Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழனின் சாதிய மரபுகளும் சாதியப் பண்பாடுகளும்

யாழ்ப்பாணத்து தமிழனின் மரபு, சாதிய மரபேயாகும். தமிழனின் பண்பாடு, சாதியப் பண்பாடாகும். தமிழன் கோரிய தமிழீழத்தின் ஆட்சியதிகாரம் என்பது சாதியம் தான். தமிழ்த்தேசியம்,  தமிழன் என்ற அடையாள அரசியல் அனைத்தும் சாதியத்தைக் கோருகின்றது. “இனப் பிரச்சனைக்கு தீர்வு”, “உள்ளக-வெளியக சுயநிர்ணய உரிமை", “சமஸ்டி" தொடங்கி தமிழீழம் வரை எதைக் கோரிய போதும், அது யாழ் வெள்ளாளிய சாதிய சமூகத்தின் ஆதிக்க இருப்பை முன்வைக்கின்றது. தமிழனை தமிழன் அடக்கியாளும், சாதிய  அதிகாரத்தையே கோரினர், கோருகின்றனர். 

சாதிய மரபுவழி வந்த சாதிய மயானத்தையே அகற்ற மறுக்கும் சாதிய அதிகாரத்தைக் கொண்டு, யாழ் அதிகார வர்க்கம் திமிர்த்தனமாக பதிலளிக்கின்றது. இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், தமிழனின் சாதிய மரபுரிமையைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகின்றனர். மரணித்தவர்களை எரித்த இடத்தின், சாதியப் புனிதம் குறித்துப் பேசுகின்றனர். காணிகள் மீதான சட்ட உரிமை பற்றிப் பேசுகின்றனர். தனிநபர்களின் நடத்தையே இந்த மயானப் பிரச்சனைக்கு காரணமென்று, காரணங்களைக் கற்பிக்க முனைகின்றனர்.       

சாதியை பிறப்பில் தீர்மானிக்கின்ற கேடுகெட்ட இழிவான காட்டுமிராண்டித்தனமான சமூக அமைப்பே தமிழனின் மரபும், பண்பாடுமாகும். கோயில்கள் தொடக்கம் சடங்குகள் வரை, சாதி அடிப்படையில் பிறந்தவர்களைக் கொண்டு முன்னெடுக்கும், சாதிய ஒடுக்கும் பண்பாட்டைக் கொண்டு இயங்குகின்றது. இந்த சாதியத்தை தங்கள் மரபுகளாக கொண்டவர்களே, மயானத்தை தக்கவைக்க முனைகின்றனர். விதவிதமாக காரணங்களை முன்வைக்கின்றனர்.

யாழ்ப்பாணத்து மயானங்கள் சாதியத்தைக் கடந்ததல்ல. சாதி சமூக வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் தான் மயானங்கள். சாதிய பிறப்பின் அடிப்படையில் பூணூல் போட்ட பிராமணனைக் கொண்டு பூசை செய்யும் கோயில்கள் தொடங்கி, பிணத்துக்கு பூணூல் போட்டு பிராமணன் சடங்கு செய்வதையே, தமது சாதிப் பெருமையாகக் கருதும் சாதி சமூக அமைப்பு இது.

ஒடுக்கப்பட்ட சாதிகள் கூட பூணூல் போட்ட சாதிய சடங்கு முறைகளை பின்பற்றுகின்ற அளவுக்கு, வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து அதிகார பீடங்களில் இருப்பவர்கள் கூட, யாழ் வெள்ளாளிய சாதிய சமூகத்துக்கு சேவை செய்கின்ற அளவுக்கு, சாதிய சமூக ஆதிக்கத்தைக் கொண்ட ஜனநாயக விரோத அமைப்பாக இயங்குகின்றது.

   

இந்த சாதிய சமூக அமைப்பில் மயானங்கள் இருக்கும் இடம், அதை அண்டிய வாழ்விடங்கள் அனைத்தும் சாதிய சமூக கட்டமைப்புக்கு உட்பட்டது. பாரம்பரிய உரிமையைக் கோருவது என்பது, சாதிய வாழ்க்கையைக் கோருவது தான். யுத்தத்தின் பின்னான மீள் குடியேற்றமானது, மரபுரீதியான சாதியக் கிராமங்களை உருவாக்குவதில் இருந்து தொடங்கியது. சாதி அடிப்படையில், நிலம் விற்கக் கூடாது என்ற ஊர் தீர்மானங்கள் இதை தெளிவாக பறைசாற்றுகின்றது. இன்று மயானங்கள் மீதான உரிமையை கோருவதன் பொருள், சாதிய ஊர்களின் சாதிய குடியிருப்பு உரிமைகளை மறுபடி நிலைநிறுத்துவது தான்.

அன்றைய மயானம் தொடங்கி இன்றைய மயானம் வரை, சாதிய ஒடுக்குமுறையை அப்படியே பாதுகாத்து பறைசாற்றுகின்றது. அது மனிதனை சாதி ரீதியாக பிளக்கும், சாதிய வாழ்வுக்கு வித்திடுகின்றது. ஊருக்குள் வாழத் தடை விதித்து, சாதிய அடிப்படையில் ஒடுக்குகின்றது. ஒடுக்கும் சாதிகளால் ஓரம் கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள், வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு பொருத்தமற்ற, ஒடுக்கும் சாதிகளால் வாழமுடியாத பிரதேசங்களே. வாழ்வதற்கு ஏற்ற சூழல்கள் இல்லாது இருக்கும் போது, அதற்கு எதிராக போராடுவது அவசியமானது. இதற்காக போராடுவதற்கு பதில், இதை அவர்கள் வாழ்க்கை மீது திணிக்க 

1.பாரம்பரிய மரபு உரிமையைப் பற்றி பேசுகின்றனர். இது ஒடுக்குகின்ற தரப்பின் தர்க்கமாகவும்,  ஒடுக்கும் சாதியின் ஆதிக்கக் கருத்தியலாகவுமே முன்வைக்கப்படுகின்றது. பாரம்பரியம் என்பதும், மரபு என்பதும் சாதியம் கடந்ததல்ல. 

2.சாதிய மயானங்களை அகற்றக் கோரிய போராட்டம் தொடங்கியவுடன், போராடுகின்ற தரப்பில் உள்ள தனிநபர்களின் நடத்தையைப் பற்றி அல்லது கட்சியின் நடத்தையைப் பற்றி பேசுவது, வெள்ளாளிய சிந்தனை முறையில் இருந்து வெளிப்படும் ஒடுக்கும் சாதிய வக்கிரமாகும். இவை ஒடுக்கும் சாதிய மயானங்களை அகற்றக் கோரும் அடிப்படையில் இருந்து முன்வைக்கப்படவில்லை. மாறாக சாதிய மயானங்களை தக்கவைப்பதற்காக, முன்வைக்கும் வாதங்களே.

3.சாதிய மயானங்கள் அகற்றப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொது மயானங்களை  அமைக்க வேண்டும் என்ற பொதுக் கோரிக்கையை நிராகரிக்கின்றமை என்பது, சாதி சமூக அமைப்பின் நீட்சியை தக்கவைக்கும் முயற்சியாகும். 

4. காணிகளின் மீதான சட்டரீதியான பாரம்பரிய உரிமை பற்றி பேசுவது, சாதிய நரித்தனமாகும். காணிகள் மீது சட்டரீதியான உரிமைகள் இல்லாத சாதிய அடிப்படையிலான தேசவழமைச் சட்டத்தை வளைத்து, சட்டரீதியாக ஆக்கியதே காணி மீதான சட்ட உரிமைகள். சட்ட அறிவு இல்லாத ஊர் உலகத்தை ஏமாற்றி, மோசடியாக அபகரித்ததே காணி மீதான சட்டரீதியான உரி;மைகள். காலனிய  காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதிய மக்களை அடிமைகளாக வைத்திருந்தவர்களே, சாதிய அடிப்படையில் நில உரிமைகளை தமதாக்கிக் கொண்டனர். 

4.1. ஒடுக்கப்பட்ட சாதிகளை அடிமையாக்கிக் கொண்ட யாழ் ஒடுக்கும் சாதிய சமூகம், அடிமைகளின் உழைப்பை தமதாக்கிக் கொண்டு செல்வத்தைக் குவித்தது. 

4.2. ஒடுக்கும் சாதிகளின் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப, நிலங்களை தமக்குள் வளைத்துக் கொண்டனர். பிரிட்டிஸ் காலனிய வாதிகளும் வரியை அறவிட்டுக் கொடுக்கும் சாதிய முறைக்கு ஏற்ப, ஒடுக்கும் சாதிகளை முன்னிறுத்தி நிலம் மீதான சட்டரீதியான தனியுடமை கொள்கையை உருவாக்கி கொண்டனர். இதன் மூலம் ஒடுக்கும் சாதிகள், மொத்த நிலத்தையும் சட்டரீதியாக தமதாக்கினர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகள் வாழ்ந்த நிலம் கூட, சட்டரீதியாக ஒடுக்கும் சாதிகளின் உடமையாகின. இது தான் நிலவுடமை பற்றிய வரலாறு.  

ஆசிய நிலவுடமைச் சமூகத்தில் நிலம் மன்னரின் நிலமாக இருந்தது. இதை மாற்றி அமைத்த பிரிட்டிஸ் காலனிய வாதிகள், நிலத்தின் மீதான தனியுடமையைப் புகுத்தினர். நிலத்தின் பயன்பாடு மீது வரியை அறவிட்டு பிரிட்டிஸ் காலனியவாதிகளுக்கு கொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு இருந்த ஒடுக்கும் சாதிகள், நிலம் மீதான தனியுடமை மூலம் நிலத்தை தமதாக்கினர். புதிதாக கிடைத்;த நிலவுடமை அதிகாரத்துடன் வெள்ளாளராக உருமாற்றமடைந்த ஆதிக்க சாதிகளே, ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிலவுடமையை இல்லாதாக்கினர்.        

சாதி குடியிருப்புகளும், மயானங்களும் தங்கள் அதிகாரம், சாதிய இருப்புக்கு ஏற்ப ஒடுக்கும் சாதிகளால் உருவாக்கப்பட்டவை. இன்றைய மயானங்கள், குடியிருப்புகள் இயற்கையிலான மனித தேர்வல்ல. மாறாக சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறையிலானது. 

காணி மீதான சட்ட உரிமை என்பது, சாதிய சமூக அமைப்பின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டரீதியான ஒடுக்குமுறையாகவுள்ளது.  நிலம் மீதான சட்ட உரிமை பேசுவது என்பது, நவதாராளவாத தனியுடமை சமூக அமைப்பு முறைமையை, தங்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு ஏற்ப முன்னிறுத்திக் கொள்வதேயாகும். 

சாதியம் என்பது ஒடுக்குமுறையாலான, சமூக நிறுவனமாக இயங்குகின்றது. மக்களை பிளந்து, குளிர் காய்கின்ற சாதிய பண்பாட்டு ரீதியான சுரண்டல் முறையாக இயங்குகின்றது.  இதை ஒழித்துக் கட்டாத வரை, எந்த மானிட விடுதலையும் சாத்தியமில்லை.