடிக்குரிய காலமாகும். உலகளவில் மிக கூர்மையான வர்க்கப் போராட்டம் நடந்த ஆண்டுகள் கூட. இதையே சேறடிப்பது டிராட்ஸ்கியத்துக்கு விருப்பமான விளையாட்டாகவும், அவசியமானதாகவும் உள்ளது.

 

டிராட்ஸ்கிகள் கூறுகின்றனர் “… “மக்கள் முன்னணி”, “மக்கள் ஜனநாயகம்” என்பவை ஸ்டாலினிசத்தால் முன்மொழியப்பட்டன. பிரான்ஸ் இத்தாலி, பெல்ஜியம், போன்ற நாடுகளில் ஸ்டாலினிசப் புத்திமதிப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ மற்றும் தேசியவாதக் கட்சிகளோடு ஜக்கிய முன்னணிக்குப் போயின. ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியை மிகப் பெரும் சீர்திருத்தவாத தொழிலாளார் அமைப்பான எஸ்.பி.டி யுடன் கூட்டுக்குப் போவதைத் தடுத்த ஸ்டாலின் பின்பு பாசிஸ்டுக்களோடு உடன்பட்டுப் போனதும் ஒப்பந்தம் செய்ததும் வரலாறு கண்டது” என்று ஒன்றுக்கொன்று முரணாக அனைத்தையும் தூற்றுகின்றனர். பாசிசம் மறுக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க, அதற்காக போராடும் அமைப்புகளுடன் ஜக்கிய முன்னணிக்கு போவது குற்றம் என்கின்றனர் டிராட்ஸ்கியவாதிகள். ஆனால் அதை ஜெர்மனியில் செய்யவில்லை என்று கூக்குரல் வேறு போடுகின்றனர். ஜெர்மனியில் திரிபுவாத கட்சிகளின் வலது பிரிவுகள் ஐக்கியத்துக்கு எதிராக செயல்பட்ட நிலையிலும், மூன்றாவது அகிலம் ஐக்கிய முன்னணியை அமைக்க கோரியது. கட்சியில் இதற்கு எதிராக இருந்த இடது பிரிவு மீது கடுமையான விமர்சனத்தை வைத்தது. இறுதியில் கட்சியை விட்டே நீக்கியது. (பார்க்க: ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற டிமித்திரோவின் நூல்) பிரான்சில் வெற்றிகரமாக அமைந்த ஐக்கிய முன்னணியை ஜெர்மனிய கம்யூனிசக் கட்சிக்கு எடுத்துக் காட்டி, பாசித்தை எதிர்ப்பதற்கான அரசியல் வழிமுறை சுட்டிக் காட்டப்பட்டது.

 

ஸ்டாலின் யுத்தத்தை எகாதிபத்திங்களுக்கிடையே நகர்த்தும் வழியிலும், பின்னால் பாசிசத்தை தனிமைப்படுத்தி அழிக்கவும் செய்த ஒப்பந்தங்களை தூற்றியவர்களின் கனவு வேறு ஒன்றாகவே இருந்தது. 1930 களில் ஏகாதிபத்திய நெருக்கடிகளை டிராட்ஸ்கி தனக்கு சார்பாக பயன்படுதினான். சோவியத் மீதான ஆக்கிரமிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை ஆதாரிக்கவும் தயாராக இருந்தான். உள்நாட்டில் அரசு மட்டத்தில் இருந்து இராணுவம் வரை தனது இரகசிய சதிக் குழுக்களையும், ஜந்தாம் படையையும் உருவாக்கினான். இரண்டாம் உலக யுத்தம் எற்படின் அதை எப்படி கையாண்டு தங்களது ஆட்சியை நிறுவுவது என்பதைக் கூட திட்டமிட்டனர். ஏன் 1930 இல் அண்ணளவாக 10 சதவீதமான சோவியத் இராணுவ அதிகாரிகள், அதாவது 4500 பேர் முன்னாள் மன்னனின் கீழ் இருந்த  இராணுவ அதிகாரிகளாவர். டிட்ராஸ்கிய சதிகள், ஒரு இராணுவச் சதியாகக் கூடிய நனவாக இருந்தது. ஜெர்மனி ஆக்கிரமிக்கும் போது இராணுவ புரட்சி ஒன்றை நடத்தி, ஜெர்மனிக்கு உக்கிரைன் போன்ற பகுதிகளை விட்டுக் கொடுத்து ஒரு சமதானத்தைக் காண்பது என்பது அவர்களின் திட்டம். அதாவது 1918 இல் லெனின் செய்த ஒப்பந்தை ஒட்டிய வடிவில் இதை நியாப்படுத்த திட்டமிட்டனர். ஸ்டாலின் ஆட்சியை இராணுவ சதிகள் மூலம் துக்கியெறிந்து, சோவியத்தை பாதுகாக்கும் ஜெர்மனுடான ஒப்பந்தம் அவசியம் என்று நியாப்படுத்தும் வகையில் திட்டங்கள் திட்டப்பட்டன. ஸ்டாலின் யுத்தத்ததில் தள்ளி சோவியத்தை அழிக்க விரும்பியதால், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது என விளக்கவும், அதை நோக்கிய இராணுவ சதிகளும் திட்டமிடப்பட்டன. ஜெர்மனிக்கு விட்டுக் கொடுக்கும் அதேநேரம், ஜெர்மனி எகாதிபத்திய யுத்தத்தில் பலவீனப்படும் போது மீள கைப்பறுவது என்ற வகையில், இராணுவ சதிக்கான கோட்பாட்டு ஆதரவை சதிக் குழு சார்ந்து டிராட்ஸ்கி பெற்றுக் கொண்டான்.

 

இந்த டிராட்ஸ்கியின் மார்க்சிய விரோதம் பற்றி கூறும் போது லெனின் ஒலிப்பது புரட்டு முழக்கங்கள், கைகோர்த்துச் செல்வது வலதுசாரிகளுடன், எதிர்ப்பது இடது சாரியை” என்று குறிப்பிட்ட லெனின் டிராட்ஸ்கியை “சூடாஸ்” என அழைத்தார். சூடாஸ் என்பது யேசுநாதரின் சீடராக இருந்து யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த ஒரு துரோகி. பாட்டாளி வர்க்கத்தை திரித்தும், தூற்றியும் ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகளாகவே டிராட்ஸ்கியம் தன்னை நிலைநாட்டியது. லெனின் மார்க்சியத்தை மறுப்பவர்கள் அதை பயன்படுத்தி எப்படி தம்மை நிலை நாட்டுகின்றனர் என்பதை கூறினரோ, அதற்கு டிராட்ஸ்கியம் அப்பட்டமாக விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பாட்டாளிகள் மத்தியில் மார்க்சியம் பிரபலமடைகின்ற போதெல்லாம் இந்த “முதலாளிகளின் தொழிற்கட்சி” மார்க்ஸ் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் அரசியல் போக்கைக் காணலாம். ஒரு வியாபாரக் கம்பெனி ஒரு குறிப்பிட்ட முத்திரையை, அடையாளத்தை அல்லது விளம்பரத்தைப் பயன்படுத்துவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அதேபோல் இதையும் தடுக்க முடியாது” என்று டிராட்ஸ்கி போன்ற “சூடாஸ்” களை அம்பலம் செய்தார். லெனினையும், லெனினியத்தையும் விரும்பியவாறு புரட்டிவிடும் இவர்கள், கோட்பாட்டு ரீதியான எந்த விடயம் மீதும் தமது கருத்தை முன்வைப்பதில்லை. தம்மை பூசிமொழுகி, தூற்றுவதன் மூலம் மட்டும் பிழைத்துக் கொள்பவர்கள். சர்வதேச ரீதியான முரண்பாடுகளிடையே ஒரு கொப்பில் தொங்கி கொண்டு, கோட்பாட்டு ரீதியில் ஏகாதிபத்தியத்துக்கு சார்பாகவும், நடைமுறையில் முரண்பாடாகவும் காட்டி இயங்குபவர்கள். அதாவது ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் தன்னனார்வக் குழுக்களின் பணிகளைப் போல், இவர்கள் கோட்பாட்டில் ஏகாதிபத்திய நலன்களை பிரதிபலித்தபடி செயல்படுவர்கள்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19