Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களை முன்னிறுத்தாத சிந்தனைகளும், செயற்பாடுகளும் இனவாதமே!

தன் இனம் ஊடாக சமூகத்தை அணுகுகின்றவை அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இது இலங்கை சமூகத்தில் புரையோடிவிட்ட புற்றுநோயாக, ஒடுக்கப்பட்ட அனைத்து  மக்களையும் முன்னிறுத்தி சிந்திப்பதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்துகின்றது. 

இடதுசாரிய சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைக் கூட இது விட்டு வைக்கவில்லை. தீவிர இனவாதக் கட்சிகளின் செயற்பாட்டுக்கு குறைந்ததல்ல, இனம் சார்ந்த இடதுசாரியத்தின் இனவாதக் கண்ணோட்டம்முற்போக்கு  பேசுகின்றவர்களும், "மார்க்சியம்" பேசுகின்றவர்களும் கூட விதிவிலக்கல்ல. 

முழு மக்களையும் முன்னிறுத்தி கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தவறுகின்றவர்கள், இனவாதிகளாகவே செயற்படுகின்றனர். கட்சிகள் மற்றும் அறிவுத்துறையினரின் செயற்பாடுகள் இப்படி இருக்க, மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டமோ வேறாக இருக்கின்றது. அன்றாட வாழ்க்கைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது உள்ளனர். 

நாள் தோறும் உழைத்து உழைத்து களைத்துப் போகின்றனர். ஒரு நேர உணவைப் பெறுவதற்கே, வாழ்க்கை பூராவும் மாரடிக்கின்றனர். ஆரோக்கியமாக வாழ்வதற்கான அடிப்படை மருத்துவம் தொடங்கி குழந்தைகளின் கல்விக்காக கூட போராடுவதே வாழ்க்கையாகிவிட்டது. ஆக வாழ்க்கையை சுற்றி அனைத்துமே போராட்டமாகி வருகின்றது. 

மக்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஒரு வேலையைத் தேடி அலைகின்றனர். கிடைக்கும் உழைப்பிற்கு போதுமான கூலி கிடைப்பதில்லை. தன்மானத்துடனும் கௌரவத்துடனும் உழைக்க முடிவதில்லை. அவமானமும், அருவருப்பும், வெறுப்பும் கொண்ட அன்னியமான உழைப்புச் சூழலில், உழைப்பு சூறையாடலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றது. உழைப்பு விருப்புக்குரிய, மகிழ்ச்சிக்குரிய, வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதில்லை. இலங்கை மக்களின் பெரும்பகுதியினர் வாழ்க்கை நிலை இதுதான். வாழ்வு சுமையாகி, வாழ்வு பற்றிய அச்சத்துக்குள் அடிமைப்படுத்தி உழைப்பை பிழிந்தெடுக்கின்றனர். உழைத்து வாழும் அனைத்து மக்களினதும் நிலை இதுதான். 

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் கனவுடன், மக்கள் நாடு விட்டு நாடு சென்று பிழைக்க முனைகின்றனர். அன்னிய நாடுகளிலோ உழைப்பு அடிமைகளாகவும், கொத்தடிமைகளாகவும் மாற்றப்படுகின்றனர். அங்கு எந்த உரிமைகளுமற்ற நடைப்பிணமாகி விடுகின்றனர். புலம் பெயர்ந்து உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கூட அநாதரவாக விட்டு விட்டுச் செல்லுகின்றனர். தங்கள் வாழ்க்கைத் துணைகளையும், உறவுகளையும் கூட, வருடக் கணக்கில் பிரிந்து விடுகின்ற, பல இலட்சம் மக்களின் அவலங்கள் சொல்லிமாளாது. 

வாழ்க்கைக் கனவுகள் சிதைய, அவலங்களும் மன உழைச்சல்களும் வாழ்க்கையாகி விடுகின்றது. புலம் பெயர்ந்து உழைக்கும் மக்களின் பொது அவலம் இதுவுமாகும். இலங்கையில் சட்டத்துக்கு புறம்பான சுதந்திர வர்த்தக வலயங்களில், உரிமைகளற்று உழைக்கும் மக்களுக்குள் எந்தக் குறுகிய அடையாளத்தையும் காணமுடியாது. தங்கள் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்காது ஏங்கிக் கிடக்கும் விவசாயிகளுக்குள் வேறுபாடு இருப்பதில்லை. இலங்கையில் மிகக்குறைந்த கூலியைக் கொடுத்து, மலையகத் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் இனவேறுபாடு இருப்பதில்லை. 

எங்கும் மக்களின் பொது அவலங்களும், கண்ணீருமே நடைமுறை வாழ்க்கையாக இருக்கின்றது. மக்கள் சுத்தமான நீரைக் கோரியும், இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிலம், கடல், நீர், விதை.. அனைத்தும் தனியார் மயமாக்குவதற்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். 

ஆக இவை எல்லாம் இனம் கடந்த ஒன்றாகவும், இலங்கையின் அனைத்து மக்கள் தளுவியதாகவும் இருக்கின்றது. மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்ற பொதுவான விடையத்தை முன்னிறுத்தாத அனைத்தும், இனவாதமாகவோ மதவாதமாகவோ இருக்கின்றது. கட்சி அரசியல் தொடங்கி அறிவுத்துறை வரை, மக்கள் சந்திக்கும் இந்தப் பொதுப் பிரச்சனைகளை பேசுவதில்லை. ஊடகங்கள் மக்கள் சார்ந்த இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி செயற்படுவதில்லை. 

மாறாக இலங்கையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி, அதையே மக்களின் வாழ்வியல் பிரச்சனையாக காட்டி ஏமாற்றுகின்றனர். மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து போராடுகின்றனர். கட்சிகளோ இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இனரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இனரீதியாக தேர்தல்களையும், வாக்களிப்பையும் கொண்டு மக்களைப் பிளந்து விடுகின்றனர். 

தேர்தல் அரசியல், மக்களின் உண்மையான வாழ்க்கையைப் பேசுவதில்லை. மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பிரதிபலிப்பதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பதில், இனவாதத்தை பேசுவதே தேர்தலாகின்றது. மக்களைப் பிரித்து அதில் குளிர்காய்வது, தேர்தல் கட்சிகளின் இன்றைய அரசியல் கொள்கையாகக் குறுகி இருக்கின்றது. 

மகிழ்ச்சி என்பது, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தபடி, சமூகத்துடன் கூடி வாழ்தல் தான். தன் வாழ்க்கைத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாது துன்பப்படுவதா மகிழ்ச்சி! தன் இனம் மதம் அல்லாதவனை எதிரியாக மாற்றி துன்புறுத்துவதா மகிழ்ச்சி! 

தன் வாழ்க்கைத் தேவைக்கே அல்லாடியபடி, இன மத பெருமையைப் பேசி, மற்றவனை துன்புறுத்தி ரசிப்பது தான் மகிழ்ச்சி என்று தேர்தல் கட்சிகள் வழி காட்டுகின்றன. இனவாதமும், இனவாதத் தேர்தலும், இனவாதக் கட்சிகளும் மக்களை வாழ்க்கைக்கு உதவாத இனத் தற்பெருமையிலான கற்பனையில் மிதக்க விட்டு, கோவணத்தை உருவுகின்றது. தன் இனத்தைப் பற்றிய இழிவான சுய தற்பெருமையில் வாழ்தலே, மானிடத்தின் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றனர். 

இனவொடுக்குமுறை மட்டுமல்ல இன ஒடுக்குமுறைக்கு எதிரான அதன் சிந்தனைகள் செயல்பாடுகள் அனைத்துமே இனவாதமாகவே இருக்கின்றது. தேர்தல் கட்சிகள் மட்டுமல்ல, முற்போக்கு முதல் இடதுசாரிய சிந்தனை மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் கூட இன்று கோலோச்சிக் காணப்படுகின்றது. 

ஆக ஒட்டுமொத்த மக்களை மையப்படுத்தாத சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் அடிப்படையில் மக்கள் விரோதமானவை. எங்கும் எதிலும் இனவாதம் கோலோச்ச, ஊடகங்கள் இதை மூலதனமாக்கி விதைக்கின்றது. இந்த நஞ்சு, இடதுசாரிய சிந்தனைகள் செயற்பாடுகள் அனைத்தையும் விட்டு வைக்கவில்லை. 

தன் குறுகிய சிந்தனையில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற, புரிந்து கொள்கின்ற சிந்தனைகள், செயற்பாடுகள் அனைத்துமே மக்களுக்கு எதிரானவை. இலங்கையில் நிலவும் இன முரண்பாடுகள் சார்ந்து எழுகின்ற அனுபவவாதம் சார்ந்த குறுகிய எண்ணங்களும் சிந்தனைகளும் கூட, இனவாதம் சார்ந்ததே. ஒட்டுமொத்த இலங்கை மக்களை முன்னிறுத்தி அணுகாத இடதுசாரியம் முதல் முற்போக்கு வரையான அதன் கருத்தியல் அடிப்படைகள் அனைத்தும், இன்று குறுகிக் காணப்படுகின்றது. மக்கள் என்பது குறுகியதல்ல மாறாக 

1.இனம், மதம், மொழி, சாதி, பால் ... கடந்தவர்கள் தான் மக்கள். மக்களுக்குள் எந்த குறுகிய அடையாளங்களும் கிடையாது. அடையாளங்கள் என்று அடையாளப்படுத்துபவை தற்செயலானவை. 

2.வர்க்க ரீதியான வேறுபாடு மட்டும் தான், ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் யார் என்பதைப் பிரிக்கின்றது. 

ஆக வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இனம், நிறம், சாதி, பால், மதம் ... சார்ந்த வேறுபாடுகள் இருப்பதில்லை. வாழ்வியல் நடைமுறைக்குள், அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமாக இருக்கின்றது. இங்கு இந்தக் குறுகிய அடையாளம் கடந்து அணுகுவது தான், மக்கள் சார்ந்த சிந்தனையும், செயல் சார்ந்த அணுகுமுறையுமாகும். மக்கள் சாராத மக்கள் விரோத சிந்தனை முறை என்பது, குறுகிய அடையாளம் சார்ந்ததாகும். 

முனிதனைப் பிளக்கும் வர்க்கமல்லாத அடையாளங்கள், மனிதவிரோதத் தன்மை கொண்டது. மொத்த மனித குலத்துக்கே எதிரானது. அதன் செயற்பாடுகள் மக்களை கோடரி கொண்டு பிளப்பதாக இருக்கின்றது. 

குறுகிய அடையாளங்கள் சார்ந்த மக்கள் விரோத சிந்தனைகள் செயற்பாடுகள், ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரிக்காது மூடிமறைக்கின்றது. அதேநேரம் ஒடுக்கும் தரப்பு சார்ந்ததாகவும், மக்கள் விரோத சிந்தனை முறையுமாகும், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவே, எப்போதும் எங்கும் செயற்படுகின்றது. இன்று இலங்கை மக்களை பல வழிகளில் பிளந்து நிற்கும் குறுகிய அரசியல், ஒடுக்கும் வர்க்க சார்ந்த சிந்தனை மற்றும் செயற்பாட்டு முறையாகும். இந்த வகையில் இனரீதியான சிந்தனை முறை என்பது, வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் வர்க்கச் சிந்தனை முறையாகும். இதற்கு வெளியில் வேறு அர்த்தம் கிடையாது. 

ஒடுக்குமுறையில் மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்கு எதிரான அதன் சிந்தனையிலும் செயலிலும் கூட இனவாதமே காணப்படுகின்றது. இதை ஒழிக்க முன்வைக்கும் தீர்வுகள் கூட, தன் இனம் சார்ந்து முன்வைக்கும் போது இனவாதமாகவே வெளிப்படுகின்றது. இந்த வகையில் இன்று இதை எதிர்க்கின்ற சிந்தனைகளிலும், செயற்பாடுகளிலும் கூட, இனவாதம் என்னும் புற்று நோய்க்கு சமூகம் உள்ளாகி இருக்கின்றது. 

இனவாத கட்சிகளும், இனவாதத் தேர்தலும் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து நாடற்றவராக்கியது முதல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது வரையான இனவாதச் செயற்பாடுகள், மக்கள் விரோதத்தின் மிக எடுப்பான சில தோற்றங்கள். இந்த மனித விரோத செயற்பாட்டிலான அரசியல் விளைவுகளினால், மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களம் என இனம் சார்ந்த இனவாதக் தேர்தல் கட்சிகள் தோற்றம் பெற்று, அவை இன்று மக்களை பிளந்து நிற்கின்றது. தேர்தலில் வெல்வதற்கு இன்று இதுவே அச்சாணியாகி இருக்கின்றது. மக்களை பிரிப்பதன் மூலம், மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்த பொது விடையங்களில் ஒன்றுபடுவதை இக் கட்சிகளின் குறுகிய அரசியல் தடுத்து நிறுத்துகின்றன. 

மக்கள் அன்றாட வாழ்வு சார்ந்த பொதுவான வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்து மக்களுக்கும் ஒன்றாக இருந்த போது, மக்கள் ஒன்றுபட்டு போராடுவதை தடுப்பதே இக் கட்சிகளின் செயற்படாகும். இந்த வகையில் இக் கட்சிகள் அனைத்துமே இனவாதமானவை. 

தன் இனம், தன் மொழி ஊடான சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகம் சார்ந்த கட்சிகளின் அரசியல், மக்களுக்கு எதிரானது. முழு மக்களை முன்னிறுத்தாது மக்களைப் பிரித்து பிளந்து விடுகின்றது.இலங்கை தேர்தல் கட்சிகளோ இன ரீதியானயானவையாக இருக்கின்றது. தேர்தல் மக்களை பிரித்து வைத்திருக்கின்றது. மக்களை இந்தக் குறுகிய தளத்தில் வாக்களிக்க வைப்பதை மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் என்கின்றனர். இலங்கையில் இன ரீதியான கட்சிகள் உள்ள வரை, இனவாதத்தை ஒழிக்க முடியாது. இக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் வரை, இனவாதத்துக்கு துணைபோவதாகவே தேர்தல் இருக்கும்.

இன ரீதியான கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு எதிரான தேர்தல் பிரச்சாரம் மூலம், இனவாதத்துக்கு எதிராக மக்கள் அணிதிரட்டப்படுதல் வேண்டும். இந்தக் குறுகிய கட்சி செயற்பாட்டுக்கு எதிரானவர்களின் சிந்தனைகள் செயற்பாடுகள், குறுகிய வாக்களிப்பை ஆதரித்தலும், அதை எதிர்க்காது மௌனம் சாதித்தலும் கூட இனவாதமாகும். இதை ஆதரித்தல், கண்டு கொள்ளாது இருத்தல் அடிப்படையில் மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். தன் சொந்த இனத்தின் இனவாதத்தை எதிர்க்காது இருத்தல், இனத்தில் இருந்து தீர்வைக் கோருதல், அதை மறுத்தல் கூட இனவாதமாகும். 

மறுதளத்தில் இனரீதியான தேர்தல் கட்சிகளால் இன ரீதியாக வாக்களிப்பதன் மூலமே, மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது. இந்த வாக்களிப்பு மூலம், இதற்கு தீர்வு காண முடியும் என்கின்றனர். மக்களின் பொருளாதார வாழ்வியல் பிரச்சனைக்கு, இனரீதியான வாக்களிப்பு மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பவைத்து, காலங்காலமாக மக்களின் கழுத்தை அறுக்கின்றனர். 

மக்கள் தங்கள் வாழ்க்கை சார்ந்து ஒன்றுபடுவதை தடுத்து நிறுத்தி, இன ரீதியாக ஒன்றுபடக் கோருவதே இனவாதத்தின் சாரமாகும். இது சார்ந்த வாக்களிப்பு மகிழ்ச்சியற்றதும், தீர்வற்றதுமான, மக்களை பிரிக்கின்ற இனவாதத்தையே தொடர்ந்து வளர்த்தெடுக்கின்றது. மக்கள் தங்கள் பொருளாதார வாழ்க்கையை, இதன் மூலம் இழந்து வருகின்றனர். உண்மையில் மக்களை பிரித்துவிடுவதன் மூலம், வாழ்க்கையைச் சூறையாடுகின்றனர். 

ஆக இன ரீதியாக சிந்தித்தல், செயற்படுதல், தீர்வைக் கோருதல், வாக்களித்தல், மௌனம் சாதித்தல் ... என அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இதற்கு எதிராக அணிதிரள்வதே முதற்காலடியாகும். இனம் மதம் கடந்து அனைவருக்குமான சமவுரிமையைக் கோரியும், சமவுரிமை அல்லாத அனைத்து குறுகிய செயற்பாடுகளையும் எதிர்த்து அணிதிரள்வோம். வரலாறு எம்மிடம் இன்று கோருவது இதைத்தான்.