Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை மார்க்சியக் கோட்பாடா!? சுயநிர்ணயத்திற்கு மாற்றா!?

சமவுரிமை இயக்கம் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்கும், அவதூறுக்கும் உள்ளாகி வருகின்றது. இலங்கையின் இன மத அரசியல் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட இதன் செயற்பாடு, அறிவுத் துறையினால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றது. இதன் அரசியல் நடைமுறை செயற்பாட்டை முடக்க, இதன் கோட்பாட்டை சிதைக்க முனைப்புக் கொண்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

 

சுயநிர்ணயக் கோட்பாட்டை விளங்கிக் கொள்கின்ற மூன்று வெவ்வேறான கட்டங்களைக் கொண்ட அரசியல் அடிப்படைகளால் 1.அரசியல் கோசமாக, 2.உள்ளடக்கம் கொண்ட கோட்பாடாக, 3.சமவுரிமை என்னும் நடைமுறையைக் கொண்ட அரசியல் இயக்கமாக இருக்கின்றது. இந்த மூன்று வேறுபட்ட அடிப்படையில், சுயநிர்ணயத்தை திரிக்கின்ற மூன்று வகை "சுயநிர்ணய" தேசியவாதங்கள் காணப்படுகின்றது.

1.சுயநிர்ணயத்தை வெறும் கோசமாகக் கொண்ட இனத் தேசியவாதம்

2.சுயநிர்ணயத்தையும், அதன் உள்ளடகத்தையும் தமக்கு ஏற்ப திரித்த, தேசியவாதம்

3.சுயநிர்ணயத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் கொண்ட, அதன் நடைமுறையை (சமவுரிமை செயற்பாட்டை) மறுக்கும் கோட்பாட்டுவாதிகள் மற்றும் தேசியவாதிகள்

இந்த வகையில் சமவுரிமை இயக்கத்தைச் சுற்றி மூன்று போக்குககளை அவதானிக்க முடிகின்றது. சமவுரிமைக்ககு

1.எதிரானதும்,

2.ஆதரவானதுமான இரு போக்குகள், பொது அரசியல் தளத்தில் அவதானிக்க முடிகின்றது.

3.சுயநிர்ணயத்தின் அரசியல் செயற்பாடாக முன்னிறுத்தப்படும் சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடு.

1.சமவுரிமை இயக்கத்துக்கு எதிரானவர்கள்

சமவுரிமை இயக்கத்தின் அரசியல் நடைமுறை சுயநிர்ணயமல்ல என்றும், இது மார்க்சியமல்ல   என்றும் கூறுகின்ற தேசியவாதப் பிரச்சாரங்களும், இதன் அடிப்படையில் பொது சந்தேகங்களும் கூட காணப்படுகின்றது. சுயநிர்ணயம் வேறு, சமவுரிமை வேறு என்ற அரசியல் புரிதலை உருவாக்குகின்றது. சமவுரிமை இயக்கத்தை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினதும், முன்னிலை சோசலிசக் கட்சியினதும் கண்டுபிடிப்பாகக் காண்கின்றதும், காட்டுகின்றதுமான போக்குகள் ஊடாக எதிர்க்கப்படுகின்றது. இதற்கு மேலாக சமவுரிமை இயக்கத்தை தனிநபர்களின் திணிப்பாக கூறுவதும், அதன் அடிப்படையில் விளங்கிக் கொண்டு எதிர்க்கும் போக்குகள் காணப்படுகின்றது.

2.சமவுரிமை இயக்கத்துக்கு ஆதரவானவர்கள்

மனித வாழ்வின் சொந்த அனுபவம் சார்ந்த, மனிதனுக்குரிய சமவுரிமை ஊடாக இதைப் புரிந்து கொள்வதன் ஊடாக இதை ஆதரிக்கும் போக்கு பொதுவாக காணப்படுகின்றது. இன்று இந்த அரசியல் செயற்பாடு மட்டும் சாத்தியம் என்றளவில் இதை விளங்கிக் கொண்டு ஆதரித்து முன்னனெடுக்கும் போக்குகளை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் கூட  சுயநிர்ணயம் வேறு, சமவுரிமை வேறு என்ற அரசியல் புரிதலை தங்கள் அரசியல் அடிப்படையாகக் கொண்டு, சமவுரிமைக்கு ஆதரவாக அணுகுகின்ற போக்குகள் காணப்படுகின்றது. சமவுரிமை ஊடாக சுயநிர்ணயத்தை அடைய முடியும் என்று கருதும், இரண்டையும் வௌ;வெறான அரசியல் நடைமுறையாக அணுகும் போக்கு.

3.சுயநிர்ணயத்தின் நடைமுறை உள்ளீடே சமவுரிமை இயக்கம்

சமவுரிமை இயக்கத்தை எதிர்த்து போராடும் தரப்பை எதிர்த்துப் போராட, கோட்பாடு மற்றும் தத்துவார்த்த ரீதியாக சமவுரிமைக்கான அரசியல் போராட்டத்தைப் புரிந்து கொள்வது அவசியமானது. சமவுரிமைக்கான போராட்டம் சுயநிர்ணயத்தின் அரசியல் உள்ளீடாகும். சமவுரிமை இயக்கம் என்பது, சுயநிர்ணயத்துக்கு வெளியில் உருவான புதிய கண்டுபிடிப்பல்ல. பாட்டாளி வர்க்கம் தனது ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக லெனினினால் முன்வைக்கப்பட்ட செயல்பூர்வமான, சுயநிர்ணயத்தின் பொது அரசியல் நடைமுறை தான் சமவுரிமைக்கான போராட்டம்.

பாட்டாளி வர்க்க ஆட்சியில் தேசங்களிள் தன்னாட்சி கொண்ட ஒரு தீர்வை எட்ட, சமவுரிமைக்கான போராட்டம் மூலமே வந்தடைய முடியும். லெனின் சமவுரிமைக்கான போராட்ட  நடைமுறை ஊடாக அதை விளக்குகின்றார். லெனின் சமவுரிமைக்கான அதன் செயல்பூர்வமான அரசியல் உள்ளடக்கத்தை விளக்கும் போது "தேசிய இன சமாதானத்தை அடைவதன் பொருட்டும், சமவுரிமைகளைப் பெறவும், வர்க்கப் போராட்டத்துக்கான மிகச் சிறந்த நிலைமைகளை உருவாக்கவும் வேண்டி மட்டுமே.... பாட்டாளிகள் தமது கோட்பாடுகளை முன்வைக்கின்றார்கள்" என்றார். இதற்கு வெளியில் அல்ல. மேலும் லெனின் கூறுகின்றார் "சமத்துவமும் ஒரு தேசிய இன அரசுக்கு சம உரிமைகளும் வேண்டும்.." என்றும் "தமது தேசிய இன அரசுகளை அமைத்துக் கொள்ளும் உரிமை, சம உரிமை உண்டு..." என்று கூறுகின்றார். இந்த வகையில் சமவுரிமைக்கான லெனினின் ஒருங்கிணைந்த விளக்கங்களைக்  கொண்டதே, சுயநிர்ணயக் கோட்பாடு.

சமவுரிமைக்காக போராடாத சுயநிர்ணயக் கோட்பாடும் சரி, கோட்பாட்டு ரீதியான கொள்கை விளக்கமும் சரி, மார்க்சியமல்ல. சமவுரிமையை வந்தடையாத சமூக அமைப்பில், சுயநிர்ணயம் முன்வைக்கும் தீர்வை பற்றிய பேச எந்த இடமுமில்லை. சமவுரிமைக்கு போராடாத சுயநிர்ணயம், அப்படி ஒன்று கிடையாது. யாரெல்லாம் லெனின் கோரிய சமவுரிமைக்காக நடைமுறையில் போராட்டவில்லையோ, அவர்களால் மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்யணத்தை கோரவும் பேசவும் முடியாது போகின்றது. இது மட்டுமல்ல, அவர்கள் முன்வைக்கும் சுயநிர்ணயம் லெனின் முன்வைத்த சுயநிர்ணயமல்ல என்பது வெளிப்படையானது. இந்த வகையில் சுயநிர்ணயக் கோட்பாட்டு வர்க்க அரசியல் நடைமுறை உள்ளடக்கமாக இருப்பது, சமவுரிமைக்காக போராடுவது தான்.  லெனின் முன்வைத்த சுயநிர்ணயக் கோட்பாடு முழுக்க, இதைக் கண்டுகொள்ள முடியும். அதாவது சமவுரிமைக்காக போராடுவது தான் சுயநிர்ணயத்தை அடைவதற்கான நடைமுறை. 

இலங்கையின் விசேடமானதும் குறிப்பானதுமான அரசியல் சூழ்நிலைமைக்கு ஏற்பவே, லெனின் முன்னெடுத்த சமவுரிமைக்கான நடைமுறை வடிவத்தையே முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு இலங்கையில், ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்கள் மத்தியில் திரிந்து, அதன் அரசியல் உள்ளடக்கம் மற்றும் நடைமுறையை மறுத்த ஒரு இனவாதக் கோட்பாடாகவே காணப்படுகின்றது. இதனால் தான் இனவாதத்துக்கு எதிராக சுயநிர்ணயக் கோட்பாட்டை மேல் இருந்து முன்னெடுப்பதில் உள்ள தடை, இலங்கையின் விசேடமானதும் குறிப்பானதுமான அரசியல் சூழலாகும். இதனால் தான் சுயநிர்ணய உள்ளடக்கத்தை கீழ் இருந்து முன்னெடுக்கும் செயற்பாட்டு அரசியல் முதன்மை பெறுகின்றது. சுயநிர்ணய கோட்பாடு கோரும் சமவுரிமைக்கான நடைமுறைப் போராட்டத்தை முன்னிறுத்தி, முதன்மையான அரசியல் செயற்பாடாக பாட்டாளி வர்க்கம் முன்னுக்கு கொண்டு வருகின்றது. கோட்பாட்டை முன்னிறுத்திய அரசியல் செயற்பாட்டுக்கு பதில், செயற்பாட்டை முன்னிறுத்தி கோட்பாட்டை கொண்டு வரும் செயல்முறையாக சமவுரிமை இயக்கம் முன்நகர்த்தப்படுகின்றது.

சமவுரிமை இயக்கத்தை முன்னெடுக்கும் செயற்பாடு, எமதோ அல்லது எந்த தனிநபரினதோ திட்டமல்ல. மாறாக மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையில் உருவான தேசங்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டு அரசியல் நடைமுறையில் இருந்து எடுக்கப்பட்ட இயக்கம் தான் சமவுரிமைக்கான இயக்கம். லெனின் நடைமுறையில் முன்வைத்து முன்னெடுத்த செயற்பாட்டு வடிவம், இனங்களுக்கு இடையில் சமவுரிமையைக் கொண்டு வருவதாகவே இருந்தது. நாம் அதை முன்னிறுத்திய செயற்பாட்டு வடிவத்தைக் கோரியே, ஒரு அரசியல் வெகுஜன இயக்கத்தை முன்னெடுக்கின்றோம்.  சுயநிர்ணயக் கோட்பாட்டின் உள்ளடக்கத்திலான அதன் அரசியல் நடைமுறையை மறுக்கின்றவர்கள் தான், சமவுரிமையை மறுக்கின்றனர். சுயநிர்ணயத்தை வெறும் கோட்பாடாகவும், தேசியவாதக் கோட்பாடாகவும் குறுக்கி விடுகின்றனர்.

மார்க்சியத்தை அதன் வர்க்க அரசியல் நடைமுறையை நீக்கி வெறும் அறிவு சார்ந்த தத்துவமாக்கப்படுவது போல் தான், சுயநிர்ணயக் கோட்பாட்டை பலரும் முன்வைக்கின்றனர். சுயநிர்ணயக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தின் அரசியல் நடைமுறை என்பது சமவுரிமைக்காக போராடுவதே. இந்த சமவுரிமைக்கான அரசியல் நடைமுறையை நீக்கி அணுகுகின்ற தேசியவாதமே, பாட்டாளி வர்க்க விரோதத்துடன் முன்வைக்கப்படுகின்றது.

சமவுரிமை என்னும் அரசியல் நடைமுறையைக் கொண்ட கோட்பாடுப் பெயர் தான்  சுயநிர்ணயம். சமவுரிமை என்னும் அரசியல் நடைமுறைக்கு, சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டு பெயர் அவசியம் கிடையாது. உள்ளடக்கத்தையும் அது சார்ந்த நடைமுறையையும் விளக்குவது தான் பெயர். நடைமுறையை மறுத்து கோட்பாடாக மாற்றி, அதன் உள்ளடக்கம் சிதைக்கப்பட்டு, சுயநிர்ணயத்தின் பெயரால் சமவுரிமைக்கான அதன் நடைமுறைகள் மறுக்கப்படும் போது, அதற்கெதிரான நடைமுறைப் போராட்டம் முதன்மை பெறுகின்றது.

சுயநிர்ணயக் கோட்பாட்டு உள்ளடக்கம் கோரும் சமவுரிமைக்கான அரசியல் நடைமுறையை கீழ இருந்து முன்னெடுக்கப்படுவதன் மூலமே, கோட்பாட்டுக்குரிய அதன் உள்ளடக்கத்தை மீளவும் சரியாக முன்னிறுத்த முடியும். இதன் மூலமே தேசிய இனப்பிரச்சனைக்கு, சுயநிர்ணயம் ஒரு அரசியல் தீர்வாக மாறும்.

பி.இரயாகரன்

05.12.2013