Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!

மக்களின் அவலம் நிறைந்த வாழ்வுக்கான தீர்வுகளை கொள்கையாகக் கொண்டிராத கட்சிகள், கொள்கையற்ற கட்சிகளாக இருப்பதுடன், முகத்தை முன்னிறுத்தி வாக்கைக் கோருகின்றனர்.

இங்கு தங்கள் முகங்களை முதன்மைப்படுத்தி, மக்கள் கொள்கையை மறுக்கின்றவர்களாகவும், தியாகம் - சமூக அர்பணிப்பு அற்றவர்களாகவும் இருகின்றனர். மாறாக மக்களைச் சொல்லி பிழைக்கின்றவர்கள் - சொத்தைக் குவிப்பதற்கே அரசியலை முன்வைக்கின்றனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் - உலகமயமாக்கமும் - அரசு துறையும் முன்னெடுக்கும் இன்றைய செயற்பாடுகளை, தங்கள் செயற்பாடாகவும் - தங்கள் மக்கள் சேவையாக காட்டிக் கொண்டு வாக்கைக் கோருகின்றனர். நாட்டை அந்நியனுக்கு விற்கும் உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலில் போடும் எலும்புத் துண்டை காட்டி, தங்கள் மக்கள் சேவை என்று பீற்றி வாக்குக் கேட்கின்றனர்.

இப்படி தங்கள் கொள்கையற்ற முகங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கும் மக்கள் விரோத கொள்கையை மூடிமறைக்க

1.மக்களை பிளந்து இனரீதியாகவும் - இன பிரதிநித்துவததுக்கு வாக்களிப்பதன் மூலம், இனத்துக்கு நன்மை செய்ய தங்களை பராளுமன்றம் அனுப்பக் கோருகின்றனர்.

2.அபிவிருத்திக்கு தடையான "இனவாத" தேசியவாதத்தைத் தோற்கடிக்க, இனவாத "ஐக்கியம்" மூலம் சேவை செய்ய தங்களை தெரிவு செய்யக் கோருகின்றனர்.

3.அரசு மூலமான கடந்த உலகமயமதால் திட்டங்களைக் காட்டி, அதை நாட்டினதும்- தனிப்பட்ட நபர்களினதும் வளர்ச்சியாக முன்னிறுத்தி, அதைத் தொடர தமக்கு வாக்களிக்க கோருகின்றனர்.

இன்று அரசியல் என்பது எந்த முகத்தை தெரிவு செய்வது என்பதே ஒழிய கொள்கையல்ல என்று கூறும் கொள்கையற்ற கட்சிகள், இறுதியில் இதை இன்று மக்களின் பிரச்சினையாக - இதுதான் மக்களுக்கான தீர்வாகவும் முன்வைக்கின்றனர். கடந்த 67 வருடமாக வாக்களிப்பதன் மூலம் முகத்தை மாற்ற எதை தேர்தல் மூலம் முன்வைத்தார்களோ, அதுதான் மக்களுக்கான தீர்வு என்கின்றனர்.

67 வருடமாக ஏமாறிய மக்களுக்கு - அவர்களின் வாழ்வியல் பிரச்;சினைக்கு தீர்வு காண கொள்கை ரீதியானதும் - தியாகம் அர்ப்பணிப்பும் கொண்ட கட்சியும் - அரசியலும் இன்று தேவையாக உள்ளது.