Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இன ஒடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பதும் ஒடுக்குமுறைதான்

இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பது, ஒடுக்குமுறை அரசியலாக மேலெழுந்து இருக்கின்றது. இயக்க அஞ்சலி நிகழ்வுகள் இதைத்தான் இன்று நிறுவ முனைகின்றது. ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதையே வரலாறாக்கி விட முனைகின்றனர். ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.

மக்களை இனரீதியாக பிரித்து ஒடுக்கும் இனவாத அரசு, யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மறுத்து வந்தது. அதேநேரம் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட தரப்பிலுள்ள இனவாதிகள், இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மறுப்பதும் நடந்து வருகின்றது. இந்த அரசியல் பின்னணியிலேயே இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை நினைவு கொள்ளவதை அரசு அனுமதித்ததன் மூலம், மறுபக்கத்தில் இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுக்கும் குறுகிய இனவாத அரசியலுக்குள் தமிழ் மக்களை மூழ்கடித்து இருக்கின்றது. தமிழ் பேசும் மக்களையே மோதவைத்து, பிரித்தாளும் தந்திரத்தை, தமிழ் இனவாதிகளைக் கொண்டே முன்நகர்த்த இருக்கின்றது.

இலங்கையில் கடந்த வரலாறு என்பது இனவொடுக்குமுறையாலானது. இந்த இனவொடுக்குமுறையானது இனக்கலவரங்களுக்கும், இன யுத்தத்துக்கும் வித்திட்;டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றனர். இன்று வரை யாரும் இந்த மக்களை நினைவு கொள்வதுமில்லை, அஞ்சலிகள் அவர்களுக்கு செலுத்தப்படுவதுமில்லை. இதுதான் உண்மை. இதை மீறி அஞ்சலி செலுத்துவது என்பது, துரோகத்துக்குரியதாக காட்டப்படுகின்றது.

 

ஆயிரம் ஆயிரம் மக்களைப் பலியெடுத்த, பலிகொண்ட இனவாத யுத்தம், அவர்களை நினைவுகொள்ள மறுப்பது, ஆதிக்கவெறி கொண்ட யாழ்மையவாத வெள்ளாளிய சிந்தனையிலான  அரசியலாக இருக்கின்றது. எனது அப்பா, அம்மா, குழந்தை, உற்றார் உறவினர்கள், சுற்றுவட்டம், சமூகம், மனிதகுலத்தை நினைவு கொள்ள மறுப்பது என்பதும், அதையே அரசியலாகக் கொண்டாடுவதென்பதும் மனிதவிரோதச் சிந்தனைப் போக்காகும்.

இனவொடுக்குமுறைக்குள்ளாகி பலியானவர்களை மறுப்பதென்பது, யுத்தத்தின் பின்னான ஒடுக்குமுறையாக மாறி இருக்கின்றது. போராட்டத்தில் ஜனநாயகத்தை மறுத்தளித்த போக்கு, தொடர்ந்து அஞ்சலி வரை இன்று நீடிக்கின்றது. 

இங்கு அஞ்சலிகள் என்ற பெயரில் பழைய இயக்கங்களின் அஞ்சலிகளே நடக்கின்றது. இது இனவொடுக்குமுறையாலும், இன முரண்பாட்டாலும் கொல்லப்பட்ட, ஒட்டுமொத்த மக்களையும் - போராளிகளையும் மறுக்கின்றது. இப்படி மறுக்கின்ற அரசியல் என்பது, மக்களுக்கு எதிரான கடந்தகால அரசியலின் நீட்சியாகும்.

இயக்கத்தில் இருந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையென்பது, அவனின் தந்தைக்கும்  தாய்க்கும்  அவனின் சமூகத்துக்கும் அஞ்சலி செலுத்தும் உரி;மையை மறுப்பதாக மாறி இருக்கின்றது. இன முரண்பாடு இயக்கத்தில் இருந்தவனை மட்டும் பலியெடுக்கவில்லை, மாறாக இன முரண்பாட்டில் சிக்கிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் பலியெடுத்தது.

இனம், மொழி, மதம், சாதி, பால், பிரதேசம், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்.. என்ற எல்லா சமூக வரைமுறைகளையும், எல்லைகளையும் கடந்தே, இனமுரண்பாடு பலியெடுத்தது. இன்றைய அஞ்சலிகளானது, இன முரண்பாட்டில் சிக்கிய அனைத்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்த மனிதர்களை நினைவு கொள்வதை மறுப்பதும், அதை துரோகமென்று கூறுவதும், எந்த வகையில் மனிதம் சார்ந்ததாக, உண்மையான உணர்வுடன் கூடிய அஞ்சலியாக இருக்க முடியும்;? 

இந்தப் பின்னணியில் இன்றைய இயக்க அஞ்சலிகளின் பின்னால் இரண்டு போக்குகளை அடையாளம் காண முடியும். 

1.தங்கள் உறவுகளை முன்னிறுத்தி உண்மையான அஞ்சலிகளைச் செய்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள். இவர்கள் தம்மையொத்த, ஒடுக்கப்பட்ட மக்கள் தம்முடன் சேர்ந்து மற்றவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை மறுப்பதில்லை. இவர்களிடம் இயக்கவாதம், மனிதவிரோதம், ஒடுக்கும் குணாம்சம் கொண்டு இருப்பதில்லை. இவர்களே உண்மையான அஞ்சலிகளை செய்வதுடன், இன்னமும் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கின்றனர்.  

2.மறுபக்கத்தில இயக்கவாதம், மனிதவிரோதம், ஒடுக்கும் வர்க்க குணாம்சம் கொண்டவர்கள் அஞ்சலியின் பெயரில் ஒடுக்கும் அரசியலை முன்வைக்கின்றனர். இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மறுக்கின்ற, அரசியல் போலிகளாக இருக்கின்றனர். வன்முறையையும், உணர்ச்சி அரசியல் மூலமும், தங்கள் போலித்தனத்தை போர்த்திக் கொண்டு, மக்களை விட உணர்வுள்ளவராக தம்மைக் காட்டி நடிக்கின்றனர்.  

இங்கு அஞ்சலிகளை அரசியல் ரீதியாக பார்த்தால் 

1. ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் உண்மையான உணர்வுபூர்வமான அஞ்சலிகளும், 

2. ஒடுக்குகின்ற தரப்புகளின் போலியான அரசியல் நடிப்பு கொண்ட அஞ்சலிகளுமாக பிரிந்து காணப்படுகின்றது.            

ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளுடன் கூடிய அஞ்சலிகள் மேல், ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துப்படுகின்ற இயக்க நிகழ்வுகளாகவே அஞ்சலிகள் சீரழிகின்றது. 

இந்த வகையில் இயக்க நிகழ்வுகளாக அஞ்சலிகள் குறுகிவிட்டதுடன், அதுவொரு அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகி விடுகின்றது. இங்கு அஞ்சலி என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகிவிடுகின்றது. யுத்தத்தின் பின் சமூகம் ஆழமாக சிதைவடைந்துள்ள எதார்த்தத்தில், அஞ்சலி என்பது வியாபாரப்பொருளாகி விடுகின்றது. சமூக பொருளாதார ரீதியான ஒடுக்குகின்ற சமூக அமைப்புமுறை சார்ந்து, ஒடுக்கும் சமூகத்தினது இருப்புக்கான ஒடுக்குமுறையாகி விடுகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் பொது அஞ்சலிகளுக்கு பதில்,  ஒடுக்குவோரின் அஞ்சலியாக இருக்குமாறு, ஒடுக்குவோரின் அரசியலே அஞ்சலியாக முன்வைக்கப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள், சமூக உணர்வாக்கப்படுவதில்லை.