Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 27)

என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது.

1. என்.எல்.எப்.ரி. போன்ற அமைப்புகளில் உள் முரண்பாட்டின் மேல், புலிகள் போன்ற பாசிச முறை கையாளப்பட முடியாதது என்ற அரசியல் வரையறையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை இது  அம்பலமாக்கியது.

2. நான் அதன் தலைமையில் இருந்தது தெரிந்திருக்கவில்லை.

இவை என் மீது திணித்த அவர்களின் வதையை எதிர் கொள்ள போதுமானதாக இருந்தது. அவர்களை திசை திருப்பவும், அவர்களின் அனைத்து சதிமுயற்சியையும் இது தகர்த்துவிடும் என்பதை அவர்களின் முட்டாள் தனங்கள் மீண்டும் நிர்வாணப்படுத்தியது. அத்துடன் மத்தியகுழு உறுப்பினரான என்னை, தலைமை விசாரிக்கின்றது என்றது கேலிக்குரியதாக என் முன் மாறியது. இதில் இருந்து புலிகளை முறியடிப்பது என்பது மேலும் இலகுவானதாகியது.

வெற்றி என்பது யுத்தமுனையில் மட்டும் ஒரு போராளிக்கு இருப்பதில்லை. அவன் எங்கு, எந்த நிலையில் போராடுகின்றானோ, அங்கெல்லாம் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது. இதுதான் ஒரு போராளியின் போராடும் பண்பை உருவாக்குகின்றது. எங்கெல்லாம் கோழையைப் போல் நாம் ஒடுங்கி வாழ்கின்றோமோ, அங்கெல்லாம் தோல்வியே கிடைக்கின்றது. தோல்வியை அறியாத போராட்டத்தை வெற்றி கொள்வது, மனிதனின் இயற்கைப் பண்பும் கூட. இதனால் தான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக, எதிரி எல்லா தளத்திலும் அடக்குமுறையை ஈவிரக்கமின்றி ஏவுகின்றான். ஆனால் அந்த அடக்கு முறையினை,  ஒவ்வொரு உணர்வுள்ள கம்யூனிஸ்டும் வெற்றிகரமாக வெல்லுகின்றான். இதுதான் எதிரியை அதிக பீதிக்குள்ளும் அதேநேரம், அதிக சித்திரவதைக்குள்ளும் சரணடைய வைக்கின்றது. எதிரியின் கோட்டையில், அவனின் சிறையில், அவனின் வதைமுகாம் என எங்கும், ஒரு போராளி தன் கொள்கையில் வெற்றியை சாதிக்கமுடியும்;. எதிரியை முகம் குப்புற கவிழ்த்து, அவனின் நோக்கத்தை தகர்ப்பதன் மூலம் அது பெறப்படுகின்றது. இதில் மரணிக்கலாம் அல்லது ஈவிரக்கமற்ற சித்திரவதையை சந்திக்கலாம்;. ஆனால் வெற்றி எப்போதும் போராடும் களத்தில், கம்யூனிஸ்ட்டுகளின் போராட்ட உறுதியில், மக்கள் மேலான உணர்வில் தீர்மானகரமாகின்றது. இந்த மரணங்கள் தனிப்பட்ட மனிதனின் உள்ளுணர்வு சார்ந்த எதிர்க்கும் ஆற்றலாக ஒரு முகப்படும் போது, எதிரி குப்புற வீழ்கின்றான். மரணத்தின் போதும் அவன் சமூக ஆற்றலில் நம்பிக்கையை பிரகடனம் செய்யும் போதும், மரணங்கள் நிகழ்வதில்லை. அவர்கள் வாழ்வு சமூக இயக்கத்துடன் இணைந்து நிற்பதை கண்டு பூரித்து நிற்கும் மனிதன், எதிர்க்கும் ஆற்றலை எதிரியின் வதைமுகாங்களில் போராட்டமாக மாற்றுகின்றான். உலகெங்கும் சித்திரவதை முகாங்களில் இது நாளாந்த நிகழ்ச்சியாகவே நடந்துகொண்டேயிருக்க, பூமி தனது சுழற்சியை தொடர்கின்றது.

இந்த ஒநாய்களின்; வதைகளை எதிர்கொண்டு எதையும் சொல்லாது மௌனம் சாதித்த நிலையில் தொடர்ச்சியாக தாக்கப்பட்டேன். அதேநேரம் கோட்டை இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வீசும் செல்கள், கட்டிடம் அருகில் விழுந்து கட்டிடத்தையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் ஒடிச் சென்று பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நீண்ட நேரமாக செல் சத்தம் நிற்கும் வரை, எந்த  ஓநாய்களும் வரவில்லை. நானோ தொங்கவிடப்பட்ட நிலையில் விடப்பட்டிருந்தேன். செல் வந்து வீழ்வது ஒய்ந்த பின்பு மரமாமிசங்கள் மீண்டும் வந்ததுடன், தொடர்ச்சியாக தாக்கினர். நடுநிசியானதும் தாக்குதல் குறைந்தது. தொங்க விடப்பட்ட நிலையில் சித்திரவதையின் கோரத்தால் கண்ணயர்ந்து  நித்திரையாகினேன். கடும் சித்திரவதை இதை வலுக்கட்டாயமாக என் மீது திணித்தது. இந்த அரை மயக்க நித்திரையை குழப்பும் வகையில், வாளியில் கொண்டுவந்த குளிர்நீரைக் கொண்டு அரைமணிக்கு ஒருதடவை என் மீது அடித்து ஊற்றினர். ஊற்றிய உடன் மோசமாக தாக்கப்படுவதுமாக, அனறைய இரவு மெதுவாக நகர்ந்தது. இந்த தாக்குதலை அங்கு காவலில் இருந்த, புலித் "தேசிய வீரர்கள்" செய்தனர். இயக்கத் தலைமை அடுத்தநாள் களைப்பின்றி தங்கள் வதைகளை தொடர்ச்சியாக செய்ய, அநேகமாக நித்திரைக்கு சென்றிருக்க வேண்டும்;. காலை மலம் கழிக்கவோ சிறுநீர் கழிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. சிறுநீர் நின்ற நிலையில் என்னை அறியாமல் வெளியேறியது. மலம் கழிப்பதை என்னால் அடக்க முடிந்தது. நிலம் ஈரலிப்பால் பிசுபிசுத்து நுனிவிரலில் சுள்ளிட்டது. தொடர்ச்சியான ஈரலிப்பினால் நுனிவிரல் உணர்வற்று மரத்துப்போனது.

15 வருடங்களுக்கு பின்பாக நடந்த ஒரு சம்பவத்தை நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்க முடியும். பல்கலைக்கழக மாணவர் தலைவனாக செயற்பட்ட திவ்வியனை புலிகள் என்ற சந்தேகத்தில் இராணுவம் கைது செய்தது. அதுவும் இவருக்கு பின்னால் வந்த நபர் இராணுவத்தை கண்டு தப்பி ஒடிய போதே, இந்த கைது நிகழ்ந்தது என்பதை திவ்வியன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். இங்கு திவ்வியனை யாழ் நீதி மன்றத்தில் கொண்டு வந்த போது, அதில் சாட்சியம் ஒன்றை அளித்தார். அதைப் புலிகள், இராணுவத்தின் மக்கள் விரோத நடவடிக்கை என்று அம்பலப்படுத்தும் வகையில் பெரியளவில் வெளியிட்டனர். புலிகளின் பத்திரிகையான ஈழமுரசு 26.7.2001 இல் "நான்கு அல்லது ஐந்து பேர் அளவில் என்னைப் பிடித்து உடனடியாக எனது கண்ணை கட்டி, கையில் ஏதோ வயர் போன்ற ஒன்றால் கட்டித் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கினர். சப்பாத்துக் கால்களாலும் அவர்களது துப்பாக்கிக் கைபிடிகளாலும் தாக்கி என்னை நிலத்தில் போட்டு உழக்கினர். நள்ளிரவு 3 மணிவரை தொடர்ந்து தாக்கினர்... எனக்கு கடுமையான தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. நான் தண்ணீர் கோரிய போது ஒற்றைக் காலில் நிற்கும்படி கடுமையாகக் கூறினார்கள்... மூன்று மணி அளவில் இரண்டு சொட்டுத் தண்ணீர் மட்டும் என் வாய்க்குக் கிடைத்தது... மறுநாள் எனக்கு நேரம் தெரியவில்லை. பெரும்பாலும் மதியமாக இருக்கலாம். சப்பாத்து உதையுடன் பொழுது விடிந்தது. அதுவரை எனது கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தான் இருந்தன... அன்றிரவு அங்கே தங்கவைக்கப்பட்டேன் சாப்பிட முடியவில்லை." என்று குறிப்பிட்டதை எடுத்துக் காட்டிய புலிகள், இவற்றை இராணுவத்தின் மனிதவிரோத நடவடிக்கையாக வருணிக்கத் தவறவில்லை. இந்த நிலையை விட மோசமாக புலிகளின் சிறையில் நான் இருந்த போது, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்டு இருந்தேன். நித்திரை இன்றி, உணவு இன்றி, குடிக்க நீரின்றியும், அப்படியே நின்ற நிலையில் சிறுநீரைக் கழித்தேன்.  இந்தநிலை என்பது எவ்வளவு மோசமான, மனிதவிரோத நடவடிக்கை என்பதை ஒப்பீட்டில் நாம் புரிந்து கொள்ளமுடியும். இந்த நிலையை நான் நான்கு முறை தொடர்ச்சியாக இடை வெளியூடாக சந்தித்தேன். இதை எந்த பத்திரிகையும், "நடுநிலையான" ஜனநாயக செய்தி அமைப்பும் செய்தியாக்கவில்லை. மாறாக இதை மூடிமறைத்து தமது மனிதவிரோதத்தை ஜனநாயகமாக்கினர். புலிகளின் பினாமிகள் முதல் எல்லா மனிதவிரோத ஜனநாயகவாதிகள் வரை, புலிகளின் வரலாற்றில் நிகழ்ந்த சில ஆயிரம் மனிதப் படுகொலைகளை மூடிமறைத்தே தேசியத்தைப் பற்றி பீற்றுகின்றனர். ஆனால் இந்த வரலாற்று படுகொலையிலான தேசிய இருட்டடிப்பை, மனித வரலாறு மீட்டு எடுக்கும். இதை எந்த ஜனநாயக பினாமிய புலம்பல்களும் தடுக்க முடியாது.

இந்த நிலையில் 29,30,1 திகதி தொடர்ச்சியான வதையுடன் கூடிய தாக்குதல் இடைவேளை இன்றி நடத்தப்பட்டது. இந்த நாட்களில் குடிக்கும் நீர் மற்றும் உணவு தரப்படவில்லை. இந்த நாட்களில் மலம் கழிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. சிறுநீர் நின்ற நிலையில் எனது உணர்வை மீறி வெளியேறியது. தொடர்ச்சியாக நீர் குடிக்காமையால் சீறுநீர் அளவு குறைந்து போனது. வயிறு காய்ந்து போனது. வயிறு உணவைக் கோருவதை கைவிட்டது. என் உடல் தண்ணீரைக் கோருவது மட்டும், என்னை மீறி நீண்டதாக இருந்தது. முதல் நாள் போன்றே பகல் இரவு வேறுபாடின்றி தாக்குதல் மற்றும் நித்திரையை குழப்புவதை தொடர்ச்சியாக இடைவெளியின்றி செய்தனர். தங்கள் புதிதாக ஏற்படுத்திய இரத்த காயங்களை விறாண்டி இரத்தத்தை ஒழுக விட்டு ரசிப்பதை, அவர்கள் கை ஓய்வின்றி செய்தது.  ஒரேயொரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டபடி இருந்தனர். கேள்வியை தொடர்ச்சியாக மூவர், மாறி மாறிக் கேட்டவண்ணம் இருந்தனர். இருவர் அதற்குள் என்னைப்பற்றி தனிப்பட்ட குறிப்புகளை என்னிடம் இருந்து எடுத்தனர். மாத்தையா இவர்களை தாண்டி இடையில் புகுந்து கொள்வார்.

அவர்களிடம் இருந்த முரண்பாடுகளை அவதானிக்க முடிந்தது. சித்;திரவதையைச் செய்தவர்கள், சில பொருட்களை குறித்து அவற்றை நீ கொடுத்தாயா என்ற கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் எதைக் குறித்த தகவலை கேட்கின்றனர் என்பதை, இதன் மூலம் அறிந்த கொள்ள முடிந்தது. நான் வசந்தனிடம் கொடுத்த பொருள் சார்ந்து, அவற்றை அடையாளம் கண்டு கொண்டேன். வசந்தனிடம் இருந்து அவர்கள் எடுத்த பொருட்களை நான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதே சித்திரவதையின் மையமான கேள்வியாகவும் நோக்கமாகவும் இருந்தது. இது முதல் 15 நாட்களுக்கு பின்னர் முற்றாக மாற்றம் கண்டது. அவர்கள் என்னிடம் இது குறித்து கேட்ட கேள்விகளிலும், அதை ஒரேவிதமாக கேட்கத் தவறிய விதத்திலும், அதன் முரண்பாட்டிலும், அவர்கள் தம்மை அறியாது எனக்கு வெளிப்படுத்தியவற்றையும், அடிப்படையாக கொண்டு ஒரு சிலவற்றை புதிதாக சொல்வது போல் மீள ஒத்துக்கொண்டேன். அவர்கள் அதை எடுத்து வந்து எனக்கு காட்டி, இதையா நீ கொடுத்தாய் என்று மீளவும் கேட்டனர். ஆம் என்றேன்;. வேறு என்ன கொடுத்தாய் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு தாக்கப்பட்டேன்.

நான் வேறு எதுவும் அல்ல என்றேன். முதலாம் திகதி இரவு மீண்டும் மாத்தையா வந்தார். என் கண் மீளவும் இரண்டாம் முறை அவிழ்க்கப்பட்டது. அவர் தன்னை தெரியுமா என்று கேட்டார். நான் தெரியாது என்றேன். அவர் தன்னை சிறி என்று அறிமுகம் செய்து கொண்டார். உண்மையில் மாத்தையாவை முன் கூட்டியே எனக்கு தெரிந்திருந்தும், நான் தெரியாது என்றே கூறினேன்;. தெரியும் எனக் கூறின், எப்படி தெரியும் என்ற கேள்வியை தவிர்ப்பது அவசியமாக இருந்தது. அத்துடன் நான் அமைப்பின் வெறும் பிரச்சார உறுப்பினர் என்ற புலிகளின் கணிப்பை கேள்விக்குள்ளாக்குவதை தவிர்த்தேன். அவரை தெரியும் என்பது, என் பற்றிய அவரின் மதிப்பீட்டையே மாற்றிவிடலாம் என்ற காரணத்தால் தெரியாது என்றேன். அத்துடன் அவரை தெரியும் என்பதை அறிவிப்பது, அவசியமற்ற ஒன்றாகவும் இருந்தது. மாத்தையாவை 1982 முதல் நான் அறிவேன். 1982ம் ஆண்டு இயக்க நிதி சேகரிப்பு ஒன்றை தெல்லிப்பளைக்கு அருகில் உள்ள கிராமமான கட்டுவனில் நாம் செய்து கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் புலிகளின் பதுங்கிடத்துக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாத்தையா தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய ஐவர் குழு, எம்மில் ஒரு பகுதியை சுற்றி வளைத்தது. அவர்கள் ஏன் நிதி சேகரிக்கின்றீர்கள், நீங்கள் யார் என்று கேட்டு கதைக்கத் தொடங்கினர். கதைத்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். அன்று அந்த நிதி சேகரிப்பில் 20க்கு மேற்பட்டோர் பிரிந்து நின்று செயற்பட்டோம். அதில் நால்வர் குழுவையே புலிகள் அடையாளம் கண்டு, ஆயுத முனையில் சுற்றிவளைத்தனர். ஆயுத முனையில் சுற்றிவளைத்த தகவல் கிடைத்தவுடன், நெருக்கமாக நாம் அருகில் சென்றதுடன் அடையாளம் காட்டாது கதைப்பதை அவதானித்தோம். அப்போதும் அவர் தன்னை சிறி என்றே அறிமுகப்படுத்தினார். இறுதியாக போராட்டத்தில் எஞ்சப் போவது நாங்களும் நீங்களும்தான் என்றார். அப்போது உங்களுடன் கணக்கு தீர்ப்பதாக கூறிச் சென்றார். அதாவது வலதுசாரி குழுவான தாங்களும், இடதுசாரி குழுவான நீங்களும் தான் மிஞ்சுவீர்கள் எனறு கூறி மிரட்டிச் சென்றது முதல், நான் மாத்தையாவை அறிவேன்;. நான் கிளிநொச்சியிலும் வெவ்வேறு சந்தர்ப்பத்திலும் இருமுறை அவரைக் கண்டுள்ளேன். இது போல் பிரபாகரனையும், குரும்பசிட்டி அடகு நகைக்கடை கொள்ளை நடந்த போது அவரை அந்த கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் கண்டேன். கொள்ளைக்காரர்கள் போல் கொள்ளையடித்தவர்களை எதிர்த்த அப்பாவி மக்கள் இருவரை, அந்த இடத்திலேயே ஈவிரக்கமின்றி அன்று குரும்பசிட்டியில் கொன்றனர். அப்போது நான் இயக்கத்தில் இருக்கவில்லை. கொள்ளை நடந்த போது அந்த வீதியால் போய்க் கொண்டிருந்தோம். இதில் ஈடுபட்டவர்களை மக்கள் கொள்ளைக்காரராகவே கருதி எதிர்த்துப் போராடினர். இப்படி இரகசியமாக ஒளித்து வாழ்ந்த அவர்கள் பற்றிய ஒரு அறிமுகம் இருந்தது.

நான் வதைமுகாமில் இருந்து தப்பி வரும் வரை, அவர் தன்னை மாத்தையா என்பதை தெளிவுபடுத்தவில்லை அதுபோல் நான் அவரைத் தெரிந்த மாதிரி காட்டவுமில்லை. மாத்தையா சிறி என்று தன்னை அறிமுகப்படுத்திய பின்பு, விசாரணையில் உண்மையை நீ கூற மறுத்துவிட்டாய் என்று எச்சரித்தார். எனவே உயர்மட்ட விசாரணைக்காக வேறு இடம் மாற்றப்படுகிறாய் என்று கூறியதுடன், அதற்கு முன்பாக எதுவும் சொல்ல விரும்புகிறயா என்று கேட்டார். நான் எதுவுமில்லை என்றேன். அவர் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினார்.

எனக்கு முன் பிடிபட்டவர் மூலம் அவர்கள் தெரிந்து கொண்டதைக் கூட, கடந்த நான்கு நாட்களாக எதையும் கூற மறுத்துவிட்டேன். இதனால் தான் அவர்கள் என்னை புதிய வதைமுகாமுக்கு மாற்றப்போதாக கூறினர். நான்கு நாட்களின் பின் என் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. ஒருமணி நேரம் தனியாக கண் அவிழ்க்கப்பட்ட நிலையில் நிலத்தில் இருந்தேன்.

நீண்ட மௌனம்;. எழுந்து அறையை மெதுவாக சுற்றி வந்தேன். யன்னலைத் தொட்டுப் பார்த்தேன். கதவடிக்கு சென்று மௌனமாக ஒற்றுக் கேட்டேன். சுவர்களை தொட்டு கதைக்க முனைந்தேன். சுவரின் அடையாளங்களை தொட்டு ஆராய்ந்தேன். மேல் தளத்தை நிமிர்ந்து பார்த்தேன். அதற்கிடையில் அவர்கள் வந்தார்கள். என் கை அவிழ்க்கப்பட்ட நிலையில், ஒரு குவளை தண்ணீர் முதல் தடவையாக நான்கு நாட்களின் பின் தந்தார்கள். அத்துடன் உணவாக ஒரு கொத்துரொட்டி பார்சல் ஒன்றை எறிந்து விட்டுச் சென்றார்கள். உணவு உண்டவுடன் வயிற்றுக் குத்து ஏற்பட்டது. கதவைத் தட்டி மலம் கழிக்க கேட்ட போதும், நாயைப் போல் உறுமி மறுத்தனர். நான்கு நாட்களாக மலம் கழிக்கவில்லை. வயிறு குத்திய   நிலையில், மலம் கழிக்க அனுமதிக்காத நிலையில், அறைக்குள்ளேயே வயிற்றால் அடிக்கத் தொடங்கியது. மூக்கைப் புடுங்கும் துர்நாற்றம் கொண்ட மலம், எனது கட்டுப்பாட்டை மீறி வெளியேறியது. இந்த மணம், எங்கோ இருந்த அந்தப் பன்றிகளுக்கும் மூக்கைத் துளைத்திருக்க வேண்டும். உறுமிக் கொண்டு வந்தவர்கள், அறைக்குள் எட்டிப் பார்த்தவர்கள் நாய் போல் கத்தி ஊளையிட்டார்கள். அப்படியே விட்டுவிட்டு திரும்பிச் சென்றனர். அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தவர்கள் (அனேகமாக மேலிட உத்தரவு கேட்ட பின்பு) அதை துடைக்க கோரியதுடன், கக்கூசுக்கு ஊற்றும் நெருப்புத் தண்ணீரை அறைக்குள் கவிழ்த்து ஊற்றினர். கொஞ்சப் பேப்பரும், கொஞ்சத் துணியும் தந்தவர்கள், அதை கொண்டு துடைக்கக் கோரினர். அந்த துணியில் ஒரு மேல் சட்டை (சேட்டும்) அடங்கும். அந்த சேட்டோ இரத்தக் கறைகள் படிந்து, காய்ந்து முறுகிக் கிடந்தது. (இரண்டாவது வதைமுகாமில் இரத்தக்கறைகள் படிந்த உடுப்புகளை குவியலாகவே நான் தரிசிக்க முடிந்தது.) இது அந்த வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஒரு அப்பாவியின் சேட்டு, என்பது தெளிவானது. இரத்தம் காய்ந்த மணம் வயிற்றைக் குமட்டியது.

அறையை சுத்தம் செய்து முடிய அவர்கள் என் கண்ணைக் கட்டிய பின்பு, நிர்வாணமாக மலம் கழிக்க அழைத்துச் சென்றனர். என் கண் மலசல கூடத்தில் அவிழ்க்கப்பட்ட பின்பு, ஏ.கே-47 துப்பாக்கி முனையில் அவர்கள் நேராக என்னைப் பார்த்;து நிற்க மலம் கழிக்க அனுமதித்தனர். பின் மீண்டும் கண் கட்டப்பட்டு நிர்வாணமாக அழைத்து வந்து, அறையில் வைத்து கண்ணை அவிழ்த்த பின்பு காலால் உதைந்து விட்டுச் சென்றனர். களைத்துப் போன நிலையில் நாற்றம் கொண்ட ஈரத் தரையில் தொப்பென விழுந்த நான், சில நிமிடத்தில், என்னையறியாமலே நித்திரை கொண்டேன். அடுத்த நாள் மதியம் கழுதையைப் போல் காலால் உதைத்து எழுப்பியவர்கள், சரம் (லுங்கி) ஒன்றைத் தந்தவர்கள் அதை அணியக் கோரியதுடன், கையைப் பின்புறமாக கட்டினர். இரண்டு மணித்தியாலங்களின் பின்பாக கண்ணை மூடிக் கட்டினர். பின்பு கழுதையைப் போல் தோள் மூட்டில் உதைந்து கீழே தள்ளியவர்கள், எனது காலைக் கட்டினர். விழுந்த போது பிடரி அடிபட சடாரென சத்தத்துடன் விழுந்தேன். வலி என் உயிரை வாங்கியது. சித்திரவதையூடாக உருவாக்கிய காயங்கள் முதல் உடலின் உள் காயங்கள் வரை விண் விண்ணென்று பொறிதட்டி வலித்தன. உதைப்பது கூட மக்களின் போராட்ட பணத்தில் பயிற்சி பெற்ற ஒரு வக்கிரமான கலையாக இருந்தது. அண்ணளவாக அரை மணித்தியாலம் நிலத்தில் விடப்பட்டேன்;. திடீரென இருவரால் தூக்கிச் செல்லப்பட்டு, மதிய வெய்யிலில் தகதகவென சுடும் வகையில் விடப்பட்ட வானில், தொப்பென வீசி எறியப்பட்டேன்;. சிறிது நிமிடத்தில் இன்னுமொருவரும் அருகில் போடப்பட்டார். அவர் அனேகமாக வசந்தனாக இருக்க வேண்டும். சுடும் வானில் தகரச் சூடு தோலை சுட்டு எரித்தது. இப்படி அடுத்த வதைமுகாமில் தொடங்கவிருந்த சித்திரவதைக்கான பயணம் தயார் செய்யப்பட்டது.

தொடரும்
பி.இரயாகரன்

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1                         பாகம்- 21

பாகம்- 2 & 3                   பாகம்- 22

பாகம்- 4 & 5                   பாகம்- 23

பாகம்- 6 & 7                  பாகம்- 24

பாகம்- 8 & 9                  பாகம்- 25

பாகம்- 10                      பாகம்- 26

பாகம்- 11

பாகம்- 12

பாகம்- 13

பாகம்- 14

பாகம்- 15

பாகம்- 16

பாகம்- 17

பாகம்- 18

பாகம்- 19

பாகம்- 20