Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

இலங்கை இனவாத சேற்றைத்தான், தன் சொந்த வரலாறாகக் கொண்டுள்ளது. இந்த இனவாத சேற்றில் இருந்து மக்களை விடுவிக்க முனையாத அரசியலை விமர்சிப்பதும், அதை சுயவிமர்சனம் செய்வதும் இன்று முதன்மையானது. இது எப்படி இன்று முதன்மையானதோ, அதேபோல் இதற்காக போராடியவர்களை வரலாற்றில் இருந்து சரியாக அடையாளம் காண்பதுவும் அவசியமானது. இதன் மூலம் தான், வரலாற்றை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான வரலாற்றை உண்மையில் தொடங்க முடியும். வரலாற்றில் இருந்து இதை சரியாக அடையாளம் கண்டு கற்றுக் கொள்ளாத அரசியல், அதில் இருந்து சுயவிமர்சனத்தை செய்யாத அரசியல், மீண்டும் ஒரு இருண்ட வரலாற்றைத்தான் எமக்கு பரிசளிக்கும்.

வரலாற்றை நாம் சரியாக அரசியல் ரீதியாக கற்;றுக்கொள்வதில் இருந்து தொடங்கியாக வேண்டும். குறுந்தேசியப் (புலிப்) பாசிசத்தையும் அரச பாசிசத்தையும் மட்டுமல்ல, அது கட்டமைத்த இனவாத தேசிய அரசியலையும் எதிர்த்துப் போராடும் புள்ளிதான், ஐக்கியத்துக்குரிய ஒன்றிணைவதற்குரிய குறைந்தபட்ச அரசியல் அடிப்படையாகும். கடந்த காலத்தில் இதை எதிர்த்துப் போராடாத, அதை சுயவிமர்சனம் செய்யாத எந்த அரசியலும், எந்த தனிநபர் அரசியலும் நேர்மையற்றது. இது ஐக்கியத்தையோ, ஒன்றிணைவையோ உருவாக்காது. அது உள்ளிருந்து மீண்டும் குழி பறிக்கும்.

இதைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதுதான், வெளிப்படையான உண்மையான ஐக்கியத்துக்கும், புரிந்துணர்வுக்கும் ஒன்றிணைவுக்கும் வழிகாட்டும்.

தமிழ் - சிங்கள இன ஐக்கியத்தை உருவாக்கும் போராட்டம் என்பது, இனத்தை பிளக்கும் அனைத்து அரசியல் கோட்பாட்டையும் மறுப்பதில் இருந்து தொடங்குகின்றது. ஐக்கியத்தை முன்நிபந்தனையாகக் கொண்டு, இனவொடுக்குமுறைக்கு எதிரான முரணற்ற ஜனநாயகத்தை முன்னிறுத்தி, இதை முறியடிக்க வேண்டும்;.

தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை சிங்கள மக்கள் புரிந்து கொண்டு, அதை முறியடிக்க வேண்டும். இது சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் கடமை. அதேநேரம் தம்மை ஒடுக்கும் அரசு வேறு, சிங்கள மக்கள் வேறு என்பதை தமிழ் மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம், பிரிவினைவாத சக்திகளை முறியடிக்கவேண்டும். தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் கடமை இது. இந்த வகையில் அரசியல் முன்னெடுப்பு முன்நிபந்தனையானது, அவசியமானது. தமிழனின் எதிரி சிங்களவன், சிங்களவனின் எதிரி தமிழன் என்ற இரு தரப்பு பொதுக் கண்ணோட்டடத்தையும் சிந்தனையையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதுதான் புரட்சிகர சக்திகளின் கடமை. இதுதான் வர்க்கப் போராட்டத்தின் தொடக்கம்.

மக்கள் வர்க்க உணர்வு ஊட்டப்படவேண்டும்;. இதற்குத் தடையாக இருப்பது அரசின் இனவொடுக்குமுறையும். அதில் இருந்து எழும் பிரிவினைவாதமும் ஆகும்.

இதைத் தடுத்து, தகர்த்தெறிய லெனின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு எமக்கு வழிகாட்டுகின்றது. லெனினின் சுயநிர்ணயத்தை பிரிவினைவாத சக்திகள் தமக்கு சார்பாக திரித்தது போல், இனவொடுக்குமுறை சார்ந்து நின்று பிரிவினைக்கு எதிரான ஐக்கியமாக காட்டி திரித்துக் கூறினர். லெனினை இப்படி பிரிவினைவாத சக்திகளும், ஒடுக்குமுறை சக்திகளும் திரித்து தமக்கு ஏற்ப பயன்படுத்தின. இதை மறுத்துப் போராடவும், லெனினை சரியாக முன்னிறுத்தி முன்னெடுக்கத் தவறிய பொறுப்பு, வர்க்க சக்திகளைச் சாரும்.

உண்மையில் வர்க்க சக்திகள் லெனினின் சுயநிர்ணயக் கோட்பாட்டை அதன் திரிப்பில் இருந்து பாதுகாக்கும் வண்ணம், சுயநிர்ணயம் பாலான தங்கள் வர்க்கக் கடமைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கவில்லை.

இதனால் லெனினின் கோட்பாட்டைத் திரித்துக் காட்டியதன் மூலம், இனங்களுக்கு இடையில் பிளவை மேலும் ஆழப்படுத்தியது. லெனினின் வர்க்கக் கோட்பாடு தவறாக விளக்கப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டது. இது எமக்கு பொருந்தாது என்று கூறுமளவுக்குச் சென்றது.

லெனினின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்வைத்து, வர்க்கப் போராட்டத்தை நடத்தவேதான். பிரிவினையை ஆதரிக்கவோ, ஒடுக்கும் ஐக்கியத்தை நியாயப்படுத்தவோ அல்ல. நாம் வர்க்கப் போராட்டத்தில் இருந்து அரசியல் ரீதியாக விலகும் போது, லெனினின் சுயநிர்ணய அடிப்படைகளையும், அதன்பாலான அரசியல் நடைமுறைக் கடமைகளையும் கைவிட்டுவிட்ட நிகழ்வே, எம்மைச் சுற்றிய கடந்தகால வரலாறாகியுள்ளது. இடதுசாரியம் இப்படித்தான் வலதுசாரிய அரசியலின் பின் சோரம் போனது.

லெனினை மறுத்து இயங்கிய எம்மைச் சுற்றிய வர்க்கமற்ற தன்மையை நாம் சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். லெனினின் சரியான கோட்பாட்டை உயர்த்திப் போராடிய கூறுகளை இனம் காண வேண்டும்;. இதில் இருந்து முன்னேறிய தமிழ் சிங்கள சக்திகளுக்கு இடையேயான ஐக்கியத்தையும், ஒன்றிணைவையும் வர்க்க போராட்டம் இன்று எம்மிடம் கோரி நிற்கின்றது.

பி.இரயாகரன்

1.இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01