Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்ணின் உடல் குறித்து - இரு வேறு ஆணாதிக்க வக்கிரங்கள்

இந்தியாவில் பீப்பாடல் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்கி குதறுவது ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடாகவும், இலங்கையில் கலாச்சாரக் கண்ணாடி மூலம் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நுகர்வது நிலப்பிரபுத்துவ பண்பாடாகவும் வெளிப்பட்டது. இவ்விரண்டும் பெண்ணை மனிதனாக அங்கீகரிக்காத, பெண்ணை நுகர்வுக்குரிய பாலியல் பொருளாக அணுகுகின்ற இரு வேறு உதாரணங்களாகும். இரண்டுக்கும் ஆணாதிக்க நுகர்வே அச்சாணியாக இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் பெண்களை பாலியல் பொருளாக அணுகும் ஆணாதிக்க குரூரங்களே கலையாக, ஆணாதிக்க ஒழுக்கமாகவும் முன்வைக்கப்பட்டது. மறுபக்கத்தில் ஆணாதிக்க கலாச்சாரக் கண்ணாடி மூலம் அணுகும் ஆணாதிக்க ஒழுக்கத்தை முன்வைத்து பெண்ணை பாலியல் ரீதியாக இழிவாடுகின்றது. இது தான் கலை, இது தான் கருத்துரிமை என்று அங்கீகரிக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பில் வாழ்கின்றோம். இங்கு இவை சூடு சுரணையற்ற மனித உணர்வுகளாக, மன வக்கிரங்களே மனித உறவுகளாகி விடுகின்ற பின்னணியில் இவை அனைத்தும் வெளிவருகின்றது.

இப்படி பெண்களை இழிவுபடுத்தும் இரு வேறுபட்ட ஆணாதிக்க வக்கிரங்களும், அதற்கு எதிரான போராட்டங்களும் ஊடகங்களில் முதன்மை பெற்றது. அதேநேரம் இதை ஆதரித்து இரு வேறுபட்ட சமூக பொருளாதாரம் சார்ந்த ஆணாதிக்க கருத்துகள் வெளிவந்தன. இதன் போது தனிமனித உரிமை, தனிப்பட்டவரின் சுதந்திரம், தனிமனிதன் சார்ந்தது. ஊடகச் சுதந்திரம், கலாச்சாரம், ஒழுக்கம், இல்லாததையா நாங்கள் சொல்லிவிட்டோம்... என்று, பற்பல விதத்தில் நியாயப்படுத்தப்பட்டது.

பெண்ணை பாலியல் பண்டமாக கருதும் கலைப் பொறுக்கிகளின் பீப் பாடல்

சமூகத்தின் மேல் பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தைச் சேர்ந்த வர்க்கத் திமிருடன் பெண்ணை பற்றிய அதன் சொந்த வர்க்க நுகர்வு கண்ணோட்டத்துடன் எந்தவிதமான குற்றவுணர்வுமின்றி பெண்களை பீப்பாடல் மூலம் குதறுகின்றது.

இந்த வர்க்கத்தின் முன் பெண் என்பவள் எப்படிப்பட்டவள்? அவளின் உடல் உறுப்புகள் நுகர்வுக்குரியதாகவும், புணர்வதற்குரியதாகவும் அதேவேளை அவளின் உழைப்பை சுரண்டுவதற்குரியதாகவும் கருதுகின்றது. சமூகத்தின் மேல் உள்ள இந்த வர்க்கத்தின் வக்கிரமான இக் கண்ணோட்டத்தை பீப்பாடல் மூலம் வெளியிட்டு இருகின்றது.

சந்தையில் தனது விளம்பரப் பொருளை பெண் மூலம் சந்தைப்படுத்துகின்ற போது, பெண்ணின் உடல் உறுப்புகள் மூலம் அவளை பாலியல் பண்டமாக்கி நுகர்வுக்குரியதாக காட்டி, அவளின் உடலை ஒத்த பொருளாக காட்டுகின்றது. இதைத்தான் அந்த வர்க்க கலை, அப்பட்டமாக கூறி பெண் என்றால் இது தான் என்று பாடுகின்றது.

அந்த வர்க்கத்தின் கலை பெண்ணை பாலியல் பண்டமாக, காதலை அதற்குரிய வடிகாலாக காட்டுகின்றதன் மூலமே, தமது கலை வியாபாரத்தை நடத்துகின்றனர். பெண் காட்சிப்படுத்தப்படுகின்ற வடிவம் தொடங்கி அதில் பேசப்படும் வசனங்கள் வரை, பெண்ணை பாலியல் மூலம் நுகரக் கோருவதையே கலையாக திரித்து ரசனையாக்கின்றது.

பீப் பாடல் அப்படிப்பட்ட ஒன்றாகவும், அளவு ரீதியில் மேல் நிலை பெற்ற ஒன்றாக மேலெழுந்தது. இந்த பின்னணியில் ஏகாதிபத்திய கலை சார்ந்து தங்கள் வர்க்க நடத்தையைப் பாதுகாக்கின்ற, தர்க்கம் கட்டியெழுப்பப்படுகின்றது. இந்த பின்னணியில் இது

1. பெண் குறித்து தனிப்பட்ட மனிதனின் சுதந்திரமான பார்வை. இதைக் கேள்வி கேட்க முடியாது.

2. தனிமனிதனின் கருத்தை திருடி வெளியிடப்பட்டதால் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிதில்லை. பின்நவீனத்துவ பன்னாடைகள் கூறுவது போல் "படைப்பு படைத்த பின் படைப்பாளி அதற்கு பொறுப்பில்லை" என்ற அதே தர்க்கம்.

3. இது போன்று ஆணாதிக்க பாடல்கள், காட்சிகள் இருக்க; இதை மட்டும் ஏன் பேசுகின்றீர்கள்

4. எங்கள் ஆள் என்று கூறி, சாதி ரீதியாக இதை ஆதரிப்பதும் நியாயப்படுத்துவதும்

இப்படி வர்க்க ரீதியாக மேன்நிலை பெற்ற ஏகாதிபத்திய பண்பாட்டுக் கழிசடைகள், பெண்கள் குறித்த தங்கள் ஆணாதிக்க உரிமையை குறித்து பேசுகின்றது. தனிமனிதனின் கருத்துரிமை பெண்ணை பற்றி எப்படியும் நினைக்கலாம், கருதலாம் என்று தர்க்கிக்கும் அளவுக்கு, பெண் குறித்து எப்படியும் கேவலப்படுத்தும் சமூக அமைப்பு சார்ந்த வர்க்க மேலாண்மையிலான உரிமையை முன்னிறுத்துகின்றது. ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மனதளவில் நினைத்தால் அப்படி எழுதினால், அது குற்றமல்ல என்கின்றது இந்த வர்க்கம். இது தனிமனிதன் தன்னளவில் எண்ணியது, அவனின் தனிமனித உரிமை என்கின்றது.

பெண்ணை பாலியல் ரீதியாக வன்புணர்வுக்கு மனதளவில் உள்ளாக்கியதை குற்றமாக கருதி நெதர்லாந்து நீதிமன்றம் தண்டனை வழங்கிய சம்பவங்கள் வரலாற்றில் உண்டு. பெண்கள் குறித்து மனதளவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்குவதும், அவளை ஆண்களின் பொது வன்முறைக்குள்ளாக்குவதும் தனிப்பட்ட பாடல் மூலம் தன்னளவில் குதறுவதும் அனைத்தும் குற்றமாகும்.

கலாச்சாரக் கண்ணாடி மூலம் தேடும் ஆணாதிக்க ஒழுக்கம் குறித்து

எது கலாச்சாரம்? கலாச்சாரக் கண்ணாடிக்கான சமூக பொருளாதார அடிப்படை என்ன?

சாமர்த்தியச் சடங்கு என்ற பெயரில் பெண்ணின் உடல் வளர்ச்சியில் ஏற்படும் இயற்கை மாற்றத்தை விளம்பரம் செய்து, அதைக் கலாச்சாரம் என்று கூறி கொண்டாடும் சமூகத்தின், பெண் குறித்த கலாச்சாரக் கண்ணாடி பாலியல் வக்கிரத்திலானது. உதாரணம் மூலம் இதை இலகுவாக புரிந்து கொள்ள முனைவோம். இஸ்லாமிய மதக் கலாச்சாரக் கண்ணாடியாகட்டும், முஸ்லீம் மக்களின் கலாச்சாரக் கண்ணாடியாகட்டும், பெண் பர்தாவை அகற்றும் போதே பாலியல் ரீதியாக ஒழுக்கம் கெட்டவளாக கூறி ஒடுக்குகின்ற கேடுகெட்ட ஆணாதிக்க ஒழுக்கக்கேடுகளை இன்று மனித குலம் சந்திக்கின்றது. இதை ஒத்தது தான் "தமிழன்" பெண்ணிடம் கோரும் கலாச்சாரம்.

யாழ்ப்பாணத்து நிலப்பிரபுத்துவ (சாதியம், ஆணாதிக்கம், இனவாதம்..) பண்பாட்டினை பாதுகாக்கும் மேட்டுக்குடிகளின் வக்கிரமாகும். தங்கள் சமூக மேலாதிக்கத்தை தக்கவைக்க கலாச்சார ஒழுக்கவாதிகளாக அவதாரம் போட்டுக் கொண்டு, ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் பெண்னை பாலியல் ரீதியாக "ஒழுக்கம் கெட்டவளாக" காட்டி தங்களைத் தாங்கள் முன்னிலைப்படுத்துகின்றது. பெண்ணின் பாலியல் நடத்தைகள் குறித்து அசிங்கமான வருணனையுடன் எழுதி, தங்களை விளம்பரமாக்கி பிரபலப்படுத்துகின்றது. பெண்ணின் ஒழுக்கம் குறித்து பேசுகின்ற இந்தப் பொறுக்கிகள், ஊடக ஒழுக்கம் குறித்து பேசுவதில்லை.

பெண்ணின், ஆணின் தனிப்பட்ட "நடத்தை" சமூகத்தை பாதிப்பதில்லை. இங்கு நடத்தை எதுவாக இருந்தாலும் அது தனிமனிதனுடன் சம்மந்தப்பட்டது. மாறாக தங்கள் கலாச்சாரக் கண்ணாடி மூலம் பெண்ணின் பாலியலைப் பற்றி கிளுகிளுப்பூட்டும் வண்ணம் எழுதும் ஊடக நடத்தை முழு சமூகத்தையும் வக்கிரமடைய வைக்கின்றது. ஊடகத்தில் ஆணாதிக்க அசிங்கங்களை தேடி மேய்கின்ற பின்னணியில், ஆணாதிக்கத்தை பெண்ணின் ஒழுக்கக்கேடாக காட்டி செய்தியாக்கி விடுகின்ற ஊடக வக்கிரத்தை தாண்டி, தனிப்பட்ட பெண்-ஆண் சமூகத்துக்கு கேடுவிளைவித்து விடமுடியாது. இங்கு அளவுரீதியாக, பண்புரீதியாக வேறுபடுகின்றது.

இங்கு பெண்ணைக் கண்காணிக்கும் ஆணாதிக்க ஒழுக்க கலாச்சாரக் கோட்பாடுகளைக் கொண்டு, பெண்ணின் உரிமை மற்றும் நடத்தையை பற்றி, பாலியல் கிளுகிளுப்பாக மாற்றி பேசுவதையே, தங்கள் ஊடக சுதந்திரமாக ஊடகப் பொறுக்கிகள் முன்வைக்கின்றனர். தங்களது ஆணாதிக்க பாலியல் கண்ணாடி மூலம் பெண்ணை நிர்வாணமாக்க வக்கிரப்படுத்திக் காட்டுவதன் ஊடாக, தங்கள் மாமாத்தனத்தைக் கொண்டு ஊடகங்களை பிரபலப்படுத்துகின்றனர்.

"பண்பாட்டு - கலாச்சார - ஒழுக்க" காவலர்களாக தங்களை காட்டிக் கொள்பவர்கள், இன்றைய ஏகாதிபத்திய - நிலப்பிரபுத்துவ பண்பாட்டிற்கு ஏற்ப பெண்ணை அணுகுகின்றனர். பெண்ணை ஆணின் தனிப்பட்ட பாலியல் சொத்தாக மூடிக் கட்டிய பண்பாட்டுக்கு ஊடாக முன்னிறுத்தி, அவளை தங்களின் "ஒழுக்கக்" கோட்பாட்டுக்கு ஊடாக நிர்வாணமாக்கி ரசிக்கும் வடிவம் தான், இந்த ஆணாதிக்க ஒழுக்கவாதிகளின் நடத்தையாகின்றது. பெண்ணின் பாலியல் நடத்தையை வக்கிரமாக ஊடகங்களில் எழுதுவதும், இதற்கு நடத்தை, பண்பாடு, கலச்சாரம், ஒழுக்கம், சீரழிவு.. என்று விதவிதமாக நியாயப்படுத்தி செய்திகளாக்கும் ஊடகப் பொறுக்கிகள், பெண்ணை பாலியல் ஊடாகவே மற்றவர்களுக்கு காட்சிப்படுத்துகின்றனர். இங்கு இவர்கள் கோரும் ஆணாதிக்க "ஒழுக்கம்" சார்ந்த இவர்களின் ஊடக ஒழுக்கமோ, பெண்ணை பாலியல் நடத்தை பற்றிய கிசுகிசுப்பான வக்கிரமான ஒன்றாக காட்டி காட்சிப்படுத்துவதுதான். பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்ணை ஆணாதிக்க நீதிமன்றங்கள், பெண்ணைக் கொண்டே நடந்ததை கூறவைத்து ரசிக்கின்றதோ அதேயொத்த ஊடக வக்கிரங்களைத் தான் "ஒழுக்கத்தின்" பெயரில் இவர்கள் செய்கின்றனர்.

பெண்ணின் "ஒழுக்கம்" குறித்து ஊடகப் பொறுக்கிகள்

பெண் குறித்து ஊடகங்களும் ஊடகவாதிகளும் ஆணாதிக்க கண்ணோட்டத்திலே அணுகுகின்றனர். இந்த வகையில் ஊடகங்களும், ஊடகவாதிகளும் முதலில் ஆணாதிக்க அமைப்பின் பிரதிநிதியாகவும், அதேநேரம் அவர்கள் பக்க வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். பெண்ணை பாலியல் பொருளாகவும், விளம்பரப் பண்டமாகவுமே ஊடகங்கள் அணுகுகின்றது. ஆளும் வர்க்கத்துக்கு ஏற்ப, சமூகத்தின் ஆணாதிக்க ரசனைக்கு ஏற்ப செய்தியை போடுவதன் மூலமே, தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றனர். தங்கள் "கருத்துரிமை" என்ற பெயரில், தங்கள் சொந்த ஆணாதிக்க வியாபார வக்கிரங்களை சந்தைப்படுத்துகின்றனர்.

உலகமயமாக்கல் பெண்ணை நுகர்வுக்குரிய பண்டமாக முன்னிறுத்தும் அதேநேரம் பெண்ணே தன்னைத் தானே நிர்வாணமாக்கி மற்றவரை ரசிக்க வைப்பது பெண்ணின் சுதந்திரம் என்கின்றது. சந்தைப் பொருளாதாரம் இதைத்தான் "பெண்ணியம்" என்கின்றது. சந்தை பெண்ணின் அணிகலங்களை உற்பத்தி செய்வதில் தொடங்கி, அவள் இப்படித் தான் வாழ வேண்டும் என்பது வரை அனைத்தையும் நுகர்வுக்குரிய ஆணாதிக்க சந்தை தீர்மானிக்கின்றது. ஊடகங்கள் முதல் விளம்பரங்கள் வரை பெண்ணை பாலியல் மூலம் காட்டுவதும், பெண்ணைப் போல் பொருளை நுகரக் கோருகின்றது.

இந்தச் சந்தைப் பண்பாட்டைக் கொண்ட உலகமயமாக்கல் அங்கமாகிவிட்ட சமூக அமைப்பில், நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும் அதன் எச்சங்களையும் தம்முள் கொண்டு வாழ்கின்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ கலாச்சாரக் கண்ணாடி மூலம் பெண்ணின் ஒழுக்கத்தை முன்னிறுத்தி பெண்ணை நிர்வாணமாக்கி ரசிப்பதே நுகர்வாகி விடுகின்றது.

இந்தக் கலாச்சாரம் அரசியலாகி அதிகாரமாக மேலெழும் போது பெண்ணை கொன்று விடுவதும் அதிகாரமற்ற நிலையில் ஒழுக்கமாக கோரும் போது அவர்கள் பார்வையில் "ஒழுக்கக்கேடு" ரசனைக்குரிய பாலியல் பண்டமாகி விடுகின்றது. இங்கு பெண்ணின் பாலியல் நடத்தை பற்றி எழுதியும் பேசியும் மகிழ்கின்றது. ஊடகங்களில் இதை மேய்கின்ற வக்கிரத்தின் பின்னால் ஒழுக்கவாதிகள் நிர்வாணமாக அலைந்தபடி இருப்பதும், தங்களின் ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டின் செய்திக்காக மற்றவர்களைக் கண்காணிக்கின்ற வக்கிரம் ஊடகமாகி இருக்கின்றது.

இன்று ஒழுக்கத்தின் பெயரில் பெண்ணைக் கொல்லும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முதல் அன்றைய புலிகள் வரை, அனைவரும் ஒரே கலாச்சார வகையைச் சேர்ந்த ஆணாதிக்க வாதிகள் தான். மறுபக்கத்தில் பெண்ணின் நடத்தையைப் பற்றி பேசிமகிழ்கின்ற ஆணாதிக்க ரகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

தங்களை முன்னிறுத்தும் "தமிழ்" என்ற அடையாளம் மூலமான ஒழுக்கக் கோட்பாட்டின் பின் இருப்பது, படுபிற்போக்கான சாதியமும், இனவாதமும், பிரதேசவாதமும், ஆணாதிக்கமும் போன்ற ஆளும் வர்க்கத்தின் குறுகிய சிந்தனைதான். சமுதாய விழுமியம் எதுவும் இதன் பின் இருப்பதில்லை என்பதே இதன் குறியீடு. இது ஆணாதிக்க கலாச்சாரத்தின் பின்னால் ஒழித்துக் கொள்கின்றது. ஊடகங்களில் மக்களின் பிரச்சனைக்கு பதில் பாலியல் கிளுகிளுப்புகள் அச்சாகின்ற எதார்த்தம். ஊடகவாதிகள் ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டின் பிரதிநிதிகளாக இருப்பதையே அம்பலமாக்குகின்றது.

இவர்கள் பெண் குறித்து பேசுகின்ற பொருளே, பெண் குறித்த இவர்களின் ஆணாதிக்க ரசனை பற்றியதுதானே ஒழிய சமூகம் குறித்தல்ல. இது சுரண்டும் வர்க்கம் சார்ந்ததாக இது இருக்கின்றது. இதன் கலை தொடங்கி ஊடகவியல் வரை, எங்கும் பெண்கள் குறித்து இதன் பார்வை ஆணாதிக்க தன்மையானது. இந்த வர்க்கம் சார்ந்த ஆணாதிக்கத்தை முறியடிக்காமல் மானிட விடுதலை சாத்தியமில்லை.