Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சுற்றுச்சூழலுக்கான பாரிஸ் ஒப்பந்தமும் - அமெரிக்காவின் விலகலும்

பூமியின்  வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி  சுற்றுச்சூழலை பாதுகாக்கப்போவதாகக் கூறி, 195 நாடுகளால் உருவாக்கப்பட்டதே பாரிஸ் ஒப்பந்தம். முதலாளிகளை முன்னிறுத்தும் அரசுகளும், தன்னார்வ நிறுவனங்களும் கூடிக் கும்மியடித்து உருவாக்கிய ஒப்பந்தத்தில் இருந்து, விலகப் போவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருக்கின்றது.

 

தாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை நியாயப்படுத்த, இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தும் என்றும், இதற்கான பொதுநிதியத்துக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாது என்றும் கூறி இருக்கின்றது. உலகச் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை விட, அமெரிக்காவின் நலனே முதன்மையானது என்றும், அமெரிக்காவுக்கு பாரிய கடன்கள் இருப்பதால் ஒப்புக்கொண்ட நிதியை கொடுக்க முடியாது என்றும் கூறியிருக்கின்றது. ஒப்பந்தம் மீள வரைவுசெய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறி இருக்கின்றது.

 

இதை எதிர்த்துள்ள பிற ஏகாதிபத்திய நாடுகள், ஒப்பந்தத்தை மீள வரைதல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று கூறியதுடன், பாரிஸ் உடன்பாடு அமுல்படுத்தப்படும் என்று அறிவித்து இருக்கின்றது. இப்படி ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் புதிய கூட்டுக்களும், புதிய சக்தி உருவாக்குவதன் அடிப்படையில் உலகளாவிய புதிய சந்தைக்கான கட்டமைப்பும் உருவாகி வருகின்றது. அதேநேரம் பிற ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவின் இன்றைய நிலையை முன்னிறுத்தி, தங்களை சுற்றுச்சூழல்வாதிகளாக உலக மக்களுக்கு காட்ட முற்பட்டு இருக்கின்றன. 

அமெரிக்கா விலகியதையடுத்து இந்தப் போலியான சுற்றுச்சூழல் முதலாளித்துவவாதிகள், அரைத்த மாவை மீண்டும் அரைத்துக் காட்ட முற்படுகின்றனர். பாரிஸ் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் 2100 இல் 4.2 செல்சியஸ்க்கு வெப்பம் அதிகரிக்க இருந்த நிலையை, பாரிஸ் உடன்பாடு 3.3 செல்சியஸ்க்கு கட்டுப்படுத்த இருந்ததாக கூறியிருக்கின்றது. இதில் இருந்து அமெரிக்கா விலகுவதால் 3.6 செல்சியஸ்க்கு மாறும் என்று கூறி, தங்களை முற்போக்கான சுற்றுச்சூழல் அணியாக முன்னிறுத்தி, இயற்கையை சூறையாடுவதை தொடருகின்றது.    

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் தர்க்கம்

 

பாரிஸ் உடன்பாடு அமெரிக்காவில் வேலையிழப்பை ஏற்படுத்துவதால் தான், தாங்கள் விலகுவது அவசியம் என்கின்றனர். வெப்பமடையும் வாயுக்களை வெளியேற்றும் எரிசக்தி மீதான தடை  வேலையிழப்பை கொண்டு வரும் என்பது உண்மை. இந்த உண்மைக்காகவா  அமெரிக்காவின் இந்த விலகல் முடிவு எனின் இல்லை. அமெரிக்காவில் வேலை இழந்து வருபவர்கள் இதனாலேயே வேலை இழக்கின்றனர் எனின், இல்லை. மாறாக முதலாளித்துவ முறையாலேயே வேலை இழக்கின்றனர் என்பதுதான் உண்மை. 

உதாரணமாக இலாபத்துக்காக புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்படுவதன் மூலம் அமெரிக்காவில் அன்றாடம் வேலை இழப்பவர்கள் எத்தனை பேர்? இலாபத்தை அதிகரிக்க உழைப்பின் திறனை அதிகரிக்க வைப்பதால் ஏற்படும் வேலை இழப்பு எவ்வளவு? மலிவான கூலியுள்ள பிரதேசங்களுக்கு தொழிற்சாலைகள் மாற்றுவதால் ஏற்படும் வேலை இழப்பு எத்தனை? இப்படி பல நூறு வழிகளில் முதலாளித்துவமானது இலாபத்தை குறிக்கோளாகக் கொண்டு ஏற்படுத்தும் வேலை இழப்பை, அமெரிக்கா தடுக்கவில்லை. முதலாளித்துவ முறை தான் வேலை இழப்பின் அடிப்படையாக இருக்க, செல்வத்தை பகிர்ந்தளிக்கத் தயாரற்ற முதலாளித்துவ முறையிலான பாரிஸ் உடன்படிக்கை உருவாக்கும் வேலை இழப்பு பற்றி பேசுவது, போலியான முதலைக் கண்ணீராகும். 

2020 இல் பாரிஸ் உடன்பாடு 10000 (100 மில்லியாட்) கோடி டொலருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என்பது, பொய்யான பித்தலாட்டமாகும். அந்தப் பணம் பெரும் மூலதனங்கள் உருவாக்கவுள்ள புதிய எரிசக்திக்கான மானியங்கள் முதல் வெப்பநிலை அதகரிப்பால் ஏற்படும் மனித அவலங்களுக்கான நிதி ஆதாரமாகும். வெப்ப அதிகரிப்புக்கு எதிரான, ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கு எதிரான போராட்டங்களை வடிய வைக்கவும், புதிய எரிசக்தி மூலதனத்தை  கொழுக்க வைப்பதற்குமே இந்த நிதியாகும்.

அமெரிக்காவின் கடன் என்பது, போலியான தர்க்கம். கடன் என்பது உலக நிதிமூலதனத்தின் அடிப்படைக் கொள்கை. கடன் கொடுப்பதும் வட்டியை வாங்குவதும் என்பது, எல்லா நாடுகளினதும் சட்டரீதியான அடிப்படைக் கொள்கையாக இருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு .. என்ற பெயரில் கடனைத் திணிப்பது தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கொள்கையும் நடைமுறையுமாகும். இங்கு கடன் என்று பூச்சாண்டித்தனம் செய்து, உலக மக்களை ஏமாற்ற  முனைகின்றனர்.            

  

பாரிஸ் ஒப்பந்தம் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? 

 

முதலில் பாரிஸ் ஒப்பந்தமே ஒரு மோசடி. அதிகரிக்க உள்ள வெப்பநிலையை மட்டுப்படுத்தலே பாரிஸ் ஒப்பந்தத்தின் சாரமாகும். வரைமுறையற்ற இலாபத்துக்காகவே உற்பத்தியும், மிதமிஞ்சிய நுகர்வும் என்ற முதலாளித்துவக் கொள்கையை மாற்றாது, வெப்பநிலையை கட்டுப்படுத்துவது பற்றியதே பாரிஸ் உடன்பாடு.  

இன்று அமெரிக்கா இதில் இருந்து விலகி இருப்பதைக் காட்டி, தாங்கள் மனிதகுலத்தை நேசிக்கும் சுற்றுச்சூழல் வாதியாக இருப்பதாக முதலாளித்துவத்தால் பீற்றிக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக அமெரிக்கப் பெரு மூலதனங்கள், அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்ப்பது என்பது, புதிய எரிசக்திக்கான அமெரிக்கப் பெரு மூலதனங்கள் கிடைக்க இருந்த மானியங்கள் தடைப்பட்டு இருக்கின்ற ஒரு பொதுப் பின்னணியில் வைத்து இதை நோக்கவேண்டும்.

புவி வெப்பமடைவதைப் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள் 1960 இல் விடுத்த எச்சரிக்கை அனைத்தையும், இலாபவெறி முதலாளித்துவம் அடைசியப்படுத்திய வந்தது. 50 வருடம் கழித்து பாரிஸ்சில் கூடிய 21வது சர்வதேச மாநாடு, வெப்பநிலை அதிகரிபால் எற்படும் உலக அழிவைக் குறைப்பது பற்றி எடுத்த பொது அக்கறை மூலம், அழிவுகளின் உண்மைகளை மூடிமறைக்க முனைகின்றனர் என்பதே உண்மை.

இலாபவெறி உற்பத்தியினால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படவுள்ள உலக அழிவு பற்றி, அறிவுபூர்வமாக சூழலியல் விஞ்ஞானிகள் கண்டடைந்துள்ள உண்மை என்பது, 2100 இல் 5 செல்சியஸ்சால் வெப்பம் அதிகரிக்கும் என்பதே. இப்படி உண்மையிருக்க, 5 செல்சியஸ்சுக்கு பதில் 1.5 முதல் 2 பாகை செல்சியஸ்க்குள் வெப்ப அதிகரிப்பை கட்டுப்படுத்துவது என்பது, பாரிசில் கூடிய முதலாளித்துவவாதிகள் செய்த பித்தலாட்டமாகும். இது இன்றைய வெப்பநிலையை 2 பாகையால் குறைப்பதோ அல்லது இருப்பதை பேணுவதோ அல்ல. மாறாக அதிகரிக்கவுள்ள 5 செல்சியஸ்சை 1.5 முதல் 2 செல்சியஸ்க்குள் மட்டுப்படுத்துவதாகும். ஆனால் அதை 3.3 செல்சியஸ்கு கட்டுப்படுத்தவே பாரிஸ் உடன்பாடாகும்.            

இந்த மோசடிகளின் பின்னான உண்மை வெளிப்படையானது. பாரிஸ் ஒப்பந்;தப்படி இருக்கும் உலகளாவிய நிலத் தொடர்கள் 2050 இல் இருக்காது என்பதும், 2100 இல் 2050 இல் இருந்தது கூட எஞ்சாது என்பதை, இந்த மாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது உலகத்தின் இன்றைய எல்லைகள் இருக்காத வண்ணம் கடலில் மூழ்கிவிடும் என்பதும், மனித நுகர்வுக்குரிய விவசாயத்தின் பெரும்பகுதி நிலம் அழிந்துவிடும். அதிகரித்த வெப்பநிலையால் அதிக நிலங்கள் வரட்சியைச் சந்திக்கும் அதே நேரம். வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும். கடல் மட்டத்தின் அளவு அதிகரிக்கும். பல உயிரினங்கள் அழியும். வாழ்வுக்கான மனித யுத்தங்கள் அதிகரிக்கும். 

அதேநேரம் 2050 இல் சனத்தொகையானது 2000 மில்லியனால் (200 கோடியால்) அதிகரிக்கும். புவி வெப்பமடைவதால் மக்கள் நிலத்தை இழந்து அகதியாகும் எதார்த்தமும், தவிர்க்க முடியாத மாபெரும் மனித அவலங்களுக்கு வழியேற்படுத்தும். இப்படி பற்பல தொடர் நிகழ்வுகளுக்கு, முதலாளித்துவத்தில் தீர்வு இருக்காது. இது தான் எதார்த்தமும், உண்மையுமாகும். 

புவியை வெப்பமடைய வைப்பதன் மூலம் அழிவை ஏற்படுத்தும் இந்த முதலாளித்துவத்தை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு என்பதும், அழிவை தவிர்க்க முடியும் என்பதும் மற்றொரு எதார்த்தம். முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக மனிதர்கள் செயற்பட்டாகவேண்டும் என்பதையே இயற்கை கோருகின்றது. வெப்பநிலை அதிகரிப்புக்கு எதிரான முதலாளித்துவம் போலியாக தயாரித்த சுற்றுச்சூழல் பாரிஸ் ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் அடாவடித்தனமான உலக மேலாதிக்கத்தை எதிர்கொண்டு போராட வேண்டும்;. இது தான் இயற்கை மனித குலத்துக்கு இட்டிருக்கும் கட்டளை. இலாபத்தை அடிப்படை நோக்காகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி மற்றும் நுகர்வுக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது அவசியமாகின்றது. இலாபத்துக்கான உற்பத்திக்குக் பதில், தேவையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியையும், தேவையின் பாலான நுகர்வையும், மனிதகுலம் தெரிவு செய்தாக வேண்டும். இதை நிராகரிக்கும், செல்வத்தை குவிப்பதையே நோக்காகக் கொண்ட இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை தகர்ப்பதன் மூலமே, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இது இருக்கும் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு முறையைப் பாதுகாப்பதால் அல்ல, தனியுடமையை தகர்த்து தலைகீழாக்குகின்ற பொதுவுடமையாக்கும்  முயற்சியால் மட்டும்தான் சாத்தியம்.