Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் அனாதையான கூட்டமைப்பின் வெற்றுவேட்டு; அரசியல் மேற்கை விடிவெள்ளியாக காட்டுகின்றது

பேரினவாதிகளும் கூட்டணியும் தமக்குள் கூடிக் கூத்தாடும் அரசியல் பித்தலாட்டம் அனைத்தும், போலி யானவை, புரட்டுத்தனமானவை. இவை அனைத்தும் அடிக்கடி பிசுபிசுத்தபடி அம்பலமாகின்றது. மக்களை அணிதிரட்டாத, தங்கள் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லாத எந்தப் போராட்டமும், பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வி பெறும். இதுதான் எம் சொந்த வரலாறு.

வாக்குக்கட்சிகளின் சேடமிழுக்கும் அரசியல், தன் மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கின்றது. இந்த வகையில் வக்கற்றுப்போன கூட்டணியிடம், மாற்றான எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது. அன்னிய சக்திகளின் நிழலில் குளிர்காய்கின்ற, அடகு வைக்கின்ற மோசடி அரசியலைத்தான், இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக இன்று முன்தள்ளுகின்றனர். பொது அரசியல் அரங்கில் சோகத்துடன் கூடிய அறிக்கைகளை விடுவதைத் தவிர, மேற்கிடம் முறையிடு வதைத் தவிர, மாற்றாக எதையும் முன்மொழிய முடியாத நிலையில் அரசியல் அனாதைகள் தான் கூட்டணியும். புலியபை;போல் பேச்சுவார்த்தை நடத்த வக்கற்ற அரசியல் அனாதைகள்.


1980 களில் கூட்டமைப்பின் இதேயொத்த அரசியல் கூத்து முட்டுச்சந்திக்கு வந்தபோது, மாற்றாக ஆயுதப் போராட்டம் என்று மற்றொரு வேசத்தை இந்த அரசியல் தனக்குத்தானே அணிந்துகொண்டது. அது மக்கள் மாற்று போராட்ட வழியில் அணிதிரள்வதை, வேட்டையாடி அழித்தது. இறுதியில் அதுவும் முட்டிமோதி, அரசியல் அனாதையாகியதால் தோற்றுப்போனது. இவர்கள் அனைவரும் மக்களை அணிதிரட்டுவதை மறுப்பதில் இருந்துதான் அரசியல் அனாதையானார்கள். பேரினவாத அரசுடன் கூடிக் குலாவிப் பேசியவர்கள், சிங்கள மக்களிடம் தங்கள் நியாயத்தை எடுத்துச் சொன்னது கிடையாது. மக்கள் தமக்காக தாம் போராடும் வண்ணம் அவர்களை அணிதிரட்ட மறுத்தவர்கள், தங்கள் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லவும் தவறியவர்கள் தொடர்ந்து தோற்றுப் போகின்றனர். கூட்டணி.., புலி.., கூட்டணி என்று இதைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்வதுடன், அரசியல் அனாதையாக நின்றபடி மேற்கை தமிழனின் விடிவெள்ளியாக இன்று காட்டுகின்றனர். அதையே அரசியலாக்குகின்றனர்.


தமிழ் மக்களை இதன் மேல் நம்பிக்கை கொள்ள வைத்து நகர்த்தும் இந்த அரசியல் தான், இன்று பொது அரசியலாக மாறி உள்ளது. அதுமட்டுமல்ல, தாம் தான் இதற்காகப் போராடி இந்தச் சூழலை உருவாக்கியதாகக் காட்டவும் கூட செய்கின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆபத்தான அனாதை அரசியல் மட்டுமன்றி, தமிழ் மக்களை ஏமாற்றி வாழும் பிழைப்புவாதமும் ஓருங்கே இதன் மூலம் அரங்கேறுகின்றது. மேற்கு சார்ந்த ஏகாதிபத்தியங்களுக்கும் இலங்கைக்குமான அரசியல் நெருக்கடி, புலத்து புலிகளின் போராட்டம் சார்ந்து உருவானதா!? இல்லை. இப்படி இருக்க தாம்தான் இதை உருவாக்கியதாக புலிகள் மட்டும் கூறவில்லை, அரசும் புலத்து புலிகள் தான் இதை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர். ஓரேவிதமாக புலத்து மாபியாப் புலிகளும்;, இலங்கை அரசு கூறுகின்ற அரசியல் பின்னணியில், அவரவர் தம் இன மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் அரசியல் தொடருகின்றது. ஆக இதன் பின்னணியில் பல உண்மைகளைக் கூட்டாக மூடிமறைக்கின்றனர். இந்த வகையில் இலங்கை அரசும் மேற்கு சார்ந்த ஏகாதிபத்தியங்களுடன் சந்திக்கும் நெருக்கடியின் பின்னுள்ள உண்மையான 1. அரசியல் சாரத்தை நீக்கி அதைத் திரித்து விடுகின்றனர்.


இலங்கை அரசு புலத்து புலியினால் தான் இந்த நெருக்கடியான சூழல் என்று திரித்து காட்டுவதன் மூலம், உள்நாட்டில் இனவாதப் பிரச்சாரத்தை தொடர முடிகின்றது. அதேநேரம் தன் மக்கள்விரோத குறுகிய நலன் சார்ந்த ஏகாதிபத்திய பக்கச்சார்பு அரசியலால் ஏற்படும் இந்த அரசியல் நெருக்கடியை, சொந்த மக்கள் முன் தொடர்ந்து மூடிமறைக்க முடிகின்றது.


புலத்து மாபியாப் புலிகள் தாம் தான் மேற்கு3. சார்ந்த ஏகாதிபத்தியம் மூலம் இலங்கைக்கு எதிரான நெருக்கடியை உருவாக்குவதாக கூறுவதன் மூலம், தமிழ் மக்களை கைக்கூலிகளாக இருக்கக் கோருகின்றனர். மறுதளத்தில் புலத்து புலிகள் தொடரும் தமக்குள்ளான சொத்து சண்டை அரசியலை மூடிமறைக்கவும், அதேநேரம் இதைக் காட்டி தமிழ்மக்களை கட்டுப்படுத்தும் மாபியாத் தனத்ததையும் தொடர முடிகின்றது.


மேற்கு ஏகாதிபத்திய சொந்த நலன் சார்ந்த 4. இந்த அணுகுமுறையை மூடிமறைத்து, மனித நலனுடன் தான் தமிழ் மக்களுக்காக இதை அவர்கள் முன்வைப்பதாக பாசாங்கு செய்து ஏமாற்ற முடிகின்றது.
யுத்தக் குற்றங்கள் பற்றியும், நீதி விசாரணைகள் பற்றியும், தீர்வுபற்றியுமான மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய அக்கறை போலியானது புரட்டுத்தனமானது. மறுதளத்தில் இதைச் சார்ந்த அரசியலைக் கடந்து, வேறு எந்த அரசியலும் இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்கவில்லை. இதன் பின்னணியில் தான் புலத்துப் புலிகள் இன்று குளிர்காய்கின்றனர். மக்கள் பார்வையாளராக, மந்தைகளாக தொடர்ந்து மாற்றப்பட்டு இருக்கின்றனர். உலகமயமாக்கலில் எந்த ஏகாதிபத்திய முகாம் சார்ந்து இலங்கை இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, மேற்குக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் நெருக்கடி இன்றில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? எதைத்தான் தமிழ் மக்களுக்கு காட்டி இருப்பார்கள்? குழந்தைக்கு சந்திரனை காட்டி ஏமாற்றி உணவூட்டிய மோசடிப் பண்பாட்டின் தொடர்ச்சியில், தமிழ் மக்களையும் மோசடி செய்து ஏமாற்றுகின்றனர்.


இப்படிக் காட்டும் மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய இலங்கை மேலான அக்கறை என்பது, தமிழ்மக்களின் மேலான பேரினவாதத்தின் ஓடுக்குமுறை பற்றியதல்ல. மாறாக இன்றைய உலக ஓழுங்கில் இலங்கை யாருடன் சேர்ந்து எந்த முகாமுடன் நிற்கின்றது என்ற முரண்பாட்டை தீர்க்க, தமிழ் மக்கள் பிரச்சனையை மேற்கு பயன்படுத்துகின்றது. 1983இல் இந்தியா இலங்கையை தனது பிராந்திய நலனுக்கு ஏற்ற நாடாக்க, தமிழ் மக்களின் உரிமை சார்ந்த இனமுரண்பாட்டை பயன்படுத்தியது. இதன் தொடர்ச்சில் ஆயுதப்பயிற்சி கொடுத்தது முதல் நேரடியாக ஆக்கிரமித்தது வரையான அனைத்தும் பிராந்திய சொந்த நலனுடன் செய்தது. இதன் தொடர்ச்சியில் போராட்டத்தை முற்றாக அழித்தது வரையான அனைத்து உண்மையும், இங்கு மீளப் பொருந்தும். இந்த உண்மையையும், அனுபவத்தையும் நாம் நிராகரித்தால், மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய நலனுக்கு தமிழ் மக்களை பலியிடுவதற்குத்தான் உதவும்;. அதுதான் நடக்கின்றது.
இலங்கை அரசு மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய முகாமுக்கு ஏற்ற ஒரு சர்வதேசக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும்;? மேற்கு முகாமுக்கு எதிரான நாடுகளுடனான நெருங்கிய உறவை துண்டித்தால் என்ன நடக்கும்? இலங்கை தொடர்பான மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய அக்கறை முடிவுக்கு வந்துவிடும்;. இன்று தொடரும் வெறும் கண்துடைப்பு நாடகங்கள் அனைத்து கைகழுவப்படும். இதுதானே உண்மை. இதைத்தானே இந்தியா எமக்குச் செய்தது.


அண்மைக்காலமாக இலங்கை அரசு யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம், யுத்தக் குற்றவாளிகள் இனம் காணப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறத்தொடங்கியுள்ளது. இலங்கை அரசு திடீரென இப்படி கூறத் தொடங்கி இருப்பது ஏன்? இது மேற்கு முகாம் நோக்கி இலங்கை அரசின் நகர்வா? இந்த நகர்வுக்கு ஏற்ற கண்துடைப்பு நாடகங்களா? இல்லை இதற்கு மாறாக இலங்கை அரசு மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய அக்கறையை வெறும் புலி சார்ந்த அல்லது தமிழ்மக்கள் சார்ந்த ஒன்றாக தவறாக குறுக்கி புரிந்து கொண்டு, நடத்தும் கண்துடைப்பு நாடகங்களை நடத்த முனைகின்றதா? இங்கு தமிழ் மக்களை வைத்து மோசடி செய்வது மட்டும் வெளிப்படையாக உள்ளது. இந்த மோசடியின் பின்னால் தான் கூட்டணி முதல் புலத்து புலிகள் வரை பயணிக்கின்றனர். இதற்குள் தமிழ்மக்களை தவறாக வழிகாட்டி, மற்றொரு புதைகுழிக்குள் அழைத்துச் செல்லுகின்றனர். இப்படி மேற்கு சார்ந்த ஏகாதிபத்திய குறுகிய நலனுக்குள் தமிழ் மக்களின் தலைவிதியை திணித்து இருக்கின்றனர். அன்று இந்தியா இன்று அமெரிக்கா என்று, தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து புதைக்கின்ற அரசியலையே தொடருகின்றனர்.


அந்த மக்கள் தமக்காக தாம் போராடக் கூடிய அரசியலையோ, சிங்கள மக்களுடன் சேர்ந்து தம் உரிமையை வென்றெடுக்கும் அரசியலையும் போராட்டத்தையும் மறுத்து, கைக்கூலி அரசியலைத்தான் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதனால் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்காது. இதையொத்த கடந்தகால அனுபவத்தை நாம் நிராகரித்தால், எமக்கான புதைகுழியை நாமே கிண்டுகின்றோம் என்பதுதான் இதற்கான அர்த்தமாகும்.