Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெள்ளை யானை திட்டங்கள்: இது யாருக்கு லாபம்

மாகம்புர துறைமுகம்:

மாகம்புர கப்பல் தரிப்பிட துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் இதுவரை நங்கூரமிட்டுத் தரித்திருக்கின்றன? மாத்தளையில் எத்தனை விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உருவாக்கியிருக்கின்ற இத்திட்டங்கள் உண்மையில் யாருடைய இலாபத்துக்காக என்பதுவும் அதைவிட முக்கியமாக எங்கிருந்து இவ்வாறான திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுகிறது என்பதும் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். படுபாதாளத்திற்குள் நாட்டின் பொருளாதார நிலைமைகள் எல்லாத்துறைகளிலும் சரிந்து வீழ்ந்ததனால், தாங்க முடியாதளவு வாழ்க்கைச் செலவீனத்தின் சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். இருந்தும் கூட பெருந்தொகைப்பணத்தை அபிவிருத்தித் திட்டங்களுக்கென்று அரசானது வாரியிறைக்கின்றது.

மக்கள் நலன் அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெற்று முகப்பு பலகைகளாலோ, அவற்றின் எண்ணிக்கை அடிப்படையிலோ அல்லது அவை எவ்வளவு பாரிய திட்டங்கள் என்பதனாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையான மக்கள்நலன் சார்ந்த அபிவிருத்திகள் என்பது யாருக்காகவென உருவாக்கப்படுகின்றதென கூறப்படுகின்றதோ அந்த மக்களை சென்று சேர்ந்து அவர்களது வாழ்வாதார மேம்பாடுகளை உயர்த்தவேண்டும். ஒரு அரசானது மனித நலன் பாற்பட்டும், பின்தங்கிவிட்ட பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தி மேம்படுத்துவதற்காகவும் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஆனால் அரசுக்கு வரி செலுத்தும் நாட்டின் பிரஜைகளான நாங்களும் எங்கள் வருங்கால தலைமுறையும் அபிவிருத்தித்திட்டங்கள் என்ற பெயரில் பல இன்னல்களுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆயிரத்து முந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாகம்புர மகிந்த ராஜபக்ஸ கப்பல் துறைமுகம் கொழும்பு கப்பல் துறைமுகத்திற்கு மாற்றீடான ஒன்றாகவே நிர்மாணிக்கபட்டதென கூறப்படுகின்றது. ஆனால் அத்துறைமுகம் திறப்புவிழாக் கண்ட ஆண்டான 2010 இலிருந்து எந்தக் கப்பலும் வராத துறைமுகமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்த துறைமுகம் பற்றி பரவலான விமர்சனர்கள் கூறுவது என்னவெனில் சர்வதேச தரத்துக்கும், சர்வதேச பாதுகாப்பு நியமங்களுக்கும் இத்துறைமுகம் ஒத்திருக்கவில்லை என்பதால் உலகளாவிய கப்பல் முகவர்கள் இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனர் என்பதாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இலக்கென திட்டமிட்ட வருவாயை அது எட்ட முடியாமல் 132 மில்லியன் இலங்கை ரூபாய்களாக வருவாய் வீழ்ந்து போனது. இலங்கை துறைமுக அதிகார சபை 500 தொடக்கம் 600 மில்லியன் இலங்கை ரூபாய்கள் என்றே வருவாயினை இலக்கிட்டிருந்தது.

ஆனால் தற்போது என்ன நிகழ்கிறது என்றால் இலங்கை துறைமுக அதிகார சபையானது அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்துக்கென எக்ஸிம் சீன வங்கியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு கொழும்புத்துறைமுகத்தினால் கிடைக்கும் பணத்தினைப் பாய்ச்சி அக்கடனை நிரவுகிறது. கப்பல்களுக்கான சேவை மற்றும் தொழில்துறை துறைமுகமாக முதலில் வடிவமைக்கப்பட்ட இத்துறைமுகமானது அளவுக்கு மீறிய வட்டிவீதத்தில் பாரிய கடன்களை சீனாவிடமிருந்து பெற்று உருவானதாகும். இப்போது எந்தக் கப்பலும் வந்து அழைக்காத துறைமுகமாக வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றது.

முதற்கட்ட கட்டிட நிர்மாணங்களுக்கென 306 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுகடந்த 6.3 வட்டி வீதத்தில் கடனாகப்பெறப்பட்டது. இரண்டாம் கட்ட நிர்மாணங்களுக்கென மேலும் பெறப்பட்ட பெருந்தொகைக்கடன் 800 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஆகும். இக்கடனும் அதே வட்டி வீதத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றை விடவும் இதர செலவுகளாக பாறைகளை தகர்க்கும் பணிக்கென 202 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலும் செலவிடப்பட்டுள்ளது. மொத்தமாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தரவுகளின்படி 1308 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கரைந்து போயுள்ளது. இந்த மொத்தக்கடன் தொகைகளும் 11 வருடங்களுக்குள், வருடத்துக்கு இரு தவணை முறையில் மீளச் செலுத்தப்பட வேண்டியதாகும்.

எந்தக் கப்பலும் வந்து அழைக்காத இந்தத்துறைமுகத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட இப்பாரிய கடன்சுமையை எவ்வாறு இலங்கை திருப்பி அடைக்கப்போகிறது என்பதே இப்போது எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

வருடாந்த தவணைக்கடனான 6 பில்லியன் ரூபாயினை திருப்பி அடைக்க வேண்டுமாயின் ஆகக்குறைந்த வருவாயாக ஒரு வருடத்துக்கு 8 பில்லியன் ரூபாய்களை மாகம்புர துறைமுகம் உருவாக்கியே தீரவேண்டும். இதன் மூலமே கவுரமாக கடனினை திருப்பிச் செலுத்த முடியும். ஆனால் எந்த பொருளீட்டலும் நடைபெறாத நிலையில், முக்கியமாக எந்தக் கப்பலும் துறைமுகத்தினை பாவிப்பதற்கு வருவதில்லை என்ற காரணத்தால் இந்தத் துறைமுகத்திற்கான கடன்சுமைகள் யாவும் கொழும்பு துறைமுக நிர்வாகத்தின் மீது விழுந்துள்ளதெனவும் அவற்றை ஈடுசெய்து கௌரவத்தை பேணுவதற்கு தேவையான மேலதிக வருவாயை உருவாக்க கொழும்பு துறைமுகம் இழுத்துவிடப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் கருத்துக் கூறினார்.

மாத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம்

இவ்வருட ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்ட மாத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் இவ்வாறான மற்றொரு திட்டமாகும். 2000 ஹெக்டர் ஏக்கர் நிலப்பரப்பில் 26 பில்லியன் ரூபாய் பண இறைப்பில் இவ்விமான நிலையம் உருவாக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை நகரத்திலிருந்து 43 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இவ் விமானநிலையம் அடர்ந்த காடுகளுக்கு நெருக்கமாக இருக்கின்றது. விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டணம் இலவசம், தரித்து நிற்பதற்கான கட்டணம் இலவசம், 50 வீத சேவைக்கட்டணத் தள்ளுபடி என அரசாங்கம் வழங்கி வருகின்றது என்றாலும், அச்சலுகைகள் பிச்சையெடுத்தல் என்றாகியுள்ளது. இதுவரை எந்த சர்வதேச எயர்லைன்ஸ்களும் தங்களது பயணப்பட்டியலில் மாத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமானநிலையத்தினை சேர்த்துக் கொள்ளவேயில்லை. ஒரேயொரு எயர்லைன்ஸ் 'எயர் அரேபியா" இவ் விமானநிலையத்தில் முன்பு இயங்கி வந்தாலும் தற்போது இந்த மாதத்துடன் திரும்பப் பெறப்போவதாக தீர்மானித்துள்ளது.

இவ் விமானநிலையத்தின் வழியாக பறப்பது இலாபகரமானது இல்லை என்பதால் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் வழி தொடர்ந்தும் பறப்பது சாத்தியமானதில்லை எனவும் கூறியுள்ளது.

மாத்தளை விமானநிலையத்தினை தூக்கி நிறுத்தநுழைந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவையானது கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கும் மாத்தளை விமானநிலையத்துக்கும் இடையிலான நாளாந்த பறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இன்னுமொரு சர்வதேச விமானநிலையம் நாட்டுக்கு அவசியம் என்று உணரப்பட்டிருந்த போதும் நிர்மாணிக்கப்பட்ட மாத்தளை விமான நிலையமானது தவறான இடத்திலும் தவறான காலத்திலும் கட்டப்பட்டு இருக்கின்றது என வாதிடப்படுகின்றது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாத்தளை ராஜபக்ச விமானநிலையத்திற்கு விமான எரிபொருளை எடுத்துச்செல்லும் போக்குவரத்தின் மூலம் மேலும் நிதி இழப்பை சந்தித்து வருகின்றது.

மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் விமானம் மற்றும் கப்பலுக்கான எரிபொருள் தாங்கிகள் இல்லாமையானது இலங்கை பெற்றோலிய சேமிப்பு ரேமினல் லிமிட்டெட் இந்த வகை எரிபொருளை எடுத்துச் செல்வதற்கு தரை வழி வாகனப் போக்குவரத்தினை பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் செலவுகளை தாங்க வேண்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் ஸ்ரேடியம்

உலகக்கிரிக்கெட் கிண்ணப் போட்டிகளுக்கென 2011ம் ஆண்டில் அம்பாந்தோட்டையிலுள்ள சூரியவேவ எனுமிடத்தில் 700 மில்லியன் ரூபாய்களில் மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் ஸ்ரேடியம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தொகுதிக்கட்டிடம் 32000 இருக்கைகள் கொண்டதாக 47 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கட்டிமுடிக்கப்பட்டு இன்று பாவனையில் அரிதாகவே உள்ளது. இரண்டு உலக கிரிக்கட் கிண்ணப்போட்டிகள் மற்றும் சில தனிப்பட்ட போட்டிகள் நீங்கலாக மற்றும்படி இவ்வரங்கம் காடாய் தனித்து விடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விளையாட்டு வலயம் 2018 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை விளையாட்டு வலயம் இவ்வரிசையில் கைவிடப்பட்டுள்ள இன்னொன்றாகும். 15 பில்லியன் ரூபாய் பணவிரயத்தில் கட்டப்பட்டு கைவிடப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு வலயம் அம்பாந்தோட்டை, சூரியவேவவில் மூன்றாவது பெரிய அபிவிருத்தி வலையமாக, புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்ரேடியத்துக்கு அருகாமையிலேயே இருக்கின்றது. பொதுநலவாய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடாத்துவதற்கான உரிமையை இலங்கை, அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டிடம் இழந்து போனது இதன் காரணம்.

நுரைச்சோலை மின்சார நிலையம்

நுரைச்சோலை மின்சார நிலையம் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மலிவான மின்சாரத்தை வழங்குவது என்ற 'கௌவுரமான" நன்நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதுவும் வெள்ளையானை ஒன்றாக மாறிவிட்டது. 15 பில்லியன் ரூபாயினை விழுங்கிய இந்த நிலையம் நிரந்தரமாகவே இயங்காது போகும் நிலையடைந்துள்ளது. இதுவரை 19 தடவைகள இயக்கமுடியாமல் நின்று போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இந்நிலையத்தினை கட்டிமுடிக்க பெறப்பட்ட கடனினை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலுள்ள அரசாங்கமானது பங்குதாரர்களிடம் பெற்ற கடனுக்காக அவர்களிடமே கையளிப்பதென்ற எண்ணத்திலுள்ளது.

மகிந்த ராஜபக்ச நஷனல் ரெலி சினிமாப் பூங்கா

மகிந்த ராஜபக்ச நஷனல் ரெலி சினிமாப் பூங்கா அம்பாந்தோட்டை ரன்மினிதென்ன என்றவிடத்தில் 2 பில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பூங்காவினை கட்டியெழுப்பதற்கான நிதியானது வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் ரெலி நாடகங்கள் போன்றவற்றின் மீது விதிக்கப்பட்ட வரியினால் ஈட்டிய வருமானத்தினாலாகும். கட்டண சலுகைகள் வழங்கப்பட்டிருந்தும் கூட படப்பிடிப்புகள் ஒருசில அல்லது ஒன்றுமேயில்லை என்றளவுக்கு பிரயோசமற்றதாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாட்டு மக்கள் மேல் எந்தளவுக்கும் அக்கறையின்றி மேற்கொள்ளப்படும் இந்தக் குறுகிய உபாயங்களின் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ளும் காலம் மிகவும் அதிக தொலைவில் இல்லை. ராஜபக்ச ஆட்சி மற்றும் முந்தைய முதலாளித்துவ ஆட்சிகள் யாவும் மீண்டும் நிரூபிப்பது என்னவெனில் அவர்கள் தங்களது வர்க்கத்துக்குள்ளேயான அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு எதையும் செய்வார்கள் என்பதாகும்.

அனைத்துவகையான இன மத பால் பாகுபாடுகளோடு, கல்வித்துறை, சுகாதாரம் போக்குவரத்துத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட தோல்வி, நாட்டு மக்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் தாங்க முடியாதளவு கடன் சுமைகள் என்பன எங்களது வாழ்க்கையில் சுமையாக மேலும் அழுத்தப்போகின்றன. நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கடனாளியாக்கப்படுகிறபோது தோல்விகளும் நடத்தைப்பிறழ்வுகளும் எளிதில் உருவாகி சீரழிய ஏதுவாகின்றன. மக்கள் மத்தியில் பொருளாதார நன்மைகளை சமமாக பகிர்ந்தளிக்கும் ஒரு மக்களுக்கான புதியமுறை அரசை நிறுவுதற்கு மக்கள் தீர்மானிப்பதற்கு பதிலாக, முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்களை நாளுக்கு நாள் காப்பாற்றிக் கொள்வதற்காக பெறப்படும் கடன் சுமையை மக்கள் ஒவ்வொருவர் மேலும் திணிக்கும் நிலையானது பொறுத்துக் கொள்ளப்படும் வரை இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றுவது கடினமானதாகும்.