Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உரிமை கிடைத்ததா ஒடுக்குமுறை ஒழிந்ததா?

இலங்கையின் 66வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த 66 வருடங்களை திரும்பிப் பார்போமானால் இந்த நாட்டின் சகல மக்களிற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதனையே காணலாம்.

இந்த நாட்டின் தொழிலாள வர்க்கம் தனது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருப்பதனையும், நாட்டிற்கு அந்நிய வருவாயினை ஈட்டித்தந்து கொண்டிருக்கும் மலையக மக்கள் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதனையும், அரசியல்வாதிகளால் இனவாதம் வளர்க்கப்பட்டு பல இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளதனையும், திட்டமிடப்பட்டு சிறுபான்மை இன மக்களது உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளதனையும் காண்கின்றோம்.

இதனால் நாடு எப்போதும் அமைதியின்றி போராட்ட களமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் மூன்று ஆயுதப் போராட்டங்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது. இரு தடவைகள் பெரும்பான்மை இனத்தின் இளைஞர்களினாலும் முப்பது வருடங்களிற்கு மேலாக தமிழ் இயக்கங்களினாலும் இந்த ஆயுதப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை இலங்கை அரச படைகளாலும், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஸ்யா, ஜரோப்பா நாடுகளின் உதவிகளுடன் முற்றாக அழித்தொழிக்கப்பட்டன.

இதனைத் தவிர வடக்கில் எழுபதுகளில் சாதீய கொடுமைகளிற்கு எதிரான உக்கிரமான போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுதந்திரம் கிடைத்தது எனச் சொல்லப்படுகின்ற இந்த அறுபத்து ஆறு வருடங்களில் மக்கள் தங்களது அடிப்படை உரிமைக்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்திருப்பதனையும், இளைஞர்கள், யுவதிகள், மனித உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியலாளர்கள், சாதாரண பொதுமக்கள் என பல லட்சக்கணக்கானோர்கள் பலியாகியுள்ளதனையும் காண்கின்றோம். இது முடிவில்லாது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மக்களது அடிப்படை உரிமைகளை மறுத்தவர்கள் யார்? மக்களை இன மத ரீதியான பிரித்து வைத்து மோத வைத்து லாபம் கண்டு கொண்டிருப்பவர்கள் யார்? வேறு யாருமல்ல இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்ற யுஎன்பி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளும் இந்த கட்சிகளுடன் ஒட்டி உறவாடி தமது பிழைப்பினை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சிறுபான்மையினங்களை பிரதிநிதிப்படுத்தும் தரகு முதலாளித்துவ அரசியல் தலைமைகளும் கட்சிகளுமே!.

ஆக மொத்தத்தில் பார்போமேயானால் ஆளும் தரகு முதலாளித்துவ ஆட்சியாளர்களிற்கு எதிராக சிங்கள, தமிழ், மலையக, முஸ்லீம் மக்கள் இன ரீதியாக பிரிந்து நின்று போராட்டங்களை முன்னெடுத்தமையினால் போராட்டங்களை இலகுவாக அழித்தொழிக்க முடிந்தது. ஏல்லோருக்கும் பொது எதிரியாக இருக்கின்ற யுஎன்பியாலும் சுதந்திரக் கட்சியாலும் தொடர்ந்து மாறி மாறி ஆட்சியமைத்து தங்களை மேன்மேலும் செல்வந்தர்களாக்கவும், அந்நிய வல்லரசுகள் நாட்டை கொள்ளையிட அகலக் கதவினை திறந்து விட்டு நாட்டு மக்களை மேன் மேலும் வறுமைக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று யுத்தம் இல்லை. ஆனால் வடகிழக்கில் இன்னமும் அறிவிக்கப்படாத யுத்தகால நிலைமையே நீடிக்கின்றது. பல மக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்ப முடியாதவாறு அதிஉயர்பாதுகாப்பு வலயங்கள் என அவர்களது கிராமங்கள் அரசால் அபகரிக்கப்படுவதுடன் வன்னியில் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்கென பல லட்சம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே எனக் கேட்டு குரல் எழுப்பும் போதெல்லாம் அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. திட்டமிட்ட ராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன. புத்தர் சிலைகள் சந்து பொந்துகளில் எல்லாம் அமைக்கப்படுகின்றன.

புலிகளை இலங்கை அரசு வெற்றி கொள்ள தோளோடு தோள் கொடுத்து நின்ற இந்தியாவிற்கு வடக்கு சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. சீமெந்து, சையிக்கிள், ஸ்கூட்டர் முதல் பற்பொடி, தீப்பெட்டி ஈறாக விற்பனை செய்ய இந்திய பெருமுதலாளிகளிற்கு புதிய சந்தை கிடைத்துள்ளதுடன் இந்திய பெரும் விவசாய பண்ணை நிறுவனங்கள் வன்னியில் வளமான நிலங்கள் நீண்டகால குத்தகைக்கு குறைந்த விலைக்கு பெற்றுள்ளதுடன் யுத்தத்தின் பின் சகலத்தையும் இழந்த மக்கள் கூலியாட்களாகவும் அமர்த்தும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

இந்த உண்மைகளை மறைத்து இந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய ஆட்சியாளர்கள் எமக்கு நீதியான தீர்வை பெற்றுத்தருவார்கள் என இன்னமும் எம்மக்களை நம்பும்படி தமிழ் மக்களின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறார்கள்.

மறுபுறத்தில் சர்வதேசம் எமக்கு நீதி பெற்றுத்தரும் என புலம்பெயர்ந்த ஒரு கூட்டம் மக்களை போராட விடாது திசை திருப்பி சர்வதேசத்தின் நலன்களிற்க்காக தமிழ் மக்களை பலிக்கடாவாக்கி தாம் பிழைத்துக்கொள்ள நாக்கை தொங்கவிட்டு காத்துக் கிடக்கின்றது.

ஆனால் சர்வதேசமோ யுத்தத்தின் பின்னர் தனக்கு மட்டுமே இலங்கை நவதாராளவாத பொருளாதார முன்னெடுத்தலுக்கு வழிவிடாது சீனாவிற்கு கூடுதல் வழியினை திறந்து விட்டதற்கு எதிராகவும் தென்கிழக்காசியாவில் தனது ராணுவ நலன்களிற்கு எதிராக இலங்கை சீனாவிற்கு ராணுவ முக்கியத்துவம் மிக்க பல திட்டங்களிற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் இலங்கையினை தனது வழிக்கு கொண்டுவரும் முகமாக தமிழ் மக்களிற்கு வன்னியில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நியாயம் பெற்றுத் தருவது போல் நாடகமாடுகின்றது. சர்வதேசம் முன்வைக்கும் தீர்வுகளை பார்த்தலே தெரிகின்றது இங்கே ஒரு சதி அரசியல் நாடகம் நடக்கின்றது என்பது.

இந்தியா முதல் எம்மீது கருணை கொண்டுள்ள சர்வதேசம் அனைத்தும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனப்பிரச்சினைக்கான தீர்வை பற்றி ஆக்கபூர்வமான எத்தகைய செயற்பாடும் கிடையாது. மாறாக தமிழர்களின் பிரச்சனை என்பது வன்னி யுத்தம் குறித்த இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களே என குறுக்கி அதன் பின்னால் தமிழ் மக்களை ஓட விட்டுள்ளன.

அன்று காலனித்துவத்தை முன்தள்ளிய போது ஒரு கையில் பைபிளையும் மறு கையில் ஆயுதத்தையும் கொண்டு தமது நேரடிக்கட்டுப்பாட்டில் நாடுகளை கைப்பற்றி ஆட்சி செய்தன பிரித்தானியாவும் பிரான்ஸ்சும். ஆனால் இன்று நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் போது உள்நாட்டு ஆளும் வர்க்கத்துடன் உடன்பாடு செய்து கொள்கின்றது. உள் நாட்டில் இருக்கும் முரண்பாடுகளிற்குள் தலையிடுவதில்லை. முரண்பாடுகளை மறைமுகமாக ஊக்குவித்து நாட்டு மக்களை அவர்களிற்குள் இன மத ரீதியாக மோத விடுவதன் மூலம் தமது கொள்ளைக்கு எதிராக மக்கள் ஒன்றிணையா வண்ணம் பார்த்துக் கொள்கின்றது.

இதையும் மீறி மக்கள் அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தால் தாம் மக்கள் பக்கம் இருப்பது போல வேடமிட்டு தமது கொள்ளைக்கு துணை போகக் கூடிய இன்னொருவரை மாற்றீடாக கொண்டு வந்து மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கின்றன. இதனை நாம் இன்று அரபு நாடுகளில் "அரவு வசந்தம்" ஊடாக காண்கின்றோம்.

எங்களது கடந்த பல பத்தாண்டு சொந்த அனுபவங்களினூடாக சர்வதேசம் என்பது என்ன அது என்ன விதமாக நடந்து கொள்ளும் எப்படி எங்களை நட்டாற்றில் விடும் என்பதனை நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.

மறுபுறத்தில் இலங்கையில் இடம்பெற்ற மூன்று ஆயுதப் போராட்டங்கள் அழிக்கப்பட்டிருப்பினும் அவை தோன்றியமைக்கான அரசியல் காரணிகளிற்க்கான தீர்வுகள் ஏதும் இன்று வரை காணப்படாமல் அவை மேன்மேலும் சிக்கலான நிலைமைகளுக்குள் ஆட்சியாளர்களினால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசியல் காரணிகளை தீர்க்க நாம் கடந்த காலத்தில் பயணித்த பாதைகள் யாவும் வெற்றியளிக்கவில்லை. எனவே நாம் எமது கடந்தகால அரசியல் பாதைகளை துறந்து புதிய வழிவகைகளை தேடியாக வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை இன மத ரீதியாக பிரித்து மோதல்களை உண்டு பண்ணி தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தமது கையில் வைத்திருக்கின்ற ஆளும் தரகு முதலாளித்துவ ஆட்சியாளர்களிற்கு எதிராக இனவாத்தை முறியடிக்கும் இன ஒற்றுமையினை முன்வைத்து ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து போரடுவதே ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் முன்னால் உள்ள ஒரே ஒரு தெரிவாகும்.