Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

அறிவுக்கு வேலை கொடுப்போம்!

இன்று சமயங்களுக்கிடையில் மோதல்களும், விவாதங்களும், நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயங்களை உலகிற்கு தந்தவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இவற்றை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றும் மனிதர்கள் தமது மதத்திற்காக சண்டை பிடிக்கின்றார்கள், மோதிக் கொள்கிறார்கள், கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் ஒரு மனிதன் எந்த சமயத்தையும் சாராதிருப்பது எவ்வளவு நல்லது என்று நினைப்பது தவறாக இருக்காது.

உண்மையிலேயே இந்த மோதல்களுக்கு என்ன காரணம்? மனிதர்கள் புத்திக்கு இடமளிப்பதை விட்டுவிட்டு உணர்வுகளுக்கு இடமளிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால்தான் இவ்வாறான மோதல்கள் உருவாகின்றன. இன்று பெரும்பாலான மக்கள் சமயம் சார்ந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் மரபுவழிதான். பெற்றோர்களிடமிருந்து தமக்குக் கிடைத்த சமயம் தொடர்பில் ஓரளவு விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு, ஏனைய மதங்கள் தனது மதத்தைவிட கீழ்நிலையில் இருப்பதற்கான காரணத்தை தேடிக்கொள்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் நினைக்கிறார் தான் பின்பற்றும் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்று. பௌத்த சமயத்தை பின்பற்றுபவர் நினைக்கிறார் தான் பின்பற்றும் மார்க்கம்தான் உலகிலேயே சிறந்த மார்க்கமென்று. கிறிஸ்தவர் நினைக்கிறார் யேசுநாதர்தான் நித்திய ஜீவன் என்று. ஒரு இந்து நினைக்கிறார் அவர் பின்பற்றும் சமயம்தான் உலகிலேயே உயர்ந்த சமயமென்று, இவர்கள் அனைவரும் உணர்வுகளுக்கு முக்கியத்துவமளிப்பவர்களேயன்றி அறிவுக்கு முக்கியத்துவமளிப்பவர்களல்ல. இவர்களில் எவராவது தன்னுடைய சமயத்தைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், ஏனைய சமயங்களைப் பற்றிய அறிவு அவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது.

சிலர் தமது சமயத்தை விட்டு வேறு சமயத்தை தழுவிக்கொள்வதும் ஏதோ ஓர் உணர்வுபூர்வமான காரணத்தால்தான். பௌத்தராக இருந்த ஒருவர் கிறித்தவ சமயத்தைத் தழுவிய பின்னர், தான் நோய்வாய்ப்பட்டதும் தன்னை யேசுபிரான் சுகப்படுத்தியதாக கூறுகிறார். நோயிலிருந்து சுகமடைவது ஒரு சமயத்தை விட்டு இன்னொரு சமயத்தைத் தழுவுதற்கு நியாயமான காரணமாக இருக்க முடியாது.

இதனை ஆராய்ந்து பார்த்தால் அங்கே யேசுபிரானின் தலையீடு எதுவும் கிடையாது. இவர் அறிவுக்கு வேலை கொடுக்கவில்லை. உணர்வுகளுக்கே வேலை கொடுத்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிகிறது.. வேறு சமயமொன்றிலிருந்து பௌத்தத்தை தழுவிய ஒருவரும், இஸ்லாமிய சமயத்தை தழுவிய ஒருவரும் அதற்கான காரணத்தை தேடிக்கொள்கிறார்கள். இவை அறிவுக்கு முதலிடத்தை கொடுக்கக் கூடிய காரணங்களல்ல, உணர்வுக்கு முதலிடத்தைக் கொடுக்கக் கூடிய காரணங்களாக இருப்பதை அவர்கள் உணர்வதில்லை.

எந்தவிதமான அறிவும் இல்லாமல் வெறுமனே உணர்வுகளின் மீது செயற்படும் இப்படியானவர்களை மிக இலகுவாக இனவாத மதவாத வலைகளில் சிக்க வைக்க முடியும். இவர்களை பயன்படுத்துவதற்கு அவர்களது உணர்வுகளை தட்டிவிட்டாலே போதும் கொந்தளித்து விடுவார்கள். கடந்த காலங்களில் மத அடிப்படைவாதிகள் இலங்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்த பிரச்சினைகளைப் பார்க்குமிடத்தும், அவர்களது உரைகளைப் பார்க்குமிடத்தும் அவர்கள் மனிதர்களின் அறிவுக்கு பேசினார்களா என்றால் அதுதான் இல்லை. உணர்வுகளுக்கே பேசினார்கள். மனிதர்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியவர்கள், அதற்காக மதவாதத்தை கையிலெடுத்தவர்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். தூண்டப்பட்டவர்கள் பாமர மக்கள் மத்தியில் இனவாத மதவாத குரோதங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து எமக்கு ஓர் எதார்த்தம் புரிகிறது. என்னவென்றால், மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு தங்களது எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டவர்களின் வெற்றி சிறிது காலத்திற்கே நிலைத்திருக்கும் என்பது தான். அவர்கள் உணர்வுகளை தூண்டுவதை நிறுத்திவிட்டால் எல்லாமே நின்றுவிடும்.. எனவே அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயின் தொடர்ந்தும் உணர்வலைகளை தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அடிப்படைவாதிகள் பாமர மக்களின் உணர்வலைகளை தூண்டுவதற்கு முயலும்போது மக்கள் தமது அறிவுக்கு வேலை கொடுத்து அவற்றைத் தோற்கடிக்க முன்வர வேண்டும். சமயங்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இனவாதிகளையும் மதவாதிகளையும விரட்டியடிக்க முன்வர வேண்டும்.

உணர்வுகளுக்கு அடிமையாகக் கூடிய ஒருவரை தூண்டி விடுவதற்கு மதச் சின்னமோ காவி உடையோ மாத்திரம் போதும். இப்படியானவர்கள் தமது மத குரு கூறும் அனைத்தையும் சமய போதனைகளாகவே ஏற்றுக் கொள்கின்றார்கள். இன்று ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் பொது மக்களை சாகடித்துக் கொண்டு சாகும் குண்டுதாரிகள் இருப்பதும், பர்மாவில் முஸ்லிம் மக்களை கொன்று விரட்டியடிப்பதும், இலங்கையில் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ பள்ளிகளை உடைப்பதும், இந்து கோவில்களை உடைப்பதும் இவ்வாறு மத குருமார்கள் கூறும் அனைத்தையும் சமய போதனைகள் தானென தலைமேற்கொண்டு உணர்வுகளுக்கு முதலிடமளிக்கும் மனிதர்களாலேயே நடக்கின்றனவே அல்லாது அறிவுக்கு முதலிடம் கொடுக்கும் மனிதர்களால் அப்படியான காரியங்களில் ஈடுபட முடியாது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக அவர்களுக்கு தமது தவறுகள் புரிவதில்லை. இதனை புரிய வைக்க மத குருமார்களும் விரும்புவதில்லை. உண்மை புரிந்துவிட்டால் அவர்களது பேச்சு எடுபடாது என்பது அவர்களுக்கே தெரியும்

மத குருமார்கள் பக்தர்களைவிடவும் உணர்வுபூர்வமானவர்கள். அதனால்தான் மாடுகளுக்காக தீக்குளிக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்காக தீக்குளிக்கிறார்கள். கூத்தாடிகளுக்காக தீக்குளிக்கிறாமர்கள். தலைவர்களுக்காக தீக்குளிக்கிறார்கள்.

மதம் மனிதனுக்குப் பிடித்தாலும், யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து ஆபத்துதான். மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டதைப் போல் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் சிந்தப்பட்டதில்லை என்பது சரியான கணிப்புதான்.

இந்தியாவில் 450 கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மதம் பிடித்தவர்கள்தானே? குஜராத்தில் ஈராயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்ததும் மதவெறிதானே! ஒரு மதத்துக்குள்ளிருக்கும் பிரிவுகளுக்கு மத்தியிலும் கலவரங்கள் நடந்ததுண்டு நடப்பதுண்டு.

"ஈராக்கில் சதாம் ஹசைன் தூக்கிலிடப்பட்டதை முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கொண்டாட்டம் போட்டதும், ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டியதும் அந்த வகையில்தான்".