Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பேராதனை பல்கலைக்கழக வன்முறையும் - இனவாதமும்

"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்" என்பார்கள். இனத்தை முதன்மையாகக் கொண்ட சிந்தனை முறை, எல்லாவற்றையும் இனவாதமாகத்தான் அணுகும்;. அடித்தவன், அடிவாங்கியவன் எந்த இனம் - மதம் - சாதி ..என்று தேடி, அதையே காரணமாகக் கற்பித்து விடுவதன் மூலம், மக்களை பிளந்து குளிர்காய்வதென்பது ஊடகம் முதல் அரசியல் வரையான பிழைப்பாகி விடுகின்றது.

மனித பிறப்புடன் இணையும் இனம் மத அடையாளத்தை மனிதனுக்கு பொருத்தி – அதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை, மதவாதத்தை முன்வைக்கின்ற சிந்தனை முறையென்பது, பிறப்பை முன்னிறுத்தி சாதிய வழி வாழ்க்கையிலான சிந்தனை முறையின் பொது வெளிப்பாடாகும்.

பேராதனை பல்கலைக்கழக வன்முறையை செய்தியாக தமிழில் கொண்டு வந்த இனவாதப் பன்னாடைகள் (கள்ளை வடிய விட்டுவிட்டு கழிவை வடித்தெடுக்கும் பன்னாடை போல்), "பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து வழி மறித்த 2ம் வருட சிங்கள மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்." இந்த செய்தி மூலம் தமிழ் இனவாதத்தையும் - இந்துத்துவத்தையும் இணைத்து முன்வைத்து, தமிழ் மக்களை மோசடி செய்து எமாற்றியுள்ளனர்.

தமிழன் என்பதலா தாக்குதல் நடந்தது? கோயில் கும்பிட்டதால் தான் தாக்குதல் நடந்தது? இல்லை என்பதே உண்மை. நடந்த வன்முறைக்கான காரண காரியத்தை தேடி அதை முன்வைப்பதை விடுத்து, நடந்ததுக்கு இனவாதம் மதவாதம் சாயம் பூசி - செய்திகளை திரித்து புரட்டி முன்வைப்பது எந்த வகையில் நேர்மையானது? அறிவானது!? யாருக்காக? எதற்காக? திரித்துப் புரட்டி, கைக் கூலித்தன பிரச்சாரத்தை செய்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மேல் தமிழ் மாணவர்கள் இனவாதத் தாக்குதலை நடந்திய போது, இதே ஊடகங்கள் சிங்களவர்கள் தமிழரைத் தாக்கியதாக செய்திகளை திரித்து வெளியிட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்தி, தமிழ் இனவாதத்தை எதிர்த்து சர்வதேசியவாதியாக அம்பலப்படுத்தி கண்டனம் செய்திருந்தோம். இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்ததை நாங்கள் கண்டிக்கவில்லை என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டி, ஒடுக்கும் இனவாதத்துக்கு ஆதாரவாக செற்படுவதான ஓரு போலி விம்பத்தை எமக்கு உருவாக்க தீவிரமாக முனைகின்றனர்.

உதாரணமாக "யாழ் பல்கலைக்கழகத் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது நிகழும் தாக்குதல்களுக்கு வழங்கப்படாமலிருப்பது தெளிவான இனவாதக் கண்ணோட்டமேயாகும்" என்கின்றனர். நடந்த வன்முறையை ஒடுக்கும் இனத்தின் இனவாதமாகவும், அந்த இனவாதத்தை மூடிமறைத்தான குற்றச்சாட்டானது, நடந்த உண்மைகளை இனவாதமாக காட்டி திரிப்பதாகும்;. நடந்த வன்முறை இனவாதமாக திரித்து, அதற்கு இனவாத சாயம் பூசுவுவது தான், இங்கு இனவாதமாக இருக்கின்றது.

அதாவது இனவாதம் அல்லாத ஓன்றை இனவாதமாக காட்டுவது திரிப்பதுமே, இங்கு இனவாதமாக இருக்கின்றது. பேராதனை பல்கலைக்கழக சம்பவத்தை இனவாதமாக இருப்பதையும், இனவாதமாக்கவும் விரும்புகின்றனர். உதாரணமாக இது இனவாதமாக இருந்து இருந்தால் கூட, இனவாதத்தை எரிய விட்டு பிழைக்க விரும்பவதையே இந்த இனவாத அணுகுமுறை அம்பலமாக்கின்றது.

வன்முறைக்கு உள்ளனவர்களின் இனம், மதம் காரணமாக தாக்குதல் நடக்கவில்லை என்பதே உண்மை. இங்கு இன ரீதியாக பார்த்தால் தமிழ் மாணவர்கள் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. முஸ்லிம் மாணவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். தாக்கியவர்களில் சிங்கள மாணவர்கள் மட்டும் இருக்கவில்லை, முஸ்லிம் மாணவர்களும் இருந்தாக தகவல்கள் வெளி வருகின்றது.

உண்மைகள் பல இப்படி இருக்க இனவாத மதவாத பூதக் கண்ணடி கொண்டு ஆராயும் யாழ் மேலாதிக்க சாதிய சிந்தனை முறை, மக்களை பிளந்து குளிர் காய்வதையே அரசியலாகவும், ஊடகவியலாக தேர்ந்தெடுகின்றது.

இனவாதம் வன்முறையில் மட்டுமல்ல, சிந்தனை முறையிலும் இருக்கின்றது. ஒடுக்கும் இனத்தில் மட்டும் இனவாதம் இருப்பதில்லை, ஒடுக்கப்படுகின்ற இனத்திலும் இனவாதம் இருக்கின்றது. தன்னை இனம் - மதம் - சாதி - பால் - நிறம் மூலம் உணருகின்ற மனிதனின் வாழ்க்கை முறையென்பது, மனிதத் தன்மைக்கே எதிரானது. அது இங்கு இனவாதமாக மதவாதமாக கொப்பளிக்கின்றது. இதற்கு பின்னால் யாழ் மையவாத சாதிய சிந்தனை முறையிலான தமிழினவாதம் இயங்குகின்றது.