Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

மனித வரலாறு வர்க்கப் போராட்ட வரலாறு மட்டுமல்ல, தோற்றவர்களின் வரலாறும் கூட

நவகாலனிய சமூக அமைப்பில் சுதந்திரமான மனித வாழ்வுக்கான தோல்வியை மூடிமறைக்கவே, தேர்தல் நடத்தப்படுகின்றது. தேர்தல் முடிவுகளை மக்களின் "சுதந்திரமான" தெரிவாகவும், மக்களின் "ஜனநாயக"த்தின் தேர்வாகவும், ஆளும் வர்க்கக் கோட்பாடுகள் விளக்கம் கொடுக்கின்றது. மக்களின் அரசியல் தெரிவாகவும், மக்களின் வெற்றியாகவும் அங்கீகரிக்குமாறு கோருகின்றது. இதை பாட்டாளி வர்க்கத்திடம் கோருகின்ற, சீர்திருத்தவாத அரசியல் போக்குகளும் அரங்கில் காணப்படுகின்றது. மார்க்சிய வர்க்க நடைமுறைக் கண்ணோட்டத்தை மறுத்து, வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம் கூட, தேர்தல் முடிவுகளை மக்களின் வெற்றியாக காட்ட முற்படுகின்றது. மக்களின் வெற்றியை மறுப்பது இடதுசாரியத்தின் தோல்வியே ஒழிய, மக்களின் தோல்வியல்ல என்று கூறுகின்றனர். இதன் மூலம் ஆளும் வர்க்கங்களால் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற, பாட்டாளி வர்க்க விரோத அரசியலை முன்தள்ளபடுகின்றது.


"வடபகுதி மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது, மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்." என்று ஜனாதிபதி மகிந்த ஐ.நாவில் கூறியதன் மூலம், மக்களை இந்த தேர்தல் முறை மூலம் எப்படித் தோற்கடித்துள்ளோம் என்பதை மிகத் தெளிவாக உலகறிய பிரகடனம் செய்தார். ஆளும் வர்க்கங்களால் மக்கள் தோற்கடிப்பட்டதை, பாட்டாளி வர்க்கம் கண்டுகொள்ளாமல் இருத்தலே பாட்டாளி வர்க்க அரசியல் என்கின்றனர் வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம். இந்தத் தேர்தல் மூலம் மகிந்த அரசு வென்றது என்று கூறுவது, மார்க்சிய கண்ணோட்டத்துக்கு எதிரானது என்கின்றனர். இதுதான் மார்க்சியத்துக்கு எதிரான, தேர்தல் முடிவு தொடர்பான மார்க்சியமல்லாத அரசியல் கண்ணோட்டமாகும்.

மறுதளத்தில் இந்த தேர்தல் மூலம் வென்ற கூட்டமைப்பு என்ன கூறுகின்றது, தாங்கள் மட்டுமல்ல, மக்களும் தான் வென்றதாக கூறுகின்றது. இதை மறுப்பது மார்க்சியமல்ல என்று வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம் இன்று முன்வைக்கின்றது. கூட்டமைப்பால் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்கின்றனர். இதை மூடிமறைக்கவே மார்க்சியத்தின் கையாலாகாத்தனம் என்றும், பாட்டாளி வர்க்கத்தின் தோல்வியாக, இதற்கு அரசியல் விளக்கமும் கொடுக்க படுகின்றது.

ஆக மக்கள் தோற்றவராக கருதவும், கூறவும் முடியாது என்ற அரசியல் தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. இதன் அர்த்தம், மக்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர் என்ற, அதே ஆளும் வர்க்க கருத்தோட்டத்தை மறைமுகமாக முன்வைக்க முற்படுகின்றனர். தோற்றவர்கள் வரலாறு என்று ஒன்று கிடையாது, யாரும் இங்கு தோற்கவில்லை. தோற்றவர்கள் மார்க்சியவாதிகள் என கூறப்படுகின்றது. வென்றவர்களின் வரலாறுக்குள் நின்று, அனைத்தையும் அணுக வேண்டும் என்கின்றனர். தோற்றவர்களின் வரலாறு மக்களுடையதல்ல, மார்க்சியத்தை மக்களில் இருந்து தனியான பிரிவாக பிரித்து மார்க்சியம் தோற்றதாக காட்டிவிட முனைகின்றனர். மக்களுக்கு வெளியில் அது இருப்பதாக கூறி, வென்றவர்கள் பக்கம் மக்களை மறைமுகமாக இணைத்து விடமுனைகின்றனர்.

இதை முன்னிறுத்த கையாளும் மற்றொரு வாதம் தான், வரலாறு என்பது மக்களுடையது என்ற அடிப்படையில், எதார்த்த உண்மையை அரசியல் ரீதியாக தலைகீழாக்குவதாகும். அதாவது மக்கள் தோற்றதாக மனித வரலாறு இல்லை, வரலாறு என்பது மக்களுடையது என்ற தர்க்கத்தை, மார்க்சியத்துக்கு எதிராக முன்னிறுத்துகின்றனர்.

அதாவது அராஜகவாத (அனாகிஸ்ட்டுகளின்) சிந்தாந்த அரசியல் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த தர்க்க வாதம். எதிர்கால மக்களின் வெற்றியைக் கொண்டு, நிகழ்கால மக்களின் தோல்வியை மறுப்பது. அதாவது ஆளும் வர்க்க வெற்றி பற்றி எதார்த்தத்தில் பேசாது இருப்பதன் மூலம், அரசியல் ரீதியான அந்த ஆளும் வர்க்கத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மறுப்பதாகும். மக்கள் தோற்கவில்லை, மக்கள் தோற்கவும் முடியாது என்ற வாதம். மக்களின் எதார்த்தத்தை மறுத்து கேலி செய்கின்ற அராஜகவாதமாகும். எதிர்கால வெற்றியைக் காட்டி நிகழ்கால உண்மைகளை மறுக்கிறது.

இலங்கையில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ரீதியாக செயலற்று இருக்கின்றது என்பது, மக்களின் தோல்விக்கான அரசியல் அடிப்படை. இதனால் மக்கள் தோற்கவில்லை என்று கருதுவது, கற்பனையானதும், மானசீக வாதமுமாகும். காலங்காலமாக தோற்றவர்களின் வரலாறே மக்களுடையது என்பதும், அதை மறுப்பதும் என்பது ஆளும் வர்க்கக் கோட்பாடாகும்.

தேர்தல் முடிவு தொடர்பான பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை மறுக்கும் வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம் அரசியல் அடிப்படை என்பது, மக்களின் தோல்வியில் இருந்து மீட்பதற்கான அரசியல் செயல் தந்திரத்தை மறுப்பதாகும். இந்த அரசியல் அடிப்படை என்பது, இலங்கைத் தேர்தலில் யாரும் தோற்றவர்களல்ல என்று கூறமுற்படுவதாகும்.

ஆளும் வர்க்கங்களால் மக்கள் எப்படி தோற்கடிக்கப்பட்டார்கள் என்று கூற முற்படும் போது, அதை மறுக்க முற்படுகின்றார்கள். இதை மூடிறைக்க தோற்றவர்கள் பாட்டாளி வர்க்கமே ஓழிய, மக்களல்ல என்கின்றனர்.

மக்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதில் இருந்தான அரசியல், பாட்டாளி வர்க்க செயல்தந்திரத்துக்கு பதில், மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற பாட்டாளி வர்க்க நடைமுறையல்லாத அரசியல் அடிப்படையில் இருந்து, அரசியற் செயல் தந்திரத்தை பாட்டாளி வர்க்கத்தை கோருவதுமே, அரசியல் ரீதியான இரு வேறுபட்ட நேர் எதிரான அரசியல் வழியாக இன்று காணப்படுகின்றது.

வர்க்கப் போராட்டத்தை மறுப்பதுமட்டுமல்ல, தோற்றவர்களின் வரலாற்றை மறுப்பதுமே ஆளும் வர்க்கக் கோட்பாடாகும். இங்கு தோற்றவர்கள் யாருமில்லை என்ற வாதம், அரசியல் ரீதியாக முன்தள்ளப்படுகின்றது. இந்த வகையில் ஆளும் வர்க்கத்தின் தேர்தல் வெற்றியை, மக்களின் தோல்வியாக கருதக் கூடாது. அப்படித் தோல்வியாக கருதுவது மார்க்சியமல்ல என்று கூறுகின்ற, வாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதன் அரசியல் அர்த்தம் மக்களின் வெற்றியாக அதன் போக்கில் கருத அனுமதிக்க வேண்டும் என்கின்ற, பொது அரசியல் ஓட்டத்தை அனுசரிக்கின்ற அரசியல் சந்தர்ப்பவாத நிலையை மறைமுகமாக முன்னிறுத்துகின்றது.

இந்த அரசியல் மூலம் எதார்த்தம் மீதான பாட்டாளி வர்க்க செயல் தந்திரத்தை மறுத்து, போலி இடதுசாரியத்தை முன்னிறுத்துவதாகும். அதாவது மக்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதில் இருந்தான அரசியல் செயல்தந்திரத்துக்கு பதில், மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இருந்தான அரசியல் செயல் தந்திரத்தை பாட்டாளி வர்க்கத்திடம் கோருவதாகும். மார்க்சியத்துக்கும், வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியத்துக்குமான இரு வேறுபட்ட அரசியல் செயல் தந்திரம், எல்லா விடையங்களிலும் இப்படி அரசியல் ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.

இடதுசாரியம் அனைத்தும் மார்க்சியமல்லாமல் இருக்கின்ற பொது அரசியல் ஓட்டத்தில், வலதுசாரிகள் மட்டுமின்றி, வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம் நிலைப்பாடும் கூட மார்க்சியத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது. மார்க்சியத்துக்கு எதிராக இன்று இப்படி இரண்டு பொதுவான அரசியல் போக்குகள் காணப்படுகின்றது.

இன்று இலங்கையில் பாட்டாளி வர்க்கக் கட்சி இல்லை என்ற அரசியல் எதார்த்தமும் (பாட்டாளி வர்க்கக் கட்சிக்குரிய பரிணாமத்தை கொண்டுள்ள நிலையில்), பாட்டாளி வர்க்கமல்லாத போலி இடதுசாரிய கட்சிகள் இருக்கின்றன என்ற உண்மையும், அரசியல் அணுகுமுறையில் இரு வேறு அரசியல் வழியை முன்வைக்கின்றது. தத்துவ மற்றும் கோட்பாட்டுத் தளத்தில், அரசியல் ரீதியாக இரு நேர் எதிரான போராட்டங்களை, ஒரு நேர் கோட்டில் கொண்டு வருகின்றது. வர்க்க நடைமுறையில்லாத போலி இடதுசாரியமே மார்க்சியம் என்று அடிப்படையில், தன்னை மூடிமறைத்துக்கொண்டு பயணிக்க முற்படுகின்றது.

ஆளும் வர்க்கத்தின் வெற்றியை மக்களின் தோல்வியாக கருதுவது தவறு என்கின்றது. தோல்வியை மார்க்சியத்தினதும், பாட்டாளி வர்க்கத்தினதும் தோல்வியாக ஒத்துக்கொள்ளக் கோருகின்றது. இப்படிக் கருத வேண்டுமே ஓழிய, ஆளும் வர்க்கத்தால் மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக கருதக் கூடாது என்கின்றது. ஆளும் வர்க்கத்தால் மக்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற அரசியல் செயல் தந்திரத்தை மறுப்பதே, ஆளும் வர்க்க சித்தாந்தத்தின் அரசியல் அடித்தளமாகும். இதையே பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக இன்று அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கமல்லாத தரப்பால் முன்தள்ளப்படுகின்றது.

 05.10.2013