Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 17

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 17

 

டிராட்ஸ்கியம் “ஆழ்ந்த பொருளிலில்லாத,    வெட்டித்தனமான அரசியலாகும்” லெனின்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வெளிப்படையான போராட்டத்தின் மூலம், டிராட்ஸ்கியால் தோற்கடிக்க முடியவில்லை. இதில் இருந்து பின்வாங்கிய டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்க, ஒரு இரகசிய சதிக் குழுவாக தம்மை மாற்றிக் கொண்டான். அது தன்னை மூடிமறைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது.

டிராட்ஸ்கி இது தொடர்பாக வழங்கிய சொந்த வாக்கு மூலங்கள் கூட, இந்தச் சதியை நியாப்படுத்த தயங்கவில்லை. அதைப் பார்ப்போம். 1938இல் டிராட்ஸ்கி எழுதிய லியோன் செடோவ் என்ற நூலில் “1923 இல் லியோன் எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டான். பதினேழு வயதிலேயே அவன் புரட்சிக்காரனான். சதிவேலை, இரகசியக் கூட்டங்கள், பிரசுரங்கள் வழங்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டான். காம்சமால் அதாவது கம்யூனிஸ்ட் வாலிபர்கள் சங்கத்திலும், சோவியத் எதிர்ப்பாளர்களைத் தயாரித்தான்” என்று டிராட்ஸ்கி தனது மகன் தொடர்பாக வழங்கிய வாக்கு மூலம், தெளிவாக சதிகளையும், இரகசிய வேலைகளையும், இரகசிய அச்சகங்களையும் நிறுவியதை தெளிவாக்குகின்றன. இக் காலம் லெனின் உயிருடன் வாழ்ந்த காலமாகும். லெனினுடன் மத்திய குழுவில் டிராட்ஸ்கி இருந்த காலத்திலேயே, லெனினுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டான் என்பதை இது தெளிவாக்குகின்றது. இதைக் கவனத்தில் கொண்டே லெனின் 1921 மார்ச்சில் கட்சிக் கட்டுப்பாட்டைக் கோரினார்.

 

கட்சிக்குள் கட்சி ஏற்படுவதானது, புரட்சிக கட்சிக்கு கேடு விளைவிக்கும். இன்று முதல் கட்சித் தலைவர்கள், பெரும்பான்மையானோரால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், பெரும்பான்மையினர் ஆட்சிக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தவறி நடப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.” என 1921 மார்ச் மாதம் நடந்த 10வது காங்கிரஸ் தீர்மானித்து. கட்சியின் ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம் அனைத்தையும் டிராட்ஸ்கி, புஹாரின் குழுக்கள் துஸ்பிரயோகம் செய்ததுடன், பாட்டாளி வர்க்க ஆட்சியையே தூக்கியெறிய முற்பட்டனர். அவர்கள் கோஷ்டிவாதம், குழுவாதம் இரகசிய நடவடிக்கைகள் மூலம் கட்சியை பிளந்தனர். இந்த நிலையில் இதில் ஈடுபடுவோர் கட்சியை விட்டே வெளியேற்றப்படுவர் என்று லெனின் தலைமையிலான கட்சி எச்சரிக்கின்றது. இந்த குழுக்கள் இதை என்றுமே பின்னால் கைவிட்டதில்லை. தன்னை தனது குழுவாதத்தையும் பேணியதுடன் இரகசிய சதிக் குழுக்களையும், ஆயுதம் தாங்கிய தனிநபர் பயங்கரவாத குழுக்களையும் கூட உருவாக்கினர். அதே நேரம் லெனின் குறிப்பாக எச்சரிக்கும் போது “டிராட்ஸ்கி விளைவிக்கும் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் விரோதிகள் டிராட்ஸ்கிய வாதிகள் என்ற பெயரில்; கட்சிக்குள் நுழைத்து விடுகிறார்கள்.” என லெனின் டிராட்ஸ்கியை தோழமையுடன் எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை நிராகரித்த டிராட்ஸ்கி, அதை அலட்சியபடுத்தியதுடன் டிராட்ஸ்கியின் பின்னால் மென்ஸ்சுவிக்குகளையும் சோவியத் எதிர்பாளர்களையும் அணிதிரட்டிக் கொண்டு நிரந்தரமான சோவியத் விரோத செயல்களின் ஈடுபட்டன். இவர்கள் வலது இடது பிரிவுக்குள் தம்மை ஜக்கியப்படுத்திக் கொண்டர். இவர்களை உள்ளடாக்கிய சோவியத் எதிர்ப்பு குழுக்களே டிராட்ஸ்கிய வாதிகளாக உருவானவர்கள். டிராட்ஸ்கி அக்காலத்தில் பகிரங்கமாக “பழைய போல்சுவிக்குகள் பிற்போக்குகளாகிவிட்டனர். வாலிபர்களே! என் பக்கம் வாருங்கள் எனப் பல இடங்களில் பேசினான். கட்சி, கட்சிக் கட்டுப்பாட்டை கோரிய அதே நேரம், டிராட்ஸ்கி சதிவேலைகளையே தனது அரசியலாக்கினான். பாட்டாளி வர்க்கத் தவைவர்களை பகிரங்கமாகவே கேவலப்படுத்தினான். அதே நேரம் ஒரு அதிகார வர்க்கம் சார்பாக, தன்னையும் தனது அணியையும் கட்டி அமைத்தான்.

இதை இன்று டிராட்ஸ்கியவாதிகள் ஸ்டாலின் மீது வீசி எறிவதும், தூற்றுவதும் என்பது வேடிக்கையாகவே உள்ளது. லெனின் இதுபற்றி என்ன கூறினார் எனப் பார்ப்போம். “… ஆக நிர்வாக அமைப்புக்களின் அலுவலகர்களில் சராசரி 61.6 சதவீதம் பேர், அதாவது பாதிக்கும் அதிகமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொழிலாளர்கள் என்பதைக் காணலாம். இந்த வியமாக டிராட்ஸ்கி தனது ஆராய்ச்சி உரைகளில் என்ன எழுதினாரோ அது அதிகார வர்க்கத் தோரணையின் செயலே என்பதை இது ஏற்கனவே நிரூபித்திருக்கிறது (அடிக்கோடு லெனின்) “மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை”  என்னும் போதும் தர்க்கம் செய்வதும், கொள்கை அறிக்கைகள் எழுதுவதும், மிகவும் பயனற்ற வகையைச் சேர்ந்த “பொதுக் கட்சியின் பேச்சு” இது உற்பத்தி வேலையில் இருந்து காலம், கவனம் மற்றும் மூலவளங்களைத் திசைதிருப்புகிறது. இது ஆழ்ந்த பொருளிலில்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்” என்றார். டிராட்ஸ்கியின் வெட்டித்தனமான அரசிலையும், அதை அதிகாரத் தோரணையில் நிறுவிவிட முனையும் போக்கையும் எதிர்த்து லெனின் தொடர்ந்து போராடினார். ஆனால் இன்று லெனினையே திரிக்கும் டிராட்ஸ்கிகள், இவைகளை ஸ்டாலின் மீது மூட்டை கட்டி திருப்பிவிட முனையும் கபடம் நிறைந்த வம்புப் பேச்சுக்களைச் செய்கின்றனர். டிராட்ஸ்கியினால் கட்டி அமைக்கப்பட்ட கோஷ்டி வாதங்களை இன்று ஸ்டாலின் மீது தள்ளி விட லெனினைக் கூட தம்முடன் பேச்சளவில் இனைத்துக் கொள்கின்றனர். ஆனால் லெனின் டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதமே கட்சியை இரண்டாக்க முயல்வதை மிகத் தெளிவாக இனங்காட்டுவதையும் பார்ப்போம்.

ஒரு காங்கிரசுக்கு முன் நடைபெறுவதைப் போல் ரஷ்சியாவின் கம்யூனிசக் கட்சியின் 10வது காங்கிரசுக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுடன் தொடர்புடையதுமான கட்சி விவாதமும், கோஷ்டிவாதப் போராட்டமும் சூடுபிடித்து வருகின்றன. முதலாவது கோஷ்டிவாத பிரகடனம் தோழர் டிராட்ஸ்கியால் “பல பொறுப்பான ஊழியர்கள் சார்பில்” அவரது “கொள்கைப் பிரசுரத்தில்” (தொழிச்சங்களின் பங்கும் பணிகளும் 1920 டிசம்பர் 25 இல் எழுதிய முகவரையுடன்) செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரு.க.க இன் பெத்ரோகிராத் கிளை ஒரு கடுமையான பிரகடனத்தை வெளியிட்டது. (1921 ஜனவரி 6ம் தேதி பெத்ரோசிராத்ஸ்கயா பிராவ்தா மற்றும் கட்சியின் மத்திய ஏடான மாஸ்கோ பிராவ்தா 1921 ஜனவரி 13ம் தேதி வெளியிட்ட கட்சி வேண்டுகோள்). பிறகு மாஸ்கோ கமிட்டி (பிராவ்தா இதே இதழில்) பெத்ரோகிரொத் கிளைக்கு எதிராக வெளிவந்தது. …இந்தப் பிரச்சனைகளை விவாதிப்பதற்கான கட்சிக் கூட்டங்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. … தோழர் டிராட்ஸ்கியின் தொழிற்சங்கங்களில் பங்கும் பணிகளும் எனும் பிரசுரம் ஒரு கோஷ்டிவாதப் பிரகடனமா? அதன் உள்ளடக்கம் எதுவாயினும், இந்த வகையான பிரகடனத்தால் கட்சிக்கு எப்போதும் அபாயம் உண்டா? இந்தக் கேள்வியைக் கிளப்பாமல் அமுக்கிவிடும் முயற்சிகள் விசேடமாக மாஸ்கோ கமிட்டி உறுப்பினர்களின் விருப்பு விளையாட்டாக இருக்கின்றன. …தோழர் புஹாரின் “இடைப்பட்ட குழுவின்” சார்பில் 1920 டிசம்பர் 30ந் தேதி பின்வரும் அறிக்கையை வெளியிடும் கட்டாயத்திற்கு ஆளானார்.

“… ஒரு ரயில் வண்டித் தொடர் வீழ்ச்சி நோக்கிச் சரியும் போது ஒரு இடைப்பட்ட அடிதாங்கி இருப்பது மோசமானதல்ல” … எனவே வீழ்ச்சி அடைகின்ற அபாயம் இருக்கிறது. …டிராட்ஸ்கியின் பிரசுரம் “இது கூட்டுப் பணியின் பலன்” … “இதைத் தொகுப்பதில் பங்கெடுத்தார்கள்” என்றும் இது ஒரு “கொள்கைப் பிரசுரம்” என்றும் தெரிவிக்கின்ற ஒரு அறிவிப்புடன் தொடங்குகிறது. “வரப்போகும் கட்சிக் காங்கிரஸ் தொழிற்சங்க இயக்கத்தின் அகத்தே இருக்கும் இரு போக்குகளின் இடையே ஒன்றைத் தேர்வு செய்ய (அழுத்தம் டிராட்ஸ்கியுடையது) வேண்டி நேரும்” இது மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கோஷ்டிப் பிரிவு அல்ல என்றால் இது “ஒரு வீழ்ச்சியை நோக்கி சரிவது” ஆகாது என்றால், தோழர் புஹாரினோ, அவரது சக சிந்தனையாளர் வேறு யாருமோ “கோஷ்டிவாதம்” மற்றும் “கட்சி ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சரிவது போல் தோன்றுகிறது” என்னும் தொடர்களுக்கு வேறு சாத்தியமான அர்த்தம் எதேனும் இருப்பின் அதைக் கட்சிக்கு விளக்கிக் கூறுவார்களாக. “இடைப்பட்ட அடிதாங்கியாகச்” செயல்பட விரும்பியும் அத்தகைய “வீழ்ச்சி அபாயம்” குறித்துத் தம் கண்களை மூடிக் கொண்டு இருக்கும் மனிதர்களை விட யார் அதிக அறிவுக் குருடர்களாக இருக்க முடியும்?

சற்றே சிந்தியுங்கள்: தோழர் டிராட்ஸ்கியின் தற்படைப்பு நகல் ஆராச்சியுரைகள் மற்றும் கட்சி சார்பில் அவர் ஆதரிக்கும் தொழிச்சங்கக் கொள்கை முழுவதையும் பற்றிய முன் என்றும் கண்டிராத அளவுக்கு நீண்ட நெடிய, விரிவான, காரசாரமான விவாதத்தின் மத்திய கமிட்டியின் இரு பேரவைக் கூட்டங்களை (நவம்பர் 9, டிசம்பர் 7) செலவிட்ட பிறகு, மத்தியக் கமிட்டியின் ஒரு உறுப்பினர், பத்தொன்பது பேரில் ஒருவர், மத்திய கமிட்டிக்கு வெளியே ஒரு குழுவை நிறுத்தி அதன் கூட்டு முயற்சியை “கொள்கை” என்று முன்வைத்து “இரு போக்குகளுக்கு இடையே தேர்வு செய்து கொள்ளும்படி” கட்சியின் காங்கிரசை அழைக்கின்றார்!! 1920 டிசம்பர் 25 இல் இரண்டு போக்குகள், இரண்டு போக்குகள் மட்டுமே இருப்பதாக தோழர் டிராட்ஸ்கி அறிவித்துள்ளார். என்னும் உண்மை ஒருபுறம் இருக்க, நவம்பர் 9 இல் புகாரின் ஒர் “இடைப்பட்ட அடிதாங்கியாக” வெளியே வந்த பிறகு கூட இது நிகழ்ந்திருப்பது, படுமோசமான, மிகவும் பாதகமான வகைப்பட்ட கோஷ்டிவாதத்தின் உடந்தையாளர்கள் என்ற முறையில் புகாரினின் கோஷ்டியின் மெய்யான வேடத்தை பச்சையாக அம்பலப்படுத்துவதாகும். …இந்த தாக்குதலும் தொழிற்சங்க இயக்கத்தில் இரு போக்குகளுக்கு இடையே “தேர்வு” செய்து கொள்ளும் படி வற்புறுத்துவதும் ஒரளவு திடீரென்று காட்சி தருவதாக தோன்றவில்லையா? மூன்று ஆண்டு காலப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தக்குப் பிறகு இந்த இரு போக்குகள் பற்றிய பிரச்சனைய இந்த வழியில் “தாக்குவதற்கு” ஒரு கட்சி உறுப்பினரையாவது காண முடிந்தது குறித்து வியப்பால் விழிப்பதன்றி நாம் செய்யக் கூடியது வேறு என்ன?” என்று லெனின் டிராட்ஸ்கி கோஷ்டிவாத சதிகளை கண்டு வியப்பையே வெளிப்படுத்தினார். புரட்சிக்கு பிந்திய மூன்று ஆண்டுகள் பின்னால் இது மீண்டும் உருவான போது, பழைய நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இது புது வடிவமெடுத்து இருந்ததைக் கண்டார் லெனின். இரண்டு மத்திய கமிட்டி கூட்டத் தொடர்களில் விவாதிக்கபட்ட நிலையில், அதன் பொறுப்பான தலைவர்களின் நேரத்தை துஸ்பிரயோகம் செய்த டிராட்ஸ்கி, மத்திய கமிட்டியின் பெயரால் தனி மனிதன் கோஷ்டிகளின் பின்னால் நின்று லெனின் தலைமையிலான ஆட்சியா அல்லது தனது தலைமையிலான ஆட்சியா என்பதை தெரிவு செய்ய அழைப்பு விடுத்தார். பாட்டாளி வர்க்க ஆட்சியை தூக்கியெறிந்து விடும் அளவுக்கு, கோஷ்டிவாதம் சென்றுள்ளதை லெனின் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகின்றார்.

லெனின் இத்துடன் இதை நிறுத்திவிடவில்லை. “எல்லாம் இத்துடன் தீர்ந்து விடவில்லை. இந்தப் பிரசுரத்தில் நிரம்பி வழியும் கோஷ்டிவாதத் தாக்குதல்களைக் பாருங்கள். முதலாவது ஆராய்ச்சியுரையிலேயே “தொழிற்சங்க இயக்கத்திலுள்ள ஒரு சில ஊழியர்கள்” மீது ஒரு அச்சுறுத்தும் “சாடை” இருத்தல் காண்கிறோம். இவர்கள் “கட்சியால் நெடுங்காலம் முன்பே கோட்பாட்டு பூர்வமாக மறுத்து நிராகரிக்கப்பட்ட, சாமன்யமான தொழிச்சங்கவாதத்தினுள்” தள்ளப்பட்டவர்கள் கட்சியானது, மத்தியக் கமிட்டியின் பத்தொன்பது உறுப்பினர்களில் ஒரே ஒரு உறுப்பினரால் மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது போலும்” என்று லெனின் கிண்டல் செய்து டிராட்ஸ்கியின் கோஷ்டி வாதத்தை தனிமைப்படுத்திக் காட்டுகின்றார். அத்துடன் தொழிற்சங்கத்தில் முரண்பட்டவர்கள் மேலான அச்சுறுத்தலை டிராட்ஸ்கி விடுகின்றார். இதை லெனின் மிக நுட்பமாக அம்பலப்படுத்துகின்றார். அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் பலம் எங்கிருந்து உருவாகின்றது. இது சதிகளை அடிப்படையாகவும், தனது ஆட்சி உருவாகும் அப்போது அழிக்கப்படுவாய் என்பதையே சுட்டி நிற்கின்றது. இந்த அச்சுறுத்தல், மட்டுமின்றி முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் பணியை டிராட்ஸ்கி கையாண்ட போது, லெனினின் 19 பேரில் ஒருவராக நின்ற என்று கேலி செய்து தனிமைபடுத்தி அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகின்றார்.

லெனின் டிராட்ஸ்கியின் கோஷ்டிவாத முயற்சியை தொடர்ந்து தோலுரிக்கும் போது 8வது ஆராய்ச்சியுரை “உயர் மட்ட தொழிச்சங்க ஊழியர்கள் மத்தியில் நிலவும் தனித் தொழில் வைதிகப் போக்கை” ஆரவாரமான முறையில் கண்டனம் செய்கிறது (“உயர் மட்டத்தின்” மீது மெய்யான அதிகார வர்க்க முறையில் கவனம் ஒன்று குவிக்கப்படுவதை கவனித்து கொள்ளுங்கள்!). 11 ஆவது ஆராய்ச்சியுரையில் தொடக்கம், ரு.க.கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் தீர்மானங்களுக்குப் “பெரும்பான்மை தொழிச்சங்கவாதிகள்” “சம்பிரதாயமான, அதாவது சொல்லளவிலான அங்கீகாரம் மட்டுமே தருகிறார்கள்” என்று அதிசயிக்கத்தக்க வகையில் சாமர்த்தியமாகவும் முடிவானதாகவும் செய்முறையாகவும் …(இதற்கு நய நாகரிகமான சொல் எதுவோ) “சாடை” காட்டுகிறது. தொழிச்சங்கவாதிகளில் பெரும்பான்மை(!!) கட்சி முடிவுக்குச் சொல்லளவில் மட்டுமே அங்கீகாரம் தருகிறது என்று கூறும் மிகவும் அதிகாரச் செல்வாக்குள்ள நீதிபதிகள் நம்மிடையே இருப்பதைக் காண்கிறோம்!” என்று டிராட்ஸ்கியின் புரட்டுகளை தோலுரிக்கிறார். கட்சியின் 9வது காங்கிரஸ் தீர்மானங்களை தொழிலாளர் எற்றுக் கொள்ளவில்லை என்றும், அதை சொல்லளவில் சம்பிரதாய பூர்வமாக ஆதாரிப்பதாக கூறி, லெனினின் தலைமையிலான கட்சி காங்கிரஸ் முடிவுகளை கொச்சைப்படுத்தி நிராகரிக்க கோருகின்றான் டிராட்ஸ்கி. 9 வது காங்கிரசில் முடிவை சம்பிரதாய பூர்வமாக தானும் தனது ஆதாரவளர்களும் எற்றதாக கூறி, அதை இன்று நிராகரிப்பதாக கூறி தான் ஒரு போல்ஸ்விக்காக இருக்கவில்லை என்பதையே அவரின் பிரகடனம் நிறுவுகின்றது. தனது தலைமையை நிறுவி பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கட்சி முடிவுகளை “சொல்லளவிலான அங்கீகாரித்தாக” கூறி லெனினுக்கே சவால் விடுத்தான். 10 வது காங்கிரசில் கட்சியை எதிர்த்து நின்றான். அப்போதும் போல்ஸ்விக்காக தன்னை சுயவிமர்சனம் செய்யவில்லை. தனது தீர்மானத்தை ஏற்று தனது தலைமையிலான கொள்கைகளை எற்றுக் கொள்ள கோருகிறான். 1917ம் ஆண்டு புரட்சிக்கு பிந்திய காலத்தில் லெனின் மீண்டும், மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டு விவாதத்தை, டிராட்ஸ்கியிடம் இருந்து தொடர்ச்சியாக எதிர்கொண்டார். இந்த நிலையைத் தான் ஸ்டாலினும் எதிர் கொள்ள வேண்டிய அவலம் உருவானது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16