Sun05312020

Last updateSun, 19 Apr 2020 8am

உள்ளக விசாரணையா? சர்வதேச விசாரணையா? மண்டையைப் பிளக்கும் மோசடி

2009 இல் இறுதியுத்தம் நடந்த காலத்தில் சர்வதேசம் பற்றியும் - சர்வதேச தலையீட்டின் மூலமான மீட்சி பற்றியும் கூறி, புலிகளின் சுயமான சொந்த முயற்சியை முடக்கி முள்ளிவாய்க்காலில் புதைத்ததுதான், "தமிழ்த்தேசிய" வரலாறு. அன்று இந்த அரசியலை வழிகாட்டிவர்கள் தான், இன்று சர்வதேச - உள்ளக விசாரணை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். 2009 இல் சர்வதேச தலையீட்டை முன்னிறுத்தி - அதற்காக மக்களை யுத்த கேடயமாக மாற்றிப் பலி கொடுத்தவர்கள் - இன்று சர்வதேச விசாரணையைக் காட்டி, மக்களை அதே அரசியல் வழியில் செயலற்றவராகவும் - மந்தைகளாகவும் மாற்றுகின்றனர்.

"தமிழ்த்தேசிய" இனவாத அரசியல் என்பது, மக்களின் சுய அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குவதுதான். மாறாக தமக்கு வாக்குப்போடுவதற்கும் - தாங்கள் ஆதரிக்கும் சர்வதேசத்தை நம்பிக்கொள்ளுவதன் மூலம், மக்களை செயலற்றவராக தமக்கு பின் கும்மியடிக்குமாறு  கோருகின்றது. சுய பகுத்தறிவுடன் சிந்திக்கவும் - செயலாற்றவும் முடியாத வண்ணம், தமிழ் சமூகத்தை கிணற்றுத் தவளையாக மாற்றிவிடுகின்றதும் - இறுதியில் அதற்குள் நின்று "பைக் பைக்" என்று கத்துவதுமாக மாறிவிடுகின்றனர். இதுதான் அன்று முதல் இன்று வரையான தமிழ்த்தேசிய அரசியல்.     

இதற்கு ஏற்ப தமிழ் ஊடகங்களும் - அரசியல்வாதிகளும், போட்டி போட்டுக் கொண்டு செய்யும் அரசியல் புரட்டுத்தான் "உள்ளக - சர்வதேச" விசாரணை என்னும் மற்றொரு மோசடி. இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேர்வது போல் - காலகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றிய இனவாத அரசியல் மூலம் - ஏதோ ஒன்று நடக்கும் என்று தொடர்ந்து காட்ட முனைகின்ற பித்தலாட்டமாகும்.

இந்தப் பின்னணியிலேயே சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது - இனி இதை அடிப்படையாகக் கொண்ட உள்ளக விசாரணை மூலம் தண்டனை என்கின்றனர். வேறு சிலரோ உள்ளக விசாரணை என்பது - சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் நடக்கும் ஒரு சர்வதேச விசாரணைதான் என்கின்றனர். இப்படி காலத்துக்கும் - நேரத்துக்கும் ஏற்ப தமிழ் மக்களின் மண்டையைக் கழுவுகின்றனர்.

இந்த மோசடியின் இன்னுமொரு கூத்துக்காட்டும் அரசியல் தான், ஐ.நா செல்வது பற்றியும் - செல்லாமை பற்றியுமான அறிக்கைகள் - விவாதங்கள். இந்த பின்னணியில் சந்தர்ப்பவாதிகளாக மாறி, தலைகீழாகவும் நடக்க முனைகின்ற கேலிக்கூத்துகளையும் கூட நடத்தி முடிக்கின்றனர். தமிழ் தேசியத்தின் பெயரில் பிழைக்க முனைகின்ற  சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி தமக்குள் மோதிக் கொள்வதும், அதில் ஒன்றைக் கவ்விக் கொண்டு குலைக்குமாறு மக்களை கோருகின்றனர்.

இந்த மோசடியின் பின்னாலான உண்மை என்ன?

"சர்வதேச விசாரணை" என்று கூறி ஐ.நாவின் சொந்தத் தலையீடு என்பது, தமிழரின் கோரிக்கையை ஏற்றோ - தமிழனின் போராட்டத்தை கண்டோ - மானிட மனச்சாட்சியை முன்வைத்தோ நடந்ததல்ல. இங்கு குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதல்ல, ஐ.நாவின் அக்கறை. இலங்கையில் தலையீட்டை நடத்துவதன் மூலம், ஐ.நாவின் நலன்களை இலங்கை ஏற்றுக் கொள்வதையே ஐ.நா கோரியது. ஐ.நா என்பது அமெரிக்க - ஐரோப்பிய நலன்களை  அடிப்படையாகக் கொண்ட விசாரணை நாடகங்களே, கடந்த ஆறு வருடமாக அரங்கேறின. தமிழன் பெயரில் தூக்குக்காவடி முதல் நெருப்புச் சட்டி வரை எடுத்து, அதற்கு அரோகரா போட்டதற்கு அப்பால், அதனால் எந்த அருளும் "தமிழனுக்கு" கிடைக்கவில்லை - கிடைக்கப் போவதுமில்லை. 

உருவாட வைக்கும் இந்த சாமி தரிசனம் மூலம் தமிழருக்கு நன்மை கிடைக்கும் - தீர்வு கிடைக்கும் என்பது, அடிப்படையில் சர்வதேசம் பற்றிய கடந்தகால உண்மைகளை மறுப்பதாகும். இங்கு அமெரிக்க - ஐரோப்பிய நலன்களை உறுதி செய்வது "தமிழன்" அல்ல - அரசு என்பதும், அதை அரசு உறுதி செய்யும் போது - அரசுக்கு முரணாக எந்த விசாரணையையும் ஐ.நா கோராது என்பதுமே வெளிப்படையான உண்மை. இங்கு உண்மையானதும் - மனிதவுரிமை அடிப்படையிலும், ஐ.நாவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதல்ல என்பதே உலகறிந்த பொது உண்மையாகும்.

இங்கு அடுத்த உண்மை உண்டு. போர்க்குற்றவாளிகள் "தமிழ்தேசியம்" கூறுவது போல் அரசு மட்டுமல்ல. மாறாக - புலிகளும் - மனித விரோத குற்றத்துக்கு துணை நின்ற சர்வதேசமும் - ஆயுதம் கொடுத்த மேற்கு நாடுகளும் - உளவுத் தகவல் கொடுத்த அமெரிக்காவும் - சர்வதேச தலையீட்டை நடத்த மக்களை பணயமாக வைக்கக் கோரிய மேற்கு ராஜதந்திரிகள்... வரை குற்றவாளிகள். ஆக தம்மைத் தாம் தண்டிக்க கோரி ஐ.நா. சர்வதேச விசாரணையை நடத்தும் என்பதும் - அதனுடன் கூடி யுத்தத்தை நடத்திய தலைவர்களை தண்டிக்கும் என்பது - பூனை கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனைக் கதையைப் போல் - "தமிழனின்" கனவுகளும் கற்பனைகளும் அரசியலாகின்றது.

இதற்கு தீர்வு என்ன? 65 வருடமாக சுற்றிச் சுற்றி வாக்கு போட்டும் - இனவாதத்தை முன்வைத்தும் தோற்றதற்கு பதிலாக - இலங்கை வாழ் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு அரசை தோற்கடித்து வெல்வதன் மூலமே - தமக்கான சொந்தத் தீர்வுகளைக் காணமுடியும்.