Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சுகாதாரம் எந்தக் கடையில் கிடைக்கும்? தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் சுகாதார வசதிகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமையோ அல்லது காணி உரிமையோ இல்லை. இதை தட்டிக்கேட்க மலையக தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மந்திரிமார்களுக்கு எவ்வித திறமையோ அல்லது அறிவோ இல்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சிங்கங்களைப் போல் கர்ச்சிப்பதை மட்டும் காணமுடிகின்றது. தங்களது உதிரத்தையும் வியர்வையையும் சிந்துகின்ற மக்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து கொண்டே வாழ்வதா?

வெள்ளைக்கார ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட லயன் அறைகள் இப்போது ஓட்டை உடசல்களாக காணப்படுகின்றன. இவைகளை திருத்துவதற்கும் அல்லது புனரமைப்பதற்குமாக அமைக்கபட்ட நிறுவனங்களான மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் (Plantation Human Welfare Trust) மற்றும் தோட்டப் பணியாளர் வீடமைப்புக் கூட்டுறவு சங்கம் போன்றவைகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்களால் தோட்ட மக்களின் குடியிருப்பு, சுகாதாரம், சேமநலத் திட்டங்கள் போன்றவைகளை பூர்த்தி செய்ய இன்னும் ஆகக்குறைந்தது 200 வருடங்களாவது செல்லும்.

குடும்பத்தில் அதிகரிக்கும் அங்கத்தவர்களுக்காக லய அறைகளை சொந்த செலவில் அங்கும் இங்குமாக பெருபிப்பது அல்லது முன் அல்லது பின் பக்கமோ சிறு சிறு குடில்களை அமைப்பது சகல தோட்டங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றதினால் சமூக பிரச்சினைகளுக்கும் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

சகல தேயிலை, இறப்பர் தோட்டங்களும் மலைகளில் இருப்பதோடு அந்த மலைகளிலிருந்தே தண்ணீர் ஊற்றெடுத்து நாட்டின் பல பாகங்களுக்கும் செல்கின்ற அதே வேளை அங்கு வாழும் மக்களுக்கோ சுத்தமான போதிய குடிதண்ணீர் கிடைப்பதில்லை. மற்றொரு முக்கிய விடயம், ஆறுகள், ஓடைகள், கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து பாதுகாப்பாக வழங்கும் திட்டம் எந்த தோட்டத்திலும் இல்லை.

சகல மனிதனுக்கும் கழிவறைகள் மிகமிக அத்தியாவசியமானதாகும், ஆனால் தோட்ட மக்களில் அதிகமானவர்களுக்கு இந்த கழிவறைகள் இல்லை. இந்த மக்கள் வாழ்கின்ற அதிகமான லய கூரைகள் மா சலிக்கும் சல்லடைகள் போலிருப்பதை அவதானிக்க முடியும். ஆனால் சில தமிழ் மந்திரிமார்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டும் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு தகரங்களை வழங்குவதும் சர்வ சாதாரண விடயமாகும். இப்படி வழங்கிய தகரங்களை வாங்கியவர்கள் வேறு அலுவல்களுக்காகவே உபயோகிப்பதும் சாதாரண விடயமாகும்.

தோட்ட வைத்தியசாலைகள் வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவைகளாகும். தற்போது சுமார் 50 வைத்தியசாலைகள், 179 பிரசவ விடுதிகள், 266 மருந்தகங்கள் உள்ளதோடு அதிகமான வைத்தியசாலைகளில் வைத்தியர்களும் இல்லை. மருந்துகளும் இல்லை. சில தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேறறுள்ளதோடு, அங்கும் நோயாளர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் இல்லை.

சுகாதார பாதுகாப்பு தோட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. கழிவு நீர் வசதிகள், தண்ணீர் பாதுகாப்பு, இராசயண திரவியங்கள் போன்றவைகளால் மக்களின் சுகாதாரம் பாதிப்படைவதோடு இப்படிப்பட்ட காரணிகளால் நோய்கள் பரவும் அபாயங்களும் அதிகமாக உள்ளன.

குப்பை கூலங்களை அப்புறப்படுவதில் எவ்வித நடவடிக்கைகளையும் நிர்வாகங்கள் மேற்கொள்வதில்லை. டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக பொது சுகாதார பரிசோதகர்கள் தோட்டங்களுக்குச் செல்லும் போது, அங்கு காணப்படும் சுகாதார சீர்கேடுகளுக்காக வழக்குகள் பதிவு செய்வதும் தண்டனை வழங்கப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்கே.

அத்தோடு நோய்வாய்ப்படுபவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து சேவைகள் மிக மிக மோசமாகவே உள்ளன. அம்புலன்ஸ் வாகனங்கள் சில தோட்டங்களில் இருந்தாலும் அவைகள் தோட்ட மக்களுக்கு கிடைப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அத்தோடு அதிகமான தோட்டப் பாதைகள் மிக நீண்ட காலமாக புனரமைக்காமலும் பாதுகாக்காமலும் உள்ளதாலும் வாகனங்கள் செல்வது மட்டுமல்ல பாடசாலைப் பிள்ளைகள், நோயாளர்கள், வயோதிபவர்கள் நடந்து செல்வதும் பெரும் சிரமமான காரியமாகும். நாட்டின பல பாகங்களில் வீதிகளை புனரமைப்பதிலும் புதிய வீதிகளை அமைப்பதிலும் அரசு பெரும் சிரத்தை காட்டுகின்ற அதே வேளை தோட்டப்பாதைகள் குன்றும் குழியுமாகவே உள்ளன.

இராசயண மற்றும் இராசயண பசளை பாவனைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய நோய்ப்பாதுகாப்பு உடைகளோ அல்லது உபகரணங்களோ வழங்குவதில்லை. தோட்டங்களில் அங்கவீனர்கள் பலர் உள்ளனர், ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு உதவிகள் அல்லது புனர்வாழ்வு திட்டங்கள் முறையாக இல்லை.

இலங்கையில் தேயிலை, இரப்பர் போன்ற பயிர்செய்கை 23 தனியார் கம்பனிகளாலும், அரச நிறுவனங்களான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம், எல்கடுவ பிலான்டேசன், மற்றும் தனியார்களுக்குச் சொந்தமான தோட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளை அங்கு தொழில் செய்யும் ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் சேமநல பாதுகாப்பிற்கு எவ்விதமான வேளைத் திட்டங்களோ அல்லது வேறு அமைப்புகளோ இல்லை. இதனால் சகல தோட்ட மக்களும் பல்விதமான அசௌகரியங்களுக்கும் நோய்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதாரம் சேம நலங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் கவனம் செலுத்துகின்றன. ஆனால் தோட்ட மக்களுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியுமே தவிர அந்த மன்றங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள சில சட்டப் பிரச்சினைகள் உள்ளன. இந்த சட்டத்தை திருத்துவதற்கோ அல்லது திருத்தங்கள் கொண்டு வருவதற்கோ மலையக மந்திரிகள் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.

ஆகையினால், தோட்ட மக்களும் இலங்கையர்கள் என்பதால் சுகாதாரம் சேமநலங்கள் சம்பந்தமாக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் இந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள துன்பப்படுகின்ற மக்களும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டும். பதவிமோகங்களிலும் பணத்திலும் குறியாயிருக்கும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாமல் அவர்களை கேள்விக்குட்படுத்தி அம்பலபடுத்துவதோடு தமது பிரச்சினைகளுக்கு தாமே போராட முன்வரல் வேன்டும். இதற்கு துணை நிற்க கூடிய சக்திகளை இனங்காண்பதும் அவசியம்.

-முத்து