Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

பிறருக்காக உழைத்தலா மனிதசாரம்? (மார்க்சியம் 09)

இன்றைய மனித வாழ்வியலில் உழைப்பு என்பது அனைவருக்கும் முதன்மையானதல்ல, மாறாக ஒரு வர்க்கத்துக்குரிய செயலாக மாறி இருக்கின்றது. ஒரு வர்க்கத்துக்கு உழைப்பு அவசியமானதாக இருக்க, மற்றொரு வர்க்கத்துக்கு அவசியமற்றதாகின்றது. இங்கு உழைப்பவனின் உழைப்பையும், உழைப்பு மூலம் உற்பத்தி செய்த பொருளையும் திருடி வாழ்வதே, உழைக்காதவனின் செயலாக இருக்கின்றது. இதே தனிவுடமை அமைப்பின் மனித அறமாகவும் செயற்படுகின்றது.

இந்த வேறுபட்ட வாழ்வியல் நடத்தை என்பது, உழைப்பதன் மூலம் கிடைக்கும் பொருளை அபகரித்து சொந்தம் கொண்டாடி நுகர்வதும், அந்த நுகர்வுக்குரிய பொருளை உழைப்பவன் அடைய உழைப்பதுமான எல்லைக்குள் சமூகம் இரண்டாக எதிரும் புதிருமாக இயங்குகின்றது. பொருளை அடைவது பற்றிய எல்லைக்குள், மனித சிந்தனை அறிவு முடக்கப்படுகின்றது.

இப்படி உழைப்பில் இருந்து மனிதனைப் பிரித்து, உழைப்பைச் சுரண்டி வாழும் தனிவுடமை அமைப்பு முறைமை மிருகத்துக்குரியதாகின்றது.

மிருகம் உழைப்பில் ஈடுபடுவதில்லை, அதே போல் உழைப்பை அபகரிக்கின்ற செயலும் மிருகத்தன்மை கொண்டது. உழைப்பு தான் மனிதனை மிருகத்தில் இருந்து வேறுபடுத்தியதே ஒழிய, உழைக்காமையல்ல. உழையாமை மிருகத்துக்குரியதாக இருக்கும் போது, மனிதனுக்குரிய உழைப்பு மிருகத்தனமான உழையாமை சார்ந்த சமூக வாழ்வியல் முறையால் அடிமை கொள்ளப்படுகின்றது.

உழைப்பிலானதே பொருள் என்ற உண்மையை, உழைப்பிலான பொருள் யாருக்கு சொந்தம் என்ற தனிவுடமை முறை மூலம் உழைப்பை மறுதளித்து விடுகின்றது. இதன் விளைவால் உழையாதவனுக்கு உழைப்பவன் உற்பத்தி செய்த பொருளை, நுகர்வதை இலட்சியமாக கொண்டு உழைப்பவனின் சிந்தனை செயல்கள் அனைத்தும் தனிவுடமை சமூக அமைப்பை இயக்குகின்றது. நுகர்வை அடைவதே, மனிதனின் இலக்காகி விடுகின்றது. இதை பற்றியும், இதை அடைவதைப் பற்றியுமான அறிவே, மனித அறிவாக்கப்படுகின்றது.

உழைப்பை செலுத்தி உற்பத்தி செய்தவனின் அறிவுக்கு பதில், உற்பத்தியான பொருள் பற்றியும், பொருள் செயற்பாடு பற்றியுமான அறிவு முதன்மைப்படுத்தப்படுகின்றது. உழைப்பில் இருந்து பொருளைப் பிரித்தெடுத்து போற்றப்படுகின்றது. தனிவுடமை அமைப்பு உருவாக்கும் அறிவின் சாரம் என்பது, நுகர்வாக்கமாகும்.

உழைக்கும் மக்களின் உழைப்பிலான பொருளை உழைப்பில் ஈடுபடாதவன் தனது சொந்தமாக்குவதன் மூலம், அந்தப் பொருளை அடைவதை உழைக்கும் மக்களின் இலக்காக இலட்சியமாக மாற்றிவிடுகின்றான். இதன் மூலம் தேவை என்ற எல்லையைக் கடந்து, நுகர் பொருட்களை அடைதலே மனித வெற்றியாக காட்டப்படுகின்றது.

அதாவது உழையாதவன் உழைப்பவனிடம் இருந்து பொருளை அபகரித்து அனுபவிக்கின்ற முறைமையாகும். உழைப்பவனிடம் பொருளை அபகரிப்பது சட்டவாக்கம் பெற்று, தனிவுடமை என்னும் சர்வாதிகாரமான சமூக கட்டமைப்பாக இயங்குகின்றது. உழையாதவன் பொருளை நுகர்வது முதன்மைப்படுத்துவதும், நுகர்வதை இலக்காக கொண்டு பொருளின் பயன்பாட்டு நுட்பவியலை அறிவாக்குவதுமாக அறிவு முடக்கப்படுகின்றது. உழைப்பின் செயற்பாடும், உழைப்பு சார்ந்த அறிவும் பொருளை படைத்தது என்ற உண்மை மறுதளிக்கப்பபடுவதன் மூலம், உண்மையில் பொருளை உழைப்பவனுக்கு சொந்தமற்றதாக்கப்படுகின்றது.

உழைப்பில் ஈடுபடாதவனுக்காக, உழைப்பில் ஈடுபடுபவதே உழைப்புச் செயற்பாடாகி இருக்கின்றது. உழைப்பிலான பொருளை அடைவதை இலட்சியமாகக் கொண்டு, உழைப்பில் ஈடுபடாதவன் செயற்படுகின்றான்.

உழைப்பவனோ உழைப்பிலான பொருளை உழைத்தல் மூலம் அடைவதே, உழைத்தல் செயற்பாடாக கொண்டு தொடர்ந்து உழைக்கின்றான்.

முதலாளித்துவம் உழையாதவனுக்கும் உழைப்பவனுக்கும் இடையில், உழைப்பைப் பற்றி இரு வேறு வாழ்க்கை முறைகளை உருவாக்கி இருக்கின்றது.

மனித சிந்தனைகள் செயல்கள் அனைத்தும் இதற்குள் முடக்கி இருப்பதே, இன்றைய நவீன முதலாளித்துவம் முன்வைக்கும் வாழ்வியல் நடைமுறையாகும்.

வாழ்வுக்காக உழைத்தலே மனிதனின் பிரதான செயலாக உள்ள போதும், உழைப்பு உழைப்பவனுக்கு சொந்தமில்லை. அதேநேரம் உழைப்பு சந்தைப்பொருளாகி இருக்கின்றது.

உழையாதவன் உழைப்பை வாங்குவதற்கு கொடுக்கும் கூலி தான், உழைப்பவன் வாழ்வை நடத்துவதற்கான ஆதாரமாக இருக்கின்றது. மனித வாழ்க்கையும், சிந்தனையும் இதைத் தாண்டி இருப்பதில்லை.

மனித சிந்தனை, செயல், அறிவு என்பன உழைப்பு வழங்கும் முறைமையுடன், பொருளை எப்படி நுகருகின்றோம் என்பதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

தனிவுடமையாகிவிட்ட சமூக அமைப்பில், உழைப்பைச் சுதந்திரமாக இயற்கையில் செலுத்த முடியாது, மனித உழைப்பை வழங்கக் கூடிய இயற்கை தனிவுடமையானதால், இயற்கை சுதந்திரமாக இல்லை. இயற்கையை தனிச்சொத்தாக கொண்டவனுக்கே, உழைப்பை விற்க முடியும். இதன் மூலம் தன் உழைப்பிலான பொருளை சுதந்திரமாக நுகர முடியாது. தன் உழைப்பை சுதந்திரமாக நுகர்ந்தால் அது "களவாகி" விடுகின்றது. உழைப்பதற்காக கொடுக்கும் கூலியைக் கொண்டு தான், தன் உழைப்பிலான பொருளை வாங்க வேண்டும். இதன் மூலம் பொருளை அடைவதற்காக உழைத்தல் மனிதசாரமாகி விடுகின்றது. பொருளை அடைவதை இலட்சியமாக, அதைக் கொண்டிருத்தல் வாழ்வின் வெற்றியாக, அதுவே உழைப்பின் சாரமாகி விடுகின்றது. உழைக்கும் மனிதனுடன் போட்டி போட்டுக் கொண்டு பொருளை அடைவதற்காக முயல்வதே, மனிதசாரமாகி விடுகின்றது.

உழைத்து வாழும் மனித வாழ்வில் இருந்து அன்னியமாகி, பிறருக்காக உழைத்தல் மூலம் வாழ்தல் மனிதசாரமாக மனித அறிவாகி விடுகின்றது. தனிவுடமை அமைப்பில் பிறருக்காக உழைத்தலை உணர்வுபூர்வமாக உணர முடியாத வண்ணம், நுகர்தல் முதன்மைப்படுத்தப்பட்டு உழைப்பிற்கு என்ன நடக்கின்றது என்ற அறிவு முடமாக்கப்படுகின்றது. இதன் மூலம் உழைப்பு மதிக்கப்படுவதில்லை.

மனிதசாரமாக உழைப்பு இருப்பதில்லை. மனித உழைப்பை மற்றவனுக்கு வழங்கும் ஒரு செயலாக, உழைப்பு என்பது இழிவான செயலாகி இருக்கின்றது. உழைப்பு விலைக்கு வாங்கக் கூடியதும், உழைப்பை விற்கக் கூடிய அடிமையின் செயலாக மாறி இருக்கின்றது. உழைப்பு சுதந்திரமான மனித செயலாக இல்லை, மற்றவனுக்கு கீழ்ப்பட்ட செயலாக மாறி இருக்கின்றது. உழைப்பு பற்றிய கண்ணோட்டம், சிந்தனை செயல் அனைத்தும் இதைச் சுற்றியே இயங்குகின்றது. இதை இயற்கையானதாகவும், என்றென்றும் இருந்து வருவதுமானதென்ற எண்ணப்பாடு பொது அறிவாக காணப்படுகின்றது.

உண்மையில் உழையாதவன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பிறர் உழைப்பு சாதனமாகவே உழைப்பைக் குறுக்கிவிட்டான். உழையாதவனின் தேவைகளையும், ஆடம்பரங்களையும், நுகர்வுவெறியையும் உற்பத்தி செய்வது தான் உழைப்பவர்களின் கடமை என்ற எல்லைக்குள், உழைப்பு சிறுமைப்பட்டு அடிமைப்பட்டு இருக்கின்றது. உழைப்பை விலைக்கு வாங்கக் கூடியதாக, அதை பிற மனிதனுக்கு விற்கின்ற அடிமையின் செயலாக, உழைப்பு பண்பு மாற்றம் பெற்று இருகின்றது.

அடிமைக்குரிய மனித செயற்பாடுகளையும் நடைமுறையையும் மனித அறிவாக, மனித சாரமாக கொண்டதே இந்த தனிவுடமை அமைப்பு முறை. மனித உழைப்பு தான் அறிவின் சாரம் என்பதை மறுத்து இயங்கும் இந்த தனிவுடமை அமைப்பில், உழைப்பு என்னும் மனித சாரத்தை முன்னிறுத்தியே மார்க்சியம் என்னும் அறிவும் நடைமுறையும் உருவாகின்றது.

அறிவு என்பது முன்னைய உற்பத்திய நடைமுறையில் இருந்து பெறுவதும், முந்தைய நுகர்தலில் இருந்து கிடைக்கும் உணர்வு சார்ந்ததுமாகும். உழைப்புச் செயற்பாடு தான் மனித அறிவாகின்றது. மனித தேவைக்கு ஏற்ப பொருளை மாற்றும் மனித செயற்பாடுதான் அறிவு.

இதைக் கடந்து அறிவுக்கு வேறு விளக்கம் கிடையாது. உழைப்புச் செயற்பாட்டில் ஏற்பட்ட பிரிவுகளும், உழைப்பில் இருந்து அன்னியமாகும் வாழ்வியல் முறைகளும் ஏற்படுத்தும் முரண்பாடுகள், உழைப்பின் மீதான அறிவுத் திரிபாகும். இதனால் எதிர்நிலையில் முரண்பாட்டுக் கூறாக அறிவு பிரிகின்றது. உழைப்புக்கும் நுகர்வுக்குமான முரண்பாடாக அறிவு மாறுகின்றது. உழைப்புச் செயற்பாடு நுகர்வாக இருக்கும் அதேநேரம், உழைப்பவன் நுகர முடியாது போகின்றது.

நுகர்வு உழைப்புக்கு எதிரான உழையாதவனின் செயலாக மாறுகின்றது. தனிவுடமை அமைப்பில் உழைப்பவன் அதை நுகர முடியாத நிலையை உருவாக்கி, அதை நுகர்வதற்காக சக மனிதனுடன் போட்டி போட வைத்து உழைப்பை வழங்கக் கோருகின்றது.

கூலிக்காக உழைப்பதன் மூலம், பொருளை அடைவதை மனித இலட்சியமாக்குகின்றது. சிந்தனை, செயல், அறம் என அனைத்தும், நுகர்வை மையப்படுத்தியதாக மனித தேவை என்பது திரிந்து விடுகின்றது.

தன் தேவைக்காக உழைத்த மனிதன், உழையாதவனின் நுகர்வுக்காக உழைக்கின்றான். எதை மனிதன் உற்பத்தி செய்தானோ அதை அவன் நுகர முடியாது. இது தான் இந்த தனிவுடமை அமைப்பின் சாரம். இதனால் தலைகீழான சமூகம் உருவாகின்றது. பொருளை உற்பத்தி செய்தவன் அதை நுகரமுடியாத வண்ணம், அதை அபகரிப்பதே மனித அறமாக இலட்சியமாக கொண்ட, மனித உணர்வுகள் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது. பொருள் நுகர்வதை முதன்மையாக்கி, அதை அடைகின்ற முறைமையே தனிவுடமையிலான மனித அறமாகின்றது.

இப்படி பொருளை அடைவதை அடிப்படையாகக் கொண்ட இந்த தனிவுடமை சமூக அமைப்பில், மனிதன் அடைத்து வைக்கப்பட்ட மந்தையே. வளர்ப்பு பண்ணைகளில் உள்ள மந்தைகள் எந்த நிபந்தனையின் கீழ் உள்ளனவோ, அதே நிபந்தனையின் கீழ் மனிதன் வாழ்வு உள்ளது. தனிவுடமை அமைப்பின் எல்லைக்குள் மனிதன் விலங்கிடப்பட்டு இருக்கின்றான். நுகரும் போட்டியில் தனித்தனியாக தன்னை உணரும் வண்ணம், மற்றவனை தனக்கு முரணானவனாக பார்க்கும் வண்ணமே, சிந்தனை செயல் அனைத்தும் அறிவாக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதற்காக உழைக்கின்றோம்? என்று உழைப்பவனிடம் கேட்டால், எனக்காக, என் குடும்பத்துக்காகவும்.. உழைப்பதாக கூறிவிடுகின்றனர். இருந்த போதும், உழைப்பை விருப்புக்குரிய ஒன்றாக உழைப்பவன் கருதுவதில்லை.

உழைப்பை தண்டனையாக, வாழ்வின் நிர்ப்பந்தமாக கருதுவதுடன், உழைப்பில் இருந்தும் அன்னியமாகிய நிலையிலேயே உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். தேவைகளைப் பூர்த்தி செய்யவே நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் உழைக்கின்றான். உழைப்பவனுக்கும் உழைப்பு வாழ்க்கையின் முதன்மையான தேவையாக இருப்பதில்லை. தான் உற்பத்தி செய்யும் பொருளும், தனது உற்பத்தித் திறனும், பிறருக்கும் சொந்தமாக இருப்பதால், உண்மையில் தனக்காக அவன் உழைப்பதில்லை, மாறாக பிறருக்காக உழைக்கின்ற அதேநேரம், தன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பகுதியை கூலியாக பெறுவதற்காகவே அவன் தொடர்ந்து போராடுகின்றான். பிறருக்காக உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற சமூக அமைப்பில், மனிதன் சுதந்திரமாக தனக்காக உழைத்து வாழ முடியாது. உழைப்பில் சுதந்திரம் என்ற பேச்சுக்கு இடமில்லை, மாறாக நுகர்வில் சுதந்திரம் முன்வைக்கப்பட்டு, அதை அடைவதற்காக பிறருக்காக உழைக்கக் கோரப்படுகின்றது.

நுகர்வை அடைவதை மையப்படுத்திய, உழைப்பின் அவசியம் திணிக்கப்படுகின்றது. நுகர்வை மையப்படுத்தி மனித உறவுகள் மாறிவிடுகின்றது. மனித உணர்ச்சிகள், உணர்வுகள் பொருள் சார்ந்ததாகவும், இறுதியில் நுகர்வு சார்ந்தாகவும் கொப்பளிக்கின்றது.

மனித உறவுகள் நுகர்வு சார்ந்ததாக குறுகிவிடுகின்றது. உழைப்பில் உருவான உழைப்பிலான பொருளை அபகரிப்பதும், அபகரிப்பதற்காக வழங்கும் கூலியைக் கொண்டு பொருளை அடைவதுமான எல்லைக்குள், மனித உறவுகள் பண்பாடுகள் உருவாகின்றது.

இந்த பண்பாடு உழைப்பில்லாத மனித உறவுகளில் கூட, நுகர்வாக அதை அடைவதைக் கொண்ட மனித உணர்வாக வெளிப்படுகின்றது. எங்கும் தளுவிய மனித உறவாகி விடுகின்றது. மனித கூட்டு உழைப்பு மூலம் தேவையை பூர்த்தியாக்குவதன் மூலமான மனித உறவுகள், தகர்ந்து பொருளை அடையும் நுகர்வாக குறுகி வருகின்றது.

உழைக்கும் மக்கள் உழைப்பு மூலமல்ல கூலிகள் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்தியாக்க முனையும் போது, மனித உறவுகள் தேவை கடந்த நுகர்பொருளை அடையும் உறவாக குறுகி விடுகின்றது. நுகர்வுக்குரிய பொருட்களை உற்பத்திய செய்யும் மனிதன் அதை நுகர முடியாத வண்ணம், அதை சொந்தமாக்கி தனிவுடமையைப் பெருக்குவதே தனிமனித இலட்சியமாகின்றது. யார் நுகர முடிகின்றதோ, அது தனிமனித வெற்றியாக்கப்படுகின்றது.

தனிவுடமை அமைப்பின் அறம் என்பது தனிச்சொத்துடமையும், நுகர்வதுமே. இங்கு உழைப்பவன் தன் உழைப்பிலான பொருளுக்கு உரிமை கோராத வண்ணம், பொருளை அடைவதற்காக உழைக்குமாறு கோருகின்றது தனிவுடமை அமைப்பு.

தொடரும்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம்-03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05

அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06

மனித உழைப்புத்தான் அறிவின் சாரம்: மார்க்சிய கல்வி -07

மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம் (மார்க்சியம் 08)