Thu01212021

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதம் ஒரு மனநோயா!? சுரண்டும் வர்க்கத்தின் தெரிவா!?

அமைப்பு ரீதியானதும் - சட்ட ரீதியாகவும் செயற்படும் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிரான அடக்குமுறை (பயங்கரவாதம்) வடிவம் மூலமும் இயங்குகின்றது. சுரண்டலை நடத்துவதில் சுரண்டும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக வெடிக்கும் போது, அது வெளிப்படும் வடிவங்களில் பயங்கரவாதம் ஒரு வடிவமாகும்.

பயங்கரவாதம் எங்கிருந்து, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்படுகின்றது என்ற கேள்வியை எழுப்பினால் - அரசு மற்றும் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளும், இதற்காக அது கையாளும் பயங்கரவாதவுமே மற்றைய பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கின்றது. இந்த உண்மைகளை மனிதன் தன் சொந்த பகுத்தறிவு மூலம் சுயமாக கண்டடைவதைத் தடுப்பதே - ஏகாதிபத்திய ஊடகங்களின் தலையாய பிரச்சாரமாக இருக்கின்றது. ஒரு பயங்கரவாதச் செயலைத் தொடர்ந்து எப்போதும் மக்களின் பகுத்தறிவுக்கு எதிரான ஊடகப் பயங்கரவாதம் ஏவிவிடப்படுகின்றது. மக்களை ஊடகங்கள் முன் கட்டிப்போட்டு மூளைச்சலவை செய்வதன் மூலம், பயங்கரவாதத்தைப் பற்றிப் போலியான பொய் விம்பத்தை உருவாக்கி விட முனைகின்றனர். அதேநேரம் அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதங்கள் மூலம், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்ப வைப்பதன் மூலம் - மக்களை தங்கள் பயங்கரவாதத்தின் பின் வழிநடத்துகின்றனர். இதுதான் இன்று உலகெங்கும் நடந்து கொண்டு இருக்கின்றது.

பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) மற்றும் அதன் உறுப்பினர்களை "Psychopathic Monsters" என்று கூறினார். அதை பிபிசி தமிழ்ச் சேவை "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்களின்" செயலாக மொழி பெயர்த்துள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் (உளவியல் நோய்) குறித்தும் தவறான அபத்தங்களை முன்வைத்துள்ள அதேநேரம், ஏகாதிபத்திய விளைவுகளான பயங்கரவாதத்தை மூடிமறைக்க முனைந்துள்ளனர். பிபிசி தன் தவறான கருத்தை திணிக்க தமிழ் அகராதியை முன்னிறுத்தி "சைக்கோபாத் என்ற சொல்லுக்கு அகராதிகள், தீராத மனநோய் பிடித்த, அசாதாரணமான வன்முறை கலந்த சமூக நடத்தையுள்ள ஒருவர்' என்று குறிப்பிடுவதும், இதற்கு ஏற்ப "கொலைவெறி" என்ற சொல்லை இணைத்துள்ளது.

பிபிசி மொழிபெயர்ப்பும் திரிபும்

முதலில் "Monsters" என்றால் "அரக்கராக" வருணிக்கின்ற மொழி பெயர்ப்பு அபத்தத்தின் பின் - சாதிய இந்துத்துவ உள்ளடக்கம் மூலம் சமூகத்தை இழிவுபடுத்தி இருக்கின்றனர். தேவர் - அரக்கர் என்ற இந்துத்துவ சாதிய எதிர்நிலைத்தன்மை மூலம், சமூக முரண்களையும் அதன் உள்ளடகத்தையும் பயங்கரவாதத்துக்குள் புகுத்தி விடுகின்றனர். ஏகாதிபத்திய சர்வதேச ஊடகமான பிபிசி, ஆங்கிலத்தில் "Monsters" என்பதற்குரிய சரியான உள்ளடகத்தை முன்வைப்பதற்கு பதில், சாதிய கண்ணோட்டத்தில் திரித்து விடுகின்ற பின்னணியில் - பிபிசி தமிழ் செய்திப் பிரிவு பயங்கரவாதத்தை பார்ப்பனிய சாதியம் ஊடாக கக்கி விடுகின்றது.

"Monsters" என்பது "அரக்கர்கள்" அல்ல, மாறாக விகாரமானவர்கள் என்ற பொருளில் மட்டும் அர்த்தம் கொள்ள முடியும். இந்துத்துவ பார்ப்பானியம் தன்னை நிறுவிக்கொள்ள, உழைக்கும் சாதியாக இருந்த அடிநிலை மக்களையும் அவர்களின் போராட்டங்களையும், அரக்கத்தனமாகவும் - விகாரம் கொண்டவர்களாகவும் விளக்குகின்ற புராணங்கள் இதிகாசங்களில் இருந்து பிபிசி மாறுபடவில்லை.

இதேபோல் "சைக்கோபாத்" என்பதை "தீராத மனநோய் பிடித்த - அசாதாரண வன்முறை நடத்தையுள்ள ஒருவர்" என்று திரித்துக் காட்டுகின்றது. இங்கு சைக்கோபாத் என்ற சொல்லை வன்முறை கொண்ட ஒன்றாகக் குறுக்கி, அதை "கொலைவெறி"யாகவும் - "தீராத மனநோயாகவும்" - இதுவே பயங்கரவாதமாகவும் சித்தரிக்கவும் முனைகின்றது.

இதற்கு மாறாக சைக்கோபாத் என்பது சமூகவிரோத நடத்தை, அனுதாபம் அல்லது இரக்கமற்ற, குற்றவுணர்வு அற்ற நடத்தை, அதீத துணிச்சல் அல்லது தைரியமான நடத்தை போன்ற குணங்குறிகளை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படும் ஒரு வகை ஆளுமைக் கோளாறாகும். இது கொலைவெறியோ அல்லது பயங்கரவாதமோ அல்லது "தீராத மனநோயோ" அல்ல.

மறுபக்கத்தில் "சைக்கோபாத்" என்ற சொல் கடந்தகாலத்தில் தவறாக மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தியதால், அதாவது மனிதர்களை தனிமைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தியதால் மருத்துவ உலகம் இச் சொல்லை இன்று பயன்படுத்துவதில்லை. ஏகாதிபத்திய தலைவர்களும், பிபிசியும் தங்கள் சுரண்டும் வர்க்கப் பயங்கரவாதத்தை மூடிமறைக்க, தவறான புரிதலுள்ள சொல்லைக் கொண்டு, அதே புரிதலை வன்முறை கொண்ட ஒன்றாக குறுக்கி, பயங்கரவாதத்தை தவறாக புரிய வைக்க முனைகின்றனர்.

ஏகாதிபத்தியம் மனநோயையும் - மொழியையம் திரிப்பதன் மூலம், பயங்கரவாதத்தைத் தீர்க்க முடியாத உளவியல் நோயாகக் காட்ட முற்படுகின்றது. இதை தங்கள் பயங்கரவாத வடிவங்கள் மூலம் அழிக்க வேண்டிய ஒன்றாக காட்டும் அபத்தமும் நடந்தேறுகின்றது. அதாவது பயங்கரவாதம் தோன்றும் காரணத்தை இதன் மூலம் மூடிமறைக்கின்றது.

இந்த ஏகாதிபத்திய அபத்தத்தை மெய்ப்பிக்க முனைந்த பிபிசி "கொலைவெறி மனநோய் பிடித்தவர் (Psychopath)" என்பதன் பொருள் என்ன என்று, லண்டன் யுனிவர்சிட்டி டெவெலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறைப் பேராசிரியரான, எஸ்ஸி வைடிங் அவர்களிடம் கேட்டபோது, அவரோ இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை "கொலைவெறி மனநோய் பிடித்தவர்களாக" கருத முடியாது என்று மறுக்கின்றார். மாறாக அவர்கள் தங்களுக்கான இலட்சியங்களுடன், கொள்கைகளுடன் கூடிய - அரசியல் நடத்தையாக விளக்கியதுடன், பயங்கரவாதம் குறித்து பிபிசி முன்வைத்த "கொலைவெறி மனநோய்"களின் நடத்தை என்ற பிரயோகத்துடன் முரண்பட்ட - மனநோய்க்கான அறிகுறிகளை எடுத்துக் காட்டினார்.

மன அழுத்தம் உருவாக்கும் மனநோயை அறிய மருத்துவரீதியாக 16 குணங்குறிகளை அடையாளப்படுத்துகின்றனர். இக்குணங்குறிகளில் பெரும்பான்மையை ஒருவர் கொண்டிருக்கும் போது அதை மனநோயாக இனங்காணவும், அதற்கு மருத்துவ ரீதியாக ஆற்றல்படுத்தும் முறைமையும் காணப்படுகின்றது. இந்த வகையில்

"1. அக்கறையின்மை: மற்றவர்களின் கஷ்டங்களை அனுதாப உணர்வுடன் பார்க்காத தன்மை. இதயமற்ற அல்லது இரக்கமற்ற அக்கறையின்மை

2. ஆழமற்ற உணர்ச்சிகள்: பொதுவாக உணர்ச்சியற்று இருப்பது. குறிப்பாக சமூக உணர்வுகளான குற்றவுணர்வு, தர்மசங்கடப்படுதல் அல்லது அவமான உணர்வு இல்லாதிருப்பது.

3. பொறுப்பற்ற தன்மை: உங்கள் தவறுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவது

4. உளச்சுத்தியற்ற பேச்சு: மேலோட்டமான பேச்சு, மேலோட்டமான கவர்ச்சி மற்றும் மோசமான பொய்யராக இருப்பது

5. அதீத நம்பிக்கை: தனது மதிப்பைப் பற்றி அளவுக்கதிகமாக நம்புவது

6. உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கை: நடத்தையை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தவறுவது.

7. சுயநலம்: அகங்காரம்; - பிறரை நேசிக்கும் தன்மை இல்லாதிருத்தல்

8. எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடமுடியாமை: யதார்த்தரீதியிலான நீண்டகால இலக்குகள் இல்லாதிருத்தல். அது பற்றிக் கவலையின்மை.

9. வன்முறை: விரக்தியை சகித்துக்கொள்ளமுடியாத நிலை. எளிதில் வன்முறையில் ஈடுபடும் போக்கு".

இது போன்று மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகள், தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பிடிப்பின்மை, பதட்டமான மனநிலை, பாலியல் நடத்தை, கவர்சிகர நடத்தை.

இதன் வெளிப்பாடுகள் கூட பலவகையானது. வர்க்கம், கலாச்சாரம் சார்ந்து இது வெளிப்படும் தன்மை வேறுபடும். நோய்த் தன்மைகள் கூற வேறுபட்டவை. பய நோய், மனப்பதட்ட நோய், மனச்சிதைவு நோய், மனச்சோர்வு என்பன வேறுபட்ட தன்மை கொண்டவை. வெளிப்பாடு கூட வேறுபாடானவை.

உணர்வு தொடர்பானவை: அதிகரித்த கவலை, மனக் குழப்பம், மனக் கலக்கம் அல்லது மனப் போராட்டம், எளிதில் எரிச்சலுறல் அல்லது கோபப்படல், மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல், தனிமையாக உணர்தல், மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு

உடற்றொழிலியல் இடர்கள்: தலைவலி, நெஞ்சுவலி போன்ற வலிகள், வயிற்றுப்போக்கு (Diarrhoea) அல்லது மலச்சிக்கல், (Constipation), குமட்டல் (Nausea), தலைச்சுற்றல் (Dizzness), அதிகரித்த இதயத் துடிப்பு.

பழக்கவழக்கம் தொடர்பானவை: மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல், வேலைகளைப் பின்போடல், பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல், அதிகரிக்கும் மதுபானப் பாவனை, போதைப்பொருள் பாவனை, புகைத்தல் போன்றவற்றுடன் நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.

"மனநோய்" குறித்து

தனிவுடைமையின் போக்கை அனுசரிக்க முடியாத, அதன் போக்கில் தனிமனிதனாக இயங்க முடியாத தனிமனித செயற்பாடுகளின் வளர்ச்சி மனநோயாக மாறுகின்றது. அதாவது தன்னை முதன்மையானவனாக மையப்படுத்தி - சமூகத்தில் இருந்தும் தனிமைப்பட்டுப் போகின்ற மனிதர்களின் குறிக்கோள்களும் அதன் விளைவுகளும் மனநோயாகி விடுவதும் - அதுவே மற்றவர் மீதான மனநோய் நடத்தையாக மாறுகின்றது.

இன்று தனிவுடமையும், அதன்பால் தன்னை மையப்படுத்திய போக்குமே, மனித முன்னேற்றமாக முன்னிறுத்திய சமூகமாக, சமூகம் இயக்கப்படுகின்றது. கல்வி தொடங்கி ஊடகங்கள் வரை, சமூகம் சார்ந்த வாழ்க்கையானது, தனிமனித முன்னேற்றத்துக்கு எதிரானதாகவும், நவீன வாழ்க்கை முறைக்கு முரணானதாகவும் காட்டி இழிவுபடுத்தப்படுகின்றது.

இன்று தன்னைத் தனிமைப்படுத்தி, முதன்மைப்படுத்திக் கொண்ட வாழ்க்கையானது, சமூகத்தில் இருந்து விலகிய அனைவரையும் மனநோயாளியாக மாற்றி இருக்கின்றது என்ற உண்மையானது, தனித்துவிட்ட ஆற்றாமையானது மனச்சிதைவாகும் போது மனநோயாக முற்றுகின்றது.

மனஅழுத்தம் (மனநோய்) என்பது பயங்கரவாதமல்ல. பயங்கரவாதம் என்பது அரசு மற்றும் ஏகாதிபத்திய தன்மையாக இருப்பதும், அது சுரண்டும் வர்க்கத்தின் கருவியாகவும் இருக்கின்றது. சுரண்டும் வர்க்கம் தன் நோக்கை அடையும் வழிமுறைகளில் ஒன்றுதான் பயங்கரவாதம்.

பிபிசி முதல் அனைத்து ஏகாதிபத்திய ஊடகங்களும், நடந்த பயங்கரவாதத்தின் அரசியல் மற்றும் சுரண்டும் வர்க்கப் பின்னணியை மூடிமறைக்கவே முனைகின்றன. இந்த வகையில்

1. பயங்கரவாதம் எதனால் எந்த வர்க்கத்தில் தோன்றுகின்றது என்பதை மூடிமறைக்க முனைகின்றது. சுரண்டும் தரப்பைச் சார்ந்த ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் விளைவாக - இதனால் பாதிக்கப்படும் சுரண்டும் வர்க்கம் பயங்கரவாதத்தைக் கையில் எடுப்பதை இருப்பதை மறுப்பதும் - இந்த உண்மையை மனிதன் தன் சொந்தப் பகுத்தறிவு மூலம் கண்டடைவதைத் தடுத்து - மூளைச்சலவை செய்யவும் பயங்கரவாதத்தை திரித்து காட்ட முனைகின்றனர்.

2. பயங்கரவாதத்தின் சமூகப் பொருளாதாரக் கொள்கையானது, தனிவுடமை மற்றும் ஏகாதிபத்தியத்தின் கொள்கை நீட்சியாக இருப்பதை இங்கு மூடிமறைக்க முனைகின்றனர்.

பயங்கரவாதம் குறித்து

தனிவுடமை சமூக அமைப்பில் அதைப் பெறுவதற்காக தெரிவுசெய்கின்ற வடிவங்களில் ஒன்றுதான் பயங்கரவாதம். பயங்கரவாதமானது சாராம்சத்தில பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிவுடமையைக் கொண்ட வர்க்கமானது, தன் சொத்துடமையைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதைப் பெருக்கவும், அதைப் பெறவும் கையாளுகின்ற வடிவங்களில் ஒன்று தான் பயங்கரவாதம். பயங்கரவாதமானது மக்களை எதிரியாகக் கருதும் அதேநேரம், தனிச்சொத்துடமை அமைப்பை பாதுகாப்பதைக் தன் குறிக்கோளாகக் கொண்டது.

தனிவுடமை சார்ந்த தனிநபர்வாதமானது தன் சமூகப் பிரிவை பயங்கரவாதம் மூலம் ஒருங்கிணைத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை எதிரியாகக் காட்டிக் கொண்டு தனிச்சொத்துடமையின் பின்னால் இயங்குகின்றது. தான் சார்ந்து இருக்கக்கூடிய மக்களை சார்ந்து இருப்பதில்லை. மாறாக அந்த சமூகப்பிரிவில் தனிச்சொத்துடமை கொண்ட சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்து இயங்குகின்றது.

இந்தப் பயங்கரவாத சமூக முறைமையானது, அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் மற்றொரு நகல் வடிவமாகும். ஏகாதிபத்தியம் எப்படி தன்னை முழு சமூகத்தினதும் ஏகப்பிரதிநிதியாக முன்னிறுத்திக் கொண்டு செயற்படுகின்றதோ - அதேபோன்று தான் பயங்கரவாதமும் தன் சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்தி இயங்குகின்றது. இங்கு சுரண்டும் வர்க்க நலன் தான் முதன்மையான செயற்பாட்டுக் கூறாக இருக்கின்றது. இதை அடையும் வழியாக பயங்கரவாதம் தோன்றுகின்றது.

ஊடகப் பிரச்சாரங்கள் அனைத்தும் இவ்விரண்டுக்கும் இடையில் ஒத்த தன்மை கொண்டதாக, மக்களை மந்தையாக வைத்துக் கொண்டு, சுரண்டும் வர்க்கத்தை முன்னிறுத்திச் செயற்படுகின்றது. ஏகாதிபத்தியம் தனக்கு முரணான, எதிரான மக்கள் கூட்டத்தை எப்படி வகைதொகையின்றி பயங்கரவாதம் மூலம் கொல்லுகின்றதோ, அதேபோல் பயங்கரவாதம் கூட, தான் அல்லாத மக்களை கொன்று குவிக்கின்றது.

பயங்கரவாதம் என்பது ஏகாதிபத்தியக் கருவறையில் இருந்து தான் பிறக்கின்றதே ஒழிய, இது ஒரு சமூகத்தின் மனநோயோ - தனிமனித நோயோ அல்ல. மாறாக சுரண்டும் வர்க்கம் மக்களுக்கு எதிராக கையாளும் வடிவங்களில் ஒன்றாகும்.