Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாசி ஆட்சியை நோக்கி பிரான்ஸ் பயணிக்கின்றதா?

இன, நிற நாசிகள் 1930களில் ஆட்சிக்கு வந்தது போன்று, ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கான சமிக்கைகள் அண்மைக் காலமாக தோன்றி இருக்கின்றது. பிரான்சில் இன, நிற நாசிக் கட்சியான "தேசிய முன்னணி"யானது (Front National ), அதி கூடிய வாக்குகளைப் பெற்று முதன்மையான கட்சியாக மாறியுள்ளது. வேகமான அதன் வளர்ச்சியானது, ஐரோப்பா எங்கும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ஏகாதிபத்திய நாடுகளில் இனவாதமும், நிறவாதமும் தூண்டப்பட்டு வரும் இன்றைய சூழலில் அதிகாரத்தில் இருந்த கட்சிகள் கூட அதிகாரத்தைத் தக்கவைக்க வெளிப்படையாக "வெள்ளை இன மரபு" பற்றி பேசி வருகின்றது. பயங்கரவாதத்துக்கு தீர்வு இன, நிற ரீதியாக அணிதிரண்டு, தாங்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதன் மூலமே சாத்தியம் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போக்கானது ஐரோப்பாவில் மட்டுமல்ல, அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி குடியரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் வரை இன, நிற, மத ரீதியாக மக்களை பிரிக்கும் கருத்துக்களை முன்வைத்திருப்பது, வரலாற்றின் மற்றொரு இருண்ட பக்கம் தொடங்க இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பிரான்சில் தேசிய முன்னணி அதிகாரத்தை பெறும் பட்சத்தில், அது கொண்டிருக்கக் கூடிய தீர்வு என்ன? மக்களை இன, நிற, மத ரீதியாக பிரித்து, உரிமைகளைப் பறித்து ஒடுக்குவதன் மூலம் தான், தான் சார்ந்த மக்களுக்கு எதையாவது வழங்கமுடியும்;. உள்நாட்டு யுத்தமும், அனைத்து மக்களையும் கடுமையாக ஒடுக்குவதைத் தவிர, அதனிடம் வேறு மாற்று வடிவம் இருப்பதில்லை. இதை மூடிமறைக்க அயல்நாடுகளுடன் முரண்பாட்டை தூண்டிவிடுவதும், கெடுபிடியான உலகப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவிப்பதும், உலக யுத்தத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய சூழலை தோற்;றுவித்து விடுவதைத் தாண்டி, உள்நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வடிவம் இருப்பதில்லை.

இன்று சுரண்டும் பிரஞ்சு ஏகாதிபத்திய மூலதனம் சந்திக்கின்ற சர்வதேச நெருக்கடியும், உள்நாட்டில் வர்க்க ரீதியாக சுரண்டுவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான பின்னடைவும், பாசிசத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதை நோக்கி பயணிக்க வைக்கின்றது. உள்நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையால் உருவாகும் சமூக அமைதியின்மையானது, அமைப்பு ரீதியாக வடிவம் பெறத் தவறியுள்ள சூழலில், சட்ட ரீதியான அமைப்பின் மீது அராஜகத் தன்மையாக மாறுகின்றது. இந்த அசாதாரணமானதும், கட்டுப்படுத்த முடியாததுமான சூழலைக் காட்டி, அதை ஒடுக்கும் அதிகாரத்தை தேசிய முன்னணி கோருகின்றது.

இந்தப் பின்னணியில் பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் அதற்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. மனித உரிமைகளை வழங்கும் ஜனநாயக சட்டங்களை இல்லாததாக்கும் வண்ணம் அமுலுக்கு வந்துள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் சிரியா மீதான தாக்குதலை நடத்துவதும், அதனைச் சிறப்பாக செய்யக் கூடிய ஆட்சியும் "தேசிய முன்னணி"யின் ஆட்சியால் தான் சாத்தியம் என்ற பொதுக் கருத்தை உருவாக்கி வருகின்றது. “தேசிய முன்னணி"க்கு வாக்களித்தவர்களிடம் ஏன் வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு

1.வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தக் கூடிய கட்சியாகவும்

2.குற்றங்களை ஒழிக்க - குற்றவாளிகளைக் களையெடுக்கக் கூடிய கட்சியாகவும்

3.பயங்கரவாதத்தை இல்லாதாக்கக் கூடிய கட்சியாகவும்

"தேசிய முன்னணி"யைக் கருதுவதுடன், தங்கள் எதிர்காலச் சந்ததியை பாதுகாக்க அவர்கள் ஆட்சிக்கு வருவது அவசியம் என்று கருதுகின்றனர். இந்த மூன்று அடிப்படையில் "தேசிய முன்னணி"க்கு, பிரான்சின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து இருக்கின்றனர்.

வாக்களித்த பிரஞ்சு மக்களின் பொது அச்சத்தின் பின்னால் தாங்கள் வேலைகள் இழப்பதற்கும், வேலை கிடைக்காமைக்கு வெளிநாட்டவர்கள் காரணமென்றும், குற்றங்களில் ஈடுபவது வெளிநாட்டவர்கள் என்ற பொதுக் கருத்தும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் வெளிநாட்டவர்களே என்ற பொதுப்புத்தியையும் உள்வாங்கியுள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் "தேசிய முன்னணி" க்கு இருப்பதாக, வாக்காளர்கள் நம்புகின்றனர்.

இந்த உளவியல் மற்றும் கருத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூண்டி விடுகின்றது. எதார்த்தத்தைக் காட்சியாக்குகின்றோம் என்ற பின்னணியில், வெளிநாட்டவர்களின் சட்டவிரோதமான தொழில்கள், குற்றங்கள் தொடர்பான காட்சிகளை - பொலிசாருடன் இணைந்து காட்சியாக்கி வெளியிடுகின்றனர். இது போன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விபரணங்கள் வரை, வெளிநாட்டவர்கள் குறிவைத்து காட்டப்படுகின்றனர். பல தொலைக்காட்சியில் அன்றாட நிகழ்வாக பல மணி நேரம் காட்டப்படுகின்றது. உண்மையில் இவை அனைத்தும் வெளிநாட்டவருக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்குகின்றது. குற்றவாளியாக, சட்டத்துக்கு கட்டுப்படாதவர்களாக, சட்ட ரீதியான மனிதவுரிமையை தவறாக கையாள்பவராக காட்டப்படுகின்றனர். இந்த வகையில் அண்மையில் பாரிஸ் கான் பரிசு பெற்ற, பிரஞ்சுத் தயாரிப்பான தமிழ் திரைப் படம் இதற்கு மற்றொரு உதாரணமாகும்.

இங்கு குற்றங்களை கட்டுப்படுத்த மனிதவுரிமைச் சட்டத்தால் முடியாது என்பதையே, தொலைக்காட்சிகள் மூலம் எடுத்துக் காட்டுகின்றது. மனிதவுரிமை சார்ந்து சட்டம் குற்றத்தைக் கட்டுப்படுத்த தடையாக இருப்பதாகவும், இதனால் பொலிஸ் இதை ஒடுக்க முடியாது திணறுவதாகவும், ஒரு மறைமுகமான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. மனிதவுரிமையை மறுக்கும் வண்ணம் சட்டத்தையும், அதை முன்னெடுக்கக் கூடிய ஆட்சி அதிகாரத்தையும், தொலைக்காட்சிகள் மூலம் கோருகின்றது. "தேசிய முன்னணி"க்கான வாக்காக அவை மாறுகின்றது.

உண்மை நிலை என்ன?

ஏகாதிபத்திய பிரான்ஸ் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் வேலை இழப்பது தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களால் அல்ல. வெளிநாட்டவர்கள் மலிவான கூலியைக் கொண்டதும் கடுமையாக சுரண்டப்படும் ஏழைகளாகவும், இதன் மூலம் பிராஞ்சு மூலதனத்தை பல மடங்காக பெருக்கும் அதே நேரம், அன்னிய மூலதன உற்பத்திகளை சந்தையில் முறியடிக்கக் கூடிய மலிவான நுகர்வையும் தருகின்றது. வெளிநாட்டவர்களின் தொழில்கள் பெரும்பாலும், பிரஞ்சு மக்கள் செய்யத் தயாரற்றவைகளாக இருப்பதும், கடின உடல் உழைப்பை வழங்க வேண்டிய இடமாகவும் இருக்கின்றது.

இந்த உண்மைக்கு அப்பால் அண்ணளவாக 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வேலை அற்றவராக இருக்கும் அதேநேரம், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டவராக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் அதிகம் இதனால் பாதிக்கப்படுவதும், அவர்களை இன, மத, பிரதேச ரீதியாகவே குற்றப் பரம்பரையாக தொழில் துறை அணுகுவதும், அவர்களுக்கு வேலை மறுப்பதும் அதிகரித்து வருகின்றது.

இயல்பான வாழ்வில் வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாதவர்கள் இருப்பதால், குற்றங்கள் மற்றும் சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த பின்னணியில் இளைய தலைமுறையின் ஒரு பகுதி அராஜகமான வாழ்க்கை முறைக்குள் வாழ முனைவதுடன், சமூக வெறுப்பும், பயங்கரவாத சித்தாந்தத்துக்கும் பலியாகி விடுகின்றனர்.

பிரஞ்சு ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கையும், அதன் உலகளாவிய சூறையாடல் மூலம், பிரஞ்சு மக்களுக்கு சலுகை வழங்கி ஏமாற்ற முடியாத வங்குரோத்தை அடையும் நிலையில், உள்நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் மீதான பொருளாதார நெருக்கடியையும், வன்முறையை திட்டமிட்ட கொள்கை மூலம் தூண்டிவிடுகின்றது.

இந்த பின்னணியில் எதிர்வினைகளை மட்டும் காட்டி, அதை ஒடுக்க மனிதவுரிமையை மறுக்கும் அதிகாரத்தை பொலிசுக்கும், அதைச் சிறப்பாக செய்யக் கூடிய ஆட்சிக்கும், மக்களை வாக்களிக்குமாறு தேர்தல் ஜனநாயகம் கோருகின்றது. மனிதகுலத்தையே யுத்த விளிம்பிற்குள் இட்டுச்செல்லக் கூடிய, மனிதனை மனிதன் கொன்று குவிக்க, சுரண்டும் வர்க்கத்தின் தெரிவாக அரசியல் அரங்கில் நுழைகின்றது. இதை உழைக்கும் வர்க்கத்தின் சர்வதேசியப் போராட்டமின்றி, சுரண்டும் வர்க்கம் தேர்ந்தெடுக்க விரும்பும் பாசிச ஆட்சியை தோற்கடிக்க முடியாது.