Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்!

பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை தனது அடக்குமுறையினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவற்றினை அரசு, படைகளைக் கொண்டு முன்னெடுப்பதாலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிக நீண்ட காலமாக பேரினவாதத்திற்கு எதிரான குரல்கள் மற்றும் செயற்பாடுகள் அற்ற நிலையில் எம்முன்னால் ஒட்டுமொத்த சிங்கள இனமுமே எதிரியாக தெரிகின்றது. தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும் “சிங்களம் எம்மை அடக்கியாள அனுமதிக்கோம். தகுந்த பதிலடி கொடுப்போம்” என்பன போன்ற இனவெறியூட்டும் கோசங்களை முழங்கி தமது அரசியல் இருப்புக்காக முழுச் சிங்கள மக்களுமே இனவாதிகள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

பேரினவாத ஆட்சியாளர்கள் தமது ஆட்சியதிகாரத்தினை தொடர்வதற்காக தம்மை ஒட்டுமொத்த சிங்கள மக்களின் நலன்களை பாதுகாப்பவர்களாக வேடமிட்டு பேரினவாத நோக்கில் செயற்படுத்தும் அனைத்து செயல்களையும் சிங்கள மக்களின் நலன்களிற்காக என  பிரச்சாரப்படுத்துகின்றனர். இந்த ஆட்சியாளர்களின் சுரண்டல் காரணமாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஒருவேளைச் சோற்றுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களை குறைந்த ஊதியத்தில் இராணுவத்தில் சேர்த்து இனவெறியூட்டி சிறுபான்மையின மக்களுடன் மோதவிட்டுள்ளனர். தமது மேட்டுக்குடி பிள்ளைகளை வெளிநாடுகளில் உயர்கல்விக்கும் தொழிலிற்கும் அனுப்பி சுகவாழ்வு வாழ்கின்றனர்.

மறுபுறத்தில் தமிழ் குறுந்தேசியவாதிகள் சிங்களவர்கள் எம்மை கொல்கின்றனர், குண்டுகளை வீசுகின்றனர், காணிகளை ஆக்கிரமிக்கின்றனர் என சாதாரண சிங்கள மக்களை எதிரியாக காட்டி தமது பாராளுமன்ற கதிரைகளை பாதுகாத்து கொண்டு ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் புரிகின்ற சிங்கள பேரினவாத முதலாளித்துவவாதிகளுடன் கூடிக் கும்மாளமடிக்கின்றனர்.

கடந்தகாலங்களில் இனக்கலவரங்கள் நடந்த போது பல ஆயிரக்கணக்கான தமிழர்களை சாதாரண சிங்கள மக்கள் தமது உயிர்களை பணயம் வைத்து பாதுகாத்து அனுப்பவில்லையா? இன்றும் எமது மக்கள் தெற்கில் தொழில் புரிகின்றனர். வாழ்கின்றனர். இவர்களிற்கு சாதாரண சிங்கள மக்களால் ஆபத்துண்டா? சுனாமி அழிவின் போது மட்டக்களப்பு மக்களிற்கு உணவுப் பொருட்களை சிங்கள கிராமவாசிகள் பல மைல்கள் கால் நடையாக சுமந்து சென்று கொடுத்து மனிதாபிமான உதவிகள் புரியவில்லையா? சாதாரண அடிமட்ட மக்களிடம் ஒரு போதும் இனக்குரோதம் கிடையாது. இனக்கலவரங்களை முன்னின்று நடாத்தியது பௌத்த இனவெறியை தமது ஆட்சியதிகாரத்தினை கைப்பற்ற பாவிக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் குண்டர்படைகளும் தான்.

சிறுபான்மையின மக்களையும் சிங்கள உழைக்கும் மக்களையும் ஒன்று சேரவிடாது இனவாதம், மதவாதம் பேசி பிரித்து வைத்ததன் மூலம் பௌத்த மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல்வாதிகள் ஆட்சியதிகாரத்தின் மூலம் பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளனர். சிறுபான்மையின குறுந்தேசிய அரசியல்வாதிகள் இனஒடுக்குமுறைக்கெதிரான சிறுபான்மையின மக்களின் கோபத்தினை தமது சொந்த நலன்களிற்காக பௌத்த மேலாதிக்க மேட்டுக்குடி ஆட்சியாளர்களுடன் திரைமறைவில் பேரம்பேசி தம்மை மேம்படுத்திக் கொண்டு மக்களை நட்டாற்றில் விட்டுள்ளதே இலங்கையில் கடந்த பல பத்தாண்டுகளாக இடம்பெறுகின்ற அரசியலாகும்.

சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து மடிகின்றார்கள். நாட்டின் வளத்தை அன்னிய நாடுகளுக்கு விற்பதும் நாட்டின் காணிகளை அன்னிய சக்திகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதும், மக்களின் உழைப்பை தயவுதாட்சண்யம் இன்றி சுரண்டுவதையுமே இந்த அரசு மேற்கோண்டு வருகின்றது. இவற்றிற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட முடியாதவாறு மக்களிடையே இன, மத பாகுபாடுகளை மிக நன்கு திட்டமிட்டு ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சாதாரண சிப்பாய் தனது குடும்பத்தின் பசியைப்போக்க அரசின் மாயவலைக்குள் வீழ்ந்து தமிழர்களை அழித்துக் கொண்டிருப்பது அரசின் இனவாத செயற்பாடே தவிர அந்த சிங்கள உழைக்கும் சிப்பாயின் செயற்பாடு அல்ல.

அரசு,இராணுவத்தில் இணைத்துக் கொள்பவர்களை முடிந்தளது இனவாதிகளாக்கியதுடன் தமது ஏவல்நாயாகவும் மாற்றியுள்ளது. இதன் விளைவே இராணுவத்தினர் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத்தினர் மீதும் அடக்குமுறைகளை புரிகின்றனர். இவர்கள் கடந்தகாலத்தில்  பல தடவைகள் தமது சொந்த இனமான சிங்கள இனத்தின் மீது படுகொலைகளை நிகழ்த்தியதனை நாம் இலகுவில் மறந்துவிடக் கூடாது. இந்த ஆட்சியாளர்களினால் கட்டமைத்துள்ள இந்த இராணுவம் நாட்டின் மக்கள் நலன்களிற்கானதல்ல. ஆட்சியாளர்களை மக்களிடமிருந்து பாதுகாப்பதற்க்காக மட்டுமே இந்த இராணுவம்.

அரசு, இன்று தெற்கில் எழுகின்ற பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் எல்லாம் பிரிவினைவாதிகள், இவர்கள் இந்த நாட்டுக்கு தீங்கிழைக்கக் கூடியவர்கள், புலிகள் இன்னமும் செயற்படுகின்றனர், இதற்கு எதிராக சிங்கள மக்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும் என்று பேரினவாதக்குரலிட்டு மக்களை இனவாதமாயைக்குள் மேலும் இழுத்துச் செல்கின்றது. இதற்கு எதிராக இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களின் இனவாத முகத்தினை அம்பலப்படுத்தி இனவாதத்தினை எதிர்த்து அணிதிரள வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துக்களையும் போராட்டங்களையும் தற்போது சமவுரிமை இயக்கம் முன்னெடுத்துச் செல்கின்றது. இது தெற்கில் தோன்றவுள்ள பெரும் புயலுக்கு முன்னறிவுப்பு எனலாம்.