Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் மேலாதிக்க அரசியல்

உலக வரலாற்றில் இதுவரை இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது ஒரேயொரு விடயத்தில் மட்டுமே. அது உலகில் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்பதே ஆகும். 21 யூலை 1960ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்று இப்போது 56 வருடங்களாகின்றன.

அவர் மூன்று தடவைகள் (1960-1970-1994) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் திருமதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் மேல் மாகாண முதலாவது பெண் முதலமைச்சராகவும் (1993) இலங்கையின் பிரதமராகவும் (1994) பின்னர் இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் (1994) அடுத்தடுத்து இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

2013ல் அநீதியான முறையில் அன்றைய ஆட்சியினரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிரானி பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் 43வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

இப்படியாக பெண்களை அதியுயர்ந்த பதவியில் அமர்த்திய பெருமையைப் பெற்ற குடிமக்களைக் கொண்ட நாட்டில், அதுவும் மக்கள் தொகையில் 50 சத வீதத்திற்கும் அதிகமான பெண்களைக் கொண்டிருக்கும் இலங்கையில் அவர்களின் வாழ்வு நிலை என்ன? வாழ்க்கையின் தரம் என்ன? சுதந்திரம் அவர்களுக்கு உண்டா? சம உரிமையுடன் வாழ்கிறார்களா? பாதுகாப்புடன் இருக்கிறார்களா? இவற்றில் யாவற்றிற்கும் பதில் இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மையும் எமது குடிமக்கள் தலைகுனிய வேண்டிய விடயமும் ஆகும்.

இதில் காணப்படும் உண்மை யாதெனில் இலங்கையின் சிறுபான்மையினரான ஆண் மேலாதிக்கவாத சமூகம் பெரும்பான்மையினராகிய பெண் சமூகத்தை சகல விதமான ஒடுக்குமுறைகளின் கீழ் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதே ஆகும்.

1931ல் ஆங்கிலேயர் சர்வசன வாக்கெடுப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தியபோது அது தேவையற்றது என எதிர்த்த மேட்டுக்குடி ஆண் மேலாதிக்கவாதிகளின் அரசியல் பாரம்பரியமும், கலாச்சாரமுமே இன்னமும் தொடர்கிறது.

சுதந்திர இலங்கையில் பெண்கள் ஆண்களை நம்பி வாழும் வகையிலேயே அரசியல் யாப்பும் அதன் சட்டங்களும் அரச கட்டமைப்பும் அரசாங்கங்களின் நடவடிக்ககைளும் அமையப் பெற்றுள்ளன.

இதுவரை சட்டங்களாலும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அரச நிறுவனங்களாலும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான, சுதந்திர, அமைதியான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியவில்லை. நாளாந்தம்
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களும், அரசியல் வியாபாரத்தில் உள்ளவர்களும் இந்த வன்முறைகளை தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்துகின்றனரே தவிர அவற்றைத் தடுப்பதற்கான அக்கறை கொண்டவர்களாக இல்லை.

இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் பெண்களாகிய நாங்களே. எங்களுடைய ஆதரவுடனும், ஆசீர்வாதத்துடனும், வாக்குகளின் பலத்துடனும் தேர்வு செய்யப்பட்டு எமது பிரதிநிதிகளாக நாட்டை நிர்வகிக்கும் பாராளுமன்றம் செல்பவர்கள் எமது சமூகத்தினரை பாராளுமன்றத்திற்குள்ளேயே உதாசீனப்படுத்துவதையும், கேவலப்படுத்துவதையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் எம்மை இரண்டாந்தரப் பிரசைகளாக நடாத்துவதையும் அனுமதித்துக்
கொண்டிருக்கிறோம்.

எமக்கெதிராக நடாத்தப்படும் வன்முறைகளின் போது அவர்களிடமே பாதுகாப்பும் நியாயமும் வேண்டிக் கெஞ்சுகிறோம்.

இதுவரை காலத்தில் எம்மீதான வன்முறைக்குக் காரணமான அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்? அல்லது அவர்கள் சம்பத்தப்பட்ட கட்சிகளால் கண்டிக்கப்பட்டுள்ளனர்?

இவர்களும் இவர்களது கட்சிகளும் எம்மைப் பாதுகாக்கும் என நாம் மீண்டும் மீண்டும் நம்பி எதற்காக வாக்குப் போட்டபடி உள்ளோம்? எமது சுதந்திரத்தையும் சுயாதீன வாழ்க்கையையும் நாம்தான் நிலைநாட்ட முடியும்.

“குரங்கின் கையில் பூமாலை" போல்தான் ஆண்கள் கையில் எமது வாழ்க்கை தொங்கிக் கொண்டுள்ளது. நாம் எம்மீது திணிக்கப்பட்டுள்ள “தங்கி வாழ்தல்" (ஆண்கள் கையில்) மனப்போக்கிலிருந்து விடுபட வேண்டும். நாம் எமது சுயலாப சுகபோகங்களுக்காக ஆண்களின் அநியாயங்களை அனுசரித்துப் போவதிலிருந்து விடுபட வேண்டும். நாமும் இந்த நாட்டில் சமமாக வாழும் உரித்துடையவர்கள் என்பதை
செயலில் காட்ட வேண்டும்.

எத்தகைய கல்வியைக் கற்றாலும், பதவியை வகித்தாலும் ஆணாதிக்க அதிகாரங்களுக்கு அடங்கி நடக்கும் வாழ்வை நாம் நிராகரிக்க வேண்டும். எமது நாட்டில் எமது சகோதரிகள் பலர் நாட்டை நிர்வகித்துள்ளனர். பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அப்படியிருந்தும் நாமே நம்மைப் பலவீனமானவர்களாகவும், பரிதாபத்துக்குரியவர்களாகவும் கருதும் வண்ணம் ஆண்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம்.

இவற்றிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டுமானால் நாம் பெண்களாக மட்டுமல்ல நாமும் இந்த நாட்டின் சம உரிமைகள் உடைய மக்கள் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளில் ஈடுபட வேண்டும். அந்த இலட்சியத்துடன் ஓரணியாகத் திரளவேண்டும். இதன் ஊடாகவே எங்கள் சக்தியை நாம் ஆண்களுக்கு புரிய வைக்க முடியும்.

மாறாக வீட்டுக்குள் பிள்ளைகளைப் பூட்டி வைத்து விட்டோ அன்றி ரியூஷனுக்கு அனுப்பி விட்டோ வீட்டில் உட்கார்ந்து சினிமா, நாடகம் பார்ப்பதால் நமது அடிமை வாழ்க்கை மாறாது. அதேபோல் “நாம் படைக்கப்பட்டது அடிமை சேவகம் செய்வதற்கே" என்று வலியுறுத்துகின்ற மதங்களையும் அவைகளின் புராணங்களையும் போதனைகளையும் விழுங்கியபடி ஆடம்பரங்களுக்காக, ஆடை அணிகலன்களுக்காக ஆண்களின் அடக்குமுறையை அனுமதிப்பதும் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது.

நாட்டில் அரசியல் யாப்பைத் திருத்துவதாக கூறி அதற்காக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஒரு அரசியலமைப்புச் சபை நியமிக்கப்பட்டுள்ளது. அது ஏழு உப தலைவர்களையும் 21 பேர் கொண்ட வழிநடத்தல் குழு ஒன்றையும் தெரிவு செய்துள்ளது. இதில் ஒரேயொரு பெண் உறுப்பினர் மட்டும் உப தலைவர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

இதிலிருந்து நாம் பெண்களின் மதிப்பீடுகள் இலங்கை அரசியலில் எத்தகைய பரிமாணத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் மேலாதிக்க அரசியல் உள்ளது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து 68 வருடங்களாகியும் அவர்களால் 15 அரசாங்கங்கள் பதவிக்கு ஏற்றப்பட்ட பின்னரும் நாட்டின் வருங்கால நிர்வாகத்தை வரையப்போகும் அரசியலமைப்புச் சபையில் பெண்களின் பங்களிப்பு அசட்டை செய்யப்பட்டுள்ளமை பெண்கள் அரசியல் விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் வலியுறுத்திக் காட்டுகின்றது.