Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06

இயற்கைக்கும், உழைப்புக்கும், நுகர்வுக்கும் இடையிலான மனித உறவுகள் பற்றிய எதார்த்தமே அறிவாகும். இயற்கையில் இயற்கையாக வாழ்தல் அறிவல்ல. இயற்கையைச் சார்ந்து வாழும் மிருகங்கள் கொண்டிருக்கக் கூடிய வாழ்தல் முறை, அதன் அறிவின் பாலானதல்ல. மாறாக தன்னுணர்வு இன்றி அவை செயற்படுகின்றது. இயற்கையுடன் இணைந்த தகவுத் தன்மை கொண்டு இயங்குகின்றது. இயற்கையின் சூழலுடன் படிப்படியாக தன் நிலை மறுத்தல் மூலம் தன்னை இசைவாக்கிக் கொள்கின்றது.

இது தன்னுணர்வின்றி, தகவுத் தன்மை கொண்ட திட்டமிட்ட செயல்கள் மூலம் வாழ்தலாகும். மிருகங்கள் இயற்கையின் போக்கில் எதிர்வினையாற்றுகின்றதே ஒழிய, முற்றாக தன் போக்கில் மாற்றும் திறனற்றது. இதற்கு மாறாக இயற்கையை தன் போக்கில் மாற்றும் மனிதத் திறன் தான், மனித அறிவாகியது. மனித கூட்டுச் செயல் முதலில் மொழியாகி, இறுதியில் அது மனித அறிவாகின்றது.

குழந்தையை எடுத்தால் முதலில் பெரியவர்களைக் பார்த்து அப்படியே தன்னறிவுடன் செயற்படத் தொடங்கும் போது, அது அறிவுக்கான கூட்டுச் செயற்பாட்டின் முதல் காலடியாகும். இதுதான் ஆரம்ப அறிவும் கூட. அதன் பின் அந்தச் செயலின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற் போல் செய்யும் கூட்டுச் செயற்பாட்டுக்கு கருவியும் மொழியும் உதவுகின்றது. இது அறிவாகின்றது. குழந்தையில் இருந்து அறிவு படிப்படியாக பகுத்தறிவு பூர்வமானதாக, சிந்தனை பேச்சோடு மனிதனின் அறிவாகின்றது.

இயற்கையில் எதுவும் தனித்து இயங்குவதில்லை. மாறாக அவை ஒன்றையொன்று பாதிக்கின்றது. இதில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு கிடையாது. மிருகங்கள் கூட திட்டமிட்ட செயல்களைக் கொண்டபோதும், எங்கெல்ஸ் கூறியதுபோல் அதை "சும்மா பயன்படுத்தவே" முடிந்தது. ஆனால் மனிதன் இயற்கைக்கு "எஜமானாகி" தன்போக்கில் அதைப் பயன்படுத்துகின்றான்.

இயற்கையை தன் போக்கில் கையாளும் மனிதத் திறன் தான் அறிவு. இதனால் தான் இயற்கை விஞ்ஞானமே "எல்லா அறிவுக்கும் அடிப்படையாக உள்ளன" என்றார் மார்க்ஸ். அறிவு என்பது இயற்கை பற்றிய அறிவுதான். அதாவது இயற்கையைத் தன் உழைப்பின் மூலம், தன் தேவைக்கு ஏற்ப மாற்றும் அறிவுதான் மனித அறிவு. மனித தேவைகளுடன் உருவான பொருள், எப்படி யாரால் எந்த வடிவில் நுகரப்படுகின்றது என்பதே, சமூகம் பற்றிய மனித அறிவாகின்றது. ஏங்கெல்ஸ் மனிதனின் தோற்றம் பற்றிக் கூறும்போது, எந்த உயிரினத்தை விடவும், மனிதன் தான் "அதிக சமூக உணர்வு கொண்ட மனிதனின் தோற்றத்தை சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை" என்றார்.

சமூகத்தை மையப்படுத்தாது தன்னை முன்னிலைப்படுத்தும் அறிவு இயற்கைக்கு முரணானது. இது மனிதனின் அறிவல்ல. இது மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அறிவாகும். இயற்கையை மறுத்துச் சூறையாடும் அறிவாகும். இப்படி மனித அடிப்படையாக மாறிய இயற்கையின் கூறுகளை மறுப்பதன் மூலம், மீண்டும் மிருகத்தனத்தை வந்தடைதலாகும். இயற்கையைத் தன்னுணர்வின்றி சூறையாடுவது மிருகத்தனமாகும். தன்னினத்தை தானே தன்னுணர்வுடன் சூறையாடுதல், மிருகத்தை விடவும் மிகக் கீழான நிலையாகும்.

சமூக உணர்வில்லாத இன்றைய தன்னுணர்வு கொண்ட தனியுடமை அமைப்பில் மனிதனைக் காண்பது எப்படிச் சாத்தியமில்லையோ, அதுபோல் மனிதனுக்கே உரிய அறிவைக் காண முடியாது. சமூக உணர்வில்லாத அறிவு அறிவல்ல. மாறாக மிருகத்தன்மை கொண்ட, மனிதவிரோத தன்மையைக் கொண்ட அறிவாக அது இயங்குகின்றது.

சமூக உணர்வுள்ள அறிவு, மனிதனை மையப்படுத்துமே ஒழிய பொருளை மையப்படுத்தாது. பொருளில் இருந்து மனிதனைக் காணும் அறிவும், பொருளைப் படைக்கும் உழைப்பின் மூலம் மனிதனைக் காணும் அறிவுமாக, இன்று இரு வேறு உலகக் கண்ணோட்டங்களாக அறிவு பிரிகின்றது. இதனால் தான் எங்கெல்ஸ் கூறினார். "... என்னைப் பொறுத்த வரை இயற்கைக்குள் இயக்க இயல் நியதிகளைப் புகுத்தி நிர்மாணிப்பது என்ற கேள்வியே எழ இயலாது. ஆனால், இயற்கையில் அவற்றைக் கண்டு பிடிப்பதும் இயற்கையிலிருந்து அவற்றைப் பரிணமிக்கச் செய்வதும் என்பதே கேள்வியாயிருந்தது." என்றார். இன்றுள்ள கேள்வி, அறிவு எங்கிருந்து தோன்ற வேண்டும்? அறிவு என்பது இயற்கையில் இருந்து எழ வேண்டும். உழைப்பு உருவாக்கிய பொருளில் இருந்தல்ல. இயற்கையும் உழைப்பும் இணைந்ததே அறிவாக வேண்டும். இதற்கு மாறாக மனிதன் உற்பத்தி செய்த பொருளுக்கு, மனிதன் அடிமையாகிவிட்டான். அதாவது மனிதன் உருவாக்கிய பொருளுக்கு, மனிதனின் சிந்தனை செயல் அனைத்தையும் கீழ்ப்படுத்திவிட்டான். இதனால் அறிவு பொருளுக்குக் கீழானதாகி விடுகின்றது.

தன் உழைப்பின் மூலமான பொருளுக்கு எஜமானாக இருக்கவேண்டிய மனிதன், பொருளுக்கு அடிமையாகிவிட்டான். இதன் அடிப்படையிலான மனித சிந்தனை, செயல் சார்ந்த அறிவு குறுகியதாகும். பொருளை முதன்மையாகக் கொண்ட இன்றைய மனித விரோத சமூக அமைப்புச் சார்ந்ததாக அறிவு பிரதிபலிக்கின்றது. கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, தொட்டுணர்வது, சுவைத்து அறிவது என அனைத்தும், மனித புலனுணர்வுக்கு உட்பட்டு மனித அறிவாக உள்ளது. ஆனால் இது இந்த சமூக அமைப்பின் வரம்புக்கு உட்பட்டது. சுவை, அன்பு தொடங்கி அனைத்து விதமான மனித உணர்வுகளும் அதை வெளிப்படுத்தும் அறிவும் கூட, இந்தத் தனியுடமை அமைப்புக்குரியதே ஒழிய, இயற்கையான சமூக உணர்வு சார்ந்ததல்ல. இது இயற்கைக்கு விரோதமானது.

இந்த எல்லையில் தான் எம்மைச் சுற்றியவற்றை நாம் தெரிந்து கொள்கின்றோம். பொருளுக்கு அடிமையான தனியுடமை அமைப்பின் புலனுணர்வுக்கு உட்பட்ட எல்லைக்குள், மனித அறிவு குறுக்கப்பட்டு அதன் வரம்புகளால் மட்டுப்படுத்தப்பட்டு திணிக்கப்படுகின்றது.

இயற்கைக்கு முரணான இந்த முரண்பாடுகள், வர்க்க முரண்பாடுகளாகின்றது. தனியுடமை அமைப்பில் மனித புலனுணர்வு என்பதை, தன்னை மையப்படுத்தியதாக குறுக்கி விடுவதன் மூலம், அதன் அறிவு விகாரமாகி வெளிப்படுகின்றது. அறிவு மலடாக்கப்பட்டு விடுகின்றது.

இதைப் பூசிமெழுகவே இன்று இயற்றப்படும் "தகவல் அறியும் சட்டம்" ஒரு உண்மையைப் போட்டு உடைக்கின்றது. எமது அறிவு என்பது மட்டுப்படுத்தப்பட்டது என்பதும், அது இந்த அமைப்பின் மேலான வெறும் பூச்சு என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

எமது அறிவு பொய்யானதாகவும், கண்மூடித்தனமானதாகவும் இருப்பதை "தகவல் அறிவுச் சட்டம்" எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக, ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய யுத்தம் பற்றிய எமது அறிவு இன்றும் பொய்யானது. ஈராக்கில் அணுவாயுதம் இல்லை என்று தெரிந்த பின்பும் கூட, யுத்தம் பற்றிய அறிவு உண்மையின் பாலானது அல்ல. அங்கு என்ன நடந்தது, என்ன நடக்கின்றது என்பது பற்றி மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையிலான இந்த உலகத்தின் பொய்மையைக் கூட மனித அறிவு மூலம் மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை.

இதேபோல் "இஸ்லாமிய அடிப்படைவாதம்" பற்றிய எமது அறிவு என்ன? மேற்கு ஏகாதிபத்தியமும், உலகின் ஆளும் வர்க்கங்களும் தன் நலன் சார்ந்து உருவாக்கும் "இஸ்லாமிய அடிப்படைவாதம்" பற்றிய புரிதலைக் கடந்து, அது பற்றிய வேறு அறிவு உள்ளதா? "இஸ்லாமிய அடிப்படைவாதம்" தோன்றும் மூலம் என்ன? அது ஏன் தோன்றுகின்றது? இதை அறிந்து எமது அறிவு எதிர்வினையாற்றாத வரை, எமது அறிவு பொய்யானது.

இன்று இலங்கையில் இனவாதம், மதவாதம்..., எல்லாத் தளத்திலும் இயங்குவதன் பின்னுள்ள அறிவுதான் என்ன? இப்படித்தான் அனைத்தும். இங்கு இவற்றில் முழுமையாக ஒன்றைப் புரிந்து கொள்ளுவதற்குக் கூட, எம் அடிப்படை அறிவு சிரமப்படுகின்றது. எம் அடிப்படை அறிவு, சொந்த வாழ்வைக் கற்றுக் கொள்வதையும், தெரிந்து கொள்வதை மறுப்பதையுமே சாரமாகக் கொண்டது. இந்த சமூக அமைப்பே அப்படிப்பட்டது. மனிதனை மனிதன் தெரிந்து கொண்டு வாழ்வதை மறுப்பது தான், இந்த அமைப்பின் அறம், அறிவு எல்லாம். மனிதனை மனிதன் வெறுக்கவும், தன்னை மற்றவனுக்கு மேலாக மேம்படுத்திக் காட்டவும், இந்த அமைப்பை பாதுகாப்பதுமே, மனித அறிவாக குறுக்கப்படுகின்றது. எதைப் பார்ப்பது, எதைக் கேட்பது, எதை நுகர்வது ..., என்று அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு திணிக்கப்பட்டு விடுவதே அறிவாக்கப்படுகின்றது.அதாவது இந்த அமைப்பில் அடைத்து விடப்பட்ட மந்தைக்குரிய நிலையில், மனித அறிவு குறுக்கப்பட்டுவிடுகின்றது.

இந்த நிலையில் எம்மைச் சுற்றிய இயக்கம் பற்றிய, பொருள் பற்றிய அறிவு உள்ளடக்கமற்றது. இதை புலனுணர்வுக்குள் உள்வாங்கித் தெரிந்து கொள்ளும் போது, குறுகியதாகி புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவற்றை புரிய முடியாத ஒன்றாக மாறுகின்றது. இதுதான் மார்க்சியத்தை புரிதலில் உள்ள இடைவெளியுமாகும்.

தனிமனித புலனுணர்வுக்கு அப்பால் முழு உலகம் தளுவியதாக மனித வாழ்வைப் புரிந்துகொள்ள நாம் முனையும் போது, எம் அறிவு பல மடங்காகின்றது. மார்க்சியத்தை புரிந்து கொள்வது என்பது கூட, எம் வாழ்வு பற்றிய அறிவை, சமூக வாழ்வு சார்ந்த அறிவாக விருத்தி செய்வது தான். ஒன்றில் இருந்து மற்றொன்றைப் பிரித்து இதைப் புரிந்துகொள்ள முடியாது.

எம் வாழ்வை நாம் முழுமையில் புரிதல் அவசியமானது. இங்கு எமது புரிதல் எங்கிருந்து எமக்கு கிடைக்கின்றது? இந்த தனியுடமை அமைப்பிற்கு ஏற்ப, மனிதப் புலனுணர்வு உள்ளாக்கும் எல்லைக்குள் அறிவை உருவாக்குகின்றது. இந்த அமைப்பில் எதை, எப்படி, எந்த வகையில், எந்த அளவில், நுகர வேண்டும் என்பதைக் கடந்து, அறிவுக்கு இடமில்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.

இன்று அறிவு குறித்த சட்டங்கள், அறிவு தனியுடமை ஆகிவிட்டதைக் காட்டுகின்றது. அறிவு சந்தைப் பொருளாகிவிட்டது. சர்வதேச ரீதியாகவும், நாடுகள் ரீதியாகவும், மூலதனம் சார்ந்தும், தனிமனிதன் சார்ந்ததுமான "அறிவுச் சொத்துடமை" சட்டங்கள் காணப்படுகின்றது. இது யாருக்கு எதிராக, எதைப் பாதுகாக்க என்ற கேள்வியை இங்கு இயற்கையாக எழுப்புகின்றது. மனிதனுக்கு எதிரான அறிவுடமைச் சட்டங்கள். மனிதனில் இருந்து அறிவைப் பிரிக்கும் தனியுடமைச் சட்டங்கள். மனிதனுக்கு எதிரான சட்டங்கள். பாரம்பரியமான மனித அறிவுக்கு எதிரானதே இந்தச் சட்டங்கள். பழைய அறிவில் இருந்து தோன்றும் அறிவு, தனியுடமை ஆக்கப்படுகின்றது. சமூக உயிரியான மனிதனின் வாழ்வியலில் இருந்து, அறிவை இச் சட்டங்கள் பிரித்தெடுக்கின்றது. மனித அறிவில் இருந்து உள்ளடக்கத்தை உறிஞ்சி தனியுடமை ஆக்குவதன் மூலம், மனித அறிவு வெறும் கோதாக்கப்படுகின்றது.

உதாரணமாக இன்று மஞ்சள், இஞ்சி, வேம்பு ..,. போன்ற எத்தனையோ பாரம்பரிய மனித அறிவு சார்ந்த மனிதக் கண்டுபிடிப்புகளை, மனிதனுக்கு மறுத்து விடுகின்றது இச்சட்டம். ஆனால் இவற்றை தனிமனித கண்டுபிடிப்பாகக் காட்ட முற்படுகின்றனர். இப் பொருட்களில் உள்ள எந்தக் கூறு, குறிப்பாக குறித்த பொருளின் விசேட குணாம்சத்தை தீர்மானிக்கின்றது என்பதை கண்டுபிடிப்பதன் மூலம், அந்தப் பொருளில் உள்ள மனிதனின் பொது அறிவை மறுத்து தனியுடமை ஆக்குகின்றனர்.

இங்கு அறிவு மறுக்கப்படுவதே, மனித அறிவாக்கப்படுகின்றது. தனிமனிதனின் அறிவு ஒழுக்கமாக்கப்படுகின்றது. "அறிவுடமைச் சட்டம்" மனிதன் அறிவற்று வெறும்கோதாக இருப்பதை அறிவாக்குகின்றது. அறிவை மனிதன் பொதுவில் தனதாக்குவது சட்டவிரோதமானதாக, குற்றமாக்கப்படுகின்றது. மனித அறிவையும், மனித உழைப்பிலான கருவிகள் மூலம் திருடி, மனிதனுக்கு எதிராக தாமே இயற்றிய தனியுடமைச் சட்டங்கள் மூலம் தனியுடமையாக்குகின்றனர். தாங்கள் திருடியதை சட்டப்படி தனியுடமையாக்கி, அதனை மீறுவதை மனிதத் திருட்டாகக் காட்டுகின்றனர். மனித அறிவு தனியுடமையால் திருடப்பட்டு இருப்பதை கொண்டாடுவது அறிவாக்கப்படுகின்றது. மனித அறிவு இந்தத் திருட்டை, சட்டப்படியான தனியுடமைச் சொத்தாக நம்புவதே அறிவாக்கப்படுகின்றது.

தனியுடமையிலான அறிவுச் சொத்துடமை சட்டத்துக்கு உட்படாத, பரந்துபட்ட மக்களின் பாரம்பரிய அறிவு என்பது என்ன என்ற கேள்வி எழுகின்றது. அதை இல்லாதாக்கி அழிக்கின்ற வேலையை தனியுடமை செய்கின்றது. இங்கு அறிவு என்பது என்ன என்ற கேள்வி, இயற்கையாகவே எழுந்து விடுகின்றது. இன்றைய அறிவும், அறிவைப் பெறும் வடிவங்களும் பற்றியுமான கேள்வியாக மாறுகின்றது.

இன்றைய இந்த சமூக அமைப்பிலான மனித அறிவு கூட நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், வர்க்கத்துக்கு வர்க்கம், மதத்துக்கு மதம், ஆணுக்கு பெண், சாதிக்கு சாதி .... கூட, பிரிந்து இருப்பது ஏன் என்ற கேள்வியும் கூட எழுகின்றது. எந்த அறிவு சரியானது என்ற கேள்வி இங்கு இயற்கையாகவே எழுகின்றது. ஒரு தனிமனிதனின் அறிவு சரியானது என்ற தனியுடமைவாத தர்க்கம் தவறானது என்பது தெளிவாகின்றது. ஒரு சமூகத்தின் கூட்டு அறிவுதான் சரியானதாக இருக்கும் என்பது இதன் மூலம் உண்மையாகின்றது.ஆக இதைப் பற்றித் தெரிந்து கொள்வது தான் இன்றைய மனிதனின் ஆரம்ப அறிவாகஇருக்கமுடியும்.

-தொடரும்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம்-03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05