Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்தியங்களின் திரிகோண(மலை)ச் சுழிக்குள்ளே சிக்கியுள்ள இலங்கை அரசியல்

காலனித்துவ காலம் முதற் கொண்டு இலங்கை தனது சுயாதீனத்தை என்றுமே கொண்டிருக்கவில்லை. அதன் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ந்து அந்நியர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்புடையதாகவே எமது நாட்டு அரசியல் தரகர்களால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுவே தொடர்கிறது.

இந்த தரகு அரசியலை செயற்படுத்துவதற்காகவே இலங்கையில் "இனப்பிரச்சனை"யை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் யாப்பை ஆங்கிலேயர்கள் அன்றே எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றனர். நமது மேட்டுக் குடிக் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொத்துப் பத்துக்களை-வாழ்க்கை வசதிகளைப் பாதுகாக்கும் ஒரேயொரு இலட்சியத்துடன்  நாட்டு மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

1970ல் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் பலத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அன்றைய சர்வதேச அரசியல் (பனிப்போர்) காலநிலையில் கிழக்கே சாய 1977ல் அதே பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்கள் மேற்கே சாய்ந்தார்கள். அவரவர் கட்சி நலன்களுக்கு ஏற்றபடி பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் கடன்களையும் உதவிகளையும் பெற்று நாட்டை அந்நிய நாடுகளிடம் அடகு வைத்தனர். இவற்றினிடையில் தான் சார்ந்த பிராந்திய வல்லரசுடன் "ஓடும் புளியம் பழமும்" ஆன உறவைப் பேணி வந்தனர்.

இலங்கை எப்போதுமே சொந்த பொருளாதார பலத்தில் இயங்கியது கிடையாது. இலங்கையின் பாதுகாப்பும் அந்நியரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆனால் பல சகாப்தங்களாக தொடர்ந்து மனித உரிமை மீறல்களை செயற்படுத்தும் இலங்கை அரசாங்கங்களுக்கு சனநாயகம் என்ற பெயரில் இந்த உலக நாடுகள் உதவி புரிவது ஏன்? குடிமக்கள் கொல்லப்படுவதற்கு உதவிகளையும் தாராளமாக வழங்கி விட்டு பாதிக்கப்பட்ட மக்களின் புனர் நிர்மாணம்-மீளக் கட்டுமானம் எனக் கூறியபடி கோடி கோடியாக பணத்தை இந்நாடுகள் வாரியிறைப்பது எதனால்? நிச்சயமாக நாட்டு மக்கள் மீதான கரிசனையால் அல்ல. நிச்சயமாக சனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டுவதற்காக அல்ல. நிச்சயமாக மனிதாபிமான உணர்வினால் அல்ல.

இலங்கையின் இனப்பிரச்சனை ஐ.நா.சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. ஐ.நா.சபையினால் இலங்கையின் ஆட்சி முறையைக் கண்டித்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா.சபை ஆட்கள் அடிக்கடி வந்து கள நிலை அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். ஆனால் இலங்கை குடிமக்கள் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

குற்றவாளிகளே அரசாங்கத்தில் அமைச்சர்கள் ஆகி நாட்டை ஆளுகிறார்கள். கடந்த கால குற்றங்களுக்கு கண்துடைப்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுதந்திர விசாரணைக் கொமிஸன்கள் சனாதிபதியின் தலையீட்டுக்கு ஆளாகியுள்ளன. தோற்கடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சர்வாதிகாரம் மறுபடி தலை தூக்கியுள்ளது. சனநாயக ஆட்சிக்கு வாக்களித்த குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இனப்பிரச்சனைத் தீர்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவ்வப்போது வெளிநாட்டுப் பிரமுகர்கள் வருகை தந்து இலங்கையில் சனநாயக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அறிக்கை விட்டபடி உள்ளனர். வெளிநாட்டு அரசாங்கங்கள்-சர்வதேச நிறுவனங்கள்-தனிநபர் என மூலதன முதலீடுகள் நாட்டில் வந்து குவிகின்றன. நாட்டு மக்களின் அபிலாசைகள் அசட்டை செய்யப்பட்டுள்ளன. வாக்களித்த மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

நிலைமை இப்படியிருக்க நாட்டில் மக்கள் மத்தியில் பிளவுகளை-வெறுப்பை-பகையுணர்வை-ஏட்டிக்குப் போட்டியை உருவாக்கும் செயற்பாடுகள் பல முனைகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கான ஆதரவுத் தளங்கள் நாட்டுக்கு வெளியே இருந்து இயங்குகின்றன. இதற்குத் தேவையான முகவர்கள் பலர் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நோக்கம் இலங்கையில் அமைதி-சமாதானம்-சுதந்திரம்-சுபீட்சம் ஏற்படக்கூடாது என்பதேயாகும். 

இன்றைய புதிய உலக தாராளவாதப் பொருளாதார கட்டமைப்புக்கும் அதனைக் கட்டுப்பாட்டுடன் கண்காணிப்பதற்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள அரசியல் ஸ்திரமற்ற ஒரு இலங்கைத் தீவு மிக நீண்ட காலமாக தேவைப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. காரணம் ஏகாதியபத்திய சக்திகளின் பாதுகாப்பு அரண்களுக்கு பயன்படக்கூடிய இயற்கை வளத்தை தன்னகத்தே கொண்ட ஒரு நாடாக இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் அமைந்திருப்பதேயாகும். அதுதான் திரிகோணமலைத் துறைமுகம். 

காலனித்துவம் இலங்கையில் கால் பதித்து நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த காலங்களில் மாறி மாறி நாட்டைக் கைப்பற்றிய  போர்ச்சுக்கல்-ஒல்லாந்து-பிரான்ஸ்-பிரித்தானியா நாடுகள் இத் துறைமுகத்தையே தங்கள் காலனித்துவ விரிவாக்க நடவடிக்கைகளுக்கு உரிய கடற்படைத் தளமாக பாவித்தனர். இரண்டாவது உலக மகா யுத்தத்தில் நேசநாடுகளின் போர் நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய கேந்திர படைத்தளமாகவும் திரிகோணமலைத் துறைமுகம் விளங்கியது. இதனால்தான் 2வது உலகப் போரில் யப்பானிய தற்கொலைப் படை விமானத்தின்  தாக்குதலுக்கு உள்ளாகியதில் திரிகோணமலைத் துறைமுகத்தை அண்டிய சீனக்குடாவில் அமைந்துள்ள 101 குதங்கள் அடங்கிய ‘எண்ணெய் குதப் பண்ணை’யில் 91 வது இலக்கம் கொண்ட குதம் 7 நாட்களுக்கு தீப்பற்றி எரிந்து உருகியது.

1948ல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் ஆங்கிலேயர்கள் திரிகோணமலை கடற்படைத் தளத்தை தொடர்ந்து தக்க வைத்தபடியே இருந்தனர். 1949ல் நாடற்றவராக ஆக்கப்பட்ட மலையக மக்கள்(அன்றைய தமிழ் தோட்டத் தொழிலாளிகள்) தொடர்பாக ‘நேரு-கொத்தலாவ’ ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை ஒன்று 1954ல் ஆரம்பிக்கப்பட்டது. 1957ல் திரிகோணமலை கடற்படைத் தளத்தை ஆங்கிலேயர் கைவிட்டனர். 1964ல் மலைய மக்களை நாடு கடத்துவதற்கான "சிறிமா-சாஸ்திரி" ஒப்பந்தம் கைச்சாத்தானது.

1977ல் இலங்கையில் பதவிக்கு வந்த அரசாங்கம் மேற்கு நாடுகள் சார்பு நிலை எடுத்து அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு திரிகோணமலை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியையும் அதன் அருகில் அமைந்துள்ள எண்ணெய் குதப் பண்ணையை அமெரிக்க கம்பெனிக்கு குத்தகைக்கு கொடுக்கவும் முன் வந்தது. இலங்கைத் தமிழர்களைச் சாட்டாக வைத்து இந்திய வல்லரசு ஏற்படுத்திய 1987 யூலை இலங்கை-இந்திய ஒப்பந்தந்தின் பயனாக 2002ல் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 15 குதங்களை குத்தகைக்கு எடுத்ததுடன் இலங்கையில் எரிபொருள் விநியோக நிலையங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றுக் கொண்டது.

(அதே சமயம் முத்துராஜவெல (நீர்கொழும்புக்கு வடக்கில்) என்ற இடத்தில் கரையில் இருந்து 5.6 கி.மீ. தூரத்தில் கடலுக்குள் வைத்து கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட 29 எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை கரையில் அமைக்கும் ஒரு ஒப்பந்தத்தை 17 ஜனவரி 2001ல் சீனாவுடன் இலங்கை அரசாங்கம் செய்து  27 மே 2004ல் அதன் செயற்பாட்டையும் ஆரம்பித்தது. அத்துடன் சீனாவுடன் 2008ல் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தம் ஊடாக அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்ட 14 எண்ணெய் குதங்களை 14 யூன் 2014 முதல் பாவனைக்குப் பயன்படுத்தத் தொடங்கியது.)

இலங்கையின் இன யுத்தத்திலும் ஒரு திருப்பு முனையை இந்த திரிகோணமலைத் துறைமுகமே ஏற்படுத்திக் கொடுத்தது. மாவிலாறு தண்ணீரைத் தடுத்தது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக அமைய ‘சம்பூர்’ என்ற ஊரைத் தளமாகக் கொண்டு திரிகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்ற விடுதலைப்புலிகள் மேற் கொண்ட போர்த் தந்திரம் உலக ஏகாதிபத்திய சக்திகளை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு கை கொடுக்க வைத்தது. இதன் பின்னணியிலேயே 2009ல் இலங்கையில் அரசாங்கம் பெற்ற யுத்த வெற்றியும் அதனை வைத்து அது மேற்கொண்ட வெளிநாட்டு அரசியல் கொள்கையும் இன்றைய இலங்கையை கிழக்கு-மேற்கு-வடக்கு ஏகாதியபத்திய சக்திகளின் பலப் பரீட்சைக் களமாக ஆக்கி விட்டுள்ளது. 

இந்தியா இலங்கையில் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு வலயம் ஆக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சம்பூர் என்ற இடத்தில் அனல் மின்சார நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 29 டிசெம்பர் 2006ல் ஆரம்பித்தது. அனல் நிலையத்தை  அமைக்கும் திட்ட ஒப்பந்த உடன்படிக்கையை 2009ன் யுத்த வெற்றி தன்னுடையது என உரிமை கோரிக் கொண்டாட்டங்கள் ஆடிக் கூத்தடித்த சர்வாதிகார இலங்கை அரசாங்கத்துடன் 07 அக்டோபர் 2013ல் செய்து கொண்டது. 

சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நடுத்தெருவில் நிற்க அத் திட்டம் ஆரம்பிக்கப்படாமலேயே இழுபறி நிலையில் இருந்து வந்தது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பகுதி இடம் பெயர்ந்த மக்கள் சம்பூரில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டபோது முந்தியடித்திக் கொண்டு வந்து முதன் முதலில் கோடிக்கணக்கில் நன்கொடையாகப் பணம் கொடுத்து உதவியது அமெரிக்கா. 

இன்று அனல் மின்சார நிலையத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது (திரிகோணமலை பசுமை இயக்கம் மேற்கொண்ட மக்கள் போராட்டத்தால்). இதனைத் தொடர்ந்து சம்பூரில் "சூரியக்கதிர்" மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க இந்தியா விண்ணப்பித்தது. அதனை நல்லிணக்க அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளதுடன் அதனை தாங்களே அமைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது. 

அதேவேளை சீனக்குடா எண்ணெய்க் குதப் பண்ணையில் மேலும் சில பாவனையில் இல்லாத சில குதங்களை தாங்களே புனரமைப்புச் செய்து பயன்படுத்தப் போவதாக இலங்கை அறிவித்தும் உள்ளது. 

கடந்த அரசாங்கத்தினால் சீனா உதவியுடன் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்ட ‘கொழும்புத் துறைமுக நகரம்' புதிய அரசாங்கத்தின் முன்னுக்குப் பின் முரண்பட்ட பல அறிக்கைகளின் பின்னர் தற்போது ‘கொழும்பு சர்வதேச நிதி நகரம்’ எனப் பெயரிடப்பட்டு நிர்மாணப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த  நிதி நகரம் மேலை நாடுகளின் புதிய நவதாராளவாதப் பொருளாதார நகர்வுகளுக்குப் பயன்படும் ஒரு ‘உல்லாசக் கழகம்’ ஆக இயங்குமே ஒழிய  குடிமக்களின் வாழ்க்கையை எந்த வகையிலும் மாற்றப் போவதில்லை. 

இப்படியே ஏகாதியபத்தியங்களின் ஆதிக்கப் போட்டிகளுக்கு உதவும் வகையில் ஏற்கனவே எமது அரசியல் தலைமைகள் இயங்கிக் கொண்டிருக்கையில் அண்மைக் காலங்களில் மக்களின் பாதுகாவலர்கள் என பிரகடனப்படுத்தியபடி சிலர் புதிய கோசங்களுடன் மேலும் மக்களைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் ஒரே ஒரு நோக்கம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல வாழ்வுக்காகப் போராடும் மக்களை சாவுக்கு இட்டுச் செல்வதேயாகும். 

குடிமக்களை ஒன்றிணைத்து அவர்களின் மேம்பாடான-முன்னேற்றகரமான-மகிழ்ச்சியான-அமைதியான-சமாதான வாழ்வுக்கான வழிவகைகளைத் தேடுவதனைத் தவிர்த்து ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாக-ஏவல் அடியாட்களாக-தரகர்களாக மறுபிறவி எடுப்பவர்களை நாம் வழமை போல் பின் தொடருவோமேயானால் எமக்கு நிம்மதியான வாழ்வுமில்லை. நிரந்தர அமைதியுமில்லை. நீடித்த ஆயுளுமில்லை.

“ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது.” - “ஊர் இரண்டு பட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்”. ஏகாதியபத்தியங்களின் ஆறுதல் மொழிகளுக்கும் - அரசியல் நகர்வுகளுக்கும் - உலகளாவிய புதிய நவதாராளவாத பொருளாதார கையாளுதல்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சர்வதேச அரசியல் புயல் சுழலுக்குள் சிக்கியுள்ளது நாடு மட்டுமல்ல நாமும்தான்.