Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"சிங்கள மாணவர்களின் காதல் கலாச்சாரத்தின்" விளைவா! வன்முறை!?

வலம்புரி பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் பல்கலைக்கழக வன்முறைக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வில் "யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் காதல் கலாச்சாரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே நியாயமும் தர்மமுமாகும்." என்கின்றது. இங்கு வன்முறை மூலமும், தமிழரின் பெயரில் வலம்புரி கோரும் "தர்மமும்", "நியாயமும்", யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் காதலிக்கக் கூடாது, தட்டு தடுமாறி தமிழரை காதலிப்பதை எண்ணியும் பார்க்கக் கூடாது. அதாவது தமிழ் மக்களின் சாதிக் கலாச்சாரத்தை சிங்கள மாணவர்களின் வாழ்க்கைமுறை மீறுவது தான் பிரச்சனை, ஆகவே "மாணவர்களுக்கு ஒழுக்கக் கோவை" உருவாக்குமாறு கோருகின்றது. 

 

வலம்புரி முன்வைக்கும் ஒழுக்கக் கோவையில் "சிங்கள மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் க.பொ.த உயர்தரத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் காதல் வலைக்குள் நிச்சயம் வீழ்ந்து விடுவர்" என்கின்றது. இங்கு "நிச்சயம்" என்ற கூறுகின்ற அதன் சொந்த மதிப்பீடுகள் குறித்தும், அதன் கண்டுபிடிப்புகளும் கேலிக்குரியதானதும் அறிவுக்குப் புறம்பானதுமாகும். அதேநேரம் "காதலை" இங்கு ஒழுக்கக்கேடாக வருணிக்கின்ற அளவுக்கு, பழமைவாத யாழ் சிந்தனையிலான சாதிய ஆணாதிக்க வக்கிரத்தை ஓழுக்க கோவையாக்குமாறு கோருகின்றது. 

இங்கு சிங்கள மாணவர்களுக்கான ஓழுக்கக்கோவையை முன்மொழிவதன் மூலம், தமிழ் மாணவர்களுக்கு இது மறைமுகமான ஓழுக்கக்கோவையாகிறது. அண்மையில் யாழ் கலைப்பீடமானது முன்வைத்து அம்பலப்பட்டு அமுல்படுத்த முடியாது போனதையே, சிங்கள மாணவர்களின் மீதான வன்முறை மூலம் இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தில் கொண்டு வர முனைகின்றது.   

தமிழ் இனவாத முதலாளித்துவவாதிகளின் அச்சம், தமிழ் மாணவர்கள் இனம் மதம் மொழி கடந்து இணைந்து விடுவார்களோ என்ற பயம் இயல்பாகி இருக்கின்றது.    

யாழ் விஞ்ஞானபீடத்தின் ஆங்கில வழிக் கல்வியால், தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு மொழித் தடை பெரிதாக இருப்பதில்லை. இது அவர்களுக்கு இடையிலான உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. இது போன்று, கலைப்பீடத்தில் ஏற்படுவதற்குரிய சூழல் இல்லை. மனிதர்களைப் புரிந்து கொள்வதில், பிரச்சனையைப் புரிந்து கொள்வதில் மொழியும் ஒரு தடையாக இருப்பதினால், விஞ்ஞான பீடத்தில் நடக்கும் இணைவை பொதுப்புத்தி எதிராகப் பார்க்கின்றது.

மாணவர்களின் ஒன்றிணைந்த வளர்ச்சி மற்றும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுகின்றது. அண்மைக் காலமாக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியில் ஆங்கில வழிக் கல்வி, மொழி கடந்த மனித உறவுகளாக பரிணமித்ததுடன் அரசின் தனியார்மய கல்விக்கு எதிரான போராட்டமாகவும் மாறியது. இந்தச் சூழலைத் தடுக்க, தனியார்மயத்தை ஆதரிக்கும் தமிழ் - சிங்கள சக்திகளின் கூட்டுச் சதியிலான கூத்து தான் இனவாதமாகும். 

இந்த மனித உறவானது மொழி கடந்த காதல் திருமணங்கள் வரை செல்லுகின்ற புதிய சூழலையும் தோற்றுவிக்கும். இதைத் தடுக்கவே, யாழ் மையவாத ஒடுக்கும் சாதிக் கலாச்சாரத்தை இனவாதத்தின் ஊடாக அமுல் செய்ய முனைகின்றது.         

ஒடுக்கப்பட்ட தேசியவிடுதலைப் போராட்டமானது இனவாதப் போராட்டமாக மாறி அழிந்த போன சூழலில், இன்று வடக்கில் சாதி ஆணாதிக்க இனவாதக் கலாச்சாரப் போராட்டமாக மாறி நிற்கின்றது. இந்த பின்னணியில் கிராமங்களில் சாதியம் முனைப்புப் பெற்று வருகின்றது. இதைத்தான் வலம்புரி கோருகின்றது.  அண்மையில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஆசிரியர் மற்றும் மாணவ சங்கம் பெண்களின் உடை மற்றும் ஓழுக்கம் குறித்து முன்வைத்த சர்ச்;சைக்குரிய ஆணாதிக்க சாதி கட்டளைகளை பின்னணியில் வைத்து, நடந்துமுடிந்த வன்முறையைக் காண முடியும். 

காதல் செய்வது ஒழுக்கக்கேடாகவும், அதை சிங்கள இனத்தின் இழி பண்பாடாகவும் காட்டுகின்ற தமிழினவாதப் பின்னணியில், இரண்டு பேர் காதல் செய்வதற்கான ஜனநாயக உரிமையை தமிழ் மக்களுக்கு மறுக்கின்றது என்பதே உண்மை. ஜனநாயகம் என்பது சிங்களப் பண்பாடாகவும், ஜனநாயகத்தை மறுப்பதை மூடிமறைக்க இனவாதமும் பயன்படுத்தப்படுகின்றது.              

வலம்புரி தன் ஒழுக்கக்கோவையில் தொடர்ந்து கூறுகின்றது "மாணவர்கள் தமது காதலியை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வது, வீதியில் செல்லும் போது ஒருவரை ஓருவர் தழுவிச் செல்வது எல்லாம் அவர்களிடையே சகசமானது. இது சிங்கள பிரதேசங்களில் சர்வசாதாரணமானது. ஆனால் தமிழ் மக்கள் அவற்றை அருவருப்போடு பார்ப்பது வழமை" என்று கூறி, இது வெறுக்கக்தக்க செயலாக வருணித்து, தனது அருவருப்பை வெளிப்படுத்துகின்றது. இதனால் தான், இதற்கு எதிராக வன்முறை நடத்தினோம் என்று மறைமுகமாக கூறுகின்ற அளவுக்கு, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மொட்டையடித்து விட முனைகின்றனர். 

நாங்கள் மேலோட்டமாக பார்த்தால் இனவாத வன்முறையாய் தெரிகின்ற இதன் உட்சாரமானது யாழ் சாதிய கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான வன்முறை. தமிழ் பெண்களின் ஜனநாயக நடத்தைகளை கட்டுப்படுத்த நடத்திய வன்முறை. வலம்புரி ஆசிரியர் தலையங்கங்கள் இதைத்தான் ஒழுக்கக்கோவையாக கொண்டு வருமாறு கோருகின்றது. தமிழ் மாணவி சிங்கள மாணவனை  காதலித்தால், யாழ் பண்பாட்டை மீறுகின்ற சிங்கள மேலாதிக்கத்தின் செயலாக காட்ட முற்படுகின்றது.  

ஆயுதப் போராட்டம் நீடித்த வரை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்த இனவாதமானது, இன்று காதல் செய்கின்ற சுதந்திரத்தை தமிழ் மக்களுக்கு மறுக்கத் தொடங்கி இருக்கின்றது. யாழ் மையவாத சாதியை முன்னிறுத்தியுள்ள இன்றைய பின்னணியில், சாதியைக் கடந்த திருமணங்களை தடுக்க, பெண்களுக்கு கலாச்சாரத்தின் பெயரில் சாதிய ஆணாதிக்க நடைமுறை ஒன்றை கலாச்சாரத்தின் பெயரில் திணிக்க முனைகின்றது.      

தொடர்ந்து வலம்புரி ".. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற சிங்கள மாணவர்கள் தமது காதலிகளான சிங்கள மாணவிகளை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும்போது அதன் தாக்கம் தமிழ் பண்பாட்டில் மிகப்பெரிய எதிர்வினைகளை ஏற்படுத்தும் .." ஆக இதை தடைசெய்யவேண்டும். இதைக் கைவிட வேண்டும் என கூறுகிறது.

அதாவது சிங்கள மாணவ மாணவிகள் காதலிக்கக் கூடாது, காதலியை சைக்கிளில் ஏற்றிச் செல்லக் கூடாது. கொஞ்சக் கூடாது. இவை எல்லாம் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. யாழ் கலாச்சார மையவாதம்; இதை, "சிங்கள" திணிப்பு என்றும், தமிழ் பண்பாட்டை அழிக்கும் சிங்கள இனத்தின் செயற்பாடாகவும் காட்டுகின்றது. 

ஆனால் இவை அனைத்தும் மனிதனின் ஜனநாயக பண்பாட்டுக் கூறுகள். இது சிங்கள பண்பாடல்ல, உலக மக்களின் ஜனநாயக பண்பாடாகும்;. ஐ.நாவரை காவடியெடுக்கும் மரமண்டைகளுக்கு புரிந்தும், புரியாத ஜனநாயகமாகும்.   

யாழ் (தமிழ்) பண்பாடு கலாச்சாரம் என்று முன்வைப்பது, சாதி ஆணாதிக்க மேட்டுக்குடித்தனத்தைத்தான். தமிழனின் ஆதிப் பண்பாடான பறைமேளத்தையோ, உடுக்கையையோ அங்கீகரிப்பதுமில்லை, பொது இடத்தில் அனுமதிப்பதுமில்லை. தமிழனின் உண்மைப் பண்பாட்டை ஒடுக்கப்பட்ட சாதிகளின் சாதிப் பண்பாடாக்கிவிட்டு, சாதிக்கொரு பண்பாட்டை வைத்துக்கொண்டு, ஒடுக்கும் தமிழரின் சாதிப் பண்பாட்டை தமிழர் பண்பாடு என்று கூறுகின்றதைத் தாண்டி, தமிழ்ப் பண்பாட்டுக்கு விளக்கம் கிடையாது.

ஆதிக்கப் பண்பாடு பெண்ணை ஆணின் அடிமையாகக் கருதுகின்றது. தன் சாதிக்குள் திருமணம் என்ற, சாதிய அமைப்பை முன்வைக்கின்றது. இந்த வகையில் மிகப் பின்தங்கிய யாழ் மையவாத சிந்தனையானது, ஒரு ஆண் பெண்ணைக் காதலிப்பதை எதிர்க்கின்றது. ஆண் பெண் சேர்ந்து பழகுவதை எதிர்க்கின்றது. இதை "சிங்கள" அடையாளமாக, "சிங்கள" பண்பாடு எனக் காட்டி, தமிழர்களுக்கு ஜனநாயக உரிமையை மறுக்கின்றது.

மனிதர்களின் உறவுகள் சம்மந்தப்பட்ட, ஜனநாயகம் சம்மந்தப்பட்ட இந்த அடிப்படை உரி;மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவோ, பெற்று விடவோ கூடாது என்பதால், அதை சிங்கள மேலாதிக்கமாகக் காட்டி மாணவர்கள் மத்தியில் விதைத்து, வன்முறை மூலம் அறுவடை செய்ய முனைகின்றனர்.                

சிங்கள மாணவிகள் உடைகள் குறித்து கூட, யாழ் கலாச்சாரத்தின் பெயரில் வன்மத்தை வெளிப்படுத்துவதை காண முடியும்;. மலிவு, வசதி, பாதுகாப்பு கருதி பெரும்பாலும் நவீன பெண்கள் காற்சட்டையை (ஜீன்ஸ்) போடுவதை, யாழ் ஆணாதிக்கம் ஒழுக்கக்கேடாக கருதுகின்றது, காட்டுகின்றது. தங்கள் பெண்கள் ஆண்கள் போல் காற்சட்டை அணியக் கூடாது என்ற பழமைவாத சீலைச் சிந்தனையைப் பாதுகாக்க, காற்சட்டையை சிங்களத் திணிப்பாக மாற்றி, காற்சட்டைக்கு கூட இனவாதத்தை பூசிவிடுகின்றனர். 

வலம்புரி ஆணாதிக்க வக்கிரமான "மாணவர்கள் எப்படியும் விரிவுரைக்கு வரலாம். எந்த ஆடையும் அணியலாம். ஆண் மாணவர்கள் குடும்பி வைத்திருக்கலாம் என்றெல்லாம் இருந்தால் … அறிவுசார்ந்த உயர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது" என்று, ஆசிரியர் மாணவர் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மாணவர்களுக்கு அமுல் செய்யக் கோருகின்றது. "தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான - இழுக்கான – தமிழ் மக்கள் விரும்பாத கலாச்சாரங்களை அடியோடு நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்;" என்கின்றது. 

தமிழ் இனத்தின் பெயரிலான வன்முறை மூலம் தனது சாதி ஆணாதிக்க கலாச்சாரத்தை நியாயப்படுத்தி, ஜனநாயக பண்பாடுகள் தமிழர் மத்தியில் உருவாவதை தடுக்க வேண்டும் என்பதே, இந்த வன்முறை மூலம் முன்வைக்கும் வலம்புரிச் செய்தி.

இது வலம்புரி என்ற பத்திரிகையின் கோரிக்கை மட்டுமல்ல, வன்முறையை ஆதரித்து நிற்;கும் அனைத்து தரப்பினரதும் கோரிக்கையும் சிந்தனைமுறையுமாகும். இனவாதத்துக்கு எதிராக மட்டுமல்ல, சாதிய கலாச்சாரமே இனவாதமாகி வருகின்ற புதிய சூழலை எதிர்கொண்டு போராட வேண்டி இருக்கின்றது என்பதே உண்மை.