Sun05312020

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் சட்டங்கள் மக்களுக்கானவை அல்ல - நீதிமன்றங்கள் சுதந்திரமானவை அல்ல!!!

"குமார் குணரத்தினத்தினம் குடிவரவு சட்டத்தை மீறியதற்கான சட்ட ரீதியான தண்டனை இது" - இப்படித் தான் சுரண்டும் வர்க்க கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது. குமாரின் வர்க்க அரசியலைக் கண்டு அஞ்சும் இடதுசாரிய பிழைப்புவாதிகளின் தர்க்கமும் இது தான்.

இது சட்டத்தை புனிதமாக முன்னிறுத்தி - முதலாளித்துவ நீதியை துதிபாடும், சுரண்டும் வர்க்கச் சிந்தனை முறை இது.

அரசியல் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் மீள நாட்டிற்கு வருவதை தங்கள் "நல்லாட்சியில்" உறுதி செய்வோம் என்று கூறியவர்கள் - தேர்தலை வென்றபின் நாடு திரும்புமாறு சட்டரீதியான அரசியல் உத்தரவாதமின்றி சடங்குக்காக கூறியவர்கள் - நாடு திரும்பியவர்களை சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டனர் என கூறி சிறையில் தள்ளி இருக்கின்றது. தேர்தலை வெல்வதற்காக மேற்குறித்த கோசம் பயன்படுத்தபட்டது என்பதே உண்மையாகி இருக்கின்றது.

சட்டத்தை முன்னிறுத்தி, கொடுத்த உறுதி மொழிக்கு எதிராக செயற்படும் இந்த "நல்லாட்சி" அரசு; கடந்த அரசு வழங்கிய பிரஜாவுரிமைகள் குறித்து கூறும் போது, அவை கொள்கை அடிப்படையில் அல்லாது அரசியல் நோக்குடன் பக்க சார்பாக வழங்கியதாகக் கூறியது. இந்த வகையில் கடந்த அரசு வழங்கிய பிரஜாவுரிமைகளை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் இந்த அரசால் குமாருக்கு பிரஜாவுரிமையை மறுத்துள்ளமை அரசியல் நோக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது இன்று வெளிப்படையான பொது உண்மையாகும்.

பிரஜாவுரிமையை தனது அரசியல் - வர்க்க நோக்கத்திற்காக பயன்படுத்தும் அரசு, தங்கள் வர்க்க நலனின் தேவை கருதி இலங்கை மத்திய வங்கி தலைவராக சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரனை நியமனம் செய்வதற்க்காக ஒரே நாளில் பிரஜாவுரிமையை வழங்கியிருந்தது. பல நூறு பாஸ்போட்களுடன் உலகெங்கும் சட்டவிரோத மாபியவாகத் திரிந்த கே.பி  இன்று அரசின் பாதுகாப்பு பெறும் கௌவுரப் பிரஜை.
 
இந்த பின்னனியில் வர்க்க மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட சட்டங்கள் மூலம், உழைக்கும் வர்க்க தலைவர்கள் தண்டிக்கப்படுவது தொடருகின்றது.

இந்த "நல்லாட்சியில்" சட்டம் - நீதி - ஜனநாயகம், அனைத்தும் குடிமக்களுக்கு உண்மையாகவும் - நேர்மையாகவும் கிடைக்கின்றதா? அதாவது சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றதா?

குமாரை சட்ட விரோத ராணுவத்தின் துணையுடன் இரகசியமாகக் கடத்தி ,அவரை கொல்ல முனைந்த அரசு - அவரை நாங்கள் கடத்தவில்லை என்று சொன்ன அரசு, இன்று சட்டப் படி அதை விசாரனை செய்யாது  மௌனமாக இருக்கிறது.

அண்மையில் கோத்தபாய, குமாரை சட்டவிரோதமாகக் கடத்தி அழிக்குமாறு தன்னிடம்  ஜே.வி.பி கோரியதாகக் கூறிய பின்பும், இந்த நாட்டின் நீதிமன்றங்களும் - சட்டமும் அதை விசாரணை செய்யாதது ஏன்?

இங்கு சட்டமும்,  நீதியும் பக்க சார்பானவை - உள் நோக்கம் கொண்டன என்பதே உண்மை. அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடங்கி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வரை இனவாதக் கொள்கையையினையே அமூல் செய்யும் அரசின் சட்டம் - நீதி குறித்து, இங்கு மீணடும் அதன் போலித்தனத்தையே வரலாற்று ரீதியாக இனம் காண முடியும்;.

யுத்தத்தின் பின் வடகிழக்கில் சிவில் சட்ட நடைமுறையை மறுத்த அரச பயங்கரவாதம் முதல் நாட்டின் பாரிய ஊழல்கள் வரை, நீதி விசாரணை இன்றி கிடப்பில் போடப்பட்டு இருப்பதும் தங்கள் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப அதனை பயன்படுத்துவதுமே தொடருகின்றது.

இங்கு குமாருக்கு எதிரான சட்டம் - நீதித்துறை என்பன போலியானவையும், புரட்டுத்தனமானவை மட்டுமின்றி,  வர்க்க - அரசியல் நோக்கம் கொண்டதுமாகும்.                        

கடந்தகால யுத்தம் - அதன் விளைவுகளால் நாட்டைவிட்டு வெளியேறி வேறுநாடுகளின்    அரசியல் புகலிடம் பெற்றவர்கள் - தொடர்ந்து உழைக்கும் வர்க்க அரசியலைக் முன்னெடுத்து செயற்படுபவர்களுக்கு பிராஜாவுரிமை மறுப்பும் - முதலாளித்துவ சட்டத்தை மீறும் போது சிறை என்பதுவுமே அரசின் கொள்கையாகும்.

இது ஜனநாயகம் குறித்த கேள்வியாக, அரசியல் குறித்து விவாதமாக, அரசியல்  போராட்டமாக மாறுகின்றது.
   
சுரண்டும் வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கத்தான் இந்த சட்டம், நீதி, ஜனநாயகம் என்பவை. அவை உழைக்கும் வர்க்கத்தினருக்கல்ல என்பதே  நாட்டில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமை மறுத்து வழங்கும் தண்டனை எடுத்துக் காட்டுகின்றது. .   

இன்றைய முதலாளித்துவ ஆட்சிகளில் சட்டங்கள் மக்களுக்கானதல்ல, நீதிமன்றங்கள் சுதந்திரமானவை அல்ல. அவை ஆளும் வர்க்க நலன்களை பாதுகாக்கும் இயந்திரங்கள். இலங்கையில் கூடவே இனவாதத் தன்மையும் இணைத்துக்  கொண்டுள்ளது சட்டம்.

இதுதான் இந்த நாட்டின் கடந்தகால நடைமுறை மட்டுமல்ல அரசின் எதிர்கால கொள்கையும் கூட. இதைத்தான் குமாருக்கான சிறைத்தண்டனை பறைசாற்றி நிற்கின்றது. இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரள்வதை தவிர  வேறு வழியில் ஜனநாயகத்தை நாட்டில் நிலைநிறுத்த முடியாது என்பதைத்தான் குமாரின் சிறைத் தண்டனை  மீண்டும் ஒருமுறை வரலாற்று ரீதியாக உறுதி செய்கின்றது.