Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

சிறுநீரக நோய்த்தாக்கம் வெளிவரும் அதிர்ச்சிகள்!

சூழலில் பெருகிவரும் நச்சுப்பதார்த்தங்கள் இடம்பெயரும் விவசாயிகள்!

வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் பரவலாக சிறுநீரக நோய் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, இந்நோய் தற்போது வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்து மெல்ல மெல்ல முழுநாட்டையும் ஆக்கிரமிக்கும் சமூக அவலமான சிறுநீரக நோய் தொடர்பாக தெளிவான அரசியல் ஆய்வுடன் இதற்கு எதிராக மக்களைத்திரட்ட வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும். அதற்கான முதற்படி கலந்துரையாடலே ஆகும்.

அநுராதபுர மாவட்டத்தில் 1992ம் ஆண்டு 70 விவசாயிகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டமையும் அவர்களில் 17 பேர் அந்த வருடத்தில் பலியானமையும், சிறுநீரக நோய் தொடர்பாக கவனம் செலுத்தப்பட காரணமாய் அமைந்தது. 2012 ஆண்டாகும் போது அநுராதபுர மாவட்டத்தில் 11,212 சிறுநீரக நோயாளர்களும் பொலநறுவை மாவட்டத்தில் 2,957 சிறுநீரக நோயாளர்களும் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

அநுராதபுர பொது வைத்தியசாலையின் தகவல்படி 2003-2012 காலப்பகுதியில் அவ் வைத்தியசாலையில் இதற்காக சிகிச்சை பெற்றவர்களில் 1811 பேர் மரணமடைந்துள்ளனர். அதனடிப்படையில் பார்த்தால் ஒரு வருடத்திற்கு 201 சிறுநீரக நோயாளர்கள் என்ற அடிப்படையில் மேலும் விரிவாக சொல்வதென்றால் இரண்டு தினங்களுக்கு ஒரு நோயாளர் என்ற கணக்கில் சிறுநீரக நோய்கள் காரணமான மரணம் நிகழ்கின்றது. இந்நிலமை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிற்கும் பரவிச்செல்ல ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி அநுராதபுர மாவட்டத்தில் 15 வீதமானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2012 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சுகாதார அதிகாரிகள் அநுராதபுர மாவட்டத்தில் 10,608 பேரிடம் நடத்திய ஆய்வில் 1414 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதுவரை அவர்கள் தமக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டிருப்பதாக அறிந்திருக்கவில்லை. இந்த எண்ணிக்கை 13 வீதமாகும். இதன் மூலம் சிறுநீரக நோய் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாரதூரமான நிலைமையை விளங்கிக் கொள்ள முடியும்.

அநுராதபுர பகுதியில் பரவிவரும், இதுவரை காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சிறப்பு ஆராய்ச்சிக் குழுவொன்றை உலக சுகாதார அமைப்பு (WHO) அனுப்பியுள்ளது. ஆனால், அரசாங்கமும் சுகாதார திணைக்கள அதிகாரிகளும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறைந்தபட்சம் ஆய்வுகளிற்கான நிதியைக் கூட ஒதுக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து 2011 ம் ஆண்டு யூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் வடமத்திய மாகாணத்தில் வாழும் 15ற்கும் 70 ற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் 15 வீதமானோர் சிறுநீரக பாதிப்புகளிற்கு ஆளாகியுள்ளனர். 40 வயதைக் கடந்த ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மத்தியிலேயே நோயின் தாக்கம் காணப்படுவதோடு, பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் பத்து வருடங்களிற்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களில் 496 பேரின் சிறுநீர் மாதிரிகளில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் சிறுநீர் மாதிரிகளில் கட்மியம் மற்றும் ஆசனிக் ஆகிய நச்சுப்பாதார்த்தங்கள் முறையே 56 வீதம் மற்றும் 63 வீதம் என்ற ஆபத்தான அளவில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு எடுத்துகொள்ளப்பட் மாதிரிகளில் 88 வீதமானவற்றில் இந் நச்சுப்பதார்த்தங்களில் ஒன்றேனும் காணப்பட்டது. விவசாய நிலங்களில் வாழ்பவர்களில் 90 வீதமானோரின் தலைமுடியிலும் 94 வீதமானோரின் நகங்களிலும் அளவிற்கு அதிகமாக நச்சுப்பதார்த்தங்களான ஆசனிக்கும் கட்மியமும் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகளின் உடலில் அதிகளவு நச்சுப்பதார்த்தங்கள் காணப்படுவதுடன் விவாசாய நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் இரசாயன மற்றும் கிருமிநாசினிகள் தொடர்புபட்டிருப்பது மிகவும் தெளிவாகின்றது.

1977ம் ஆண்டின் புதிய தாராளமயவாத (திறந்த பொருளாதாரக் கொள்கை) முதலாளித்துவ சீரமைப்புக்களின் பின் ஏகாதிபத்தியவாதிகளினால் 'பசுமைப்புரட்சி" என்ற பெயரில் பல மாற்றங்களை விவசாயத்துறையில் ஏற்படுத்தப்பட்டன. 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் நடைமுறையிலிருந்த சூழல்நட்புறவான விவசாய முறைகளை ஒழித்து, விதைகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை பெறுவதில் இருந்த விவசாயிகளின் சுயாதீனத்தன்மை இல்லாது ஒழிக்கப்பட்டு, விவசாயத்துறை முற்றிலுமாக பன்னாட்டுக் கம்பனிகளின் சந்தையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக விவசாய இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் கம்பனிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. சந்தைப்போட்டி காரணமாக ஆபத்தான இரசாயனங்களை ஆபத்தான அளவுகளில் தனது உற்பத்திகளில் பயன்படுத்தின. 1980 களில் லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆபிரிக்கக் கண்ட நாடுகளில், பன்னாட்டுக் கம்பனிகளே, விவசாய இராசாயனங்களை விற்பனை செய்வதற்காக, நோய் பீடைகள் மற்றும் நோய்களை பரப்பியமையை உதாரணங்கள் மூலம் அறியலாம்.

இலங்கையும் இந்நிலைமைக்குள் அகப்பட்டுள்ளதுடன், பன்னாட்டு கம்பனிகள் இலாபம் உழைப்பதற்காக விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் கடும் தாக்கம் செலுத்தும் சிறுநீரக நோயும் இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்ட சுற்றாடல் தொடர்பாகவோ மனித வாழ்க்கை தொடர்பாகவோ சற்றும் கவலை கொள்ளாத மூலதனத்தை பெருப்பித்துக் கொள்வதை மட்டும் நோக்காகக் கொண்ட முதலாளித்துவத்தின் சீரழிப்பே ஆகும்.

ஏனைய துறைகளைப் போல் விவசாயத்துறையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள ஏகாதிபத்தியமும் இலங்கையில் திணிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமும் விவசாயிகளின் வாழ்வை மேலும் அனர்த்தத்திற்குள்ளாக்கியுள்ளது. வடமத்திய மாகாணத்தில் தாக்கம் செலுத்தும் சிறுநீரக நோயிற்கும் சூழலில் சேர்க்கப்படும் நச்சுப்பதார்த்தங்களுக்கும் தெளிவான தொடர்பிருப்பது நன்கு தெளிவான பின்பும், விவசாயத்தில் பயன்படுத்தும் இராசயனங்கள் தொடர்பாக கொள்கை ஒன்றையேனும் ஆட்சியாளர்களினால் வகுக்க முடியாமையானது அவர்களின் கையாலாகாத நிலையைக் காட்டுகிறது.

மறுபுறம் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு நச்சுப்பதார்த்தம் நிறைந்த குடிநீரும் காரணம் என்பதும் தெளிவாகும். விவசாய நிலங்களிற்கு அண்மையில் அமைந்திருக்கும் நீர்நிலைகளில் இருந்து குடிப்பதற்கான நீரைப் பெறுபவர்கள் இத்தாக்கத்திற்கு ஆளாகின்றார்கள்.

காரணம் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நச்சுப்பதார்த்தங்கள் நீருடன் கலப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும். சுத்தமான குடிநீரை பெறுவது மனிதனின் அடிப்படை உரிமையாகும். அவ் உரிமையைக் கூட ஆட்சியாளர்களினால் உறுதி செய்திட முடியவில்லை. நகர்ப்புற வாழ் மக்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் சுத்தமான நச்சுப்பதார்த்தங்கள் கலந்த நீரை அருந்துவதினால் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணித்த பின்னும் இன்னும் ஆயிரக்கணக்கானோராய் ஆபத்துக்களை எதிர்நோக்கும் பிரதேச மக்களிற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆட்சியாளர்கள் சிந்திக்கவே இல்லை. ஆகவே,

சுத்தமான குடிநீரிற்காக மக்கள் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாணத்தில் அச்சத்தின் காரணமாக பலர் அதிகவிலையில் நீரைக் கொள்வனவு செய்து பாவிக்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் நச்சுப்பதார்த்தம் நிறைந்த ஆபத்தான நீரையே குடிக்கின்றனர்.

சிறுநீரக நோயிற்கான சிகிச்சை வசதிகள் இன்மை அவலத்தை அதிகரிக்க செய்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் இதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லை. சிறுநீரக நோய் தொடர்பாக பரிசோதனை செய்யும் வசதி பிரதான வைத்தியசாலைகளில் மட்டுமே காணப்படுகின்றன. கிராமப்புற மக்கள் இலவச சிகிச்சையை பெறுவதற்காக பலமைல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இல்லாதுவிடின் அதிக பணம் செலவு செய்து தனியார் வைத்தியசாலைகளை நாட வேண்டும். வடமத்திய மாகாணத்தில் பல குடும்பங்கள் தமது சொந்த விவசாயநிலங்களை கைவிட்டு வெளியேறுகின்றனர்.

இரு தசாப்பதங்களிற்கு மேலாக ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த நோய் தொடர்பாக இதுவரை முறையான ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளாத, வடமத்திய மாகாண மக்களின் தூய்மையான குடிநீரை பெறும் உரிமையை உறுதி செய்ய முடியாத, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இலவச சிகிச்சை வழங்க முடியாத, விவசாய இரசாயனங்களின் தரம் தொடர்பான குறைந்த வரையறையைக் கூட உருவாக்க முடியாத, சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கவனம் செலுத்தாத முதலாளித்துவ அரசாங்கம் எமக்குத் தெரிவிப்பது என்ன?

உரிமைகளை வென்றெடுக்கக் கட்டாயமாக போராடியே ஆக வேண்டும். மனித வாழ்க்கை மற்றும் சுற்றாடல் தொடர்பாக சற்றும் கவலைப்படாமல் இலாபம் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்ட இந்தச் சமூக பொருளாதார முறையை மாற்றியாக வேண்டும். இவ்விரண்டிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. சுத்தமான குடிநீர், இலவச மருத்துவ சேவைக்கான போராட்டங்கள் சமூகப் பொருளாதார முறையை மாற்றியமைக்கும் போராட்டங்களாக விரிவுபடுத்தப்படல் வேண்டும். இந்த அரசியல் தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்குவதும், சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காகவும், இலவச சுகாதார சேவையை பெற்றுக்கொள்வதற்காகவும் தினம் தினம் வலுவிழந்து செல்லும் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களைஅமைப்பு ரீதியாக அணித்திரட்டுவதே இடதுசாரிகளின் தற்போதைய முக்கிய பணிகளில் ஒன்றாகும். இல்லாதுவிடின் தொடர்ந்தும இரண்டு தினங்களுக்கு ஒருவரை சிறுநீரக நோய்க்கு பலி கொடுத்தாக வேண்டும். நாளை நாம் கூட அந்த இருவரில் ஒருவராய் இருக்கலாம்.