Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொது வேட்பாளர் எதை ஒழித்து எதை உருவாக்க முனைகின்றார்?

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது பற்றியும், தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றியும் இன்று பேசப்படுகின்றது. வெளிப்படையான இந்த கோசம் மூலம், மாற்றம் பற்றி பிரமை ஊட்டப்படுகின்றது. ஆள்வோருக்கு எதிராக வாக்கு அளிக்க வைப்பதன் மூலம், பொது மக்களிடம் அரசியலற்ற தன்மையை உருவாக்க முனைகின்றனர்.

அதாவது பொது வேட்பாளர் முறை மூலம் முதலில் ஒழிக்கப்படுவது, மக்கள் திரள் போராட்டத்தை தான். தேர்தல் அறிவிப்பு தொடங்கியவுடன், ஒழிக்கப்படுவது, வர்க்க ரீதியாக மக்கள் அணிதிரள்வதைத் தான்.

உழைக்கும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராடுகின்ற போது, அரசு பற்றியும் அதன் வர்க்க தன்மையையும் அனுப ரீதியாக தெரிந்து கொள்கின்றனர். இது பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் வளர்ச்சி பெறும் போது தான், வெகுஜன கிளர்ச்சியாகவும் இறுதியாக புரட்சியாகவும் மாறி, சுரண்டும் வர்க்க அமைப்பையே தூக்கி எறிகின்றது.

மக்கள் திரள் போராட்டத்தையும், அதன் வர்க்கத் தன்மையையும் இல்லாதாக்குதே பொது வேட்பாளரின் முதலாவது அரசியல் முன் நகர்வாகும்;. அரசு அல்ல ஆள்வோர் தான் பிரச்சனை, பதிலாக புதிய ஆள்வோரை தேர்ந்தெடுத்து விட்டால் மாற்றம் வந்துவிடும் என்று கூறுகின்றதன் மூலமே, உழைக்கும் மக்களின் வர்க்கத் தன்மையை அழித்து விடுகின்றனர். இன்று ஆள்வோருக்கு பதில் புதியவர்களை தெரிவு செய்வதன் மூலம், மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பதை கூறி, மக்களை ஏமாற்றுவதே பொது வேட்பாளரின் முதலாவது அரசியல் செயற்பாடாகும்;.

இதைச் செய்வதில் இருந்து தான், பொது வேட்பாளரின் முதலாவது மக்கள் விரோத செயற்பாடு தொடங்குகின்றது. ஆள்வோராக தங்;கள் வருவதன் மூலமான ஆட்சி மாற்றத்தை, அனைவரதும் தெரிவாக முன்னிறுத்தி, அதைத்தான் பொதுமக்கள் கோரும் மாற்றமாக காட்டிவிட முனைகின்றனர்.

புதிதாக ஆள்வோரை உருவாக்கும் புதிய ஆட்சி எந்த வகையானது? முந்தைய ஆட்சியில் இருந்து எந்த வகையில் வேறுபட்டது?

பழையவர்களுக்கு மாற்றாக புதிய முகங்களும், ஜனாதிபதிக்கு பதில் பிரதமர் என்ற மாற்றம். எதையும் மாற்றிவிடுவதில்லை. மந்திரிகள், சட்டங்கள், பொலிஸ், இராணுவம் ... என்று அதே அரசு இயந்திரம் மாறுவது கிடையாது. இது மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவரது பொருளாதார வாழ்வைச் சிதைக்கும் நவதாரளமய உலகப் பொருளாதார கொள்கை மாறிவிடுவதில்லை.

இந்த நவதாரளமய சமூக பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அரச பயங்கரவாதமும், அது கொண்டிருக்கும் வன்முறையும் மாறிவிடாது.

100 நாளில் ஜனாதிபதி முறை ஓழிப்பும், தேசிய அரசாங்கமும் என்பது இருக்கின்ற அமைப்பின் மேலான போர்வை மாற்றுகின்ற ஒரு அரசியல் மோசடி. அதற்குள் படுத்துகிடக்கின்ற உடலை மாற்றிவிடுவதில்லை.

இங்கு உடலை மாற்றக் கோருகின்ற மக்களின் வர்க்க ரீதியான விழிப்புணர்வை அழிப்பது தான் உண்மையாக நடந்தேறுகின்றது. அதாவது அமைப்பு முறையை மாற்றது ஆள்வோரை மாற்றக் கோரும் தேர்தல் மூலம், ஆளும் வர்க்கம் செய்கின்ற உண்மையான மாற்றம் இதுதான்.

ஆள்வோரும், ஆளவிரும்புவோரும், ஆளும் வர்க்கமும், அரசு இயந்திரமும் இதை செய்வதில் தமக்குள் முரண்படுவதில்லை. ஆள்வோரும், ஆள விரும்புவோரும் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் வர்க்கத் தன்மையையும் இல்லாதாக்குவதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றனர். ஆள்வோரின் கருவியாக வன்முறை முதன்மை பெற, ஆளவிரும்புவோரின் கருவியாக தேர்தலில் வாக்களிக்கும் "ஜனநயாகத்தை" கொண்டு இதை செய்ய முனைகின்றனர்.

இதை எதிர்த்து எப்படி போராடுவது? ஆள்வோருக்கு பதில் ஆள விரும்புவோரை தெரிவு செய்வதன் மூலம் மாற்றம் வராது என்ற உண்மையை கொண்டு, அமைப்பு முறைக்கு எதிராக போராடுவதாக மாற்ற வேண்டும்.

ஆள்வோரை மாற்றும் இந்த தேர்தல் "ஜனநாயக" அமைப்பு முறை, மக்கள் விரும்பும் மாற்றத்தை தருவதில்லை. உதாரணமாக கல்வியையும் பல்கலைக்கழகங்களையும் தனியார்மயமாவதையும் தடுத்து நிறுத்தி விடுவதில்லை. விதைகளை விவசாயிகள் வைத்திருக்கும் உரி;மையை வழங்கி விடாது. நிலமும், நீரும் உரம் மற்றும் கிருமிநாசி மூலம் மாசுவதை தடுத்து விடாது. தொழிற்சாலைகள் கழிவுகள் சூழலை நஞ்சாவதை நிறுத்திவிடாது. மருத்துவம் தனியார் மயமாவதை நிறுத்தாது. நிலச் சுவிகரிப்பை நிறுத்தது. வாழ்கைச் செலவு சர்வதேச மட்டத்தை எட்டுவதை தடுத்து நிறுத்தாது... இப்படி மக்களின் வாழ்வைச் சுற்றிய அவலத்தை தடுக்காது, தொடர்ந்து இந்த ஆட்சி அமைப்பு முறை அதிகரிக்கவே செய்யும்.

இவை அனைத்தும் நவதாரளக் கொள்கைக்கு அமைவான தேசங் கடந்த மூலதனத்தினதும், நிதி மூலதனத்தினதும் செயற்பாட்டுக்கும் விரிவாக்கத்துக்கும் உட்பட்டது. யார் ஆள்வோராக வந்தாலும், அரசின் கொள்கை இது தான். இது மாறாது.

இதனால் பொது மக்களுக்கு என்ன கிடைக்கும்? பொதுமக்கள் விரும்பும் மாற்றம் வந்துவிடுமா? மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாற்றப்படுதே தொடர்ந்து நடந்தேறுகின்றது என்பதே உண்மை. இந்த உண்மையை தடுத்த நிறுத்த என்ன செய்ய வேண்டும். மக்களை தேர்தலிலும் வர்க்க ரீதியாக அணிதிரளுமாறு வழிகாட்ட வேண்டும். தேர்தலில் இடதுசாரிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி, மக்களை வர்க்க ரீதியாக அரசியல் மயமாக்குவது அவசியம். இதன் மூலம் ஆள்வோரையும், ஆள விரும்புவோரையும் தோற்கடிப்பதன் மூலம், ஆளும் வர்க்கத்தையும் அரச இயந்திரத்தையும் தூக்கியெறியும் வெகுஜன கிளர்ச்சிக்கு வழி காட்ட வேண்டும்;.