Sat06122021

Last updateSun, 19 Apr 2020 8am

"லெனின் சின்னத்தம்பி" நாவலும், பிற்குறிப்பும்

மனித உணர்வுகளானது முதலாளித்துவ, பண உறவுகளாக மாறிவிட்ட எதார்த்தத்தை,  "லெனின் சின்னத்தம்பி" என்ற நாவல் அற்புதமான அழகியலாக்கி இருக்கின்றது. உழைப்பைச் சுற்றிய மனித உறவுகள், முதலாளித்துவ உறவாக எமக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை, இந்த நாவல் மூலம் தரிசிக்க முடியும். எல்லா மனிதர்களும் குறைந்தது இதில் ஒருவனாகத் தன்னும் வாழ்கின்றனர் என்பதே எதார்த்தமாகும். இதுவொரு கற்பனையல்ல. வெளிப்படையான பொது எதார்த்தத்தைக் கடந்த, அது தோன்றுகின்ற சூழலுக்குரிய உள்ளார்ந்த எதார்த்தத்ததின் உட்புறத்தை இந்த நாவல் உடைத்துக் காட்டி இருப்பது இதன் சிறப்பு.

முதலாளித்துவம் என்றால் என்ன, அது இயங்கும் விதம், அதன் அறமும், நடிப்பு, நீதி, சட்டம், ஒழுங்கு, கடமை, அழகு, கவர்ச்சி என்ற அதன் புனிதங்கள் அனைத்தையும், இலகுவாகப் புரிந்துகொள்ள தமிழுக்கு ஒரு நாவல் கிடைத்து இருக்கின்றது. இதில் உழைப்பு சார்ந்த ஜெர்மனிய சொற்கள் - அங்குள்ள தமிழர்கள் பயன்படுத்தும் தமிழில் இருப்பது, பொது வாசகர் தளத்தில் புரிந்து கொள்வதற்கு தடையாக இருந்த போதும், அதைக் கடந்து உழைப்பும் - உற்பத்தி உறவுகளும் எம்மை அதற்குள் இட்டுச் செல்லுகின்றது.

தமிழ்மொழி மூலமான கடந்தகால எழுத்து உலகுக்கு சவால் விடும் வண்ணம், இந்த நாவல்  எதிர்நீச்சலை இடுகின்றது. 1980 களில் "தமிழ்தேசியம்" கோலோச்சிய பின்பாக வெளிவந்த இலக்கியங்கள் அனைத்துக்கும் சவால்;விடும் வண்ணம், முதன்மையான உன்னதமான நாவலாக காணமுடியும். படிக்கும் போது புகழ் பெற்ற சோவியத் நாவல்கள் போன்று பிரமிப்பைக் கூட ஏற்படுத்தி விடுகின்றது.

பொருட்கள், காட்சிகள், உழைப்புடன் பின்னிப் பிணைந்த மனிதர்களின் வாழ்வில், உழைப்புடனான மனித வாழ்க்கையின் இயல்பும், இயக்கமும் எப்படி எதனால் தோன்றுகின்றது என்பதையும், அதன் உணர்வையும், உணர்ச்சியையும் படைப்பாக்கி இருக்கின்றது. இன்றைய நாவல்களின் பொதுவில் காண முடியாதவொன்று. எதார்த்தத்தை, அந்த எதார்த்தத்தில் வாழ்ந்த அனுபவித்த உண்மையை, இந்தப் படைப்பு மூலம் காண முடியும். இது உழைத்து வாழ்கின்ற அனைவரதும் பொது அனுபவங்களும் கூட.            

நாவலானது சமையல் கூடம் ஒன்றில் தொழில் புரிந்த மனிதர்கள் பற்றியது. அவர்களின் சமூக பாத்திரங்களுடன், தொழில் சார்ந்த தகுதிகளுடன், ஏற்றத்தாழ்வான கூலிக்கு ஏற்ப, கண்காணிக்கும் அதிகாரத்துக்கு ஏற்ப, மற்றவரை ஏவி வேலைவாங்கும் அதிகாரங்களுக்கு அமைய, இன, நிற, மொழி, நாட்டு அடையாளங்கள் கொடுக்கும் சமூக மேலாதிக்கத்துக்கு ஏற்ப, மனிதர்கள் தங்கள் இயல்பை, இயக்கத்தைணு வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொள்கின்றார்கள் என்பதையும், அதன் வெளித் தோற்றத்தில் இருந்தல்ல, மாறாக அதன் அகக்கூறில் இருந்து இந்த நாவல் ஆராய்கின்றது. வர்க்க ரீதியான தன்மைக்கும், தகுதிக்கும் ஏற்ப, எப்படி இவை உருவாகின்றது என்பதை, அதன் எதார்த்தத்துடன் அற்புதமாகவே படைத்திருக்கின்றது. சமூக அமைப்பு ரீதியான வர்க்க கூறுகளுடன்,  நிறவாதம், இனவாதம், பிரதேசவாதம் போன்றன, எந்தப் பின்னணியில் எப்படி இணைந்து இயங்குகின்றது என்பதை, இந்த நாவல் இயல்பாகவே கொண்டு வந்திருக்கின்றது. ஆண், பெண் பாலியல் வேறுபாடுகள் இதற்குள் இயங்கும் விதம் - வாழ்வின் நுட்பமான ஒடுக்குமுறைகளையும், அதைத் தான் மட்டும் தனித்து அனுபவிக்கும் கொடுமையான துயரத்தை படைப்பு மற்றவர்க்கு உணர்த்தி நிற்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் வரை, இந்த தொழில் உறவுகள் ஏற்படும் பாதிப்புகளை, அன்றாடம் புறம் தள்ளிச் செல்லும் இயந்திரத்தனமான மனிதப் போக்கை, ஒரு கணம் நின்று நிதானித்து போகுமாறான அதிர்வை இந்த நாவல் ஏற்படுத்தி விடுகின்றது.

உன்னதமானவொரு இலக்கியம் - கலைப் படைப்பின் சாரமானது, யதார்த்தத்தின் அகநிலைப்பட்ட உட்கூறுகளை ஆராய்வதுதான். இதற்கு மாறாக எம்மவர்கள் இன்று "சிறந்த" இலக்கியங்கள் என்று எடுத்துக் காட்டுபவை எல்லாம், பொதுவான யதார்த்தத்தின் அகநிலையுடன் நின்று விடுகின்றவையாக இருக்கின்றது. இதைத் தாண்டி அதன் உட்கூறுகளை, ஜீவமுரளியின் "லெனின் சின்னத்தம்பி" நாவலில் நாம் தரிசிக்க முடியும். அதாவது யதார்த்தத்தை வெறும் காட்சிகளாகவோ, நிகழ்வுகளாகவோ காட்டாது, மாறாக அது தோன்றுவதற்கான காரண காரியங்களை (உட்கூறுகளை) படைப்பாக்கி இருக்கின்றது. இதுவே இந்தப் படைப்பின் இலக்கியமாக, அழகியலாகி இருப்பதே, மற்ற எந்தப் படைப்புக்கும் இல்லாத சிறப்பாகும். கலைக்குரிய அழகியல் என்பது வேறு. மொழிச் சிற்பங்கள் அல்ல. வெளித்தெரியும் காட்சியின் உட்சாரத்தை கலையாக, இலக்கியமாக கொண்டு வருவதே அழகியல்.   

உதாரணமாக தலைமை சமையல்காரன் பிற மொழி தொழிலாளர்களின் பெயர்களை பிழையின்றி உச்சரிக்க - மற்றவர்கள் அதை கொச்சையாக உச்சரிப்பதில் உள்ள சூக்குமத்தை பற்றி கூறும் போது “..பல தொழிலாளர்களை அவன் தனது வாழ்நாளில் பார்த்திருப்பான். அவனுக்கு தொழிலாளர்கள் மூலதனமாக இருந்தனர். அதனால் அவர்கள் பெயர்களை உச்சரிப்பதில், அவனுக்கு தடங்கல்கள்  தேவையற்றதொன்றாகவே இருந்தது. .. அது அவசியமற்றதும், அதேநேரத்தில் அந்நியமானதாக இருந்தது. அந்நியமானவை எல்லாம் ஆபத்தானவை, நாகரீகமற்றவை என்ற ஜரோப்பிய சிந்தனை முறையிலும் வளர்ந்தவனுக்கு, மனத்தடையை விட தனக்கு எல்லாம் தெரியும் என்ற திமிர்தனம் ..." (பக்கம் 62) பெயரை உச்சரிப்பதில் கூட இருக்கக் கூடிய முதலாளித்துவ கண்ணோட்டங்கள் தொடங்கி - இன நிற பாகுபாடுகள் எல்லாம் எப்படி இதைத் தீர்மானிக்கின்றது என்பது குறித்தான அழகியலைப்  பேசுகின்றது.

அதாவது முதலாளி மட்டுமல்ல, முதலாளித்துவம் உருவாக்கியுள்ள படிமுறையான தொழில் அமைப்பு முறையில் இயங்கும் மனிதர்கள் கூட, தங்களை முதலாளியாக பாவனை செய்து  கொண்டு மற்றவர்களிடம் வேலை வாங்குகின்றவர்கள், பெயர்களை உச்சரிப்பது கூட மூலதன கண்ணோட்டத்தில் இருந்து தோன்றுவதையும், அதேநேரம் சக தொழிலாளியின் பெயரை கொச்சையாக அழைக்க முனைவதன் பின் உள்ள இன, நிற தன்மைக்குள்ள உறவை, அதன் எதார்த்தத்துடன் எடுத்துக் காட்டுகின்றது.

முதலாளி கை கொடுத்து காலை வணக்கம் சொல்வது தொடங்கி, தொழிலை இழுத்து மூடுவது வரையான (கை கொடுப்பதில் வேறுபட்ட தன்மை) உறவுகள் குறித்தும், அது மனித உறவுக்கு முரணாக இயங்குகின்ற தன்மையை முகத்தில் அடித்தால் போல் இந்த நாவல் அறைந்து கூறுகின்றது. சக மனிதனின் வாழ்க்கையை மிதித்துவிட்டு நடித்து வேஷம் போடும் போது, "தன்னை ஒரு அப்பாவி என்று நிறுவுவதற்கும், கோமாளி வேஷம் கட்டுவதற்கும்.." (பக்கம் 203) கூட தயங்காதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே முதலாளித்துவத்தினது மனித உறவாக இருப்பதை அழகியலாக்கி இருக்கின்றது.  
         
யதார்த்தம் என்பது வாழ்வின் மீதான உண்மையாக இருந்தபோதும், இது அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட ஒன்றாகவும், முரணற்ற கூறாக மாறி உறைப்பதில்லை. அதுதான் மனித வாழ்வு - இயக்கம் என்று பொதுப்புத்திக்குள், அதுவே நியாயப்படுத்தப்பட்டு விடுகின்றது. ஒரு கலைஞன் அதை அன்றாட வாழ்விலும் பார்க்கச் செறிவுள்ளதாக்கி காட்டிவிடும் போது, உன்னதமான இலக்கியமாக மாறுகின்றது. அதேநேரம் அதுவே வாழ்வியல் எதார்த்தத்தை உடைத்து, அதனுள் நுழைய வைக்கின்றது.

"லெனின் சின்னத்தம்பி"யில் வரும் மனிதர்கள், எமது அன்றாட வாழ்வில் தரிசிக்கின்ற, அதுவே இயல்பான ஒன்றாக மாறி, அதில் இருந்து விலகிச் செல்வதே வாழ்க்கையாகிவிட்ட கணங்களை, இந்த நாவல் தடுத்து நிறுத்தி சிந்திக்கத் தூண்டுகின்றது. சக மனிதர்களை எதிராக நிறுத்தாது, அவர்களை உருவாக்குகின்ற முதலாளித்துவத்தின் வியாபார - பண உறவுகளை, நாவல் கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது.

முதலாளித்துவம் தொழிலாளர்களை பற்றிய முடிவுகளை இரகசியமாகவும், சதிகள் மூலமும் தீர்மானித்து, அதை தொழிலாளியின் வாழ்வா, சாவா என்பதை சூக்குமமாக்கி ரசிக்கின்ற லாப நோக்கம் கொண்ட நிர்வாகத் "திறமை" கொண்ட அதன் குரூரத்தை "காத்திருத்தல் என்பது கையறு நிலையுடன் கூடிய மரணவலி பொருந்தியது. சீரணிக்க முடியாத உண்மைகளை ஏற்றுக்கொண்டும், மறுத்தும் வாழ்வதை விட, எது உண்மை? எது பொய் என்பதைத்  தெரிந்து கொள்வதற்காக காத்துக் கொண்டிருப்பது, மரணவலியை விடவும் வலி பொருந்தியது" (பக்கம் 192) இது தான் வேலை இழந்து போகும் மனித வாழ்வின் உண்மை. ஒரே சூழலில் நேர் முரணான முடிவுகளும், தீர்மானங்களும், உழைப்பு மூலம் உற்பத்தியை செய்பவன் முடிவு எடுக்க முடியாத அடிமையாக இருப்பதையும், இறுதியில் எப்படி பலியிடப்படுகின்றார்கள் என்பதை இந்த நாவல் மூலம் தரிசிக்க முடியம்.

முதலாளித்துவம் உழைப்பு முறை எப்படி அடிமையை உற்பத்தி செய்கின்றது என்பதை "ஒரு தொழிலாளியின் கையறுநிலை, பிரமிப்பின் பின்னால் தோன்றும் அமைதியிலிருந்தும், அதன்பின் தோன்றும் பணிவிலிருந்தும் ஆரம்பமாகின்றது" (பக்கம் 63) என்று எடுத்துக் காட்டுகின்றது. மனித வாழ்க்கையின்  தேவையை, அவனை சுரண்டுவதற்கான உழைப்பாக மாற்றியுள்ள தனிவுடமை அமைப்பு முறையில், தொழிலாளி எப்படிப்பட்ட சூழலின் கைதியாக மாற்றப்படுகின்றான் என்பதை இந்த நாவல் மூலம் நாம் தரிசிக்க முடியும்.   

எளிய மகிழ்ச்சியான மனித உறவுகளானது, பணத்துடனான, வியாபாரத்துடனான  உறவாக எப்படி மாறிவிட்டது என்பதை, வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கின்ற அவலங்களும், தொழில் உறவுகள் எப்படிப்பட்ட உண்மையைக் கொண்டது என்பதை முகத்தில் அடித்தாற் போல் இந்த நாவல் தரிசிக்க வைக்கின்றது.      

முதலாளித்துவத்தின் அழுக்கான அதன் அசிங்கமான முகத்தை மிக அற்புதமாகவே  "..ஒரு சந்ததி, பெறுமதியானவை என்று கருதி சேகரித்து வைத்தவைகளை, அடுத்த சந்ததி பயன்படுத்தக் கூடாது அதனால் வியாபாரம்  கெட்டுப்போகும் என்ற "எடுத்ததெற்கெல்லாம் குப்பையில் வீசும் வியாபாரக் கலாச்சார பின்னணியில் வளர்ந்த"து (பக்கம் 138) என்பதை, வாழ்வின் மீதான பொது எதார்த்தத்தில் வெளிப்படுத்தி விடுகின்றது. இது பொருளை மட்டுமல்ல, மனிதனையும், மனிதத் தன்மைகளையும் தான் என்பதை, இந்த நாவலின் ஊடாகக் காண முடியும். 

இயற்கை - சுற்றுச் சூழல் அழிவை உருவாக்கும் வண்ணம் வியாபாரம் எப்படி பொருளை அழிக்கின்றது என்பதும், மனிதர்கள் தங்கள் மனிதத் தன்மையை இழக்கின்ற அவலத்தையே, மனித வாழ்க்கையாக்கி விடுகின்ற எதார்த்தத்தை, இந்த நாவல் எமக்கும் புரட்டி விடுகின்றது.

இந்த வகையில் நாம் வாழும் வாழ்க்கையை, எம்மை நாம் புரிந்துகொள்ள, அனைவரும் படிக்க வேண்டிய நாவல். அதேநேரம் இதை எழுதிய ஜீவமுரளிக்கும், இதை வெளியிட்ட நோர்வே "உயிர்மெய்"க்கு இருக்கக் கூடிய சமூகப் பாத்திரத்தை, இந்த நாவல் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்றால் மிகையாகாது.         

பின்குறிப்பு : 29.11.2015 பாரிஸ்சில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் வெளிவந்த கருத்துகள் மீது

1. "லெனின் சின்னத்தம்பி" மற்றைய எந்தப் படைப்புகளில் இருந்தும் வேறுபடவில்லை என்று கூறுவதும் - மற்றைய படைப்பு வரிசையில் வைத்து அணுகுவது குறித்தும்

மற்றைய கலைப் படைப்புகளில் இருந்தும் வேறுபடுவது எங்கே என்பது குறித்தானதும், கலை சார்ந்த அறிவு குறித்தானதும் கூட. இந்தப் படைப்பு யதார்த்தத்தின் அகநிலைப்பட்ட உட்புற உலகை தரிசிக்க வைக்கின்றது. மனித உணர்வுகள், செயற்பாடுகள் எங்கிருந்து, எப்படி ஏன் தோன்றுகின்றது என்பதையும், அந்த உண்மையையே கலையாக்கி இருக்கின்றது.       மற்றைய படைப்புகள் யதார்த்தத்துடன் நின்று விடுவதும், யதார்த்தத்தில் இருந்து விலகிச்செல்வதுடன், உட்சாரத்தை ஆராய்வதில்லை.

2. இந்தப் படைப்பு கட்டுரைத் தன்மை கொண்டதாக காட்ட முற்படுதல் தொடர்பாக          

கட்டுரை, கலைக்குரிய வித்தியாசத்தை எளிமையாக்கிவிடுவதும், எளிமையான புரிதல்  உள்ளவை கட்டுரையாக கருதுவதும், கலை என்றால் புரியாத மொழியில் சொற்சிற்பங்கள் கொண்டதே என்ற கலை குறித்தான  புரிதலின் விளைவாகும். அழகியலை மொழி ஊடாக புரிந்து கொள்கின்ற அவலம்.

இங்கு கட்டுரை என்பது புறநிலை யதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வை ஆராய்வதாகும்.  இப்படி ஆராய்பவன் அறிவியலறிஞன். கலை என்பது அகநிலைப்பட்ட யதார்த்தத்தின் உட்புற உலகை ஆராய்வதாகும். இப்படி ஆராய்பவன் கலைஞன். உலகை ஆராயும் இந்த வேறுபாடு என்பது எதிரானதல்ல. நிகழ்வுகள் குறித்து அவர்களின் பருமையான அனுபவத்தின் தற்செயலானதை அகற்றி பிழிந்தெடுத்து படைப்பாக்குகின்றான்.

தர்க்கரீதியானது, புலன் அறிவு மூலம் கிடைக்கும் யதார்த்தத்தைக் காட்டிலும் ஆழமானதும் உண்மையான முழுமையானதை அறிவியலாளன் தருகின்றான்.

கலைஞன் இதையே ஒருவித தாளநயத்துடன், இசை ஒழுங்குங்கு ஏற்ப, அன்றாட வாழ்வில் பார்க்க செறிவுள்ளதாக, ஒரு முகப்படுத்தப்பட்ட, இலட்சிய நிலைக்கு அருகில், முழு உலகுக்கு நெருக்கமாக நின்று வெளிப்படுத்துகின்றான்.

3.இது நவீன இலக்கியமல்ல என்ற தர்க்கம் -வாதம் குறித்து

நவீனம் என்பது என்ன? மனித வாழ்க்கைக்கு வெளியில் எது நவீனம்? "லெனின் சின்னத்தம்பி" நாவல், நவீன சுரண்டல் முறையையும், அது எப்படி முதலாளித்துவ ஜனநாயகமாக மாற்றி எப்படி இயங்குகின்றது என்பதைக் குறித்துப்; பேசுகின்றது.

மனிதர்கள் வாழும் வாழ்க்கைக்கு வெளியில் நவீனம் என்பது, தனிமனிதனின் போலியான பகட்டான பாசாங்குத்தனத்தைக் குறிக்கின்றது. சுரண்டும் வர்க்கம் நடத்துகின்ற சமூக நோக்கற்ற இழிவான அதன் சுயவாழ்க்கை நோக்கிய கனவுலகில் தத்தளிக்கின்ற இலக்கியங்கள் குறித்தானது. இந்தக் கலை சமூகத்தை முன்னிறுத்தி கருத்தையோ, செயலையோ கொண்டு தன்னை வெளிப்படுத்துதில்லை. இங்கு இவர்கள் நவீனம் என்று கோருவது, எது மேல் நிலையில் உள்ளதோ, அதை அடைவதை நோக்கிய சுய புலம்பல். பெண் ஆண் போல் வாழ்வது குறித்தும், தாழ்ந்த சாதி உயர் சாதி வாழ்க்கையை நடத்துவது குறித்தும், சுரண்டப்படும் வர்க்கம் சுரண்டும் வர்க்கம் போல் வாழ்வதை குறித்தும்,  ஆக தனிவுடமை உலகில் தனிமனித கனவுகளையே நவீன கலையாக காட்டவும், காணவும் முனைகின்றனர்.

நுகர்வே மனித மகிழ்ச்சியாக கருதும் தனிவுடைமையிலான நவீன உலகில், கலை மூலமான மகிழ்ச்சி என்பது அதைக் கனவு காண வைப்;பதுதான். சமூகத்தை முன் நிறுத்தாத  அனைத்தும் நவீன இலக்கியமாகவும், சமூகத்தை முன் நிறுத்துகின்ற அனைத்தும் பழமையானதாகக் காட்டுகின்ற, புரிந்து கொள்கின்ற, அற்பபுத்தியுள்ள தனிவுடமை சிந்தனையின் வெளிப்பாடே, மனித வாழ்வுக்கு வெளியில் தேடுகின்ற நவீனம்.