Sat05152021

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் மனித அவலங்களும் - துயரங்களும் - பகிர்வுகளும்

யுத்தத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், யுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சூழலில் மரணித்தவர்களின் இரத்த உறவுகளும், சரணடைந்ததால் காணமலாகப்பட்டவர்களின் உறவினர்களும் இன்று வரை தாங்கள் கண்ட உண்மைகளையும், அதனாலான மனித உணர்வுகளையும் சொல்லி அழ முடியாதவர்களாகவே இன்னமும் வாழ்கின்றனர். யுத்தத்தின் பின்னான தொடர் இனவாத (அரசு –புலி) அரசியலானது, பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தன் மூலம், மனிதத்தை தூக்கில் ற்றியது  

இதன்பின் வந்த முகமாற்ற நல்லாட்சியும் - கூட்டமைப்பும் சேர்ந்து, முள்ளிவாய்க்கால் துயரங்களை சமூக உணர்வற்ற வெறும் சடங்காக மாற்றியிருக்கின்றன. நடந்தவற்றுக்கு பொறுப்புக் கூறாத, போலி அஞ்சலிகளை அரங்கேற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை இதற்காக குற்றம் சாட்டவும், அதில் குற்றவாளியாக முன்னிறுத்தும் அழியாத நினைவுகளுடனேயே, தமது துயரங்களுடன் கூனிக் குறுகிப் போகின்றனர். காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தம் உறவுகளுக்கு என்ன நடத்தது என்ற விசாரணையைக் கோரி நிற்பது போல், முள்ளிவாய்க்காலில் நடத்தது குறித்தான வெளிப்படையான விசாரணையே, உண்மையான அஞ்சாலியாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு மாறாக இனவாதிகள் மனித துயரத்தை தனிமனித புலம்பலாக மாற்றி, அதை முள்ளிவாய்க்கால் நினைவாக்க முனைகின்றனர். சமூக உணர்வற்ற இனவாத அரசியல் போலித்தனமானது, எப்படி உண்மையான அஞ்சலியாகிவிடும்? தமிழ் - சிங்கள என்ற இரு இனவாதிகளின் யுத்தவெறிக்கு பலியானவர்களே இந்த மக்கள். அந்த துயரங்களை மக்கள் சுமந்து நிற்க, சமூத்தை இனவாதம் மூலம் பிளந்து வைத்துக் கொண்டு போலியான அஞ்சலி அரசியல் நடத்துகின்றனர்.       

ஏன் எதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாது உயிர் இழந்தவர்களும், இது தான் மானிட விடுதலைக்கான போராட்டம் என்று நம்பி பலியானவர்களும், சாரணடைந்ததால் காணமலாக்கப்பட்டவர்களும்... இப்படி ஆயிரம் விதமான மனித அவலங்களை தமக்குள் சுமந்தபடியே, தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இன்னமும் சமூகம், நடந்ததைச் சொல்லியழ உரிமையற்றுக் கிடக்கின்றது. இது தான் முள்ளிவாய்க்கால் பின்னான மனித துயரம்.  

உணர்வு பூர்வமான நினைவுகளுடன் துயரத்தில் பங்கெடுப்பது என்பது, சமூக உணர்வுள்ளவராக வாழ்வதேயாகும். சமூக உணர்வு என்பது மனிதத்தை நேசிக்கின்ற, சமூக மனபான்மையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய நோக்களுக்கு அப்பாற்பட்டது. இப்படி சமூக உணர்வற்ற இனவாத கண்ணோட்த்தில் அஞ்சலி என்பது, நடந்த உண்மைகளை மூடிமறைக்கும் போலித்தனங்களானது. தமிழ் மக்களின் அகமுரண்பாடுகளை களைய மறுக்கின்ற அஞ்சலி என்பது, சாதிய - ஆணாதிக்க – பிரதேசவாத.. மேலான்மையிலான குறுகிய வக்கிரத்தைக் கொண்டது. ஐ.நாவை, அமெரிக்காவை, இந்தியாவை முன்னிறுத்திய படியான  அஞ்சலிகளானது, கொலைகாரனுடன் சேர்ந்து கூலிக்கு மாரடிப்பதே. யுத்தத்தை நடத்தியவர்கள், முள்ளிவாய்க்கால் அவலங்களை, தங்கள் இனவாத அரசியலுக்கு ஏற்ப தொடர்ந்து நடத்த முனைகின்றனர். 

இந்த வகையில் 2009இல் பிணத்தை வைத்து முன்னெடுத்த அதே இனவாத அரசியல் தான், இன்று அஞ்சாலியாக்கின்றனர். 2009இல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட யுத்த பயணத்தின் முடிவு தான் முள்ளிவாய்க்கால். யுத்தத்தை நடத்தியவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்ப, பலியெடுக்கவும் பலி கொடுக்கவும் செய்தனர்.  

இனவாதத்தை அரசியலாக்கும் கூட்டமைப்பாகட்டும், ஒடுக்கப்பட்ட தமிழருக்கு ஐ.நா தீர்வு தரும் என்று கூறும் புலம்பெயர் புலிகளாகட்டும் யுத்த காலத்தில் பிணத்தைக் காட்டியது போன்று, இன்று நடந்த மனித அவலத்தை தங்கள் அரசியலாக்கின்றனர்.    

அன்று அமெரிக்கா தலையிட்டு தங்களை மீட்கும் என்ற அரசியல் அடிப்படையில், வகை தொகையின்றி தமிழ் மக்களின் பிணங்கள் தேவைப்பட்டது. அந்த அரசியலுக்காக மக்களை பலியிடப்பட்டார்கள். இந்த பலியிடலுக்கு உடன்பட மறுத்து தப்பியோடிவர்களை கொன்றார்கள், இந்த பலிகொடுக்கும் அரசியல் உண்மை தான், பலியெடுக்கும் பேரினவாத அரச இயந்திரத்தின் கொலை வெறியாட்டமாக நடந்தேறியது. இந்த உண்மையை மூடிமறைக்கும் இனவாதிகள், இதுவல்லாத போலி அஞ்சலிகளையே அரங்கேற்றுகின்றனர்.   

துயரங்களை சுமந்து நிற்கும் மக்கள் முன்னுள்ள கேள்வி, ஏன் இந்த அவலம் தமக்கு நடத்தது? இந்த நிகழ்வு உருவாவதற்கான அரசியல் என்ன? இந்த அவலத்தின் பின்னான சர்வதேச தலையீடுகள் என்ன? இப்படி மக்கள் கேள்வி எழுப்ப முடியாத வண்ணம், முள்ளிவாய்க்கால் நினைவுகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. இனவாத அரசியலை கேள்விக்குள்ளாக்கும் சமூக  கண்ணோட்டம் கொண்ட அஞ்சலிகளே, மனித துயரத்தை ஆற்றும். யுத்தம் ஏற்படுத்திய மனநோய்களில் இருந்து மனிதத்தை விடுவிக்கும். இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்டு, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.