Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான இனம் கடந்த போராட்டத்தை, மூடிமறைக்கும் இனவாத அரசியல்

தமிழர்களை ஒடுக்குவதை சிங்கள மக்கள் எதிர்ப்பதில்லை என்ற தமிழ் இனவாத பிரச்சாரத்துக்கு, சவால் விட்டுள்ளது சிங்கள மக்களின் போராட்டம். யாழ் பல்கலைக்கழகம் மீதான அரச பயங்கரவாதம் நடந்த அடுத்தநாளே, அதற்கு எதிரான போராட்டத்தை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் நடத்தியிருக்கின்றனர். இதை தமிழ் இனவாதிகளும் விரும்பவில்லை, பேரினவாதிகளும் விரும்பவில்லை. தமிழ் - சிங்களம் என்று தனித்து இனரீதியான "வர்க்கப்" போராட்டம் நடத்தப் போவதாக கூறுகின்றவர்களும் கூட இதை விரும்பவில்லை. இந்த வகையில் நடந்த போராட்டத்தை அனைத்துத் தரப்பும் இருட்டடிப்பு செய்கின்றனர். அனைத்து இனரீதியான செயற்பாடுகளுக்கும், அரசியலுக்கும் இது சவால் விட்டுள்ளது. தொடங்க இருக்கும் போராட்டத்தில் முதல் பக்கம் இது.

இந்த வகையில் பேரினவாதம் அரச யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், வடகிழக்குக்கு வெளியிலுள்ள பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டது. இனம் கடந்து நடந்த, வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. இந்தச் செய்தியை தமிழ் ஊடகங்கள் கூட திடட்மிட்டு மறைத்திருக்கின்றது. பி.பி.சி இதை ஒரு சிறு செய்தியாக வெளிக்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தங்கள் குறுகிய இன அரசியலாக்கும் கூட்டம், அதற்கு எதிராக சிங்கள மக்கள் போராடுவதை விரும்புவதில்லை. இன ஐக்கிய அடிப்படையில் அரசியலைக் கொண்டிராதவர்கள், அப்படி சிங்கள மக்கள் போராடுவதை தமிழ்மக்களிடம் கொண்டு செல்வதையும் விரும்புவதில்லை. இது அனைத்து அரசியல் அடித்தளத்தையும் ஆட்டிவிடுகின்றது. சிங்கள மக்கள் பேரினவாதத்துக்கு எதிராக போராடுவதை, தமிழினவாதிகள் கூட விரும்புவதில்லை என்பது தான் உண்மை.

இந்த வகையில் இன அரசியலை சாரமாகக் கொண்ட வலது இடது பிரச்சாரம் மூலம், மக்களை இனரீதியாக பிரித்து வைத்து இருப்பதைiயே அனைவரும் விரும்புகின்றனர். இதில் ஒரு பகுதியினர் "இன வர்க்க" விடுதலை பற்றிக் கூட பேச முனைகின்றனர்.

இனரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட, ஒடுக்கும் இன மக்கள் தயாராவது பரவலாக மூடிமறைக்கப்பட்டு எதிர்க்கப்படுகின்றது. இனங்களை தனிமைப்படுத்தி ஒடுக்குகின்ற அரசியலை, இனியும் இலங்கையில் அனுமதிக்கக் கூடாது. இந்த வகையில் பாட்டாளி வர்க்க அரசியலைக் கொண்டவர்கள் கொள்கைரீதியாக மட்டுமல்ல, நடைமுறைரீதியாகவும் அதை முன்னெடுப்பதில் முதல் காலடி தான், நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்களில் நடத்திய போராட்டங்கள். இது தொடரும்.

சக மாணவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்தை கீழ் இருந்து உருவாக்குகின்ற அரசியல் முன்னெடுப்புகளின் ஒரு பகுதி இது. இனரீதியான அரச பாசிச பயங்கரவாதத்தைக் கொண்டு இனங்களைப் பிரித்து ஆளுகின்ற பேரினவாத உத்தியை, வர்க்க ரீதியான அரசியல் நடைமுறை மூலம் முறியடித்தாக வேண்டும். இதற்கு வெளியில் நாம் பேசும் மார்க்சியம் கிடையாது.

இந்த வகையில் கம்யூனிஸ்ட்டுகள் போராடுவார்கள். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான இன ஐக்கியத்ததை கீழ் இருந்து கட்டுவதற்காக, ஓன்றிணைந்து போராடுவதின் ஆரம்பம் தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான பரந்த போராட்டம்.

எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான முழுமையான வர்க்கப் போராட்டமாக இது மாறும். அந்த திசையில் வர்க்க சக்திகள் தங்கள் முதல் காலடியை முன்வைத்து பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இருட்டடிப்புகள் மூலமோ, அடக்குமுறை மூலமோ இதை தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கு வெளியில் வேறு எந்த பாட்டாளி வர்க்க அரசியலும் கிடையாது. இதை முன்னெடுக்க முனையாத யாரும், தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்ள முடியாது. நாங்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், இனவொடுக்குமுறையை முறியடிக்க முடியும். இனம் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தும் போராட்டம் மூலம், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரளுவது அனைவரதும் கடமையாகும்.

பி.இரயாகரன்

30.11.2012