Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய அரசே! டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சாய்பாபாவை உடன் விடுதலை செய்

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் G.N.சாய்பாபா கடந்த ஆண்டு மகராஸ்டிரா காவல்துறையின் உளவுப்பிரிவினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு பின் பயங்கரவாத கருப்பு சட்டமான ருயுPயு UAPA (Unlawful Activities Prevention Act) கீழ் கைது செய்யப்பட்டதாக கூறி சிறையில் அடைத்தது. 90 சதவிகிதம் உடல் இயங்க மறுக்கும் மாற்றுதிரனாளியாகிய இவர் சக்கர நாற்காலியின் உதவியால் மட்டுமே இயங்கக் கூடிய நிலையில் உள்ளவர். கடந்த ஓராண்டுகளுக்கு மேல் நாக்பூர் மத்திய சிறையில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத மின்சாரம் மறறும் யன்னல் வசதி அற்ற இருண்ட அதிக வெப்பமுள்ள "அண்டா செல்" (Anda Cell)) எனும் இடத்தில் "பாதுகாப்பு" கருதி அடைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் அதிபயங்கரவாதி என கருதப்படுவதால் இந்த "அண்டா செல்லில்" அடைக்கப்பட்டுள்ளதாகவும் தப்பித்து செல்லாமல் இருப்பதற்க்காகவும் இவரை இந்த பகுதியில் அடைத்து வைத்துள்ளதாக சிறை நிர்வாகம் கூறுகிறது.

முதுகு தண்டுவடம் பாதித்தும் இரு கிட்னிகளும் செயற்படாத நிலையிலும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடது கை செயலற்ற நிலையில் இருக்கும் இவரை இந்திய அரசின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இந்திய அரசு இவரை கண்டு அஞ்சுகிறது. மேலும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இவர் "கட்ச்ரோலி" (Gadchiroli) மாவட்ட "மாவோயிட்" நக்சல் கமாண்டர் என மிகப்பெரும் பொய்யை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியரான இவர் செய்த மிகப் பெரிய குற்றம் சுவிடன் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணல்.

"இந்திய அரசினால் 2009-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்ட "பச்சை வேட்டை நடவடிக்கை" (Operation Green Hunt) என்ற பெயரில் இந்திய அரசு எவ்வாறு தனது சொந்த மக்களின் மீது போர் தொடுக்கிறது என்பதையும். கனிம வளம் மிகுந்த பழங்குடிகள் மிகுந்து வாழும் பகுதிகளில் ஜரோப்பிய மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிற்கு கொள்ளை அடிக்க இந்திய அரசு நிபந்தனை அற்று எவ்வாறு தனது கதவுகளை திறந்து விட்டுள்ளது என்பதையும் இவர்களின் கொள்ளை இலாப வெறிக்கு இடையூறாக இருக்கும் ஏழைகளிலும் ஏழைகளான பழங்குடிகள் மீது நடத்தப்படும் இன அழிப்பு தாக்குதல்களையும் இவர்களை அச்சுறுத்தியும் கொன்றும் இடம்பெயர்வுக்கு எவ்வாறு தள்ளப்படுகிறர்கள் என்பதையும்" சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் மிகவும் கண்டனத்துக்கு உட்பட்ட "பச்சை வேட்டை நடவடிக்கை" நிகழ்வு இந்திய அரசிற்கு அவமானத்தை கொடுத்துள்ளது. இதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக முந்தைய காங்கிரசு அரசும் அதன் வழியொட்டிய இன்றைய பாரதிய ஜனதா அரசும் இவரை "எவ்வழியிலும்" வெளியில் வர அனுமதிக்க மறுக்கின்றன. பேராசிரியர் சாய்பாபா அவர்களின் மனைவி கூறுவது போல அவர் உயிருடன் திரும்புவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது என கூறியுள்ளது சாய்பாபாவின் உடல் நலம் எப்படி உள்ளது என்பதற்கு சான்றாக உள்ளதாகும்.

எந்தவித சட்ட விரோத நடவடிக்கையினையும் இவர் மீது நிருபிக்க முடியாத இந்திய வக்கற்ற ஆளும் அரசு தன்னை பெரிய ஜனநாயக நாடாக கூறிக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து எண்ணற்ற அரசியல் கைதிகளை இவ்வழியில் சிறையில் அடைத்து பல ஆண்டுகளாக துன்புறுத்தி வருகின்றது.

28-06-2015 அன்று லண்டனில் இந்திய தூதரகம் முன்பு போராசிரியர் சாய்பாபாவையும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாவதேச அளவில் பல்வேறு நாட்டு முற்போக்கு சக்திகள் இதில் பங்கெடுத்துக் கொண்டனர். சமவுரிமை இயக்கத்தின் லண்டன் கிளையினரும் இதில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து உரையாற்றியிருந்ததுடன் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தமது போராட்டம் குறித்த துண்டுப்பிரசுரத்தை அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் விநியோகம் செய்திருந்தனர்.