Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை அரசின் கொள்கையா!?

சமவுரிமைக்கான போராட்டத்தை அரசின் கொள்கை என்று கூறுகின்றவர்கள், சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவராக இருக்கின்றனர். இதுதானே எதார்த்தம்.

இன்று இனங்களுக்கும் மதங்களுக்கும் சமவுரியை மறுக்கின்றதன் விளைவு தான், இன முரண்பாடுகள் மற்றும் மத முரண்பாடுகள். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடாதவர்கள், அரசின் இந்தக் கொள்கைக்கு தொடர்ந்தும் உதவுபவராக இருக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது, இனப்பிரச்சனையில் அரசின் அதே கொள்கையே என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்துகள் மூலம், உண்மையில் சமவுரிமையை மறுக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது தவறு என்றும், சமவுரிமையை முன்வைக்கின்றவர்களின் கொள்கை, அதை மறுக்கின்றவர்களின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்றும் காட்டுகின்ற அரசியல் இன்று எதுவாக இருக்க முடியும்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சமவுரிமைக்காக போராடுவதின் அரசியல் முக்கியத்துவதை புரிந்து கொள்ள முடியும்.

யார் இன்று சமவுரிமையை மறுக்கின்றனரோ, அவர்களின் அதே கொள்கையே இரண்டும் ஒன்றேயென்று கூறுகின்றவர்களின் அரசியலாகவும் இருக்க முடியும். சமவுரிமைக்காக போராட ஒன்றுமில்லை என்பதே, இரண்டும் ஒன்று என்று கூறவைக்கின்றது. இதன் மூலம் நேரெதிரான அரசியல் வேறுபாட்டை மறுக்கின்றவர்கள், சமவுரிமைக்கான போராட்டத்தையே மறுக்கின்றனர். இதன் மூலம் சமவுரிமையற்ற இன்றைய அரசியல் சூழலை, அரசியல் ரீதியாக பாதுகாக்க முனைகின்றனர்.

இன்று சமவுரிமையை யார் மறுக்கின்றனரோ, அதே போல் இதற்கு எதிராக போராடுவதையும் யார் எதிர்க்கின்றனரோ, அவர்களும் அதே அரசியலை அடிப்படையைக் கொண்டு செயற்படுகின்றனர். இப்படி ஒரே அரசியல் கண்ணோட்டம் கொண்ட, முரண்பட்ட எதிர்த்தரப்பு அரசியலாக இருக்கின்றது. இரண்டும் சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றது. அதற்காக போராடுவதை மறுக்கின்றது. போராட்டத்தை சேறடிக்க, பலவிதமான வேசங்களைப் போடுகின்றது. இன்று சமவுரியை மறுப்பதும், அதற்கான போராடுவதை மறுப்பதுமே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் வர்க்க அரசியலாக இருக்கின்றது.

இன்று சமவுரிமையை மறுக்கின்ற அரசுக்கு எதிரான எதிர்தரப்பாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, சமவுரிமையை மறுக்கின்ற போக்கு இனரீதியாக பிரிந்து நிற்கும் ஒடுக்கும் வர்க்கத்தின் மற்றொரு தந்திரம் தான். சமவுரிமையை மறுப்பதற்கு நிகராக, சமவுரிமைக்காக போராடுவதையும் மறுக்கின்றது. இதன் இன்றைய அரசியல் அர்த்தம் ஒடுக்கப்பட்ட சிங்கள-தமிழ்-முஸ்லீம்-மலையக மக்கள், சமவுரிமையை வலியுறுத்தி ஒன்றிணைந்து போராடுவதை மறுக்கின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய ஆரம்ப செயற்பாடுகளும், அதன் அரசியல் எதார்த்தங்கள் மீதான சுரண்டும் வர்க்கங்களின் அச்சங்களும், அதன் பொது அரசியல் வெளிப்பாடுகளும் இன்று அரசியல் ரீதியாக தலையெடுக்கின்றது. தன்னை மூடிமறைத்துக் கொள்ள, இட்டுக்கட்டிய அவதூறுகளுடன் வெளிக்கிளம்புகின்றது. இதன் மூலம் சமவுரிமை இயக்கத்தை தாக்கி அழிக்க முற்படுகின்றது.

இது தாக்கியழிக்க முனைகின்ற அரசியல் புள்ளி, சமவுரிமைக்காக போராடுவது தவறானது என்ற தர்க்கவாதம் தான். சமவுரிமையும், அதற்கான போராட்டமும் தவறானது என கோட்பாட்டு ரீதியாக தவறானதாக காட்ட முற்படுகின்றது. சமவுரிமை இனப்பிரச்சனைக்குரிய தீர்வேயல்ல என்று, தனது அவதூறுகள் ஊடாக நாசூக்காகவே கூற முற்படுகின்றது. இதன் மூலம் சமவுரிமை அல்லாத, வேறு ஒரு தீர்வை மூடிமறைத்து முன்வைக்க முனைகின்றது. அது உளுத்துப் போன, அதே தனிநாட்டுக் கோரிக்கைதான்.

நடைமுறை சார்ந்த எந்த மக்கள் தீர்வும், சமவுரிமைக்கான போராட்டத்துக்கு வெளியில் சாத்தியமில்லை. சமவுரிமை மறுக்கப்படுவதும், சமவுரிமைக்கான போராட்டத்தின் மூலமாக தீர்வு காண்பது கடந்தும், எந்தத் தீர்வும் மக்களுக்கானதல்ல. இலங்கை மக்கள் தான் தீர்வு காண வேண்டிய விடையம் இது என்பதும், அது சமவுரிமை அடிப்படையிலேயே என்பதும் வெளிப்படையானது. இதை மறுத்து, சமவுரிமையைக் கடந்து மக்கள் விரோதிகள் மட்டும் தான் செயற்படமுடியும்.

பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க ஆட்சியில் இனப்பிரச்சனையை தீர்க்க முன்வைக்கும் தன்னாட்சியிலான சுயநிர்ணயம் கூட, சமவுரிமை அடைப்படையில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு இடையில் முன்வைக்கின்றது. இன்று சமவுரிமையைக் கோரி ஒன்றிணைந்து போராடும் தேசங்களே, தன்னாட்சி அடிப்படையிலான தேசங்களுக்கான தீர்வையே பாட்டாளி வர்க்க ஆட்சியில் சமவுரிமை அடிப்படையில் முன்னெடுக்கின்றது.

இப்படி இருக்க சமவுரிமைக்கான போராட்டம் அரசுக்கு சார்பானது என்றும், இனப்பிரச்சனையில் கொள்கை அளவில் வேறுபாடு அற்றது என்ற பிரச்சாரமும், அடிப்படையில் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சி உரிமையை மறுக்கின்றது. அதே நேரம் அதற்கான இன்றைய வர்க்க போராட்டத்தை அரசியல் ரீதியாக மறுக்கின்றதாகும்.

இதை அரசியல் ரீதியாக மறுப்பது, இன்று முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து சமவுரிமைக்கான போராட்டத்தை மறுக்கிறவர்கள், இன்று இரண்டு தரப்பாக இருக்கின்றனர்.

1.அரசும் பேரினவாதிகளும்

2.குறுந்தேசிய இனவாதிகள்

இவர்கள் இருவரும் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக, சுரண்டப்படும் மக்கள் ஒன்றிணைந்து சமவுரிமைக்காக போராடுவதை மறுக்கின்றவராக இருக்கின்றனர். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்தரப்பாக இருந்து கொண்டு, மக்களின் சமவுரிமையை மறுக்கின்றவராக, அவர்களை பிளந்து ஒருவருக்கொருவர் எதிரியாக்குகின்றவராக இருக்கின்றனர். இவர்கள் தான் சமவுரிமை இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய ஒன்றல்ல என்று கூறி, அதை மறுக்கின்றவராக அதற்கு எதிராக செயற்படுபவராக இருக்கின்றனர். இதன் மூலம் மக்கள் சமவுரிமை அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுகின்ற அரசியல் எதார்த்தத்தை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர்.

சமவுரிமை தான் பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைப்பதற்கான நெம்புகோல் மட்டுமல்ல, சுயநிர்ணய அடிப்படையில் தேசங்களின் தன்னாட்சியையும் நிலைநாட்டுதற்கான திறவுகோல். இதற்கு வெளியில் சுயநிர்ணயம் என்பது, மூடிமறைத்த அரசியல் சந்தர்ப்பவாதமே. அது சமவுரிமையை மறுக்கின்ற அரசியலாக இன்று தன்னை வெளிப்படுகின்றது.

பி.இரயாகரன்

02.12.2013